நிசப்தம் அறக்கட்டளையின் முந்தைய பதிவோடு தொடர்புடையது.
கடந்த சில நாட்களாக ‘ஏதேனும் உதவிகளைச் செய்ய முடியுமா?’ என்று நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது எம்.ஜி.ஆர் காலனியிலிருந்து மகாலிங்கம் அழைத்திருந்தார். காலனியின் தலைவர் அவர். எம்.ஜி.ஆர் காலனியில் 165 குடும்பங்கள் இருக்கின்றன. லம்பாடி குடும்பங்கள். நிசப்தம் தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு அவர்கள் குறித்து தெரிந்திருக்கும். அம்மக்களின் குழந்தைகளின் படிப்புக்கு, ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு (அந்தக் காலனியிலிருந்து இரண்டு மாணவர்கள் சென்னையில் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள்) சமூக மேம்பாட்டுக்கு என தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறோம்.
காலனி மக்கள் பெரும்பாலும் கட்டிட வேலைக்குச் செல்கிறவர்கள். ஊரடங்கால் முழுமையாக வருமானம் பாதிக்கப்பட்டுவிட்டது. பெரும்பாலும் வார இறுதியில் சம்பளம் வந்தவுடன் வீட்டுக்கு வேண்டிய பொருட்களை வாங்குகிறவர்கள் அவர்கள். அதிகபட்சம் ஒரு வாரத்துக்குத் தேவையான பொருட்கள் கைவசம் இருக்கலாம். சிற்சில வீடுகளில் மேலும் ஒரு வாரத்துக்குத் தேவையான தொகை கைவசம் இருக்கலாம். மூன்றாவது வாரமும் வேலையும் வருமானமும் இல்லை என்னும் போது பணமும் பொருளும் முழுமையாக காலியாகி இருக்கும். அடுத்த இரண்டு வாரங்களுக்கும் இதே நிலைமைதான் என்றால் மேற்கொண்டு யோசிக்கவே வேண்டியதில்லை.
மகாலிங்கத்திடம் பேசுவதற்கு முன்பாகவே நிசப்தம் வழியாக படிக்கும் அந்தக் காலனி மாணவர்களிடம் பேசியிருந்தேன். சிரமமாக இருக்கிறது என்றார்கள். என்ன உதவி வேண்டும் என்று யோசித்துவிட்டுச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். அதன் பிறகுதான் மகாலிங்கம் பேசினார். அனைத்துக் குடும்பங்களிலும் கையிருப்பு அனைத்தும் கரைந்துவிட்டது என்றார். சங்கடமாக இருந்தது. ‘அடுத்த பதினைந்து நாட்களுக்கு வேணுங்கிறதுக்கு ஏற்பாடு செஞ்சு தந்துவிடுகிறோம்...தைரியமாக இருங்கள்’ என்று சொல்லிய தினம்தான் ‘தன்னார்வலர்கள் தனிப்பட்ட முறையில் உதவ அனுமதிக்க முடியாது’ என்று அரசு அறிவித்திருப்பதாக செய்தி வந்தது. இவர்களுக்கு எப்படி உதவுவது என்று குழப்பமாக இருந்தது. அடுத்த நாள் ‘உதவலாம்’ என்று அறிவிப்பு வெளியாகி தெளிவான பிறகு வேலையை ஆரம்பித்துவிட்டோம்.
ஆசிரியர் அரசு தாமஸ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் என்ன பொருட்கள் தேவை என்று பட்டியல் தயாரித்து அனுப்பினார். அவரே உள்ளூர் கடையில் பேசி விலைப்பட்டியலும் வாங்கினார். ஆயிரத்து நானூறு ரூபாய் என்றார்கள். அரசாங்கம் அரிசி, துவரம்பருப்பு, எண்ணெய் ஆகியவற்றை இலவசமாகத் தருவதாக அறிவித்திருப்பதால் அரிசியின் அளவைக் குறைத்துவிட்டு மற்ற இரண்டு பொருட்களையும் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு ஒரு குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் என்ற முடிவுக்கு வந்தவுடன் கடைக்காரரிடம் வாங்கச் சொல்லிவிட்டோம். எம்.ஜி.ஆர் காலனிக்கு அருகாமை கிராமங்களில் இருக்கும் வேறு இரண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் காலனிகளில் மொத்தமாக நூற்று நாற்பது வீடுகள் இருக்கின்றன. அவர்களிலும் பெரும்பாலானவர்கள்- அனைவருமில்லை- பெரும்பாலானவர்கள் மில் தொழிலாளர்கள், கட்டிடப்பணியாளர்கள். அவர்கள் குடும்பத்திற்கும் உதவ இயலுமா என்று கோரிக்கை வந்தது. அவர்களுக்கும் உதவுகிறோம்.
மொத்தம் முந்நூறு குடும்பங்கள். ஒரு குடும்பத்துக்கு ஆயிரம் வீதம் மூன்று லட்ச ரூபாய் ஒதுக்கியிருக்கிறோம். பொருட்களை வாங்கி ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியாக கட்டித்தருமாறு கடைக்காரரிடம் சொல்லியாகிவிட்டது. அரிசி மட்டும் கடைக்காரரிடம் இல்லாமல் இருந்தது. காங்கேயம் அரிசி ஆலையில் இருந்து நாளை வந்து சேர்ந்துவிடும். அநேகமாக பெட்டிகள் வியாழன் மாலையில் தயாராகிவிடும். வெள்ளிக்கிழமை இந்த முந்நூறு குடும்பங்களுக்கும் வழங்கிவிடுவோம். முடிந்தவரையில் இடத்துக்குச் செல்லாமல், கூட்டம் சேர்க்காமல் செய்ய வேண்டும்.
மொத்தம் முந்நூறு குடும்பங்கள். ஒரு குடும்பத்துக்கு ஆயிரம் வீதம் மூன்று லட்ச ரூபாய் ஒதுக்கியிருக்கிறோம். பொருட்களை வாங்கி ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியாக கட்டித்தருமாறு கடைக்காரரிடம் சொல்லியாகிவிட்டது. அரிசி மட்டும் கடைக்காரரிடம் இல்லாமல் இருந்தது. காங்கேயம் அரிசி ஆலையில் இருந்து நாளை வந்து சேர்ந்துவிடும். அநேகமாக பெட்டிகள் வியாழன் மாலையில் தயாராகிவிடும். வெள்ளிக்கிழமை இந்த முந்நூறு குடும்பங்களுக்கும் வழங்கிவிடுவோம். முடிந்தவரையில் இடத்துக்குச் செல்லாமல், கூட்டம் சேர்க்காமல் செய்ய வேண்டும்.
அரிசி - 10 கிலோ- ₹ 400.00
பச்சைப்பயறு- 700 கிராம்- ₹ 91.70
குண்டு உளுந்து - 1 கிலோ- ₹ 128.00
கல் உப்பு- 1 கிலோ- ₹ 8.00
பொடி உப்பு- 1 கிலோ - ₹ 8.00
புளி - 1/2 கிலோ- ₹ 85.00
வற மிளகாய்- 1/4 கிலோ- ₹ 45.00
மிளகு- 50 கிராம்- ₹ 24.50
சீரகம்- 100 கிராம்- ₹ 24.50
கடுகு - 100 கிராம்- ₹ 6.20
சேமியா- 2 பாக்கெட்- ₹ 19.50
கொள்ளு- 1/2 கிலோ- ₹ 20.00
தட்டப்பயறு- 1/2 கிலோ- ₹ 46.50
பொன்வண்டு சோப்பு- ₹ 8.33
பொன்வண்டு பவுடர்- ₹ 8.00
சந்தூர் சோப்பு- ₹ 23.90
பெருங்காயத்தூள்- ₹ 13.75
பொட்டுக்கடலை- 1/4 கிலோ- ₹63.75
வெந்தயம்- 100 கிராம்- ₹8.00
மஞ்சள்- ₹ 8.00
பொதுவாக விவசாயக்கூலிகளுக்கு தோட்ட வேலைகள் இருக்கின்றன. சென்றுவிடுகிறார்கள். விவசாயம் அல்லாத பிற தொழில் சார்ந்த தினக்கூலிகளின் நிலைமைதான் மிக மோசம். நீடிக்கப்பட்ட இந்த ஊரடங்கினால் அடுத்த வாரத்தில் நிலைமை இன்னமும் விபரீதமாகிவிடும். தன்னார்வலர்களோ, அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ செய்யக் கூடிய சிறு சிறு உதவிகளால் ஆங்காங்கே மக்கள் சிரமத்திலிருந்து விடுவிக்கப்படலாம். அரசினால் மட்டுமே அனைவரையும் துன்பத்திலிருந்து காத்துவிட முடியும் என்பது சாத்தியமில்லை. வெள்ள காலத்தில் பார்த்திருக்கிறோம் அல்லவா? நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நிசப்தம் அறக்கட்டளையில் அறுபது லட்ச ரூபாய் இருக்கிறது. இன்னமும் கூட பணத்தை ஒதுக்க முடியும். பிரச்சினை என்னவென்றால் போக்குவரத்து, இடங்களுக்கு நேரடியாகச் செல்வதில் இருக்கக் கூடிய ரிஸ்க் போன்றவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் செய்ய வேண்டும். அக்கம்பக்கம் சுற்றுவட்டாரத்தில் பொருட்களைக் கொண்டு சென்று வழங்கிவிடலாம். அடுத்த தாலுக்கா என்றாலும் கூட சிரமம்தான். இந்த முந்நூறு குடும்பங்களுக்கு பொருட்களை வழங்கவும் கூட அனுமதி பெற வேண்டிய வேலை இருக்கிறது. நாளை அதற்கான பணிகளைத் தொடங்க வேண்டும்.
அநேகமாக இன்னமும் சில நூறு குடும்பங்களுக்கு உதவிகளைச் செய்ய இயலும் என்று நினைக்கிறேன். மேலும் இருநூறு குடும்பங்களுக்கு உதவலாம். இதுவொரு மீச்சிறு உதவி. ‘கொரோனாவுக்குப் பின்’ காலத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் ஏகப்பட்டது இருக்கும்.
4 எதிர் சப்தங்கள்:
அண்ணா உதவி தேவைபடின் உங்கள் அழைப்புக்காக காத்திருகின்றோம். நன்றி.
தங்கள் அறக்கட்டளைப் பணி
என்றும் தமிழக மக்கள் உயிர் காக்கும்
தங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
Timely help sir,best wishes.Take care.
Give a man a fish and you feed him for a day; teach a man to fish and you feed him for a lifetime
Since resuming works with full labors would take time in all factories ,At the same time immense jobs are there in Agriculture,Why can't guide them in such different direction ?
Post a Comment