Jan 1, 2020

2020

எங்கள் அபார்ட்மெண்ட்டில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. முந்தாநாளிலிருந்தே விளக்குகள் கட்டிவிட்டார்கள். இரவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்துண்ண வேண்டுமானால் பெரியவர்களுக்கு முந்நூற்றைம்பது; சிறுவர்களுக்கு இருநூற்றைம்பது.  ‘பள்ளிபாளையம் சிக்கன் மட்டும்தான் நான்வெஜ் ஐட்டம்’ என்று மகி சொன்னான். நான் போகவில்லை. பதினோரு மணிக்கு தூங்கிவிட வேண்டும் என்ற முடிவிலிருந்தேன். இரவு எட்டு மணிக்கு ட்ரம்ஸ் குழு வந்து அடிக்க ஆரம்பித்தார்கள். வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது சில இளைஞர்கள் கூட்டமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். இளைஞர்கள் மட்டுமில்லை; சகலரும். அதன் பிறகு ட்ரம்ஸ்ஸை நிறுத்திவிட்டு ஆளாளுக்கு பாடத் தொடங்கினார்கள். 7ஜி ரெயின்போகாலனியின் ‘ராஜா..ராஜாதி ராஜனிங்கு ராஜா’ காமெடி நினைவில் இருக்கிறதல்லவா? அப்படி. 

நேற்று முழுவதும் அலைச்சல். இரண்டு மூன்று வேலைகள் பாக்கியிருந்தன. கார்த்திக் என்றொரு நிசப்தம் நண்பர் சந்திக்க வந்திருந்தார். பத்து வருடங்களுக்கு மேலாக லக்ஸம்பர்க்கில் இருக்கிறாராம். அவர்கள் நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்கள் சேர்ந்து- அனைவரும் வெளிநாட்டினர்- இருபதாயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். ‘எங்கே பயன்படுத்தலாம்’ என்று கேட்டார். புஞ்சை புளியம்பட்டியில் வட்டார வள மையம் இருக்கிறது. உடல்/மன மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் 27 பேர்கள் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஒன்றியத்திலும் இப்படியான மையங்கள் உண்டு. சராசரியாக இருபத்தைந்து குழந்தைகள் தினசரி வந்துவிடுகிறார்கள். அவர்களைக் கற்கும் திறன் கொண்டவர்களாக மாற்றுவதற்கான முயற்சிகளை ஆசிரியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அங்கே சென்று புத்தாடை எடுத்துக் கொடுத்து, உணவு வழங்கிக் கொண்டாடிவிடலாம் என்று சொல்லியிருந்தேன். சொல்வது எளிது. செயலைச் செய்ய திட்டமிட வேண்டும். புளியம்பட்டியில் சில ஆட்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வந்து சேர்ந்தேன்.

சூரியனை பூமி ஒரு முறை முழுமையாகச் சுற்றி வரும் போது எல்லோரும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை.  விதவிதமான மனிதர்களுக்கு விதவிதமான மனநிலை.

எங்கள் வீட்டில் ஒரு பெண்மணி பணிபுரிகிறார். தனலட்சுமி என்று பெயர். பாத்திரம் கழுவித் தருவது, வீடு பெருக்குவது மாதிரியான பணிகளைச் செய்து தருவார். சிறு வயதிலேயே பெற்றவர்கள் இல்லை. தம்பிக்கும் அவருக்கும் நிறைய வயது வித்தியாசம். தம்பியை அவர்தான் வளர்க்கிறார். அவனுக்கு இருபது வயது கூட ஆகியிருக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாக தம்பியை கைது செய்துவிட்டார்கள். இரண்டு நாட்களாக அவர் பணிக்கு வருவதில்லை. விசாரித்தால் வழக்கறிஞர், சிறைச்சாலை என்று அலைந்து கொண்டிருக்கிறார். ‘அவன் தப்பெல்லாம் செய்யமாட்டாங்க....ரிமாண்ட் பண்ணிட்டாங்க...வக்கீலைப் பார்க்கப் போறேன்’ என்றாராம். என்ன பிரச்சினையில் சிக்கியிருக்கிறான் என்று தெரியவில்லை. 

ஒவ்வொரு மனிதனுக்கும் ஓராயிரம் பிரச்சினைகள். அவரவருக்கு தம்மைக் காத்துக் கொள்ளவே பெரும் போராட்டமாக இருக்கிறது. அறம் என்றெல்லாம் எதுவுமில்லை. ஆளாளுக்கு இருபக்கமும் கூரிய வாள் ஒன்றினைச் சுழற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். யார் மீது வெட்டு விழுகிறது, யார் கீழே விழுகிறார்கள் என்றெல்லாம் பொருட்படுத்துவதில்லை. அவரவர் சந்தோஷம் அவரவருக்கு. அவரவர் துக்கம் அவரவருக்கு.

பனிரெண்டு மணிக்கு மீண்டும் ட்ரம்ஸ் அடிக்க ஆரம்பித்தார்கள். 9..8...7...என்று வரிசையாகக் கீழிறங்கி பூஜ்யத்தை அடைந்த பிறகு ஹேப்பி நியூ இயர் என்று கத்தினார்கள். பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பாதி உறக்கத்தில் புரண்டு படுத்தேன். அதிர்வுகளில் திரு விழித்துக் கொண்டான்.

இன்று காலையில் அபார்ட்மெண்ட் ஊழியர்கள் நீல நிறச் சட்டையை அணிந்து குப்பைகளைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு பெய்ண்ட்டர் ஏதோ சில கம்பிகளை எடுத்துப் போட்டு வர்ணம் பூசிக் கொண்டிருந்தார். வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்கிறவர்கள் யாரையும் காணவில்லை. பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலில் கூட்டம் நெருக்கிக் கொண்டிருந்தது. வழமை போலவே விடிந்திருக்கிறது. எப்பொழுதும் போலவே ஆம்புலன்ஸ் ஒன்று பதறியபடி சென்று கொண்டிருக்கிறது. வீட்டிலிருந்து பார்த்தால் தெரியக் கூடிய மின்மயானத்தின் புகை போக்கியில் கரும்புகை வெளியேறிக் கொண்டிருக்கிறது.

எதையுமே புரட்டிப் போட முடியாது. நிறுத்தி வைக்கவும் முடியாது. வல்லவர்கள், வாய்ப்புள்ளவர்கள் தமக்குத் தகுந்தாற்போல தமது பயணத்தை அமைத்துக் கொள்வார்கள். யாரோ நடுங்குகிறார்கள், யாரோ பயப்படுகிறார்கள், யாரோ பதறுகிறார்கள் என்பதெல்லாம் யாரையும் மாற்றிவிடாது. நம்முடைய கவனமெல்லாம் நம்மைத் தற்காத்துக் கொள்வதிலேயே இருக்க வேண்டும். நம்மைத் தற்காத்துக் கொண்ட பிறகு வலு குறைந்தவர்களுக்காக குரல் எழுப்பலாம். கொஞ்சம் கரம் நீட்டலாம். அதைத் தாண்டி எதுவும் செய்துவிட முடியாது. செய்யவும் மாட்டோம். 

ஓராண்டு முடிகிறது. புத்தாண்டில் ஒவ்வொருவரும் தம்மைக் காத்துக் கொள்வதற்கான பலம் பெற்றவர்களாக, இயலாதவர்களுக்கு கரம் நீட்டும் திறன் பெற்றவர்களாக அமைய வாழ்த்துகள். 

7 எதிர் சப்தங்கள்:

www.rasanai.blogspot.com said...

Anbin mani
10 naalaga blog ezhuthavillayey endru ninaithen. Post pottu vitteergal. Miga arumai. "நாளை மற்றுமொரு நாளே" ( ஜிஶ்ரீ நாகராஜன்). நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு ஏது ?? சிறார்களுக்கு செய்யும் உதவியுடன் இனிதே தொடங்கட்டும் 2020 # நிசப்தம் செயல்பாடுகள்.
அன்பும் நன்றியும்
க. சுந்தர் சென்னை
Wish you and your family and all nisaptham nanbargal a happy prosperous enjoyable new year 2020.��������
Sundar and family

NAGARATHAN said...

ரொம்ப வித்தியாசமான/யதார்த்தமான புத்தாண்டு வாழ்த்து. வாழ்க. (இன்னும் பன்னிரெண்டு நாள் இடைவெளிக்கு காரணம் சொல்லவேயில்லை)

Vaa.Manikandan said...

பெரிய காரணம் எதுவுமில்லைங்க. தினசரி எழுத வேண்டும். பத்து நாட்கள் எழுத்து பற்றி எதுவுமே யோசிக்காமல் இருந்துவிட்டு ஜனவரி 1 முதல் தொடங்கலாம் என்றிருந்தேன். கவனித்து, திரும்பத் திரும்பக் கேட்டமைக்கு நன்றி :)

சேக்காளி said...

//அவரவர் சந்தோஷம் அவரவருக்கு. அவரவர் துக்கம் அவரவருக்கு.//

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

புத்தாண்டில் ஒவ்வொருவரும் தம்மைக் காத்துக் கொள்வதற்கான பலம் பெற்றவர்களாக, இயலாதவர்களுக்கு கரம் நீட்டும் திறன் பெற்றவர்களாக அமைய வாழ்த்துகள்.
-இது தான் நல்லதொரு புத்தாண்டு வாழ்த்து.வாழ்க வளமுடன்

Yarlpavanan said...

இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

இளம் புயல் said...

உங்கள் பதிவு அருமையாக இருந்தது. உண்மையில் நாம் கொண்டாடுவது ஆங்கிலப்புத்தாண்டு தானா? அதன் உண்மையான வரலாறு என்ன என தெளிவாக எழுதியுள்ளேன் நேரம் இருந்தால் படித்துவிட்டு சொல்லவும் https://mrpuyal.com/2018/12/english-calendar-history/