Mar 20, 2020

இனி என்ன ஆகும்?

ஒரு நண்பர் அழைத்திருந்தார். ‘இனி என்ன ஆகும்ண்ணா?’ என்றார். எனக்கு மட்டும் எப்படித் தெரியும்? ‘உலகமே வெள்ளத்துல போய்ட்டு இருக்கு...எதையாவது கெட்டியா புடிச்சுக்குங்க...பார்த்துக்கலாம்’ என்றேன். அதைத்தான் செய்ய முடியும். செய்ய வேண்டும். நாளை என்ன நடக்கும்? நாளை மறுநாள் என்ன ஆகும் என்று மண்டை காய்ந்து எதுவும் ஆகப் போவதில்லை. நடக்கும் போது சூழலுக்கேற்ப முடிவெடுத்துக் கொள்ளலாம். ட்ரம்ப் மட்டுமில்லை யாருமே இதில் எதையும் கணிக்க முடியாது. நீங்களும் நானும் மட்டும் யோசித்து என்ன ஆகப் போகிறது?

உலகின் பெரும் பஞ்சம், கொள்ளை நோய், உலகப் போர்கள் குறித்தெல்லாம் வரலாறுகளில் படிக்கும் போது அதன் வீரியம் நமக்கு முழுமையாக புரிபட்டிருக்காது. அவற்றையெல்லாம் ஒரு செய்தியாக மட்டுமே கடந்திருப்போம். அந்தக் காலகட்டத்திலேயே வாழ்ந்த மனிதர்கள் கூட அத்தனை பேரும் அந்தக் கொடூரங்களின் வீரியத்தை உணர்ந்திருப்பார்களா என்று தெரியவில்லை. இத்தனை தகவல் தொடர்புகள் இல்லை; உடனுக்குடனான செய்திப் பரிமாற்றமும் இருந்திருக்காது. ‘எங்கேயோ நடக்கிறதாம்’ என்றளவுக்கு தெரிந்திருந்தாலே அதிசயம்தான். ஆனால் இன்றைக்கு கொரோனா அப்படியில்லை. இத்தாலியிலும், பிரான்ஸிலும் ‘ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகள்’ என நமக்கு விடியும் போதே அறிவித்துவிடுகிறார்கள். ஈரானில் வரிசையாக மரணிப்பதாகச் சொல்கிறார்கள், கிட்டத்தட்ட 165 நாடுகளில் பரவிவிட்டது என்கிறார்கள். இந்தியாவில் எகிறும் நோயாளிகளின் கணக்கினை கிரிக்கெட் ஸ்கோர் போல செய்தி வாசிக்கிறார்கள். ஏதோவொரு இருள் வேகமாக நம்மைக் கவ்வ வருவது போன்ற பீதியும் பிரமையுமாக இருக்கிறது.

எவ்வளவுதான் மோசமடைந்தாலும் உலகமே அழிந்துவிடப் போவதில்லை. நோய் தாக்கிய அனைவரும் இறந்துவிடுவதில்லைதான். ஆனால் நோய்த் தொற்றுக்குள்ளானவர்களில் 3% பேர் இறந்துவிட வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார்கள். என்.டி.டி.வி செய்தித்தளத்தில் வெளியான கட்டுரையில் இந்தியாவில் 60% பேருக்கு நோய்த்தாக்குதலுக்கு வாய்ப்பிருப்பதாகச் சொல்லியிருந்தார்கள். இது அதீதமான கணிப்பு என்றே தோன்றுகிறது. அப்படி ஏதாவது நடக்குமானால் அவர்களின் கணக்குப்படி சுமார் அறுபது கோடிக்கும் அதிகமானவர்கள். அதில் மூன்று சதவீதம் என்றாலும் கூட கணக்கு கோடியைத் தாண்டிவிடும். அது மிகப் பெரிய எண்ணிக்கை. 

இப்படியான பயமூட்டும் கணிப்புகள், செய்திகள், அரசு தோல்வியுறுகிறது எனச் சுட்டிக்காட்டும் தகவல்கள் போன்றவை நிலைமையை பதறச் செய்கின்றன. நம்மைச் சுற்றி பரவும் வதந்திகள், நெருக்கடியான காலகட்டத்திலும் தமக்கான விளம்பரத்தைத் தேடுகிறவர்கள், போலியான விளக்கங்களைத் தருபவர்கள், பரபரப்பு பிரியர்கள் என சகலரும் சேர்ந்து ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கடைகளில் இருப்பதையெல்லாம் வழித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள்.  ‘எந்நேரம் பார்த்தாலும் வேலை வேலைன்னு இருந்தா ஊட்டுக்கு வேணுங்குற சாமானமெல்லாம் யார் வாங்கித் தருவாங்க’ என்று அம்மா மண்டையை உருட்டுகிறார். சென்னையில் மட்டுமில்லை- கிட்டத்தட்ட அத்தனை ஊர்களிலும் அப்படித்தான். பெரிய கடைகளை மூடச் சொல்லி உள்ளூர் உத்தரவாம். இதெல்லாம் எப்போது முடிவுக்கு வரும் என்று புரியவில்லை.

நோயைவிடவும் இனி அதனால் உலகம் எதிர்கொள்ளவிருக்கும் பின்விளைவுகள்- தனிமனித, குடும்ப, சமூக மனநிலை மாற்றங்கள், உலகளாவிய பொருளாதார விளைவுகள் போன்றவை குறித்து இன்னமும் அதிகமாக கவலைப்பட வேண்டியிருக்கிறது. ‘ஷட்-டவுன்’ என்று மிக எளிதாகச் சொல்லிவிடலாம். அதனால் முடங்கும் தொழில்கள், வலுவிழக்கும் பொருளாதாரம், வேலையிழப்பு என வரவிருக்கும் விளைவுகளுக்கான என்ன பதில்களை நாம் வைத்திருக்கிறோம்? ஒரு தொழிற்சாலை முடக்கம் என்பது அத்தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை வழங்கும் சிறு நிறுவனங்கள் தொடங்கி, தொழிற்சாலை பணியாளர்கள், அந்நிறுவனத்தை நம்பியிருக்கும் விநியோகஸ்தர்கள், நிறுவனத்தின் பிற உதவி நிறுவனங்கள் என அத்தனையுமே தங்களது வாய்ப்புகளை இழக்கின்றன. வருமானத்தை இழக்கின்றன. பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். 

அரசாங்கம் இதுவரையிலும் எந்தச் சலுகையும் அறிவிக்கவில்லை. வெறுமனே கதையளந்து கொண்டிருக்கிறார்கள். பெட்ரோல் விலை கூட காதும் காதும் வைத்தாற்போல ஏற்றப்பட்டிருக்கிறது. அரசு மருத்துவர்களுக்கு இன்னமும் முகமூடிகள் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் இதுவரை செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 320 மட்டும்தானாம். அரசுகளின் கஜானாக்கள் காலியாகிக் கிடக்கின்றன. அதைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை. 

ஒருவேளை பதினைந்து நாட்களில் எல்லாமும் வழமைக்கு வந்துவிடும் என்று அரசாங்கம் கணித்திருக்கக் கூடும். அப்படியென்றால் நாமும் தப்பித்துவிடலாம் அல்லது அதிகபட்சம் ஒரு மாதம் ஆகுமெனில் கூட பிரச்சினையில்லை. சமாளித்துவிடலாம். நாட்கள் நீளுமானால், இப்படியே வீட்டில் இருந்தபடியே சம்பளம் வாங்குவது எப்படி சாத்தியமாகும்? வருமானமே இல்லாமல் சம்பளத்தை மட்டும் நிறுவனங்கள் எப்படி வழங்குவார்கள்? வாங்கிய கடனுக்கான மாதாந்திர தவணைகளை எப்படி கட்டுவது? குடும்பச் செலவுகளை எப்படிச் செய்வது? இப்படியாக தனிமனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்று ஏதேதோ வரக் கூடும். 

அப்படியெதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று மனம் விரும்புகிறது. கைகள் பிரார்த்தனைக்காக குவிகின்றன. ஒருவேளை இதையெல்லாம் தாண்டி இச்சூழல் இரண்டு மாதங்களுக்கு நீடிக்குமானால் நாம் வேறொரு உலகை பார்க்கத் தொடங்குவோம். அப்படியொரு நிலை உருவாகுமெனில் தனிமனித மனநிலை மாற்றங்கள், சமூகத்தின் போக்கில் நிகழவிருக்கும் மாற்றங்கள் குறித்தான புரிதல்களை உள்வாங்கி, விவாதித்து, நம்மை அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ளத் தயாராக வேண்டும். 

தனிமனிதர்களுக்கு பொருளாதாரம், வாழ்வியல் தேவைகள் சார்ந்து உருவாகும் மன அழுத்தங்கள், அதே காரணங்களுக்காக குடும்பத்திற்குள் நிகழக் கூடிய மாறுதல்கள், விளைவுகள், இதன் இரண்டின் நீட்சியாக சமூகத்தில் நிகழக் கூடிய பாதகங்கள், மாற்றங்கள் என எல்லாவற்றையும் நாம் எதிர்கொள்ள நேரிடும். 

இதெல்லாம் நடக்குமா? என்று வினவினால் பதில் இல்லை. மனிதகுல வரலாற்றில் இப்படியொரு நிகழ்வை சந்தித்திருக்க மாட்டோம். மிகப்பெரிய பிரச்சினைகள் கூட Localized ஆகத்தான் இருந்திருக்கும். எந்தவொரு விவகாரத்திலும் பாதிப்பு என்பது ஒரு வட்டத்திற்குள்தான் நடந்திருக்கும். எந்த நோயும் இவ்வளவு வேகமாக  கண்டம் விட்டு கண்டம் பாய்ந்திருக்காது. இன்றைக்கு அப்படியில்லை. கனவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டை ஏதொவொருவகையில் சார்ந்திருக்கிறது.  ஒவ்வொரு தொழிலும் இன்னொரு தொழிலினால் முடங்கக் கூடும். எல்லாமே சங்கிலித்தொடர்தான். அடுக்கி வைத்த சீட்டுக்கட்டுதான். எந்த ஒன்றை உருவினாலும் மொத்தமும் சரியக் கூடும். அப்படியொரு காலகட்டத்தில், சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் என்ன நடக்கும் என்று எப்படி கணிக்க முடியும்? எந்தவொரு கணிப்பும் பொய்யாகிவிடக் கூடும்.

இந்தத் தருணத்தில் நம்பிக்கை மட்டுமே மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும். தனிமனிதனும், குடும்பமும், சமூகமும் நம்பிக்கையை மட்டும் இழந்துவிடக் கூடாது. சரிந்து விழும் போதும் ஏதோவொரு பிடிமானத்தை இறுகப்பிடித்துக் கொள்வோம். எந்தவொரு சூழலிலும் அந்த பிடிமானத்தை மட்டும் விட்டுவிடக் கூடாது. இது எனக்கும் உங்களுக்குமான பிரச்சினை மட்டுமில்லை. உலகமே எதிர்த்துப் போராடுகிறது. எப்படியும் மீண்டெழுந்துவிடுவோம் என்கிற நம்பிக்கை அவசியம். அப்படி எழும் போது புத்தம் புது வாய்ப்புகள் நிறைய உருவாகியிருக்கும். அவை நமக்கான வசந்தத்தை உருவாக்கும். அதுவரை எவ்வளவு பெரும் அழுத்தம் வந்தாலும் அது நம்மை உதிர்த்துவிடாது என்று மட்டும் உறுதியாக நம்பிக் கொண்டிருப்போம்.

3 எதிர் சப்தங்கள்:

Unknown said...

இதே மாதிரி சூழ்நிலை 1918இல் ஏற்பட்டு இருக்கிறது https://en.wikipedia.org/wiki/Spanish_flu .

Bill Gates TED talk :
https://www.youtube.com/watch?v=6Af6b_wyiwI&feature=youtu.be

Dr. K. Kalaiselvi said...

நம்பிக்கை தான் வாழ்க்கை

Paramasivam said...

Let’s pray and all these problems will phase out.
But, don’t rely on ND TV
நம்பிக்கை தான் வாழ்க்கை