Mar 23, 2020

அடங்கி இரு!

மதியம் உறங்கிக் கொண்டிருந்த போது ‘கரட்டடிபாளையத்துலேயே வந்துடுச்சு’ என்று தம்பி எழுப்பினான். தூக்கம் போய்விட்டது. அது என்ன டைனோசரா? ஒரு ஊருக்குள் வந்தால் ஒவ்வொருவரையும் துவம்சம் செய்துவிட்டு அடுத்த ஊருக்கு போகும் என்பதற்கு. ஆனால் அப்படித்தான் கிளப்பிவிடுகிறார்கள். ஒரு வகையில் நல்லதுதான். அம்மாதான் சொல் பேச்சைக் கேட்பதில்லை. சாலையில் எந்தக் காய்கறிக்காரன் போனாலும் அழைத்து விலை கேட்கிறார். வாழைப்பூ, வெள்ளரி என்று தெருவில் போவதையெல்லாம் வாங்கி நெஞ்சோடு அணைத்து எடுத்து வருகிறார். பார்க்கவே பகீரென்று இருக்கிறது. சொன்னால் கோபமடைகிறார். குழந்தைகளைக் கூட மிரட்டிவிடலாம் போலிருக்கிறது. அம்மாவையெல்லாம் எப்படி மிரட்டுவது என்றே தெரியவில்லை. இத்தனைக்கும் அந்தக் காலத்து பி.எஸ்சி விலங்கியல் பட்டதாரி. பேரு பெத்த பேரு தாக நீலு லேது கணக்காக இருக்கிறது. ‘நம்மூருக்கே வந்துடுச்சாம்’ என்றுதான் மிரட்ட வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பாக ஸ்பெயினில் இருந்து வந்த கோவையைச் சார்ந்த பெண் ஒருவர் தாம் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு எந்த அறிகுறியுமில்லை. மருத்துவமனையிலும் அவரை கவனமாக இருக்கச் என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டார்கள். ஸ்பெயினில் அவருடன் தங்கியிருந்த பிரேசில்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரேசில்காரர் தம் நிலையை இந்தப் பெண்ணுக்கு தெரிவிக்க கோவைப் பெண் திரும்பவும் மருத்துவமனையை அணுகியிருக்கிறார். ‘எதுக்கும் உங்களுக்கும் டெஸ்ட் செஞ்சுடலாம்’ என்று செய்திருக்கிறார்கள். பாஸிடிவ் என்று முடிவு வந்திருக்கிறது. ஆனால் இன்னமும் நலமாக இருக்கிறார். எந்தப் பிரச்சினையுமில்லை. இப்படி ‘அடுத்தவங்களுக்கு பரவிடுமோ’ என்று பயப்படுகிற, அறிவார்ந்த ஒரு சிலர் இருக்கும் இதே நாட்டில்தான் வெளிநாட்டிலிருந்து வரும் போது விமானநிலையத்தில் ஏமாற்றுவது, விமானத்தை விட்டு இறங்குவதற்கு முன்பாக பாராசிட்டமால் ஒன்றை விழுங்கிவிட்டு ‘எனக்கு காய்ச்சலே இல்லை’ டபாய்க்கும் மடையர்களும் வாழ்கிறார்கள். விமான நிலையங்களில் வெறும் வெப்பநிலை பரிசோதனையைத்தான் செய்கிறார்கள். அரை மணி நேரம் முன்பாக பாராசிட்டமாலை விழுங்கிக் கொண்டால் வெப்பநிலை கட்டுக்குள் இருக்கும். நழுவிவிடலாம். ஆனால் எத்தனை பேருக்கு ஒட்ட வைக்கப் போகிறோம், இந்தியா மாதிரியான நாடுகளில் பரவத் தொடங்கினால் எப்படி கட்டுக்குள் கொண்டு வருவார்கள் என்று எந்த சிந்தனையும் இருப்பதில்லை.

படிக்காதவர்களைவிடவும் படித்த முட்டாள்கள்தான் வெகு ஆபத்து நிறைந்தவர்கள். 

எனக்கு என்னவோ வடநாட்டில் பொங்கிவிடும் என்றுதான் தோன்றுகிறது. நேற்று ஊரடங்கு நிகழ்வுக்குப் பிறகு அவர்கள் மேற்கொண்ட கொண்டாட்ட மனநிலையைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு நோய்த் தொற்றாளன் இருந்தால் போதுமல்லவா? கூட்டம் கூட்டமாக கும்மியடித்திருக்கிறார்கள். தமிழகம் ஒப்பீட்டளவில் பரவாயில்லை என்றாலும் யோக்கியமில்லை. இன்று கோயம்பேட்டில் பேருந்துகளில் தொற்றும் கூட்டத்தைக் காட்டினார்கள். சென்னையிலிருந்து பெருமொத்தமாக கொரோனாவை பிற ஊர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள் போலிருக்கிறது. நாளை ஊரடங்கு என்று சொல்லி இன்று பேருந்தை அனுமதித்தால் இதுதான் நிகழும். ஊரில் தனியாக மனைவி பிள்ளைகளை விட்டு வந்தவன் அங்கே போகவே விரும்புவான். கிராமத்துக்காரன் ‘எதுக்கும் நம்மூருக்கு போய்விடலாம்’ என்றுதான் கருதுவான். அதனால்தான் கூட்டம். அரசுதான் இதை முன்பே கணித்து பேருந்துகளையும் சேர்த்து நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.

சாமானியர்களுக்கு பயம் ஏற்படாதவரைக்கும் ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் எப்பொழுது பயம் வரும்? அதற்குள் எல்லாம் கடந்துவிடுமே.

வீட்டிலேயே இருப்பது கஷ்டம்தான். கடந்த சில நாட்களாக வீட்டிலேயே இருப்பது ஒருவகையில் மனச்சோர்வை உண்டாக்குகிறது. வாழ்க்கையில் இப்படியொரு நிலைமை வந்ததேயில்லை. குறைந்தபட்சம் மாலை வேளைகளில் நண்பர்களைச் சந்திக்கவாவது பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று வருவேன். யாருமேயில்லையென்றாலும் காரப்பொரி ஒன்றை அமுக்கிவிட்டு வருவேன். இப்பொழுது எதுவுமில்லை. உணவு, வேலை, சலிப்பு தட்டும் போது தூக்கம் என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை. நண்பர்களை அலைபேசியில் அழைத்துப் பேசினால் இதைப்பற்றித்தான் பேசுகிறார்கள். நானும் அதையேதான் பேசுகிறேன். மருத்துவ நண்பர்கள்தான் கனவில் கூட வருகிறார்கள். 

கொரோனாவினால் நாளையே உலகம் அழிந்துவிடப் போவதில்லை. நாட்கள் நீள நீள இந்நோய்க்கான மருந்து சந்தைக்கு வந்துவிடும்; தடுப்பூசி வந்துவிடும். மெல்ல இயல்பு நிலை திரும்பும். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட மருந்துகளின் உபகாரத்தினால் நலம் பெற்று வீடு திரும்புகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சாவுகள் குறையும். அதனால் பேரச்சம் எதுவும் தேவையில்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் உடனடியாக நோய் தொற்றிவிடாமல் தடுப்பதில்தான் எல்லாமும் இருக்கிறது. அதைத்தான் அத்தனை மருத்துவர்களும் சொல்கிறார்கள். திடீரென நோயாளிகளுக்கென பத்தாயிரம் படுக்கைகள் தேவைப்படுமானால் வெண்டிலேட்டர்களுடன் கூடிய அவ்வளவு படுக்கைகள் இல்லை. திடீரென ஐம்பதாயிரம் பேர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும் என்றால் திணறிப் போவோம். அதனால்தான் அவகாசத்தைக் கூட்ட வேண்டும். இன்னும் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு தற்காத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். அதற்குள் ஓரளவு நாடும், சுகாதாரத்துறையும் தயார் படுத்திக் கொள்ளும். உலக நாடுகள் மருந்துகளைக் கண்டறிந்துவிடுவார்கள்.

எப்படி தள்ளிப் போடுவது என்பதில்தான் முழுக்கவனமும் இருத்தல் வேண்டும்.  ‘நம்மை எல்லாம் ஒண்ணும் பண்ணாது’ என்கிற மனநிலையை முதலில் தூரக் கடாச வேண்டும். அதுதான் இங்கு பலருக்கும் இருக்கிறது. சமூகத் தொற்று (Community Transmission) இன்னமும் ஆரம்பிக்கவில்லை என்று நினைக்கிறீர்களா? ஜார்க்கண்ட்டில் இருந்து வருகிறவன் வெளிநாடு சென்றுவிட்டு வரவில்லை. ஆனால் அவனுக்கு தொற்று இருக்கிறது. யாரிடமிருந்தோ வாங்கி வந்திருக்கிறான். அவன் பயணம் செய்யும் அதே ரயிலில் பயணித்தவர்கள் நம்மோடு பேருந்தில் பயணிக்கக் கூடும். நமக்கு நோய்க்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிடுகிறோம். இல்லையா? வியாபாரி யாரிடமிருந்தோ காசு வாங்கி நம்மிடம் தருகிறார். காசை வாங்கிக் கொண்ட பிறகு கைகளைக் கழுவாமல் விட்டால் கிருமி நம் கைகளில் குடியிருக்க வாய்ப்பை உருவாக்குகிறோம். அல்லவா? 

எனக்கும் உங்களுக்கும் உடல்நிலை திடகாத்திரமாக இருந்தால் கொரோனா இருமலைக் கொடுத்துவிட்டு விலகிவிடும். ஆனால் நம் வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு வம்பைக் கொண்டு வந்து சேர்த்துவிடுவோம் என்கிற நடுக்கம் மட்டும் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். சமூகத்திடமிருந்து விலகியிருத்தல்; கைகளைச் சுத்தமாகப் பராமரித்தல்; பயணங்களை முழுமையாகத் தவிர்த்தல் மாதிரியான அடிப்படை அம்சங்களைப் பின்பற்றி கொஞ்சம் இழுத்துப் பிடிப்போம். ‘நானெல்லாம் ப்ளைட்டிலேயே ஃபுட்போர்டு அடிப்பேன்’ என்கிற எண்ணத்திலிருந்து வெளியே வந்து ‘நம்மால் நம்மைச் சார்ந்தவர்களைச் சிக்கலில் தள்ளிவிட்டுவிடக் கூடாது’ என்று பயப்பட்டாலே ஓரளவு தப்பிவிடுவோம். ஆனால் அப்படி பயப்படுவோமா என்றுதான் தெரியவில்லை. 

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

விழிப்படைந்திருந்தால் இதை சொல்லுவதற்கு வாய்ப்பிருந்திருக்குமா எனபதை கூட யோசிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தானே "மக்கள் இன்னும் விழிப்படைய வில்லை" என்று ஆதங்கப் பட முடிகிறது.
இதிலாவது தனியாருக்கு எந்த வகையில் ஆதாயம் தேடிக் கொடுக்கலாம், ஏற்பட்டிருக்கும் இந்த பீதியை எப்படி அரசியலாக்கலாம் என்று யோசிக்காமல் செயல் பட வேண்டும்.