Apr 20, 2020

கிராமப்புறம் Vs நகர்ப்புறம்

நேற்று 164 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டோம். மொத்தமாக இதுவரை 570 குடும்பங்களுக்கு வழங்கியாகிவிட்டது. நேற்று நாங்கள் மொடச்சூர் பகுதியில் இருக்கும் குடியிருப்புக்குச் சென்றிருந்தோம். இதற்கு முன்பு வழங்கிய நானூறு குடும்பங்களும் கிராமப் பகுதிகளில் வசிக்கிறவர்கள். கிராமப்புற குடியிருப்புகளில் இத்தகைய உதவிப் பணிகளைச் செய்வது எளிதாகத் தெரிகிறது. சாதியப் பிரிவினையின் காரணமாகவோ என்னவோ மற்றவர்களும் உள்ளே வருவதில்லை. நேற்று நகர்ப்புறத்திற்குள் சென்ற போது அப்படியில்லை. சற்று சிரமமாகிவிட்டது. நிறையப் பேர் வந்துவிட்டார்கள். 

அந்தக் குடியிருப்பில் இருக்கும் தமிழ்செல்வன் என்னும் இளைஞர்தான் முதலில் தொடர்பு கொண்டார். அவர் எம்.எஸ்.சி அக்ரி படித்துவிட்டு பணியில் இருக்கிறார்.  ‘ரொம்ப சிரமப்படுறாங்க சார்’ என்றார். விசாரித்த போது பிற நண்பர்களும் அதையேதான் சொன்னார்கள். தமிழ்செல்வனை அழைத்து ‘நீங்க பத்து பசங்களை வெச்சு அவங்க மூலமா டோக்கன் கொடுத்துடுங்க..டோக்கன் இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் பொருட்களைக் கொடுக்க வேண்டும்’ என்று முதலே அறிவுறுத்தியிருந்தோம். அவர்களும் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கி, நாம் சொன்னதைச் சரியாகச் செய்திருந்தார்கள்.


ஆனால் பொருட்கள் நிரப்பிய வாகனத்தோடு நாங்கள் சென்று நின்ற பிறகு அக்கம்பக்கத்து ஆட்கள் ‘எனக்கு கொடு; உனக்கு கொடு’ என்று வந்துவிட்டார்கள். எல்லோருமே மூத்தவர்கள், வலு குறைந்தவர்கள்தான்- ஆனால் டோக்கன் இல்லாத ஒருவருக்குக் கொடுத்தாலும் கூட அதன் பிறகு வரும் கூட்டத்தை சமாளிக்க முடியாது. 

பேசிப் பேசியே சமாளிக்க வேண்டியிருந்தது. 

நேற்று மதியம் கடுமையான வெயில். வியர்வை பெருக்கெடுத்தது. சற்று நேரத்திற்குள்ளாக களைப்பு தட்டிவிட்டது. நகர்ப்புற மக்களும் பாவம்தான். ஆனால் நகர்ப்புறங்களில் அரசாங்கம் மாதிரியான வலுவான அமைப்புகள் செய்ய வேண்டும். அவர்கள்தான் செய்ய முடியும். தனிமனிதர்கள் செய்வது பெரிய சிரமம்.  நான் கூட சற்று விலகி நின்றுவிட்டேன். சிலர் நெருங்கி வந்து பேச முயற்சித்தார்கள். பயமாக இருந்தது. ஆனால் நிழற்படங்களைப் பார்க்கும் போது நன்கு விலகி நின்றிருக்கிறேன் என்றுதான் தெரிகிறது. ஆனால் உடன் வரும் நண்பர்களில் அரசு தாமஸ் தொண்டை வறண்டு போகுமளவுக்கு கத்தி கூட்டத்தை ஒழுங்கு படுத்துகிறார், கார்த்திகேயனும் மோகனும் வரிசையில் நிற்பவர்களிடம் டோக்கன் வாங்குகிறார்கள், நிவாஸ் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் கையுறை கூட இல்லாமல் பொருட்களை விநியோகம் செய்கிறார். நேற்று பல் மருத்துவர் சந்தோஷ் உடன் வந்திருந்தார். இவர்களை பார்க்க சற்று பயமாகத்தான் இருக்கிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். பாதிப்பு யாருக்கு என்றாலும் பாதிப்புதானே?

பெருமளவு விலகியே இருக்கிறோம். ஆனாலும் சற்று நெருடல் இல்லாமல் இல்லை.
மாலை வீடு திரும்பிய போது களைப்பாக இருந்தது. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் உறங்கிவிட்டேன். காலையில் கார்த்திகேயன் அழைத்து ‘டயர்டா சார்?’ என்றார். எதுக்குக் கேட்கிறார் என்று புரியாமல் ‘ஆமாம் சார்’ என்றேன். ‘எனக்கும் களைப்பாக இருந்தது’ என்றார். நம் உடல் வலு குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னேன். சில நண்பர்கள் ‘பத்திரமா இருங்க’ என்று சொல்லும் போது பயம் வந்துவிடுகிறது. எல்.ஐ.சி சீனு என்றொரு நண்பர் இருக்கிறார். அன்பின் காரணமாக இரண்டு என்.95 முகக்கவசங்களை வாங்கி கொடுத்தனுப்பியிருந்தார். பிற சமயங்களில் எப்படி களைத்தாலும் பிரச்சினையில்லை. சூழல் சரியில்லாத போது நம் உடல் வலு குன்றாமல் இருக்க வேண்டும்.

நம் மக்கள் செய்கிற செயலையெல்லாம் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. இறந்தவர்களைக் கூட அடக்கம் செய்யவிடாமல் கல்லெறிகிற காட்டுமிராண்டித்தனத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இவற்றைப் பார்க்கும் போது நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் முதலில் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

நேற்று மாலை வீட்டிற்கு வந்த பிறகு மோகனை அழைத்துப் பேசினேன். ‘என்ன மோகன், கூட்டம் வந்துடுச்சு?’ என்று கேட்டதற்கு ‘ஆமா மணி எனக்கும் பயமாத்தான் இருந்துச்சு...ஆனா பசியோட இருக்காங்களேன்னு அசால்ட்டா இருந்துட்டேன்’ என்றார். பயப்படுகிறாரோ என நினைத்தேன். ‘எங்க போறதுன்னாலும் சொல்லு...வர்றேன்’ என்றார். இவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கும் நண்பர்களின் ஆரோக்கியமும் முக்கியமல்லவா?இன்று மதியம் இரண்டு கிராமங்களுக்கு செல்லவிருக்கிறோம். சுசில் ட்ரேடர்ஸ் நிறுவனம்தான் பொருட்களை எடுத்துச் செல்ல வாகனம் வழங்குகிறார்கள். வாடகை எதுவுமில்லை. டீசல் செலவு கூட அவர்களுடையது. அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறோம். முத்துக்கவுண்டன்பாளையம்- புதிய காலனி, பழைய காலனி- 80 குடும்பங்கள், அலிங்கியம் - 120 வீடுகள்; இவை இரண்டுமே நகரத்திலிருந்து தள்ளியிருக்கும் கிராமங்கள். இந்த இருநூறு குடும்பங்களுக்கும் கொடுத்து முடிக்கும் போது இரண்டாம் கட்டமாக முந்நூற்று அறுபத்தைந்து வீடுகளுக்கு கொடுத்து சேர்த்திருப்போம். மொத்தமாகக் கணக்கிட்டால் 770 குடும்பங்கள். முதலில் திட்டமிட்டபடி, இன்னமும் இருநூற்று ஐம்பது குடும்பங்களுக்கு கூட உதவ முடியும். நிலைமையை அனுசரித்துச் செய்யலாம்.

விசாரித்தவரையிலும் இன்றிலிருந்து மெல்ல பணிகளைத் தொடங்குகிறார்கள் போலிருக்கிறது. எங்கள் தெருவிலேயே கட்டிடப் பணியாளர்கள் பணிக்கு வந்திருக்கிறார்கள். ‘குழந்தைகளை வைத்துக் கொண்டு சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் திண்டாடிவிட்டோம்’ என்றார்கள். இனி சமாளித்துக் கொள்வீர்களா என்று கேட்டேன். ‘இனி வேலை இருந்தால் சமாளிச்சுக்கலாம்’ என்றார்கள். மில் தொழிலாளர்கள் மாதிரியானவர்களுக்கும் இன்னமும் வாய்ப்பில்லைதான். ஆனால் ஒரு நாள் இடைவெளி விட்டு நிலைமையைத் தெரிந்து கொண்டு மேற்கொண்டு உதவிகளை வழங்குவதை திட்டமிட்டுக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்று காலையிலிருந்து கூட மூன்று புதிய ஊர்களிலிருந்து கேட்டுவிட்டார்கள். முதலில் ஒத்துக் கொண்ட இடங்களுக்கு வழங்கிவிட்டு பரிசீலிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறேன். முந்தாநாள் வந்த அழைப்புகள் அனைத்தும் நன்றி தெரிவித்த அழைப்புகள் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? நேற்று  முதல் வரும் அழைப்புகள் அனைத்தும் ‘எங்களுக்கு எப்போ தருவீங்க?’ ‘உங்க வீடு எங்க இருக்கு?’ ‘வந்தா கிடைக்குமா’ என்கிற அழைப்புகள். 

கடந்த சில நாட்களாக தினசரி சென்று வருகிறோம். உடன் வரும் நண்பர்களால்தான் தொடர்ந்து பணி நடந்து வருகிறது. அவர்களது ஆரோக்கியத்தைக் கருத்திற் கொண்டு அடுத்த ஒன்றிரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு உண்மையிலேயே உதவிக்கான தேவைகள் இருப்பின் மீண்டும் பணிகளைத் தொடரலாம் எனத் தோன்றுகிறது.

தொடர்ந்து உடன் பயணிக்கும் அனைவருக்கும் நன்றி!

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

// பாதிப்பு யாருக்கு என்றாலும் பாதிப்புதானே?//
ஆமாம்.அனைவரும் சாக்கிரதையாக முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்

Saravanan Sekar said...

அண்ணா, உங்கல் உடல்நலமும், உங்களுடன் களத்தில் உடன் நிற்பவர்கள் உடல்நலமும் முக்கியம். இது சுயநலமான ஆலோசனை அல்ல. சற்றே பொறுத்து நிதானமாக செய்யுங்கள். மற்ற நேரத்தை போல இது இல்லையல்லவா .. தமிழகம் முழுக்க களத்தில் நின்று உதவும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.
என்றும் அன்புடன் , உங்கள் நலத்தையும் விரும்புவபவன் ..

Krishnamoorthy said...

Sir,please take care of yourself and your friends.
Krishnamoorthy.