Mar 25, 2020

வெளிச்சம்

மனைவி பணிபுரியும் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளர்களை வேலையைவிட்டு அனுப்பிவிட்டார்கள். நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும் சில வேலைகளைக் கொடுத்து செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த பதினைந்து நாட்களுக்கு அவர்களுக்கு வேலை இருக்கிறது.  சில நண்பர்களிடம் பேசினேன். புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த வாரம் வரை ‘என்ன ஜாலியா...வொர்க் ஃப்ரம் ஹோம்மா?’ என்று விபரீதம் புரியாமல் கேலி பேசிக் கொண்டிருந்தவர்கள்தான். ஆங்காங்கே நிறுவனங்கள் மெல்ல கதவடைப்பைச் செய்யத் தொடங்கியவுடன் பதறுகிறார்கள். சில நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை கட்டாய விடுப்பு எடுத்துக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள். வேறு சில நிறுவனங்கள் ‘சம்பளமில்லாத விடுமுறை’ என அறிவித்திருக்கின்றன. இன்னமும் நிலைமை மோசமானால் இதன் வீரியம் அதிகமாகும். 

எதிர்பார்த்ததுதான். 

கொரோனா நோய் உண்டாக்கும் பாதிப்புகளைவிடவும் பொருளாதார ரீதியாக உருவாகும் அழுத்தங்களும் சீரழிவுகளும்தான் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கக் கூடும். அதுவே  வர்த்தகம், தொழிற்துறை சார்ந்த சில நண்பர்கள் ‘bottom out' என்பதும் நல்லதுதான் என்கிறார்கள். அடுத்த ஒன்றிரண்டு மாதங்களுக்கு எல்லாமே அடியாழத்தில் கிடக்கும். இதுவரை உழைத்தவர்கள், சம்பாதித்தவர்கள் என சகலரும் கைகளைக் கட்டிவிட்டது போலக் கிடந்து மீண்டும் எழும் போது முன்பைக் காட்டிலும் வேகமாக உழைப்பார்கள். சம்பாதிக்க விரும்புவார்கள். இது பெரும் கார்போரேட் நிறுவனங்களுக்கும் பொருந்தும். தமது இழப்பையெல்லாம் சரிகட்டும் விதமாகவும் புதியதாக உருவாகவிருக்கும் வாய்ப்புகளை கபளீகரம் விதமாகவும் புதுப்புது யுக்திகளை மேற்கொள்வார்கள். அப்படியானதொரு மலர்ச்சியில் சாமானியர்களுக்கும் புதிய வாய்ப்புகள் நிறைய உருவாகும் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்து. ஆனால் அப்படியான மலர்ச்சிக்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதுதான் பெரும்பாலானோரால் கணிக்க முடியவில்லை. 

சுமார் மூன்று மாத கால தர்ம அடிக்குப் பிறகு சீனா மெல்ல இயல்பு நிலைக்கு வந்துவிட்டது.  ‘சீனா அடி வாங்கும் போது இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்’ என்று சிலர் இரண்டு மாதங்களுக்கு முன்பாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அல்லவா? அது ஒரு அரைவேக்காட்டுத்தனமான கருத்து. உலக இயங்குகிற அடிப்படை புரியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எதைச் சொன்னார்களோ அதை இப்பொழுது சீனா செய்யப் போகிறது. இந்தியா உட்பட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அடி வாங்கும் இந்த நேரத்தில் சீனா எழுந்துவிட்டது. இனி அந்நாடு எதை வேண்டுமானாலும் செய்யும். பிற நாடுகள் நோயின் மீது கவனம் செலுத்திக் கொண்டிருக்க சீனா இன்னபிற உலகளாவிய விவகாரங்களில் கவனத்தைச் செலுத்தும். அடுத்த சில ஆண்டுகளில் உலக வல்லரசாக சீனா மாறுவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன என்று சில கட்டுரைகளில் வாசிக்க நேர்ந்தது. அதை மறுப்பதற்கில்லை.

இந்தியாவும் சீனாவைப் போலவே அதிகபட்சமாக மூன்று மாத காலத்தில் மீண்டு விடலாம் என்கிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் இதுதான் கணக்கு என்று வைத்துக் கொண்டாலும் கூட அநேகமாக மே, ஜூன் மாதங்களில் நாம் பழைய ஓட்டத்தைவிடவும் வேகமாக ஓடத் தொடங்கியிருப்போம். அப்பொழுது ஓடுவதற்கு நம் கால்களில் தெம்பும், மனதில் வலுவும், மூளையில் தெளிவும் அவசியம். இதைத்தான் நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

யூடியூப் சேனல்களில், ஆன்லைன் பத்திரிக்கைகளில் அடுத்த இருபத்தியொரு நாட்களுக்கு வீட்டில் இனிமையாக பொழுதைக் கழிப்பது எப்படி என்றெல்லாம் பாடம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள். அதிர்ச்சியாக இருந்தது. நாம் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு விடுமுறையில் இல்லை. அதே போல மூப்பின் காரணமாக ஓய்வு பெற்றும் அமரவில்லை. வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டிருக்கும் இந்த இடைவெளியை வாழ்க்கைக்கான படிக்கல்லாக பயன்படுத்திக் கொள்வதில்தான் மொத்த கவனமும் இருக்க வேண்டும். இந்த உலகம் இதோடு அணைந்து விடப் போகிறதா என்ன? மீண்டும் வேகம் எடுக்கும். அப்படி அது வேகமெடுத்து ஓடத் தொடங்கும் போது அதே வேகத்தில் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் அள்ளியெடுக்க நாம் தயாராக இருக்க வேண்டியதில்லையா?

இதுவரைக்கும் ஒரு துறையில் பணியாற்றிருப்போம். நிற்க நேரமில்லாமல் மேலாளர்கள் நமக்கான வேலையைக் கொடுத்திருப்பார்கள். அதைச் செய்து கொடுத்து அண்ணாந்து பார்க்கும் போது இன்னொரு வேலை வந்து சேர்ந்திருக்கும். வார விடுமுறை, தீபாவளி, பொங்கல் என்றெல்லாம் இரண்டொரு நாட்கள் சேர்ந்தாற்போல அமைந்து கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் எப்படி ஓய்வெடுக்கலாம், எப்படி வாழ்க்கைய சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம் என்றுதான் நினைத்திருப்போமே தவிர தனிப்பட்ட ஆளுமை மேம்பாடு, திறன் மேம்பாடு என்பதற்கெல்லாம் பெரிய அளவில் மெனக்கெட்டிருக்க மாட்டோம். இந்த இருபத்தியொரு நாட்களை அப்படியான சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்வது மிக அவசியம்.

அவரவர் துறையில் என்னென்ன புதிய தொழில்நுட்பங்கள் வந்திருக்கின்றன, எவை எங்கே பயன்படுகிறது, எப்படிக் கற்றுக் கொள்ளலாம் என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். நிறைய இணையதளங்கள் பாடங்களை வைத்திருக்கின்றன. தேர்வெழுதி, சான்றிதழ்கள் வாங்குவது என்றால்தான் பணம் கட்ட வேண்டும். படிக்க பணம் அவசியமில்லை. படிக்கலாம். குறிப்பு எடுத்துக் கொள்ளலாம். தினசரி ஒன்றிரண்டு மணி நேர உழைப்பு நம்மை புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கற்றுக் கொள்ளச் செய்துவிடும். தொழில்நுட்பம் மட்டுமின்றி ஆங்கிலம் பேசுவது, நேர்காணல்களை எதிர்கொள்வது, உடல் மொழி, பேச்சுத் திறமை போன்ற பிற திறன் மேம்பாடுகளிலும் கவனம் செலுத்தலாம். ஏகப்பட்ட யூடியூப் வீடியோக்கள் இருக்கின்றன. சாய் பல்லவி, காஜல் அகர்வால்களுக்கு ஒதுக்கும் நேரங்களில் பாதியை இத்தகைய வீடியோக்களும் ஒதுக்குவது மிக அவசியம்.

இந்த நோயின் அடியினால் உலகத்தின் இயங்கியலே மொத்தமாக மாறுவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. நாடுகளில், நிறுவனங்களில், அரசியல், பொருளாதாரம் என சகலத்திலும் மாற்றங்கள் உண்டாகக் கூடும். தனிமனிதர்கள் மாற வேண்டியதில்லையா?

பேசுகிறவர்களெல்லாம் ‘பயமா இருக்கு’ என்கிறார்கள். எதற்கு பயம்? வேலைக்கா? உயிருக்கா என்று அவர்களிடம் பிரித்து பிரித்துக் கேட்பதில்லை. யாருக்குத்தான் பயமில்லை? எனக்கும் பயம்தான். உயிரைக் காப்பாற்ற விரும்பினால் வெளியில் போக வேண்டாம் என்கிறார்கள். நம்மால் அதைச் செய்ய முடியும். செய்துவிடலாம். வேலைக்குத்தான் மேற்சொன்னதெல்லாம்.  நம்மை தகுதியானவனாக வைத்துக் கொண்டிருந்தால் போதும். ஏப்ரல், மே மாதங்களில் இப்பொழுது இருக்கும் வேலை இருக்குமோ அல்லது புது வேலை தேட வேண்டுமோ- எப்படி இருந்தாலும் ‘நமக்கு தகுதியிருக்கிறது’ என்கிற எண்ணமே மனதில் ஒரு ஓரத்தில் தைரியத்தைக் கொடுத்துக் கொண்டேயிருக்கும். 

உலகமும் மனித இனமும் இந்த இடத்தை மிகச் சாதாரணமாக அடைந்துவிடவில்லை. பல லட்சக்கணக்கான ஆண்டுகள் போராடித்தான் இந்த இடத்தை அடைந்திருக்கிறது. அப்பேர்ப்பட்ட மனித இனமும் புவியும் இந்த வைரஸூக்கெல்லாம் நிரந்தரமாக இருண்டுவிடப் போவதில்லை. அப்படியான பீதிகளையும் நம்ப வேண்டியதில்லை. மனித இனம் தன் நீண்ட பயணத்தில் ஓர் இருள் நிறைந்த குகைப்பாதைக்குள் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. உடலை வெளியில் நீட்டி பாறையில் அடிபட்டுச் சாகாமல் தாக்குப் பிடித்தால் இன்னமும் சில நாட்களில் தொலைவில் ஒரு வெளிச்சப்புள்ளி தெரியும். அதைத் தவிர வேறு எதுவுமில்லை.

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//இந்தியாவும் சீனாவைப் போலவே அதிகபட்சமாக மூன்று மாத காலத்தில் மீண்டு விடலாம் என்கிறார்கள்.//
விடலாம் தான்.வருடா வருடம் வரும் வெள்ளச் சேதங்களில் இருந்து மீண்டெழுந்து கொண்டு தான் இருக்கிறோம்.
சங்கத்து ஆள்கள் அனுமதிக்கணுமே

சரவணகுமார் said...

வாழ்த்துகள் மணி,சரியான மணி அடித்துள்ளீர்கள்,காதுள்ளவர்கள் கேட்கட்டும்.நன்றி.சரவணகுமார்

கரந்தை ஜெயக்குமார் said...

அவரவர் துறையில் என்னென்ன புதிய தொழில்நுட்பங்கள் வந்திருக்கின்றன, எவை எங்கே பயன்படுகிறது, எப்படிக் கற்றுக் கொள்ளலாம் என்பதில் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்

உண்மை ஐயா
அருமையான வழிகாட்டும் பதிவு
நன்றி

Saravanan Sekar said...

Lockdown நாட்களில் முச்சூடும் facebook , சினிமா என்று பொழுதை போக்காமல், பிழைப்புக்கு என்ன வழியோ அதற்கு தயாராக இருக்க சொல்லி இருக்கிறீர்கள். WFH என்று இருப்பவர்களுக்கும் கூட இது பொருந்தும் தான் , நிறைய நேரம் அவர்களுக்கும் கிடைத்திருக்கிறது இப்போது.
தேவையற்ற மன உளைச்சல், குடும்பத்தை விட்டு தனிமையில் இருக்க நேர்ந்த சிலருக்கு வெட்டி சிந்தனைகள் போன்றவைகளும் கூட இதனால் குறையும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நிசப்தம் பதிவுகளுக்கிடையேயான கால இடைவெளி குறைந்துள்ளது. கேட்டினும் உண்டோர் உறுதி.. மகிழ்ச்சி.

-சரவணன் சேகர்