Mar 22, 2020

கொரோனா- இங்கேயும்...

கொரோனாவின் தாக்குதல் குறித்தான புள்ளிவிவரங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. கிடைக்கக் கூடிய தகவல்களை வைத்து டேட்டா சயிண்ட்டிஸ்ட்கள் நிறைய வேலைகளைச் செய்ய முடியும். செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னமும் சில நாட்களில் நிறைய கட்டுரைகள் வெளிவரும். புள்ளி விவரங்கள், நோய் குறித்தான ஆய்வு, ஓரளவுக்கு கணிப்புகள் எனச் செய்து மக்களை எச்சரித்து, அச்சத்திலிருந்து நீக்குதல் போன்ற செயல்களைச் செய்வார்கள். பீதியைக் கிளப்புகிறவர்களும் இருப்பார்கள்.

சீனாவின் முதல் நாற்பத்தைந்தாயிரத்து சொச்சம் நோயாளிகள் குறித்தான விவரம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அதில் 81% நோயாளிகளுக்கு நோயின் வீரியத்தன்மை மிகக் குறைவானதாக (Mild) இருந்திருக்கிறது. அதிலும் குழந்தைகளில் 90% பேருக்கு எந்தவிதமான பெரிய அறிகுறியுமில்லாமல் நோய் வந்து விலகியிருக்கிறது. அப்படியென்றால் கிருமித் தொற்று உடலில் இருக்கும். ஆனால் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. சுமார் பதினான்கு சதவீதம் பேருக்குத்தான் நோய் தீவிரமானதாக இருக்கிறது. மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதாகிறது. மிகவும் மோசமடைந்து ஐ.சி.யூவில் அனுமதி என்ற நிலைக்குச் செல்கிறவர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதத்திற்குள்தான்.

அதே சீனாவில் முதல் எண்பதாயிரம் நோயாளிகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87% பேர். அதாவது சுமார் எழுபதாயிரம் பேர் தேறிவிட்டார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை 4% பேர்.  இது சீனாவின் கணக்கு. சீனாவின் எண்ணிக்கையை முழுமையாக நம்ப முடியாது என்கிறார்கள். ஒருவேளை எண்ணிக்கையில் ஏதேனும் தகிடுதத்தம் செய்திருக்கலாம். அதுவே இத்தாலி நாட்டை எடுத்துக் கொண்டால் இன்றைய நிலவரப்படி மொத்த நோயாளிகள் 53578 பேர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4825. சற்றேறக்குறைய ஒன்பது சதவீதம் பேர். இத்தாலியின் இறப்பு எண்ணிக்கைக்கு நிறையக் காரணங்களைச் சுட்டிக்காட்டுகிறார்கள். 

இத்தாலியின் மக்கட்தொகையில் சுமார் இருபத்து மூன்று சதவீதம் பேர்கள் 65 வயதைக் கடந்தவர்கள். வயது அதிகமானவர்களைத்தான் நோய் மிக மோசமாகத் தாக்குகிறது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். சீனாவில் 65 வயதைக் கடந்தவர்கள் சுமார் பதினோரு சதவீதம் பேர்கள். அதுவே இந்தியாவில் எடுத்துக் கொண்டால் மொத்த மக்கட்தொகையில் ஆறு சதவீதம்தான் 65 வயதைக் கடந்தவர்கள். நம் நாட்டின் சராசரி வயது மிகக் குறைவு.

வயதின் அடிப்படையில் இறந்தவர்களின் சதவீதங்களைப் பார்த்தால் (இதுவும் சீனாவின் கணக்குதான்)- பத்து வயது வரைக்கும் மரணம் எதுவுமில்லை. இளங்குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பில்லை. பத்து வயது முதல் முப்பத்தொன்பது வயது வரைக்கும் 0.2% பேர் இறக்கிறார்கள். அதன் பிறகு வயது கூடக் கூட இறப்பின் விகிதம் சற்று அதிகரிக்கிறது. 60-69 வயதுள்ளவர்களில் 3.6%, 70-79 வயதுள்ளவர்களில் 8.0% அதற்கு மேலானவர்கள் 14.8% பேர்கள் இறந்திருக்கிறார்கள். 

இவையெல்லாம் கைவசமிருக்கும் மேலோட்டமான புள்ளிவிவரங்கள். இவற்றை வைத்துக் கொண்டு இந்தியா பற்றி நாம் சில முடிவுகளுக்கு வர முடியும்.

இந்தியாவில் மூத்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டு மரணங்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் என்ற முடிவுக்கு நேரடியாக வந்துவிட முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு காரணிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டே சில கணிப்புகளைச் செய்ய இயலும். நாட்டில் மக்களின் சராசரி வயது, அவர்களது வாழ்க்கை முறை, நாட்டில் உள்ள பிற நோய்கள், மருத்துவக் கட்டமைப்பு, அரசின் கொள்கை முடிவுகள் என பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. சீனா செய்யக் கூடிய ஒன்றை இத்தாலி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதும், இத்தாலியில் ஏற்பட்டது இந்தியாவிலும் நடக்கும் என நினைப்பதும் சரியாக இருக்காது. இந்தியர்களின் சராசரி வயது மிகக் குறைவு என்றாலும் இங்கிருக்கும் டயாப்பட்டிக் நோயாளிகளின் எண்ணிக்கை, இருதய சம்பந்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை, மக்கள் நெரிசல், தம்மை பிரஸ்தாபித்துக் கொள்வதற்காக ஆளும் வர்க்கம் செய்யக் கூடிய தில்லாலங்கடி செயல்கள் போன்ற பிற காரணிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாலும் கூட சுமார் எண்பது சதவீத கொரோனா தொற்றாளர்கள் பெரிய சிரமம் இல்லாமல் மீண்டுவிடுவார்கள் என்பதைத்தான் இப்போது இருக்கக் கூடிய புள்ளிவிவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதனால் பெரும்பாலான மனிதர்கள் அச்சப்படத் தேவையில்லை. 

அச்சப்பட வேண்டியதெல்லாம் எதிர்காலத்தில் மருத்துவ உதவி தேவைப்படக் கூடியவர்களின் எண்ணிக்கை, இறந்து போகிறவர்களின் எண்ணிக்கை குறித்துதான். ஒருவேளை வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த இயலாமல் இந்திய மக்கட்தொகையில் சுமார் முப்பது சதவீதம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்படுகிறது என்றாலும் கூட (தோராயமான எண்ணிக்கை நாற்பது கோடி பேர்கள்) அதில் எண்பது சதவீதம் பேர் எந்தவிதமான பெரிய தொந்தரவுமில்லாமல் மீண்டுவிடக் கூடும். அதைத்தான் மேற்சொன்ன விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. மீதமிருக்கும் இருபது சதவீதம் பேருக்கு (சுமார் எட்டு கோடி பேருக்கு) மருத்துவ உதவி தேவைப்படும். இதில் ஐ.சி.யு தேவைப்படுகிறவர்கள் மட்டும் இரண்டு கோடி பேர்களாக இருக்கக் கூடும். அத்தனை ஐசியூக்கள் நம்மிடம் இருக்கின்றனவா? ஒருவேளை தொற்றாளர்களின் எண்ணிக்கை நாற்பது கோடியை விடவும் அதிகமாகும்பட்சத்தில் சிக்கல் இன்னமும் மோசமானதாக இருக்கும். அப்படியான சூழலை எதிர்கொள்ள அரசும், சுகாதாரத்துறையும் தயாராக இருக்கிறதா என்பதெல்லாம் பெரிய புதிர்கள்தான். 

ஒருவேளை நோய் தொற்றாளர்களில் பலரும் பரிசோதனை செய்யப்படாமலேயே இருமலோடு கடந்துவிடக் கூடும். ‘சாதாரண இருமல்’தான் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் அவர்கள் வேறு யாருக்கேனும் தொற்றை ஒட்ட வைத்திருப்பார்கள். நோயின் பரவலின் வேகமே நம்மை அச்சப்படுத்துகிறது. 

நோயின் தீவிரம் குறித்துப் பேசுகையில் சில விவரங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாற்பது கோடி பேருக்கும் ஒரே சமயத்தில் நோய்த் தொற்று ஏற்படப் போவதில்லை. இரண்டு கோடி பேருக்கும் ஒரே சமயத்தில் ஐ.சி.யூவும் தேவைப்படப் போவதில்லை. ஆனால் அடுத்த சில மாதங்கள்/வருடங்கள் அல்லது மருந்து கண்டுபிடிக்கும் வரைக்கும் இதனோடுதான் போராடிக் கொண்டிருப்போம். இன்னமும் எவ்வளவு நாட்கள் ஆகும் என்று தெரியாவிட்டாலும் இப்பொழுது இருக்கும் பதற்றம் மெல்ல மெல்ல வடியும். ஆனால் மொத்தமாக நம்நாட்டில் ஒரு கோடி பேர் இறந்தாலும் கூட அந்த எண்ணிக்கை மிக அதிகம். நம்மைச் சார்ந்தவர்கள் யாரேனும் எங்கேயேனும் இறந்திருப்பார்கள். ஒவ்வொருவரும் அந்த வலியைத் தாங்க வேண்டியிருக்கும். அது உண்டாக்கும் பொருளாதார பாதிப்புகளும் நம் தலையில்தான் விடியும். அதுமட்டுமில்லாமல் நோயின் காலகட்டத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழல்கள்- பதினைந்து நாட்களுக்கான தனிமைப்படுத்துதல், பெரியவர்கள், குழந்தைகள், அம்மா தனிமைப்படுத்தப்பட்டால் குழந்தையின் நிலை போன்ற மன உளைச்சல்கள், பொருளாதார நெருக்கடிகள், நோய்மை உண்டாக்கும் பயம்,  மன அழுத்தங்கள்- இத்தகைய பிரச்சினைகளால் உண்டாகக் கூடிய தனிமனித, சமூக மனோவியல் சிக்கல்கள் என சகலத்தையும் யோசிக்கும் போதுதான் இதன் பரவல் குறித்தும் அதனை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் புரிகிறது.

அநேகமாக ஆறு மாதங்களில் நாம் மீண்டுவிடக் கூடும். அந்த நம்பிக்கை இருக்கிறது.  ஆனால் முழுமையான விடுபடலுக்கு கூடுதலான காலம் தேவைப்படும். ஆனால் அதுவரையிலும் நோய்த் தொற்று ஏற்படுகிறவர்களில் நாமும் நம் குடும்பத்தினரும் இல்லாதவாறு பார்த்துக் கொள்வதில்தான் நம் சாமர்த்தியம் இருக்கிறது. அப்படியொரு சூழல் வரும் எனினும் தைரியமாக இருப்போம். எந்தச் சிரமுமின்றி தப்பிக்கும் எண்பது சதவீதம் பேர்களில் நாமோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களோ இருப்போம் என்கிற வெளிச்சம் மட்டும் உள்ளுக்குள் எரிந்து கொண்டால் போதும். அந்த தைரியம்தான் நாம் நம் குடும்பத்தினருக்கு அளிக்கக் கூடிய மிகப்பெரிய ஆறுதலும் ஆசுவாசமும். எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம்!

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//தம்மை பிரஸ்தாபித்துக் கொள்வதற்காக ஆளும் வர்க்கம் செய்யக் கூடிய தில்லாலங்கடி செயல்கள்//
அந்த செயல்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள அந்த வர்க்கம் அனுமதிக்குமா?