Mar 28, 2020

வேகம் வேகம்!

கொரோனா குறித்து, ஊரடங்கு குறித்து, நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துதல் குறித்து எந்தக் கருத்தையும் சொல்லிவிட முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி சூழலும் நிலைமையும் மாறிக் கொண்டேயிருக்கிறது. ஊரடங்கு அமலுக்கு வந்த முதல் இரண்டு நாட்கள் ஓரளவுக்கு திருப்தியாக இருந்தது. கட்டுக்குள் வந்துவிடும் என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைத்திருக்கக் கூடும். ஆனால் அதன் பிறகு பல பகுதிகளிலும் மக்கள் மிக இயல்பாக புழங்கத் தொடங்கிவிட்டார்கள். வழக்கம் போலவே அலைகிறார்கள். நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையை மட்டும்தான் குறைத்திருக்கிறார்களே தவிர மக்கள் நடமாட்டத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வருவதில் கோட்டைவிட்டிருக்கிறார்கள். 

‘நாங்கள் சொல்லிவிட்டோம்; மக்கள் பொறுப்பற்றவர்கள்’ என்று தட்டிக்கழிக்க முடியாது. இந்தியா போன்ற நாட்டில் அனைவருமே கவனத்துடன் இருப்பார்கள் என்றெல்லாம் எதிர்பார்க்கவும் முடியாது. ஐ.ஏ.எஸ் அதிகாரியைப் பிடித்து ‘வீட்டிலேயே இருய்யா’ என்று அமர வைத்தாலும் கூட அவர் திருட்டுத்தனமாகத் தப்பித்து உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் தனது ஊருக்கு ஓடுகிற தேசம் இது. தமக்கு நோய்த் தொற்று இருக்கிறது என்று தெரிந்தே டெல்லி, ஆக்ரா என்று அலைந்த சாப்ட்வேர் பெண்மணி பிறந்து வளர்ந்த நாடு இது. இங்கு படித்தவன் படிக்காதவன் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. பெரும்பாலும் அப்படித்தான். 

காவல்துறையின் கண்காணிப்புகளும் நகரின் மையப்பகுதியில்தான் அதிகமாக இருக்கிறது. அங்கு சிலரை அடித்து அல்லது பாடம் நடத்தி வீடியோ எடுத்து சுற்றலில் விடுகிறார்கள். ஆனால் ஊர்ப்புறங்கள், நகரின் வெளிப்பகுதிகளில் ஆட்கள் தாறுமாறாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. சாலைகளில் அமர்ந்து அரட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். யாரும் கேட்பாரில்லை. இப்படியே போனால் அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் எப்பொழுதும் போல போல சுற்றத் தொடங்கிவிடுவார்கள். 

நீண்டநாள் ஊரடங்கை அமல்படுத்துவதில் தமிழக அரசு அனுபவமின்றிச் செயல்படுகிறது என்றே தோன்றுகிறது. மூன்று நாட்கள் கடந்த பிறகும் கூட அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் எவை, திறந்திருக்கும் நேரம் எது என்பதில் வெவ்வேறு அறிவிப்புகள் வெளிவருகின்றன். குழப்பங்கள் நிலவுகின்றன. கடை திறந்திருக்கும் போதே வாங்கிக் கொள்ளலாம் என்று ஆட்கள் கடைகளில் குவிகிறார்கள். எந்தக் கடைக்குச் சென்றாலும் நான்கைந்து பேர்கள் நிற்கிறார்கள். பால் வாங்கச் சென்றால் அங்கேயும் ஏழெட்டுப் பேர்கள் நிற்கிறார்கள். பயமாக இருக்கிறது. நமக்குத்தான் பயம் மற்றவர்கள் வழக்கம் போலவே கடைசியில் வந்தாலும் முதலில் செல்ல வேண்டும் என்று முண்டியடித்து கைகளை நீட்டுகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். மூச்சுக்காற்றை நம் மீது விடுகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். முகத்தில் கர்ச்சீப்பைக் கட்டிக் கொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நம்புகிறவர்கள்தான் வெளியே திரிகிறார்கள்.

கடைகள் திறப்புக்கு சரியான கால நிர்ணயம் செய்து, தமது வீட்டை விட்டு அரைகிலோமீட்டருக்கு மேல் யாரும் நகரக் கூடாது என்று கண்காணித்து, ஃபோன் வழியாக பொருட்களை எடுத்து வைக்கச் சொல்லிவிட்டு சென்றவுடன் வாங்கிக் கொண்டுவது மாதிரியான திட்டமிடல்களைச் செய்யும்படி உள்ளூர் அதிகாரிகளை பணித்தால் அவர்கள் ஒரே நாளில் செய்து ஆங்காங்கே அறிவித்தும் விடுவார்கள். பிரச்சினை என்னவென்றால் அனைத்து விளம்பரமாகவே செய்யப்படுகிறது. நோய்த்தொற்று விவரங்களை மருத்துவ அதிகாரி வெளியிடுவதில்லை மாறாக அமைச்சர்தான் வெளியிடுகிறார். அறிவிப்புகளை முதலமைச்சர்தான் வெளியிடுகிறார். முதலில் சில நாட்களுக்கு ‘சூப்பரா செயல்படுறாங்க’ என்று பிம்பத்தை உருவாக்கலாம். இப்படியான சொதப்பல்களின் காரணமாக எல்லாம் கை மீறிப் போகும் போது மிக மோசமான கெட்ட பெயரைச் சம்பாதிக்க நேரிடும்.

பொதுவாக முதலமைச்சர் சாலை வழியில் பயணித்தால் வழி நெடுக- அது எத்தனை கிலோமீட்டர்களாக இருந்தாலும் சரி- கோவையிலிருந்து சேலம் என்றாலும் சரி; சென்னையிலிருந்து விழுப்புரம் என்றாலும் சரி- காவலர்கள் நாள் முழுவதும், வழி நெடுகவும் காத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதே போன்று இப்பொழுதும் பகல் நேரத்தில் ஊருக்கு இரண்டு அல்லது நான்கு காவலர்களை நிறுத்தி வைக்கலாம். வெளியில் சுற்றுகிறவர்களை எச்சரிக்க வேண்டும். யாராவது எதிர்த்துப் பேசினால் ரோந்துப்படை, துணை ராணுவப்படை என்று யாராவது உதவிக்கு வர வேண்டும்.

ஒரு பக்கம் மருத்துவமனைகளை அதிகரித்து, மருத்துவ வழிமுறைகளை ஆய்வு செய்து நோய்த் தொற்றாளர்களை மீட்டெடுக்க வேண்டும், இன்னொரு பக்கம் சோதனைகளை அதிகரித்து புது நோயாளிகள் எங்கேனும் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும், பொருள் விநியோகம் உள்ளிட்ட இன்னொரு பிரச்சினை, அதே சமயம், வெளியே சுற்றும் மக்களையும் எப்படியாவது கட்டுப்படுத்தியே தீர வேண்டிய சூழலில்தான் இருக்கிறோம்.

இன்று ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. சென்னை பீனிக்ஸ் மாலில் பணியாற்றுகிறவர் அரியலூர் சென்றிருக்கிறார். ஊருக்குச் சென்றவருக்கு கொரோனா. அவர் வெளிநாட்டுப் பயணம் எதுவும் மேற்கொண்டவரில்லை. வெளிநாடு சென்று வந்தவர் யாரோ ஒருவர் இவருக்கு ஒட்ட வைத்திருக்கிறார். இதைத்தான் சமூகப்பரவல் என்கிறார்கள். அரியலூர் இளைஞர் பேருந்தில் பயணித்திருப்பார். தமது உள்ளூரில் சிலருடன் நெருங்கி பேசியிருப்பார். இப்படி தான் சென்ற பாதையில் அவரால் எத்தனை பேருக்கு தொற்று உண்டாகியிருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இவரைப் போலவே எத்தனையோ பேர்கள் கோயம்பேட்டிலும் சென்ட்ரலிலும் இருந்து கிளம்பி நெல்லைக்கு, விழுப்புரத்துக்கும், சேலத்துக்கும் சென்றிருப்பார்கள். இப்படி ஒவ்வொன்றாக இனிமேல்தான் பாதிப்புகள் தெரியக் கூடும். 

இனியும் விளம்பர நோக்கில் முகத்தில் மாஸ்க் அணிந்து நிழற்படங்களுக்கு பாவனை காட்டிக் கொண்டிருந்தால் நிலைமை விபரீதமாகிவிடக் கூடும். அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் குறை சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. விளம்பரங்கள் தேவைதான். ஆனால் நாம் அதற்கான காலகட்டத்தை தாண்டிக் கொண்டிருக்கிறோம் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 

மாநிலம் முழுமைக்கும் அதிகாரப் பரவல், ஆங்காங்கே முடிவெடுக்கும் அதிகாரம், தவறான முடிவெடுக்கும் போதே அதைக் கண்டறிந்து சரி செய்தல், தேவையான இடமாற்றங்களைச் சத்தமில்லாமல் செய்தல் போன்ற மேல்மட்ட முடிவுகளை சென்னையில் எடுத்து பிற அனைத்து முடிவுகளையும் ஆங்காங்கேயிருக்கும் மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும். எல்லாவற்றையும் அமைச்சரும், முதல்வருமே அறிவிக்க வேண்டியதில்லை. மாநிலம் சிறப்பாகச் செயல்பட்டால் இறுதியில் எப்படியும் அரசுக்குத்தான் நல்ல பெயர் கிடைக்கப் போகிறது. எல்லாவற்றிலும் கிரெடிட் எடுக்க வேண்டும் என்று பதற வேண்டியதில்லை.

எந்த ஊரில் எந்தக் கடைகள் திறந்திருக்கலாம், எவ்வளவு நேரம் திறந்திருக்கலாம், எப்படி வியாபாரம் செய்ய வேண்டும், எப்படி பொருட்களை விநியோகிக்க வேண்டும், விலைக் கட்டுப்பாடு போன்ற அனைத்தையும் அந்தந்த ஊர் அதிகாரிகள் கண்காணிக்கும் சூழலை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த அதிகாரிகளின் உத்தரவுகளை மீறுகிறவர்களை காவல்துறை தமது கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். வெறுமனே வீடியோ எடுத்து அதை வைரல் ஆக்குவது என்பதை நிறுத்திவிட்டு உண்மையிலேயே கிராமப்பகுதிகள் உட்பட ஒவ்வொரு மூலையிலும் நிலைமை அடுத்த பதினெட்டு நாட்களுக்கும் நூறு சதவீதக் கட்டுக்குள் இருப்பதற்கான செயல்களை முடுக்காவிட்டால் இந்த ஊரடங்கு அர்த்தமற்றதாகிவிடும்.

அர்த்தமற்றது என்பது மட்டுமில்லை- இருபத்தியொரு நாள் பொருளாதார இழப்பைச் செய்து, இலட்சக்கணக்கானவர்களுக்கு வேலையிழப்பு, லட்சக்கணக்கான கோடிகள் வியாபார இழப்பு என்று ஒரு தேசத்தையே குழிக்குள் தள்ளிய செயலாக மட்டுமே இந்த அர்த்தமற்ற ஊரடங்கு அமைந்துவிடும். இன்னமும் பதினெட்டு நாட்கள் இருக்கின்றன. இன்னமும் கூட நமக்கு அவகாசம் இருக்கிறது. மக்களை வீட்டிலேயே அடங்கச் செய்து நோய்க் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, பரிசோதனைகளை அதிகரித்து, நோய்த் தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சையைச் செய்தால் தப்பிவிடலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இந்திய அளவில் பிப்ரவரி 19 - 3 பேர்; மார்ச் 5 - 29 பேர் (15 வது நாள்); மார்ச் 13 - 82 பேர் (23 வது நாள்); மார்ச் 25 - 563 பேர் (35 வது நாள்); மார்ச் 26 - 735 பேர் (36 வது நாள்); மார்ச் 27 - 877 பேர் (37 வது நாள்)  என்ற எண்ணிக்கையில் எகிறிக் கொண்டிருக்கிறது. கடைசி மூன்று நாட்களின் எண்ணிக்கையை மட்டும் கவனியுங்கள். அடுத்த நான்கைந்து நாட்கள் இதைவிட வேகம் கூடும். 

கட்டுப்படுத்தியே தீர வேண்டும். 

3 எதிர் சப்தங்கள்:

ramesh said...

ஒவ்வொரு அரைகிலோமீட்டரிலும் 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கிறார்கள். வெறும் 2 மணிநேரத்தில் காய்கறி வாங்கிச்செல்லவேண்டும் என்று அறிவிப்பது அடிமுட்டாள்தனமானது, நடைமுறை சாத்தியம் இல்லாதது. நாள் முழுவதும் காய்கறியும் மளிகை பொருளும் கிடைத்தால் மட்டுமே நெரிசலைத் தவிர்க்க முடியும்.

ரா.சிவானந்தம் said...

சாதாரணமா ஓடிப்பாருங்கள் உங்கள் வேகத்தை... அதுவே நாய் துரத்தும் போது...? அதுதான் வித்தியாசம்.

100 குடும்பமும் தினம் மளிகை /காய்கறி வாங்கியா வாழ்கிறார்கள். இது ஒரு சுழற்சி முறை. இன்று 50, நாளை 50. இதில் திட்டமிடல் இருந்தால் இரண்டு மணிநேரமே போதும்.

சேக்காளி said...

//. நாள் முழுவதும் காய்கறியும் மளிகை பொருளும் கிடைத்தால் மட்டுமே நெரிசலைத் தவிர்க்க முடியும்.//
ஆமாம்.