நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஊர் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பீதி பெரும்பீதியாக இருக்கிறது. யாருக்கும் ஃபோன் கூட செய்ய முடிவதில்லை. காதுக்குள்ளேயே இருமுகிறார்கள். திரைப்படம் பார்க்கும் போது ‘புற்றுநோய் விளம்பரம்’ வந்தால் காதுகளைப் பொத்திக் கொள்வேன். ஏதேனும் மருத்துவமனை அந்நோய்க்கு விளம்பர பதாகை வைத்திருந்தால் முடிந்தவரை கவனத்தை திசை மாற்றிக் கொள்வேன். அந்தச் சொல்லே ஒருவிதமான அச்ச உணர்வை உருவாக்கிவிடுகிறது. பொதுவாகவே எந்த நோய் குறித்தும் விழிப்புணர்வு இருந்தால் போதும்; பயம் அவசியமில்லை என்ற எண்ணம் உண்டு. ஆனால் நாம் வாழ்கிற கால, இடச் சூழல்கள் பயத்தையே மூலதனமாகக் கொண்டிருக்கின்றன. கொரானோவும் அதை இம்மிபிசகாமல் செய்து கொண்டிருக்கிறது.
கூட்டத்தைத் தவிருங்கள் என்கிறார்கள். சரியான அறிவுரை. ஆனால் பேருந்து நடத்துநர் போன்ற பணிகளைச் செய்கிறவர்கள் என்ன செய்வார்கள்? அடுத்தவர்களுடன் நெருங்கிப் பழகும் பணியைச் செய்யக் கூடிய வேலை மட்டுமே இங்கு தோராயமாக முப்பது சதவீதத்தைத் தாண்டும். வெளியூரில் உண்டு, வெளியூரில் தங்கி, வெளியூரில் சுற்றிக் கொண்டிருக்கும் தொழிலைச் செய்கிறவர்கள் கணிசமாக இருப்பார்கள். அலுவலகக் கேண்டீன்களில் உண்ணுகிறவர்கள் கூட பல்லாயிரக்கணக்கானோர் உண்டு. பள்ளிக் கூடங்கள் மாதிரியான தவிர்க்கவே இயலாத தொற்றுக்கூடங்களை வரிசையாகச் சுட்டிக்காட்டலாம். என்ன செய்ய முடியும்?
பொதுவாகவே தனிமனித சுத்தம், சமூக சுத்தம் என்பதெல்லாம் தொடர்ச்சியான செயல்பாடு. திடீரென ஒரு பீதி கிளம்பும் போது மட்டும் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்திவிட முடியும் என்று நம்புவதே அபத்தம்தான். நல்வாய்ப்பாக, நோயின் வீரியம் அதுவாகவே குறையத் தொடங்கி, பரவல் வேகம் கட்டுக்குள் இருந்தால் தப்பிவிடலாம். கட்டுக்கடங்காமல் பரவினால் இத்தகைய அவசரகதி ஒழுங்குகள் எல்லாவற்றையும் சரி செய்து நம்புவதெல்லாம் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
சமீபமாக மட்டும் எத்தனை புதுப்புது வைரஸ்கள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம்? சார்ஸ் வைரஸ், பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல், எபோலா என்று ஒவ்வொன்றாக, புதுப் புது நோய்களாக வந்து கொண்டேயிருக்கின்றன. திடீரென்று பயமூட்டுகின்றன. பதறச் செய்கின்றன. பிறகு அப்படியே அமுங்கிவிடுகின்றன. ‘பயோ வார்’ ‘மருத்துவ உலகின் சதி’ ‘மருந்துக் கம்பெனிகளின் கதை’ என்று விதவிதமான தியரிகள் நம்மை ஆக்கிரமிக்கின்றன. இந்நோயும் அப்படியே போய்விட்டால் சந்தோஷம். இப்பொழுதெல்லாம் ஊர் சுற்ற விரும்பினால் கூட இத்தாலிக்கும் பிரான்ஸூக்கும் செல்வதற்கான வாய்ப்புகள் பலருக்கும் உருவாகியிருக்கிறது. படிக்க வெவ்வேறு நாடுகளுக்குச் செல்வது, வேலைக்கு என பல தேசங்களுக்கும் செல்வது என உலகம் மிகச் சுருங்கிவிட்டது. ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு எந்த நோயும் மிகச் சாதாரணமாக பரவிவிடவே வாய்ப்புகளும் அதிகம்.
நோய் பரவுகிறதோ இல்லையோ பயம் பரவுகிறது. ஊடகங்கள் ‘லைவ் அப்டேட்’ செய்கின்றன. அங்கே அப்படியாம்; இங்கே அப்படியாம் என ரத்த நாளங்களைச் சூடேற்றுகின்றன. உலகை அழிக்க ஒரு பெரும் கல் நெருங்கி வருவது போன்றதான திக் திக் மனநிலை நமக்கு மிகச் சாதாரணமாக உருவாகிவிடுகிறது. கேள்விப்பட்டவுடன் பதறுவது மனித இயல்பு. ‘தடுப்பூசி கூட இல்லையாமா’ என்பதில் தொடங்கி தாம் பயப்படுவதற்கான எவ்வளவோ காரணங்களை அடுக்குகிறார்கள்.
விழிப்புணர்வு அவசியம்தான். அரசாங்கம் செய்வதும் சரியான செயல்தான். ஆனால் சட்டென இப்படியொரு சூழல் உருவாகும் போது நம் மக்கள் பதறத் தொடங்குகிறார்கள். பொதுவாக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகத் தொடர்பற்றவர்கள் இவ்வளவு பதறுவதில்லை. மிக இயல்பான மனநிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் இவற்றோடெல்லாம் ஏதோவொருவகையில் தொடர்பிருந்தால் அவ்வளவுதான். சோலி சுத்தம். பம்ம வேண்டியதாகிவிடுகிறது.
முன்பொரு சமயத்தில் ஒரு மூத்த மருத்துவரைச் சந்தித்து பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்ன வாக்கியம் நினைவுக்கு வருகிறது. ‘பொதுவாகவே இந்தியர்கள்- குறிப்பாக தென்னிந்தியர்களின் நோய் குறித்தான மனநிலை மேம்போக்கானது. பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள். ‘வந்தா பார்த்துக்கலாம்’ என்பதுதான்’. அது நிதர்சனமான கவனிப்பு. அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒருவேளை உலகம் முழுக்கவே அப்படியான மனநிலை இருந்திருக்க கூடும். மருத்துவ வசதிகளும், வாய்ப்புகளும், தகவல் தொடர்புகளும் பெருகப் பெருக பல்வேறு நோய்களைப் பற்றி நமக்கு அரையும்குறையுமாகத் தெரியத் தொடங்குகிறது. சுற்றியிருக்கும் ‘கால் மருத்துவர்கள்’ ‘அரை மருத்துவர்கள்’ இல்லாததும் பொல்லாததுமாகச் சொல்கிறார்கள். இப்படித்தான் ‘வந்தா பார்த்துக்கலாம்’ என்ற அந்தப் பொது மனநிலை கடந்த கால் நூற்றாண்டாக மெல்ல மெல்ல மாறி வருகிறது.
முன்பெல்லாம் வயதான ஒருவர் இறந்து போனால் ‘வயசாகிடுச்சு...இறந்துட்டாரு’ என்பதைத் தாண்டி எதுவும் இருக்காது. ஆனால் இப்பொழுதெல்லாம் துல்லியமாகக் காரணத்தைச் சொல்லிவிடுவோம். துக்க வீடுகளில் ‘வால்வ் டேமேஜ் ஆகிடுச்சு’ ‘ப்ரஷர் பத்தாம கிட்னி வேலை செய்யறதில்லை’ என்பது மாதிரி ஏதோவொரு டெக்னிக்கல் காரணத்தைச் சொல்கிறார்கள். அதைக் கேட்டவர் ‘ஆமா எனக்குத் தெரிஞ்சவரும் அப்படித்தான்’ என்று சொல்லிவிட்டு இவர் சொன்ன காரணத்தை இன்னொரு இழவு வீட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறார். யோசித்துப் பார்த்தால் மருத்துவ விவகாரங்களில் அறியாமை ஒரு வரம். கூகிளை எல்லாம் விட்டுவிட்டு மருத்துவர் சொல்வதை பின்பற்றினால் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. நமக்குள் இருக்கும் கால், அரை வைத்தியர்கள் விழித்துக் கொள்ளும் போது நம் பாடு திண்டாட்டமாகிவிடுகிறது. பிரச்சினை என்னவென்றால் தனிமனிதர்களில் மட்டுமில்லாமல் சமூகத்திலும் கால், அரை வைத்தியர்கள் பெருகிவிட்டார்கள். சமூகம் என்பது ஊடகம், அரசாங்கத்தை நடத்துகிறவர்கள் என சகலரும் அடக்கம்.
பெருநகரங்களை விட்டுவிடலாம்- தமிழகத்தின் எந்த ஊரிலும், எந்த மருந்துக் கடையிலும் கைகளைச் சுத்தமாக்கிக் கொள்ளும் ‘சானிட்டைஸர்களை’ இன்று வாங்க முடியாது. தீர்ந்துவிட்டது என்கிறார்கள். முகமூடிகள் கிடைப்பதில்லை. பெரும் கொள்ளை நோய் ஒன்று நம்மைத் தாக்கப் போவதான பாவனையில் அவசர அவசரமாக வாங்கி வீட்டில் நிரப்பிக் கொள்கிறார்கள். கொரோனா பரவினாலும் கூட அப்படியெல்லாம் கொத்து கொத்தாக மனிதர்கள் இறந்து போய்விட மாட்டார்கள். விழிப்புணர்வு அவசியம்தான். தயாராக இருந்து கொள்வோம். ஆனால் அதற்காக இவ்வளவு பதற வேண்டியதில்லை. இப்படி ஒவ்வொரு நோய்க்காக பதறி அடங்கினால் இன்னமும் சில பத்தாண்டுகளில் எல்லாவற்றுக்கும் பதறிக் கொண்டேயிருக்கும் பெரும் சமூகமாக மாறிவிடுவோம்.
6 எதிர் சப்தங்கள்:
//ஊர் சுற்றிக் கொண்டிருந்தவனுக்கு கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பீதி பெரும்பீதியாக இருக்கிறது//
ஊர் சுத்துனா தான ப்ரச்னை.
பதிவு போட்டாலும் ஆ ஐய்யா கொரோனா தாக்குது?
இன்னும் சில ஆண்டுகளில் எல்லாவற்றுக்கும் பதறிக் கொண்டேயிருக்கும் பெரும் சமூகமாக மாறிவிடுவோம்.
--நிதர்சனமான உண்மை
சரியான நேரத்தில் தேவையான பதிவு. ஊடகங்கள் ரொம்பவே பயமுறுத்துகின்றன. மக்கள் பயமில்லாமல் விழிப்புணர்வுடன் இருந்தாலே போதுமானது. எந்த நோயுக்கும் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே உடல் மாற்றங்களுக்கு உட்படும். இந்த உண்மையை உணர்ந்துகொண்டால் பயம் வராது. முடிந்தவரை இதுபோன்ற திடீர் வைரஸ் நோய்கள் குறித்து தெரிந்துகொள்வது நல்லது. ஆனால் அதிலேயே ஊறிவிடக்கூடாது. அதைப்பற்றிய சிந்தனையை தவிர்ப்பது நலம்.
பதிவிற்கு நன்றி பாராட்டுக்கள் !
25 கிலோ அரிசி, 5 கிலோ பருப்பு, 5 லிட்டர் எண்ணெய், ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகை சாமான்கள், 50 லிட்டர் குட் லைப் பால் வாங்கி சேமித்தாகி விட்டது, ஒருவேளை நோய் பரவி பெங்களூர் நகரம் செயலிலந்தால் ஒரு மாதம் தாக்குப் பிடிக்க வேண்டிய எல்லாம் செய்தாகி விட்டது.
இதற்கு அடிப்படை காரணம் உணவு. "உணவே மருந்து" என்ற இந்த ஒரு வரியில் நமது உடம்பு, அதன் கட்டமைப்பு,மூலக்கூறு மாற்றங்கள், அதற்கான சரியான உணவு என பல அர்த்தங்களுடன் சுயபரிசோதனை செய்து புரிந்து கொண்டால் போதும் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கலாம். பல ஆராய்ச்சிகள் சொல்லி விட்டது சுத்தமான சைவ உணவுகள், காய்கறிகள் உண்பவர்களின் நோய் எதிர்ப்பு திறன் அசைவ உணவு சாப்பிடுபவர்களை காட்டிலும் அதிகம். அசைவ உணவு ஊட்டச்சத்து நிறைந்தது, ஆனால் அதன் மூலக்கூறுகள் உடலில் வேறு மாற்றங்களையும் உண்டு செய்கிறது என்கிறார்கள். நல்ல உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அசைவ உணவு தேவையாக நான் கருதுகிறேன்.
அனைவரும் முன்னோர்கள் பின்பற்றிய உணவு முறைகளை, நமது உடல் உழைப்புக்கேற்றவாறு உணவுப் பழக்கங்களைப் பின்பற்றி, நமது மூலிகைகளின் மகத்துவம், சாதாரண நோய்களுக்கு ஆயுர்வேதம் என பின்பற்றினால் எந்த நோயும் வராது. நாம் இதை செய்தால் உணவு,ஆயுர்வேதம், இயற்கை, மறைநீர் என இதன் தொடர்பு சங்கிலி கொண்ட பிற பயன்களும் உண்டு.
Post a Comment