கடந்த இரண்டு நாட்களாக வெளியில் சுற்றுகிறவர்களை காவல்துறை அடிப்பது பற்றி விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. நேற்று அம்மாவுக்கு மருந்து வாங்குவதற்காக பைக்கில் சென்றேன். காவல்துறை பெண்மணி தடுத்து விசாரித்தார். ‘யாருக்கு மருந்து?’ ‘என்ன பிரச்சினை?’ ‘மருந்துச் சீட்டைக் காட்டுங்க’ என்று ஏகப்பட்ட கேள்விகள். ஈகோவை சொறிவது போலவே இருந்தது. என்னிடம் அனைத்தும் சரியாக இருந்தன. ‘வாங்கிட்டு வீட்டுக்கு போங்க...சுத்திட்டு இருக்க கூடாது’ என்றார். இதுதான் எரிச்சலைக் கிளப்பியது. ‘சுத்திட்டு இருக்கக் கூடாதுன்னு எங்களுக்கு தெரியாதுங்களா?’ என்றேன். ‘பேசறதெல்லாம் நல்லாத்தான் பேசறீங்க’ என்றார். அதற்கு மேல் அவரிடம் பேசுவது வம்பை வளர்க்கும் எனத் தோன்றியது. கிளம்பிச் சென்றுவிட்டேன்.
இது காவல்துறை பெண்மணியின் கடமை. கண்டபடி எரிச்சலை உருவாக்கினால் அவரை மீண்டும் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காகவாவது வெளியில் செல்லாமல் இருப்பேன். ஆட்களின் நடமாட்டத்தைக் குறைத்தே தீர வேண்டிய சூழலில் இருக்கிறோம்.
இது காவல்துறை பெண்மணியின் கடமை. கண்டபடி எரிச்சலை உருவாக்கினால் அவரை மீண்டும் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காகவாவது வெளியில் செல்லாமல் இருப்பேன். ஆட்களின் நடமாட்டத்தைக் குறைத்தே தீர வேண்டிய சூழலில் இருக்கிறோம்.
அரசு மருத்துவ நண்பர் ஒருவர் இருக்கிறார். கணவன் மனைவி இருவருமே அரசு மருத்துவர்கள். இரண்டு குழந்தைகள். அதில் ஒன்று கைக்குழந்தை. குழந்தைகளை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு இவர் அரசு மருத்துவமனையில் பணியில் இருக்கிறார். மனைவி கிராமங்களில் மருத்துவப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். இருவரும் குழந்தைகளைப் பார்த்தே ஒரு வாரம் ஆகிவிட்டதாம். இதுவரை அவர் தனது புலம்பலை அவர் காட்டியதே இல்லை. நான்தான் பெரும்பாலும் புலம்புவேன். நேற்று அழைத்தவர் ‘குழந்தைகளைப் பார்க்காதுதாங்க கஷ்டமா இருக்கு’ என்றார். அரசாங்கம் கையுறை, முகக்கவசம் எதுவுமே வழங்கவில்லை. இவராக ஒரு முகக்கவசம் வாங்கியிருக்கிறார். அதுவும் கூட N95 இல்லை. அறுவை சிகிச்சையின் போது அணியும் சாதாரண கவசம்.
‘N95 ஒண்ணு வாங்கிடலாம்ல டாக்டர்’ என்று கேட்டால் ‘கிடைக்கிறதில்லைங்க’ என்கிறார்.
இத்தகைய மருத்துவப் பணியாளர்களின் நிலைமையைத்தான் யோசிக்க வேண்டும். இவர்கள்தான் நோயைக் கட்டுக்குள் வைப்பார்கள். அப்படி இவர்கள் கட்டுப்படுத்தினால் ‘எல்லாம் எங்களால்தான்’ என்று விளம்பரம் தேடிக் கொண்டும், கட்டுப்படுத்த இயலாமல் போனால் ‘நாங்க நடவடிக்கை எடுத்தோம் மக்கள்தான் ஒத்துழைக்கவில்லை’ என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டும் ஆளும் வர்க்கம் நகர்ந்துவிடும். சிக்குகிறவர்கள் எல்லாம் இத்தகைய மருத்துவப் பணியாளர்கள்தான். முதல் பாதிப்பைச் சந்திக்கப் போகிறவர்களும் இவர்கள்தான்.
ஊரடங்கு, வெளியில் சுற்றாதீர்கள் போன்ற கட்டளைகளையாவது அரசாங்கம் முழுமையாகச் செயல்படுத்தினால்தான் நாம் தப்பிப்போம்.
இப்பொழுது இருக்கும் நிலைமை இன்னமும் மோசமாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் நம்மை தடுத்து நிறுத்தச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பத்தியொரு நாட்களுக்கு நமக்கு வேலை எதுவுமில்லை. பொழுது தீரத் தீர தொலைக்காட்சி, இணையம், வேளா வேளைக்கு சோறு, தூக்கம் என்றிருந்துவிட்டு அப்பொழுதும் பொழுது தீரவில்லை என்று பைக்கை எடுத்து வெளியில் கிளம்புகிறவர்களைப் பார்த்தால் கோபம் வரத்தானே செய்யும்? இவர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது? பேருந்துகள் ஓடுவதில்லை, சரக்கு வாகனங்கள் இல்லை ஆனாலும் இரு சக்கர வாகனங்களில் குடும்பத்தோடு சென்று வருகிறவர்கள் இருக்கிறார்கள். அவசியமான பயணம்தான் என்று எல்லோராலும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. சாலைகளில் அவ்வப்போது கார்கள் வந்து போகின்றன. கடைகள் திறந்து வைக்கப்படுகின்றன. இன்னும் இருபது நாட்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் ஆரம்பத்திலேயே இலகுவாக விட்டுவிட்டால் நாட்கள் நகரும் போது இந்த நடமாட்டம் அதிகமாகும்.
நாம் இந்த ஊரடங்குக்கு கொடுக்கும் விலை மிகப் பெரியது. ஒரேயொரு நாள் நாடு தழுவிய பந்த் நடைபெற்றால் கூட அடுத்த நாள் ‘பல்லாயிரம் கோடிகள் முடங்கின’ ‘லட்சம் கோடி நஷ்டம்’ என்று தலைப்புச் செய்தி வரும். இப்பொழுது எத்தனை லட்சம் கோடிகளை முடக்கப் போகிறோம்? எத்தனை தொழில்கள் முழுமையாக சரியப் போகின்றன? எத்தனை கோடி பேர்கள் மீளவே முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கப் போகிறார்கள்? இவை அத்தனையுமே இந்த கிருமிப் பரவலைத் தடுக்கத்தான். இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் வெளியில் சுற்றிக் கடைசியில் கிருமிப் பரவலையும் தடுக்காமல் ஏமாந்து போனால் நம் மீது இரண்டு பெரிய அடிகள் விழுவதாக அர்த்தம். இரண்டுமே நம் தலைமுறையில் மீளவே முடியாத மரண அடியாக இருக்கும். நமக்கும் சரி; நாட்டுக்கும் சரி.
இருபத்தியோரு நாட்களுக்கு ஒரு நாட்டை அடக்கி வைப்பது சாதாரணக் காரியமில்லை. வெளிநாட்டில், வெளியூரில் சத்தமில்லாமல் கமுக்கமாக இருப்பவர்கள் கூட சொந்த ஊரில் கால் வைத்தவுடன் ‘இது என் மண்’ என்று தெனாவெட்டாகத் திரிவதைக் காலங்காலமாக பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? அப்படித்தான் திரிகிறார்கள். வெளியில் செல்ல ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும். தம்முடைய பயணத்தை ஒவ்வொருவரும் அத்தியாவசியம் என்று கருதக் கூடும். கண்ணுக்குத் தெரியாத கிருமியின் மிரட்டலைவிடவும் கண்ணுக்குத் தெரியும் காவலர்களின் மிரட்டல், பயம் என்றெல்லாம் தொடரும் போதுதான் ‘தவிர்க்கவே முடியாத காரியங்களுக்கும் மட்டுமே வெளியில் செல்லலாம்’ என நினைக்கத் தோன்றும். அந்த பயத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு இருக்கிறது.
நேற்றைய முன் தினம் வரைக்கும் கூட அந்த மருத்துவ நண்பர் சற்று பயந்தபடியேதான் இருந்தார். பரவல் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார். நேற்று மதியம்தான் சூழலைப் பார்த்துவிட்டு ‘பரவலின் வேகம் குறைய வாய்ப்பு இருக்குங்க’ என்றார். நாம் நன்றாக இருப்பதைவிடவும் மருத்துவர்கள், செவிலியர்கள், இன்னபிற சுகாதாரப் பணியாளர்கள் நலமுடன் இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் நோயின் காரணமாகவோ வேறு காரணங்களுக்காகவோ உடல்நலம் பாதிக்கப்பட்டு, மனச்சோர்வுடன் அமர்ந்துவிட்டால் மீதமிருக்கும் நூற்று முப்பது கோடி பேரின் நிலைமை கந்தலாகிவிடும். அதற்காகவாவது ஊர் சுற்றிகளை, உள்ளூர் தெனாவெட்டாளர்களையெல்லாம் கட்டுப்படுத்துவது காலத்தின் சூழல் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
காவலர்கள் அடிப்பது மனித உரிமை மீறல் என்பதெல்லாம் சரிதான். முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இயல்பான காலகட்டத்தில் காவலர்கள் அதிகாரத் தொனியுடன் மிரட்டுவது கூடத் தவறுதான். காவல் நிலையத்தில் ஒவ்வொருவரையும் அமர வைத்து மரியாதையாகப் பேச வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கலாம். அதுவே இத்தகைய நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் சற்று ஏமாந்தாலும் நிலைமை கந்தரகோலம் ஆகிவிடும் என்கிற சூழலில் எல்லாவற்றையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. பயம் அவசியம்.
அதே சமயம் இன்னமும் சில நாட்கள் கடந்த பிறகு காவலர்கள் கை நீட்டுவதில் இன்னொரு சிக்கலும் நேரக் கூடும். இன்றைக்கு நம் சமூகத்திற்கு இருக்கும் அதே மனநிலை அடுத்து வரும் நாட்களுக்கும் தொடரும் என்று சொல்ல முடியாது. வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பது என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு விதமான மனச்சிக்கல்களை உருவாக்கக் கூடும். வெளியுலகத்துடனான தொடர்பின்மை, பொருளாதார நெருக்கடிகள், குடும்பச் சூழல், இன்னும் பல காரணிகள் உருவாக்கக் கூடிய மன உளைச்சல், தினசரி வழமையின் திடீர் இயக்க நிறுத்தம், குடியை நிறுத்துவதால் உண்டாகக் கூடிய withdrawal syndrome மாதிரியான சிக்கல்கள் உள்ளவர்கள் மீது காவலர்கள் கை வைத்தால் அவர்கள் திருப்பி அடித்தல், தற்கொலை மிரட்டல் போன்ற எதிர்விளைவுகளைக் காட்டினால் அதிகமான சலசலப்புகள் ஏற்படலாம். சமூக அமைதி குலையலாம். பெரும்பான்மையானோரின் கோபம் காவல் துறை மீது திரும்பவும் வாய்ப்பிருக்கிறது. அது இன்னமும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நெருக்கடியை காவல் துறைக்கும், துணை ராணுவம் மற்றும் ராணுவத்தின் உதவியைக் கோரும் அழுத்தத்தை மாநில அரசுக்கும் உருவாக்கலாம். எனவே ஆரம்ப நாட்களிலேயே கடுமையான பயத்தை உருவாக்கிவிட்டு அடுத்து வரும் நாட்களுக்கு அடி எதுவுமில்லாமல் வெறும் மிரட்டடிலேயே அதே ஒழுங்கினை தொடர்ந்து வரும் இருபது நாட்களுக்கும் காவல்துறை நீட்டிக்கும் என நம்பலாம். ஒருவேளை அப்படியான திட்டமிடல் எதுவுமில்லை என்றாலும் இனி திட்டமிடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன். இப்பொழுதே சில வீடியோக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்படுகின்றன. இத்தகைய நெருக்கடியான, நீண்ட காலப் பிரச்சினைகளில் சமூக ஒழுங்கமைவு, சமூக மனோவியல் போன்றவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
2 எதிர் சப்தங்கள்:
//காவலர்கள் அடிப்பது மனித உரிமை மீறல் என்பதெல்லாம் சரிதான்//
ஊரடங்கு உத்தரவு சமூக விரோத செயல்களை கட்டுப் படுத்துவதற்காக அல்ல.
நோய் தாக்குதலை குறைக்க என்பதை மக்களும் காவல் துறையும் மனதில் வைத்து செயல் பட்டால் 21 நாள்கள் அமைதியாக கடந்து விடும்
Anbin Mani,
With respect to corona and 144 we are behaving like 5th std student. wherever teachers dropped the rod / scale, students tend to lose their good behaviour and responsible character, i feel. As parents complaining teachers not to hit children, they became irresponsible and chaotic..... you cannot change a 30 ager unless he was moulded in 10th age itself. as far as i am concerned, the strictness, vigil is must and MANDATORY to control the situation esply on those non-law-abiders. so dropping lathis on floor in the wake of human rights angle is absurd at this scenario. for eg: in myna film, kerala comuunists make TN police to remove handcuffs in the name of human rights then the hero escapes thats part of story. accused should be treated as accused only not to be treated as normal person and accused deserves NO LENIENCY at any time. The same applies for these outsiders also, ie., when there is prohibition u/s 144 and still roaming outside without any specific reason and proper proof, then he/she is accused in the eyes of law as a virus-spreader only and to be treated in that POLICE method only. Northern Italy leniently hugged /welcomed chinese during their February campaign after Wuhan chinese textile people came back to italy after their chinese new year celebrations and paid the price for their leniency aftermath so this is the right time and MUST TIME to regulate and correct the irregularities in the society made in all these years to some extent. police are the TEACHERS for us now. i support police action on enquiries and lathi charge at the start of the lock down period itself, if they are LENIENT then things will go worse and out of control which makes the noble devoted medical community a scape goat..... 4000 paer sagarathukku bathila 400 paer adi vangurathu thappe illai. anba sonna kaekkalana, adi kuduthu miratti thaan veetla ukkara vaikkanum at least at this time when corona is still UNDER OUR CONTROL. teachers maelayum police melayum respectum poi fearum pochuna naadu naasama thaan pogum. yerkanave ippolam apdi than irukku. so creating fear in the minds at the start of 144 is must duty for police to help in curtailing the spread of virus. withdrawal syndrome alavukko or those will get affected by WS would be meagre only, which will get wiped/vanished automatically after tamil new year till such time they have to bear the pain of managing withdrawal syndrome on their own. it is their personal commitment and social responsibility.
anbudan
Sundar Chennai
Post a Comment