Mar 30, 2020

பார்த்துக்கலாம் விடுங்க

தினசரி ஏழெட்டு நண்பர்களை அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறேன். மாதச் சம்பளக்காரர்களைவிட தொழில் செய்பவர்களுடன்தான் பேச்சு அதிகம். இப்படியே மூன்று மாதம் நீடித்தாலும் பிரச்சினையில்லை என்றிருப்பவர்களைவிடவும் தினசரி சக்கரத்தைச் சுழற்றியே தீர வேண்டிய உழைப்பாளிகள், தொழில் முனைவோர் ஆகிய நண்பர்களுக்குத்தான் ஆறுதலும் தெம்பும் தேவையானதாக இருக்கிறது.  திக்குத் தெரியாத காட்டில் யாரோ தம் சிறகை ஒடித்துவிட்டதாகக் கூட பலரும் கருதுகிறார்கள்.  

சொந்தமாகத் தொழில் செய்து கொண்டிருக்கும் நண்பர் ஒருவரிடம் பேசிய போது ‘இந்த இருபத்தியொரு நாளை கூட ஓட்டிடலாம். ஆனால் அதற்கப்புறம் எப்படி எந்திரிச்சு நிக்கிறதுன்னு நினைச்சா மலைப்பா இருக்கு’ என்றார்.  அவர் சக்திமான். உற்சாகம் குறையாத மனிதர். அவரே சுணங்கிப் போயிருக்கிறார்.  எல்லோரிடமும் சொல்லும் வார்த்தைகளைத்தான். அவருக்கும் சொன்னேன் - ‘பார்த்துக்கலாம் விடுங்க’. 

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என ஒவ்வொரு அடியாக வாங்கி மெல்ல எழும் போது இப்படியொரு அடி. அதை நினைத்துத்தான் பயப்படுகிறார்கள். ஏதாவதொரு டானிக் எங்கோ ஒரு மூலையிலிருந்து கிடைக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு மட்டுமில்லை. கிட்டத்தட்ட எல்லோருக்குமேதான். எனக்கும் உங்களுக்கும் கூட.

பாதிப்பு இருக்கும்தான். ஆனால் உலகமே எழுந்து நின்றுதானே தீர வேண்டும்? ஒருவேளை ஆறு மாதம் என்பது ஒரு வருடம் என்றாகலாம். ஆனால் இப்படியே நம் காலம் முழுவதும் நசிந்து கிடக்கவே போவதில்லை.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. தமிழகத்திலும் இந்தியாவிலும் நோயின் தீவிரம் குறையப் போவதில்லை. நேற்று மட்டும் ஈரோடு மாவட்டத்தில் நான்கு பேருக்கு உறுதி செய்திருக்கிறார்கள். அதில் ஒன்று எங்கள் கிராமத்தில் - கரட்டடிபாளையத்தில். கடந்த வாரத்தில் எங்கேயோ யாருக்கோ நோய் என்ற போது பயமாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாக ஈரோட்டில் என்று சொன்ன போது நடுக்கம்தான். நேற்று கரட்டடிபாளையத்திலேயே யாரோ ஒருவருக்கு என்று அறிவித்துவிட்டார்கள். நோய் என்பதெல்லாம் ஆரம்பத்தில்தான் பயமூட்டும். தூரத்தில் இருக்கும் வரைதான் அதைப் பார்த்து நடுங்குவோம். அது நெருங்கி வர வர மனமும் மெல்ல மெல்ல பழகிவிடும். பிற நோய்களைப் போலவே இதுவும் ஒன்றுதான் என்கிற மனநிலை வந்துவிடும். இருபத்தியொரு நாள் ஊரடங்கு நமக்கு அப்படியொரு மனநிலையை உருவாக்கிவிடும் என்று உறுதியாக நம்பலாம்.

ஊரடங்கு இனிமேல் நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பதாகச் சில செய்திகளில் சொன்னார்கள். எப்படியும் ஏப்ரல் பத்தாம் தேதிக்குள் ஓரளவு தெளிவு கிடைத்துவிடும். அதன் பிறகு அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது மோடிக்குத்தான் வெளிச்சம். இனி நீட்டிக்க வாய்ப்பில்லை என்றுதான் அரசியல்- பொருளாதாரம் இரண்டையும் பேசக் கூடிய நண்பர்கள் சொல்கிறார்கள். ஏதாவதொரு வகையில் பொருளாதாரச் சக்கரம் சுழலத் தொடங்கினால்தான் தாக்குப்பிடிக்க முடியும். அதனால் ஏப்ரலிலிருந்து மெல்ல மெல்லக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிடுவார்கள் என்று முழுமையாக நம்பலாம். 

ஏப்ரலிலிருந்து இயல்பு நிலையைத் தொடர்ந்தாலும் கூட பல நிறுவனங்கள் வேலையில்லாமல் திணறக் கூடும். அதுவும் பன்னாட்டு நிறுவனங்களில் பலவும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த வாடிக்கையாளர் தரும் பணிகளை நம்பியிருக்கின்றன. பிற நாடுகளில் நோய் பரவும் வேகம்- குறிப்பாக அமெரிக்காவில் பரவும் வேகத்தையெல்லாம் பார்த்தால் அலை போல இந்த உலகின் பெரும்பாலானோரை நனைத்துவிட்டுத்தான் ஓயும் போலிருக்கிறது. நம்மவர்களைப் போல ‘வரட்டும் பார்த்துக்கலாம்’ என்கிற மனநிலை அவர்களுக்கு கிடையாது.  அவர்கள் பழைய வேகத்தில் ஓடத் தொடங்க இன்னமும் ஒன்றிரண்டு வருடங்கள் கூட பிடிக்கலாம். அதுவரை இந்திய நிறுவனங்கள் வடிவேலுவும் ‘என்னெத்த; கன்னையாவும் கார் ஓட்டுவதைப் போல ஓட்டிக் கொண்டிருப்பார்கள். கவிழ்ந்துவிடாமல் இருந்தால் சரிதான். 

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில்  பரிசோதனையின் விகிதம் மிக அதிகம். இங்கே அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. நமக்கே தெரியாமல் நோய் நமக்கு வந்துவிட்டு போகக் கூடும். மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டால் மட்டும் கொரோனா போலிருக்கிறது என்று யோசிப்பார்கள். அதனால் எண்ணிக்கையும் பெரிய அளவில் இருக்காது. இன்னொன்றை சில மருத்துவ நண்பர்கள் குறிப்பிட்டார்கள்-  இந்தியாவில் ஒவ்வொரு குழந்தையும் பல வைரஸ் தொற்றுகளால் பாதிக்கப்பட்டுத்தான் வளர்கிறது. அதனால் இயல்பிலேயே நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட்டிருக்கிறது. இதை மேற்கத்திய நாடுகளில் எதிர்பார்க்க முடியாது. இங்கேயிருக்கும் அசுத்தமும், குப்பையும், நோய்மையும் இயல்பாகவே இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை சற்று மேம்படுத்தி வைத்திருக்கிறது என்கிறார்கள். அவர்கள் சொன்னது மட்டும் சரியாக இருக்குமானால் நாம் தப்பிவிடுவோம். அப்படித்தான் தப்பிப்போம்.

எப்படிப் பார்த்தாலும் ஏப்ரல் 15க்குப் பிறகு நிலைமை மேம்பட்டுவிடக் கூடும் அல்லது மேம்பட்டுவிட்டதாக நாம் நம்பத் தொடங்குவோம். கொரோனா முழுமையாக இல்லாமல் போகாது. ‘அட பார்த்துக்கலாம்’ என்கிற எண்ணத்தில் நாம் வீட்டை விட்டு வெளியில் செல்லத் தொடங்குவோம். நோய் வரும் போது மருத்துவரைச் சந்திப்போம். பிற அனைத்து நோய்களையும் போலவே நாம் இதனை இடது கையால் டீல் செய்யத் தொடங்குவோம். 

இப்போதைய ஊரடங்கு, பீதி, மரண பயம் என எல்லாமே தற்காலிகமானதுதான். ஆற்று வெள்ளம் போல நம்மை இழுத்துக் கொண்டு போகிறது. வெள்ளம் அடித்துக் கொண்டு போகும் போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் கிடைக்கும் பற்றுக்கோலை இறுகப்பற்றிக் கொண்டிருப்பதுதான். நண்பர்களிடம் இதைத்தான் சொல்கிறேன். எனக்கும் இதைத்தான் சொல்லிக் கொள்கிறேன். மற்றபடி நோய் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. எந்த நோயும் வராது என்றா இதுவரை வாழ்ந்து கொண்டிருந்தோம்? நமக்கு வராது என்ற நம்பிக்கைதான். வந்தாலும் சரியாகிவிடும் என்றொரு நினைப்புதான். அதே நம்பிக்கை, அதே நினைப்பிலேயே இப்பொழுதும் இருப்போம். 

மற்றபடி வேலை என்ன ஆகும், தொழில் என்னவாகும், பொருளாதாரம் என்ன ஆகும் என்றெல்லாம் பயக்கிறவர்களுக்கு- நம்மில் பெரும்பாலானவர்கள் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கியவர்கள். உலகமே வளப்பமாக இருந்த போது நாம் பூஜ்ஜியத்தில் தொடங்கி மேலே வந்திருக்கிறோம். அவனவன் நமக்கு முன்னால் வெகுதூரம் ஓடிக் கொண்டிருந்த போதே நாம் ஓட்டத்தைத் தொடங்கி ஓடித் துரத்தி பிடித்திருக்கிறோம்; முந்தியிருக்கிறோம். இந்த கொரோனா அலை ஓயும் போது உலகமே கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திலிருந்துதான் தொடங்கும். அத்தனை பேரும் ஒரே கோட்டிலிருந்துதான் ஓடத் தொடங்குவார்கள். அதில் முந்த மாட்டோமா?  எல்லோரிடமும் சொல்வதுதான்- ‘பார்த்துக்கலாம் விடுங்க’.

3 எதிர் சப்தங்கள்:

Prakash said...

பயக்கிறவர்களுக்கு???

சேக்காளி said...

//அவனவன் நமக்கு முன்னால் வெகுதூரம் ஓடிக் கொண்டிருந்த போதே நாம் ஓட்டத்தைத் தொடங்கி ஓடித் துரத்தி பிடித்திருக்கிறோம்; முந்தியிருக்கிறோம்.//
அவனவன் ஓடுகிறான் என்பதற்காக
நான் ஓட தொடங்கணுமா?
துரத்தி பிடிக்கணுமா?
முந்தணுமா?

Unknown said...

ungal varthai migavum thembalikkrathu sir

Nanri