Jan 21, 2020

அழுத்தம்

சபரிமலைக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். முதன்முறையாகச் சென்ற போது வயது ஐந்துக்குள்தான் இருந்திருக்க வேண்டும். திரும்ப வரும் போது கடுமையான காய்ச்சல் என்பது தவிர வேறெதுவும் நினைவில் இல்லை. திருமணத்திற்கு பிறகு இரண்டாம் முறை சென்ற போது மாலை, விரதம் என்றெல்லாம் எதுவுமில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தொடங்கி மூன்றாம் நாள் பயணம் ஆரம்பமாகிவிட்டது. மலை ஏறும் போதுதான் அதன் சிரமம் தெரிந்தது. இருதயம் பலவீனமாக இருந்தால் சோலி முடிந்துவிடும் என்று பயந்தபடியே ஏறினேன்.

கடந்த வாரம் உறவுக்காரர் ஒருவருக்கு அப்படித்தான் ஆகிவிட்டது. முப்பத்தியிரண்டு வயதுதான். திருப்பூர்காரர். ஒரு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். ரத்ததானம் உள்ளிட்ட சமூகப்பணிகளை கர்மசிரத்தையாக செய்து வருகிறவர் என்று சொல்லியிருக்கிறார்கள். சிறகுகள் என்றொரு அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள். திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. மனைவி மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறார். சபரிமலை ஏறிக் கொண்டிருந்தவருக்கு மாரடைப்பு. அங்கேயே உயிர் போய்விட்டது.

இரவில் தகவல் தெரிந்தது. சபரிமலையில்தான் ஐ.ஏ.எஸ் அதிகாரி உமேஷ் பணியில் இருக்கிறார். ‘ஃபார்மாலிட்டிஸ் இருந்தால் கொஞ்சம் சீக்கிரம் முடித்துக் கொடுத்து உதவ முடியுமா?’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். உடனிருந்து செய்து உடலை அனுப்பி வைத்திருந்தார். இப்படியான இறப்புகள் மிரட்டிவிடுகின்றன. மற்ற நோய் என்றாலும் கூட சண்டை போட்டு பார்க்கலாம். மாரடைப்புக்கு என்ன செய்ய முடியும்? 

உமேஷ், ‘முப்பத்தஞ்சு வயசுக்கும் குறைவானவங்கதான் அதிகமா இறக்கிறாங்க’ என்றார். 

‘கெட்டபழக்கம் எதுவுமில்லைன்னுதான் சொல்லுறாங்க’ என்று இந்தச் சம்பவம் குறித்து மருத்துவ நண்பரிடம் பேசினேன். 

‘உங்களுக்கு பயமா இருக்கா?’ என்றார்.  இறந்தவரின் வயது, அவரது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தை என்பதெல்லாம் பயமுறுத்திவிட்டன. இறந்தவருக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. போய் சேர்ந்துவிட்டார். ஆனால் குடும்பம்? அந்தக் குழந்தை?

‘ஸ்ட்ரெஸ் முக்கியமான காரணி’ என்றார் மருத்துவர். இன்றைய காலகட்டத்தில் அதுதான் மிகப்பெரிய அபாயமும் கூட. யாருக்குத்தான் மன அழுத்தம் இல்லை? ஏதோவொரு வகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் மன அழுத்தம் வந்து சேர்ந்துவிடுகிறது. தொழில் சிரமங்கள், பணியிடத்தில் உண்டாகக் கூடிய சிரமங்கள், பொருளாதார நெருக்கடிகள், உடல்நலப் பிரச்சினைகள், குடும்பச் சிக்கல்கள் என சகல மனிதனுக்கும் ஏதோவொன்று அழுத்திக் கொண்டிருக்கிறது.

‘உங்களுக்கு ஏதாவது அழுத்தம் இருக்கிறதா?’ என்று அடுத்தவர்களைக் கேட்டுப்பார்க்கலாம். நம்மை நாமே கூட கேட்டுக் கொள்ளலாம். 

‘நல்லாத்தான் இருக்கேன்’ என்றுதான் பதில் வரும். ஆனால் அது நூறு சதவீதம் உண்மையான பதிலா? கடைசியாக மனம் எப்பொழுது இலகுவாக இருந்தது? மனதுக்குப் பிடித்த ஒரு பாடலை பாடலாம் என்று ஒரு நாளில் எவ்வளவு நேரம் நினைக்கிறோம்? பெரும்பாலான நேரங்களில் மனம் எதையோ குதப்பிக் கொண்டிருக்கிறது. ‘அதைச் செய்யணுமே; இதைச் செய்யணுமே; அந்தப் பணம் பாக்கி இருக்கு; இந்த செயல் மிச்சமிருக்கு’ என்பதான ஏதோவொரு எண்ணம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டேயிருக்கிறது. நம்மையும் அறியாமல் ஒரு சுமை நம்மை அழுத்திக் கொண்டிருக்கிறது.

‘டென்ஷனே ஆகுறதில்லை’ என்றுதான் நானும் நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு அடிக்கடி வாயில் ஒரு சிறு புண் வரும். அதுதான் அழுத்தத்திற்கான அறிகுறி. ஸ்ட்ரெஸ் அல்சர். எப்பொழுதாவது முதுகுவலி வரும். பசி குறையும். தலையை வலிப்பது போல இருக்கும். இவை அனைத்துமே ஒரே சமயத்தில் இருக்காது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயம். நல்ல மருத்துவ நண்பர்கள் இருந்தால் ‘மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கான அறிகுறிகள் என்ன?’ என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். பலவற்றை அடுக்குவார்கள்.

நம் உடலில் தோன்றும் பல பிரச்சினைகள் வெறுமனே உடலியல் பிரச்சினை என்று தோன்றினாலும் நம் காலத்தில் உடல் சார்ந்த பல பிரச்சினைகளில் மனம்தான் முக்கியக் காரணி. எதையாவது மனம் போட்டு அழுத்திக் கொள்கிறது. அது உடலையும் பாதிக்கிறது. அவ்வப்பொழுது நேரம் ஒதுக்கி எது நம்மை அழுத்துகிறது, எவற்றையெல்லாம் தவிர்க்க முடியும் என்று கணக்கிட்டு மெல்ல மெல்ல தவிர்த்துவிட வேண்டும். 

தொடர்ந்து பல வருடங்களாக தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கிறேன். ஆரம்பத்தில் அதுவொரு சந்தோஷமாக இருந்து பிறிதொரு கட்டத்தில் ‘இன்னைக்கு எழுதலையே’ என்பது கூட ஒருவிதமான அழுத்தமாக மாறிவிடுகிறது. அதனால்தான் கடந்த பல நாட்களாக எதையும் கண்டு கொள்ளவில்லை. எழுத்தும் வாசிப்பும் சந்தோஷத்துக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, அழுத்தத்திற்கான காரணமாகிவிடக் கூடாது. ‘இந்த வருஷம் உங்களோடது என்ன புக் வருது?’ ‘எத்தனை புத்தகம் வாசிச்சீங்க’ ‘எவ்வளவு புத்தகம் வாங்குனீங்க?’ என எழுத்தும் கூட அழுத்தமாகிற வணிகச் சூழல்தான் இங்கே நிலவுகிறது. புத்தகக் கண்காட்சி பக்கமே இந்த வருடம் போக வேண்டியதில்லை என இருந்து கொண்டேன். 

வாழ்க்கையில் எல்லாமே  ‘ஃபெர்பெக்ட்’ என்பது அவசியமே இல்லை. அதுவே கூட பெரும் அழுத்தம்தான். எதையோ ஒன்றை இலக்காக வைத்துக் கொண்டு நேரங்காலம் தெரியாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறோம். நமக்கே தெரியாமல் ஏதேதோ பிரச்சினைகள் உடலுக்குள் புகுந்து கொண்டிருக்கின்றன.

பயமூட்டுவதற்காகச் சொல்லவில்லை. ஆனால் யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஆசுவாசமாக, சாவதனமாக நினைத்தபடிக்கு இயல்பாகச் செய்து கொண்டிருக்க வேண்டும். இருபத்து நான்கு மணி நேரமும் நம் இஷ்டத்துக்கு இருக்க நம்மைச் சுற்றிலும் இருக்கக் கூடிய புற அழுத்தங்கள் அனுமதிக்காதுதான். உழைக்க வேண்டும்; சம்பாதிக்க வேண்டும்; இலட்சியங்களைத் துரத்த வேண்டும். எல்லாம் சரிதான். ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போது மனதை இலகுவாக்கி அப்படியே இருந்துவிட வேண்டும்.  ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாவது காற்றில் பறக்கும் மெல்லிய இறகு போல இருந்து கொள்ள வேண்டும்.

சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைவதற்கு? 

இன்னொரு முக்கியமான விஷயம்- எந்தக் கடவுளும் உடலை வருத்தச் சொல்லிக் கேட்பதில்லை. ஆன்மிகம் என்ற பெயரில் ஒரு காரியத்தைச் செய்யும் போது அதன் உள்ளர்த்தம் தெரிய வேண்டும். சபரிமலைக்குச் செல்வதென்றால் அதுவொரு மலையேற்றம். உடலைத் தயார் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதிகாலையில் எழுந்து, குளிர்நீரில் குளித்து, பஜனை செய்து, வெறுங்காலில் நடந்து உடலும் மனமும் மலையேற்றத்துக்கு ஏதுவாக நாமாகச் செய்து கொள்ளும் பயிற்சிகள் அவை.  ‘அதெல்லாம் ஒண்ணும் ஆகாது’ என்று முரட்டுத்தனமாக மலையேறி வம்பை வாங்கிக் கொள்ள வேண்டியதில்லை. பிரச்சினை எதுவுமில்லையென்றால் நல்லதுதான். சந்தோஷம். ஆனால் ஏதேனும் பிரச்சினை என்றால் பாதிப்பு என்னவோ குடும்பத்துக்குத்தான்.

9 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

#அதனால்தான் கடந்த பல நாட்களாக எதையும் கண்டு கொள்ளவில்லை. எழுத்தும் வாசிப்பும் சந்தோஷத்துக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, அழுத்தத்திற்கான காரணமாகிவிடக் கூடாது#
சரி தான். ஆனாலும் உங்கள் எழுத்தை தினமும் எதிர்பார்த்து இருப்பது எமக்கு பழக்கம் ஆகி விட்டதே இனி மாற்றி கொள்ள வேண்டும்.வாழ்க வளமுடன்

சேக்காளி said...

சின்ன சின்ன விசயங்களுக்கு கூட முடிவெடுக்க முடியாத மனநிலையை மன அழுத்தத்திற்கான ஒரு காரணமாக சொல்லலாமா?

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

சின்ன சின்ன விசயங்களுக்கு கூட முடிவெடுக்க முடியாத மனநிலையை மன அழுத்தத்திற்கான ஒரு காரணமாக சொல்லலாமா?
-சொல்லலாம், சேக்காளியே. நாம் பல சமயங்களில் சிறியது என நினைப்பது எல்லாம் சிறியது தான் என்று நமது ஆழ்மனம் ஒப்பு கொள்வது இல்லை,உள்ளூர நம்மை அறியாமலேயே போராடி கொண்டு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வாழ்க வளமுடன்

Saravanan Sekar said...

//சின்ன சின்ன விசயங்களுக்கு கூட முடிவெடுக்க முடியாத மனநிலையை மன அழுத்தத்திற்கான ஒரு காரணமாக சொல்லலாமா?//

ஷோக்கா சொன்னிங்க சேக்காளி .. உண்மையில எனக்கும் படா பேஜாரான விஷயம் இந்த முடிவெடுக்க முடியாமல் தாமதிப்பது .. நாம போய் சேர்ந்துட்டா குடும்பம் கஷ்டப்படும். வாஸ்தவம், குறைந்த பட்சம் பொருளாதாரத்தையாவது பார்ப்போம் னு, டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைக்கிறது நல்லது .. ரொம்ப நாள் இந்த யோசனை ஓடிட்டு இருக்கு.
எல்லோருக்குமே சொல்ல கூடிய விஷயம் தான் ..

viswa said...

பிராணாயாம பயிற்சி சிறந்தது இதனால் மன உளைச்சல்கள் குறைகின்றன 10 நிமிடங்கள் போதும் செய்து பயன் பெறுங்கள்

விஸ்வநாதன்

raja said...

எல்லோரும் குடும்பத்தை பற்றி ரொம்ப கவலை கொள்கிறார்கள். லட்சக்கணக்கான கோடி வருடங்களில் நாம் ஒன்றுமே இல்லை என்பதுதான் நிதர்சனம். யாரும் யாரை நம்பியும் இல்லை. எவர் வரினும் எவர் போகினும் உலகம் இயங்கி கொண்டே இருக்கும். 
ஒரு அழகான கதை உண்டு. ஒரு முறை நாரதர் கிருஷ்ணரிடம் மாயை என்றால் என்ன என்று விளக்க கேட்டு கொண்டார். அப்போது கிருஷ்ணர் ஒன்றும் சொல்ல வில்லை. கிருஷ்ணரும் நாரதரும் ஒரு பாலைவனத்தில் பயணம் மேற்கொண்டனர். 
அப்போது கிருஷ்ணருக்கு தண்ணீர் தாகம் எடுக்க நாரதரிடம் தண்ணீர் எங்காவது இருக்கிறதா என்று கேட்டு கொண்டு வர சொன்னார். நாரதரும் தண்ணீரை தேடி சென்றார். 
அந்த பாலைவன எல்லையில் ஒரு சிறிய கிராமம் தென்பட்டது. அங்கு நுழைந்து ஒரு வீட்டின் கதவை தட்டினார். மிக அழகிய பெண் கதவை திறந்தாள். அவளை கண்டதும் நாரதர் எல்லாவற்றையும் மறந்தார். காதல் வயப்பட்டார். 
பெண்ணின் தகப்பனிடம் பேசி அவளை மணந்தார். திருமணம் பிறகு குழந்தைகள் என்று வாழ்க்கை பரபரப்பாக ஓட ஆரம்பித்தது. ஒரு நாள் பலத்த புயல் அதை தொடர்ந்து வெள்ளம்..ஊரே மூழ்க ஆரம்பித்தது. நாரதர் ஊரை விட்டு வெளியேற தீர்மானித்து தேவையானவற்றை எடுத்து கொண்டு மனைவி குழந்தைகளுடன் கிளம்பினார். வழியில் ஒரு ஆற்று பாலம் வந்தது. மனைவி குழந்தைகளின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டு பாலத்தை கடக்க ஆரம்பித்தார். காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியதில் பாலம் தீடிரென உடைந்தது. நாரதர் எவ்வளவோ முயன்றும் குழந்தைகள்,மனைவி அடுத்தடுத்து ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். நாரதரை ஆற்று வெள்ளம் அடித்து போய் கரையில் ஒதுக்கியது. நாரதர் கதறி அழுதார். புலம்பினார்.
அப்போது ஒரு குரல், கிருஷ்ணரின் குரல். நாரதா!  நான் கேட்ட தண்ணீர் எங்கே? கொண்டு வந்தாயா? 
மிக அழகான கதை. நாம் அனைவரும் காலத்தின் அடிப்படையில் சிந்திக்கிறோம். 

சோம. சிவ சங்கரன் said...

1) தனிநபர் நிதி நிர்வாகத்திலும்,
2) ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி
3) மனித உறவுகளைப் பேணவும் முயற்சிக்கிறேன்.

இள வயது மாரடைப்பு மரணங்களுக்கு பொதுவான காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. 80:20 விதி என்று சொல்வார்களே அது போல எனக்கு இந்த 3 விஷயத்தால் இத்தகைய 80% மரணங்களை தவிர்க்கலாம் என்று தோன்றுகிறது.

என் தனிபட்ட அனுபவம் என் தெரிந்த ஒருவர். அவர் குடும்பத் தலைவிக்கு மாதம் ஒரு சுற்றுலா, ஓட்டலில் சாப்பாடு என்று கொண்டாட்டமாக வாழ விருப்பம். குடும்பத்தலைவரோ அதிகம் படிக்க வில்லை, தேநீர் கடையில் வேலை. சொந்த வீடு கூட இல்லாத எளிமையான பின்புலம். நான் அவர்கள் வீட்டில் எப்போதும் fanta, mirinda, bovonto 2L போத்தல்களை காண்பேன். மைதா பரோட்டாக்கள் அவர்களின் கொண்டாட்ட உணவு. சைவ உணவுக்காரர்கள். குடும்பத்தலைவருக்கு புகை/ மது பழக்கங்கள் இல்லை.

காப்பீடு முகவராகி, சீட்டு பிரித்தல் போன்று பல வேலைகளைச் செய்தார் அந்த அம்மையார். கணவனையும் செய்வித்தார். அந்த நிதி நிர்வாகத்தில் சில குளறுபடிகள். பல உடல் பிரச்சனைகள் நீரிழிவு உட்பட மாத்திரைகளை முழுங்கி வாழ்ந்து கொண்இருக்கும் போது 40 வயதில் குடும்பத்தலைவருக்கு மாரடைப்பு.

சில மனிதர்களுக்கு lean muscle weight , metabolism சிறப்பாக இருக்கும். சிலருக்கு இருக்காது. எல்லோரும் தான் பரோட்டா சாப்பிடுகிறார்கள் அவர்களுக்கு இந்த உடல் பிரச்சனைகள் வரவா செய்கின்றன? என்று கேட்கலாம் அவர்களுடைய மற்ற உணவு பழக்கங்களோ(organ meat சேர்த்துக் கொள்பவராக இருக்கலாம்), வாழ்வியல் பழக்கங்களோ(உடல் உழைப்பு கோரக்கூடிய சூழல் இருக்கலாம்), அவர் DNAவோ பாதுகாத்திருக்கலாம்.

அந்த குடும்பத்தலைவர் தன் உடலை அவதானித்து அதற்கு செவி சாய்த்திருந்தால் , செலவுகளை குறைத்து 30% வருமானத்தை common senseஉடன் சேமித்து எளிய வாழ்க்கை வாழ்ந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. அவர் மனைவியும் நீரிழிவு நோயாளியான அவருக்கு வீட்டில அவருக்கேற்ற உணவு சமைத்து கொடுத்திருக்கலாம். மாறாக அவர் கடைகளில் உணவு வாங்கியும் தோசை மாவு வாங்கியும் சமாளித்தார்.

இன்னொன்று சொல்ல வேண்டும் அவர் அமைதியான மனிதர்.

vic said...

இந்த உலகமே ஆச்சரியமானது அழகானது இது அனுபவிக்கத்தான் இந்த உலகத்திற்கு வந்தோம் அனுபவிப்போம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும். இங்கே யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை மனித மனம் விசித்திரமானது இன்றைக்கு பிடித்தது நாளைக்கு பிடிக்காமல் போகிறது சட்டையை புடிச்சா போடுங்க இல்ல தூக்கிப் போடுங்க

Jaypon , Canada said...

கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு நல்ல பலன் தரும். பச்சை பூண்டு ஒரு பல் காலையில் மென்று சாப்பிடனும்.

கார்டியோ உடல் பயிற்சி தினமும் 30 நிமிடம் கட்டாயம் 40 வயதுடைய வர்களுக்கு.

எனக்கு தெரிந்து மன அழுத்தமே முதல் மற்றும் முக்கிய காரணம் என்பேன். அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு BP , Sugar, Cholestrol எதுவும் தேவை இல்லை மாரடைப்பு வர.

மன அழுத்தத்தை எளிதில் போக்குவது மூச்சு பயிற்சியே. Alternate nostril breathing மற்றும் bhastrika கற்று 10 நிமிடம் தினமும் செய்தால் நலம்.