தருமபுரியில் ஒரு திரையரங்குக்குச் சென்றிருந்தேன். மிகச் சுமாரான அரங்கு. மதிய உணவுக்குப் பிறகு வெயில் மண்டையைப் பிளந்ததால் தியேட்டருக்குள் நுழைந்துவிட்டேன்.
இயக்குநர் நரேன் கார்த்திக் கோயமுத்தூர்காரர். துருவங்கள் பதினாறு என்ற தரமான படத்தை இயக்கியவர். அவர் மட்டுமில்லை- அருண் விஜய், பிரசன்னா இருவருமே மிகச் சிறந்த நடிகர்கள் அல்லவா? போதாக்குறைக்கு நாயகி பிரியா பவானிசங்கர் பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி இருக்கிறார். புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவராம். தமிழ்ப்பெண். அதனால் படத்தை பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன்.
இயக்குநர் நரேன் கார்த்திக் கோயமுத்தூர்காரர். துருவங்கள் பதினாறு என்ற தரமான படத்தை இயக்கியவர். அவர் மட்டுமில்லை- அருண் விஜய், பிரசன்னா இருவருமே மிகச் சிறந்த நடிகர்கள் அல்லவா? போதாக்குறைக்கு நாயகி பிரியா பவானிசங்கர் பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி இருக்கிறார். புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவராம். தமிழ்ப்பெண். அதனால் படத்தை பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன்.
போதைப் பொருள் கடத்தலின் மிகப்பெரிய நெட்வொர்க்கில் பிரசன்னா ஒரு கண்ணி. போதைத் தடுப்பு பிரிவில் அருண் விஜய்யும், பிரியாவும் பணியாற்றுகிறார்கள். பிரசன்னாதான் நெட்வொர்க்கின் ‘தலைமை’ என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தம்மைப் பற்றித் தகவல் தெரிந்தவர்களை ஒவ்வொருவராக பிரசன்னா கொன்றுவிடுகிறார். அப்பொழுதே கதையை யூகித்துவிட முடிகிறது. மிகச் சாதாரணமாக அருண்விஜய், பிரியா என மூன்று பேர் ஒரு குடோனில் நுழைந்து பிரசன்னாவின் சரக்கு நிறைந்த லாரியைத் தூக்கி வந்துவிட, அதற்கு பதிலாக அருண் விஜய்யின் குடும்பத்தை பிரசன்னா தூக்கிச் சென்று மிரட்டுகிறார்.
இப்படியொரு கதையை நாம் பல இடங்களில் எதிர் கொண்டிருப்போம். எந்த சுவாரசியமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அருண் விஜய்யும், பிரசன்னாவும் அட்டகாசம். அதுவும் பிரசன்னாவின் நடை, உடை, பாவனை பிரமாதம். படத்தின் உருவாக்கத்தில் செலுத்திய கவனத்தில் பாதி கூட கதை, திரைக்கதையில் செலுத்தவில்லை போலிருக்கிறது. எந்தவொரு படைப்பும்- அது எழுத்தாக இருந்தாலும் சரி; சினிமாவாக இருந்தாலும் சரி- ‘இது கூடத் தெரியாதா’ என வாசகனை/பார்வையாளனை நினைக்கச் செய்துவிடக் கூடாது. அப்படி அவன் நினைத்தால் படைப்பு விழுந்துவிட்டது என்று அர்த்தம். நாம் சொல்லுகிற கதையை விட்டுவிட்டு அவனாக ஒரு கதையை உருவாக்கிக் கொண்டிருப்பான்.
அருண் விஜய்யின் அண்ணன் சிறுவயதில் போதைப் பொருளை வாங்குவதற்காக ஒரு குடோனுக்குச் செல்கிறார். அங்கு போலீஸார் நிகழ்த்தும் துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிடுகிறார். உடல் கூட கிடைக்கவில்லையாம். சுனாமி மாதிரியான இயற்கை பேரிடர்களில் உடல் காணாமல் போனால் ஏற்றுக் கொள்ளலாம். ஏதாவது கலவரம் என்றாலும் கூட இருபது பேர்கள் இறந்த இடத்தில் ஐந்து பேர்கள்தான் இறந்தார்கள் என்று போலீஸார் சொல்லக் கூடும். அப்பொழுதும் கூட இருபது குடும்பத்தாரும் இறந்தவர்களின் உடலை பெற்றுக் கொள்வார்கள். கணக்குக்குத்தான் இருபது என்பது ஐந்தாக மாறியிருக்குமே தவிர உடல் காணாமல் போவதற்கான சாத்தியங்கள் இல்லை. ஆனால் ஒரு குடோனில் நடைபெறும் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவனின் உடல் கிடைக்கவில்லை என்பதெல்லாம் எப்படி நியாயம்? இப்படி படம் முழுக்கவும் நிறைய ஓட்டைகள்.
பொதுவாகவே நாவல், கதை எழுதும் போதும் அதில் இருக்கும் ஓட்டைகள் எழுதுகிறவன் கண்களுக்குத் தெரியாது. நாம் செப்பனிடுகிறோம் என்று திரும்பத் திரும்ப வாசித்துப் பார்த்தாலும் வாக்கிய அமைப்பில், சொற்களின் தேர்வில்தான் கவனம் செலுத்திக் கொண்டிருப்போம். வேறு யாராவது படிக்கும் போதுதான் ‘இது சரியா வரல’ எனச் சொல்லும் போதுதான் எழுதுகிறவனுக்கு உரைக்கும். கார்த்திக் நரேன் மாதிரியான இளம் இயக்குநர்களுக்கும் அத்தகைய பிரச்சினை இருக்கிறது. ‘மேக்கிங்கில்’ கவனம் செலுத்திவிட்டு பார்வையாளனை ‘இது கூட இவங்களுக்குத் தெரியாதா’ என யோசிக்க இடம் கொடுத்துவிடுகிறார்கள்.
படம் எப்படியும் தப்பித்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. முதல் பத்தியில் சொன்னது போல பிரசன்னா, அருண் விஜய், பிரியா, நரேன் கார்த்திக் எல்லோருமே ஜெயிக்க வேண்டிய ஆட்கள். ஜெயிக்கட்டும்.
மாஃபியா படம் பார்ப்பதற்காக தருமபுரி போக வேண்டுமா? அங்கே வேறொரு காரணத்திற்காகச் சென்றிருந்தேன். சிவராத்தியன்று அங்கேதான் இருந்தேன். இப்படி அவ்வப்பொழுது ஏதாவது ஊருக்குச் சென்று ஒன்றிரண்டு நாட்கள் இருந்துவிட்டு வருகிறேன். சூரியன் மேற்கில் இறங்கும் போது சிறு குன்றுகளை கவனித்தால் சிவலிங்கம் போலவேதான் தோன்றும். தருமபுரியில் இப்பொழுது வரைக்கும் அத்தகைய குன்றுகள் இருக்கின்றன. ஆனால் குவாரிகள் அதிகம். எத்தனை ஆண்டுகளுக்கு இந்த சிவபெருமான்கள் தப்பி பிழைப்பார்கள் என்று தெரியாது. அதுவுமில்லாமல் இன்னும் சில ஆண்டுகள்தான் என்னாலும் சுற்ற முடியும். வயது கூடி உடல் சற்று தளர்வுற்றாலும் இப்படி சுற்றுவதெல்லாம் சாத்தியமில்லாமல் போய்விடும். தருமபுரி நண்பரிடம் பைக்கை வாங்கிக் கொண்டு அம்மாவட்டத்தை வடக்கும் தெற்குமாக- கிழக்கும் மேற்குமாக இப்பொழுது போலவே எப்பொழுதும் சுற்ற முடியுமா?
தமிழகத்தில் ஒவ்வொரு மண்ணுக்கும் தனித்துவம் இருக்கிறது. வெறுமனே நெடுஞ்சாலையில் காற்றைக் கிழித்துக் கொண்டு சென்று வருவதால் அதனை உணரவே முடியாது. பென்னாகரத்திலிருந்து ஏரியூர் செல்லும் வழியில் அஜ்ஜனஹள்ளி என்றொரு கிராமம். வண்டியை நிறுத்திவிட்டு அங்கேயிருந்த சிவபெருமான் ஒருவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். ஒருவர் வந்தார். அவருக்கு சந்தேகமாக இருந்திருக்க கூடும். சிரித்தபடியே ‘இங்க ஏன் நிக்குறீங்க?’ என்றார். ‘சும்மா ஊரைப் பார்க்கலாம்’ என வந்தேன் என்றேன். அவருக்கு சந்தேகம் வலுத்துவிட்டது. கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டார். அவரை நம்ப வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. அப்புறம் நண்பர்களாகிவிட்டோம். மங்களூரு உடுப்பியில் ஒரு சிப்ஸ் கடை வைத்திருக்கிறார். அங்கே சம்பாதித்து கிராமத்தில் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். அந்த கிராமத்தில் அழகழகான நான்கைந்து வீடுகள் இருந்தன. அத்தனை பேரும் வெளியூரில் இருக்கிறார்கள். சொந்த கிராமத்தில் வீடு என்பது அவர்களின் கனவு. இந்தத் தலைமுறை ஆட்கள் எங்கேயோ சம்பாதித்து இங்கே மிக அழகாகக் கட்டி வைத்திருக்கிறார்கள்.
நண்பரிடம் ‘உங்க ஊரில் நடுகற்கள் இருக்கு தெரியுமா?’ என்றேன். தருமபுரி சுற்றுவட்டாரத்தில் நடுகற்கள் அதிகம். நடுகற்கள் என்பவை அந்தக் காலத்தில் வீர தீரச் செயல்களில் இறந்து போனவர்கள் நினைவாக நடப்படும் கற்கள். அதில் ஏகப்பட்ட வகைகள் இருக்கின்றன. உதாரணமாக, புலிகுத்திப்பட்டான் கல் என்றால் புலியுடன் சண்டையிட்டு இறந்தவனுக்காக நட்டப்பட்ட கல். பல இடங்களில் மக்கள் அதனை கடவுளாக நினைத்து வழிபடுகிறார்கள். சில இடங்களில் சாலை விரிவாக்கப்பணியில் ஏதோவொரு கல் என்று ஜே.சி.பி வண்டிக்காரர் ஓட்டித் தள்ளிவிடுகிறார். நடுகற்களை அவை வணங்கப்படும் இடத்திலிருந்து ஒன்றிரண்டையாவது பார்க்கலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். பென்னாகரத்திலிருந்து ஏரியூர் செல்லும் வழியில் ஒன்றிருந்தது. சுண்ணாம்பு பூசி வைத்திருந்தார்கள். எந்த வீரனுக்கான கல்லோ! அழைத்துச் சென்று வேறு சில கற்களையும் காட்டினார். நடுகல் பற்றி எழுதுவது நோக்கமில்லை. மாஃபியாதான் நோக்கம். இரண்டையும் எழுதிவிட்டேன்.
5 எதிர் சப்தங்கள்:
தமிழ்நாட்டின் யுவான் சுவாங் ஆக தெரிகிறது. அனுபவியுங்கள். கூடவே தமிழனுக்கு தெரியாத பல வரலாறுகளையும் கண்டுபிடியுங்கள்.
//பொதுவாகவே நாவல், கதை எழுதும் போதும் அதில் இருக்கும் ஓட்டைகள் எழுதுகிறவன் கண்களுக்குத் தெரியாது//
நிசங்களை கதை நாவல் என உருமாற்றம் செய்தாலும் அது போல் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
//தமிழ்ப்பெண். அதனால் படத்தை பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தேன்.// யோவ் ! காஜலுக்கு இப்படி துரோகம் பண்ணிட்டிங்களேயா ???
Always a second pair eyes would find a potential defect or a loop hole. Good to have them.
என் படைப்பில் குற்றமா? என்று நினைக்கக்கூடாது.
ஆனால் இந்தப் பதிவு படக்கென முடிந்தமாதிரி ஒரு ஏமாற்றம்.
இப்பகுதியிலிருந்து நிறைய பேர் வெளி மாநிலங்களுக்குச் சென்று பல ஊர்களில் சிப்ஸ் கடை நடத்துகினறனர்.
Post a Comment