Dec 6, 2019

என்கவுண்ட்டர்

என்கவுண்ட்டரில் நான்கு பேர்களும் கொல்லப்பட்டது குறித்து பலருக்கும் சந்தோஷம். காலையிலிருந்தே சமூக ஊடகங்களில் இதுதான் இன்றைய கொண்டாட்டமாகியிருக்கிறது. பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்டது பற்றி விலாவாரியாக செய்தி வந்த தினத்தில் ஏதோவொரு இனம்புரியாத பயம் பற்றிக் கொண்டது. இரவு நேரத்தில், ஆளரவமற்ற பகுதியில்- ஆணோ பெண்ணோ அந்நியர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளும் கணங்கள் எவ்வளவு கொடுமையானவை? ‘இவர்களின் பார்வையே சரியில்லை’ என்று தனது தங்கையிடம் சொன்ன போதே அந்தப் பெண்ணுக்கு சிக்கிக் கொண்டோம் என்கிற நடுக்கம் வந்திருக்கும். இவர்களிடமிருந்து எப்படித் தப்பிப்பது, எங்கே ஓடுவது என்று பதறியிருப்பார். ஒரு கட்டத்தில் தப்பிக்கவும் முயற்சித்திருப்பார். நான்கு முரட்டு ஆண்களிடம் இரவு நேரத்தில் ஓர் இளம்பெண் எப்படித் தப்பித்திருக்க முடியும்? அடித்து இழுத்துச் சென்றிருப்பார்கள். எல்லாவிதமான வன்முறையையும் பிரயோகித்திருப்பார்கள். அந்தச் சூழலை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

குற்றத்தைச் செய்தவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்; எரித்துக் கொன்றுவிட வேண்டும் என்கிற வேகமும் கோபமும் மிக இயல்பானது. எனக்கும் அப்படித்தான் இருந்தது. இன்று காலையில் அந்தச் செய்தியைப் பார்த்த போது கொஞ்சம் ஆசுவாசமாகவும் இருந்தது. அருமை என்றே நினைத்தேன். ஆனால் ஒரு சந்தேகம் மட்டும் அரிக்க ஆரம்பித்துவிட்டது. அவர்கள் நான்கு பேர்கள்தான் உண்மையான குற்றவாளிகளா? இனிமேல் ஒவ்வொரு குற்றத்திலும் காவல்துறையே தொடர்ச்சியாக முடிவெடுத்து தீர்ப்புகளை எழுதினால் என்ன ஆகும்? அந்த யோசனைதான்.

அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் செய்யும் குற்றச்செயல்கள் பற்றி- அது எவ்வளவு பெரிய குற்றச் செயல்கள் என்றாலும் கூட- ஊடகங்கள் அதைப் பற்றி விரிவாக அலசுவதில்லை. விவாதங்கள் உருவாக்கப்படுவதில்லை. ‘நமக்கெதுக்கு வம்பு?’ என்கிற மனநிலையில் மக்களும் அலட்டிக் கொள்வதில்லை. கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் மட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை, அந்தச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கைகள், அளிக்கப்பட்ட தண்டனைகள் குறித்தெல்லாம் யோசித்துப் பார்த்தால் எந்த தண்டனையுமே நினைவுக்கு வருவதில்லை. அதனால்தான் ஹைதரபாத்தில் நிகழ்ந்தது போன்ற ஊடக கவனம் பெற்ற சம்பவங்களில் எந்த வெளிப்படையான விசாரணையுமில்லாமல் நான்கு பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு விசாரணை முடிக்கப்படுவது சரியான அணுகுமுறையா என்றுதான் மனம் யோசிக்கிறது.

இந்த நால்வரும்தான் குற்றவாளிகள் என்பது 100% உண்மையாக இருந்தால் சுட்டுக் கொன்றதில் தவறேயில்லை. சம்பவம் நடந்த இடத்தில் உயிரோடு எரித்துக் கொன்றிருந்தாலும் தகும். ஆனால் அதற்காக சட்டத்தை மாற்றி, அவசர வழக்காகக் கருதி, எவ்வளவு சீக்கிரம் விசாரிக்க முடியுமோ விசாரித்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான வழிமுறைகளை, சட்ட சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கான வலியுறுத்தல்களைச் செய்யலாம்.

என்ன சந்தேகமெனில், ஒருவேளை இத்தகைய குற்றச் செயலை அரசியல் அல்லது ஆளும் வர்க்கத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள் செய்திருந்து, தடுக்கமுடியாத விதத்தில் அதன் மீது ஊடக வெளிச்சமும் விழுந்த பிறகு ஏதேனும் நான்கு பேர்களைக் கணக்குக் காட்டுவதற்காக சுட்டிருந்தால் அதை எப்படி சரி என்று ஏற்றுக் கொள்வது? அப்படியெல்லாம் செய்யமாட்டார்கள் என்று அரசியல்வாதிகளையும், காவல்துறையையும் முழுமையாக நம்புகிறீர்களா? கேட்கவே நாதியில்லாத லட்சக்கணக்கான மக்கள் உலவும் நாடு இது. யாரை வேண்டுமானாலும் இழுத்துச் சென்று ‘சம்பவம்’ செய்துவிட்டு பொதுமக்களின் அழுத்தத்தை போக்கிவிட்டு கைதட்டலும் வாங்கிக் கொள்வதற்கான எல்லாவிதமான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று காலையில் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பேர்களும் தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைக்க எந்தவிதமான சூழலும் உருவாக்கித் தரப்படவில்லை. ‘அவனுகளுக்கு என்ன நிலைப்பாடு? போட்டுத் தள்ளுறது சரிதான்’ என்றுதான் நம்மில் பலரும் நினைப்போம். அது சரிதான். ஆனால் அந்த நால்வரில் ஒருவன் ஏதோ காரணத்துக்காக சிக்க வைக்கப்பட்டிருந்தாலும் கூட பரிதாபமில்லையா? அப்படி சிக்க வைக்க வாய்ப்பேயில்லை என்று முழுமையாக நம்ப முடியுமா?

குற்றச் செயல் நிகழ்ந்த இடத்திலேயே நான்கு பேரையும் சுட்டுக் கொன்றது நிச்சயமாக பொதுவெளியில் ஒரு பயத்தை உருவாக்கும். ஆனால் இந்தியா மாதிரியான ஜனநெரிசல் மிகுந்த தேசத்தில் இத்தகைய பயங்கள் நிலையானவை அல்ல. அவை தற்காலிகமானவை மட்டுமே. நிர்பயா சம்பவம் நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டது. ஆனால் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது? ‘செஞ்சுட்டு தப்பிச்சுக்கலாம்’ என்கிற தைரியத்தில்தான் பலரும் குற்றத்தைச் செய்கிறார்கள். ஹைதரபாத் சம்பவமும் கூட அப்படித்தான் கரைந்து போகும். இத்தகைய குற்றச் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும். யார் செய்தாலும் சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக இருக்கும் என்கிற பயம்தான் அவசியமே தவிர, நூறு சம்பவங்களில் ஒன்றில் மட்டும் நான்கு பேரைச் சுட்டுக் கொல்வது என்பது கடலில் கரைத்த பெருங்காயம் மாதிரியான விளைவையே உண்டாக்கும்.

அரசியல் செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஒரு மாதிரியான தண்டனை, விதவிதமான தப்பித்தல்கள், ஊடகங்களின் மெளனம், பேரமைதி கொண்ட மக்கள் என்றிருந்துவிட்டு ஹைதராபாத் சம்பவத்துக்கு மிக அதிகப்படியான சந்தோஷத்தையும் கொண்டாட்டத்தையும் காட்டுவது கூட தவறான முன்னுதாரணமாகத்தான் அமையும். திடீரென ஊடகக் கவனம் பெற்ற சம்பவங்களில் மக்களிடமிருந்து அழுத்தம் வரும் போது அதிலிருந்து தப்பிக்க அரசும் காவல்துறையும் யாரை வேண்டுமானாலும் பொதுவெளியின் கண்களில் காட்டிவிட்டு போட்டுத் தள்ளுவதற்கான சாத்தியங்களை சமூகம் உருவாக்கித் தருகிறது என்று கூட புரிந்து கொள்ளலாம். 

ஹைதராபாத் என்கவுண்ட்டரை எதிர்க்கிறேனா என்றால் இல்லை என்றே சொல்வேன். ஆனால் இது வெறும் கண்கட்டி வித்தையாக இருந்துவிடக் கூடாது; பொது சமூகத்தை ஏமாற்றும், அதன் கோபத்தை வடிகட்டுவதற்காக இத்தகைய சம்பவத்தைச் செய்துவிட்டு மறந்துவிடக் கூடாது என்றே விரும்புகிறேன். பரவலாக பயத்தை உண்டாக்கி, மனநிலை மாற்றத்தை நோக்கி நகர்த்தி, குற்றச் செயல்களைக் குறைப்பதற்கான வாய்ப்புகளையும், சட்டத்திருத்தங்களையும், நடைமுறை மாற்றங்களையும் உருவாக்க வேண்டும். புகார் அளிக்க வருபவரை அலட்சியப்படுத்தியதும் இதே சம்பவத்தில்தான் நடந்தது. ‘ஹைலைட்’ செய்யப்பட வேண்டியது அதுவும்தான். அதில் தொடங்கி குற்ற விசாரணைகளில், தண்டனை முறைகளில் மாற்றங்களைச் செய்யாவிட்டால் இத்தகைய சம்பவங்களில் ஒரு கணம் விசிலடித்து குதூகலிப்பது தவிர மற்ற அனைத்தும் வழமை போலவே அனைத்தும் தொடரவே வாய்ப்புகள் அதிகம். 

10 எதிர் சப்தங்கள்:

வெட்டிபையன் said...

Your concerns are legitimate. But it seems they did DNA analysis before encounter. I hope they waited these many days protecting them from public(stone pelting videos) only to make sure they are the culprits.
https://www.thehindu.com/news/national/telangana/police-resorted-to-retaliatory-firing-says-ips-officer-sajjanar-on-hyderabad-encounter/article30212986.ece

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இதுவ்ரை எந்தக் குற்றத்தில் மாட்டியவர்களும் யாரையும் காட்டிக் கொடுத்ததாகத் தெரியவில்லை. ஆட்டோ சங்கர் விவகாரத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யாரோ மாட்டப் போகிறார்கள் என்றெல்லாம் செய்தி வெளியடப் பட்டன. ஆனால் அப்படி யாரும் மாட்டவில்லை. பொள்ளாச்சி விவகாரத்திலும் அப்படியே. அதனால் இதுவே சிறந்தது. மாட்டாமல் உள்ளவர்களுக்கும் இனி அச்சம் ஏற்படும். மீண்டும் தவறு செய்ய துணிவதற்கான வாய்ப்பை இது நிச்சயம் குறைக்கும் .எனினும் அவர்கள் குற்றம் செய்தவர்கள்தான் என்பதை உறுதிப் படுத்துவது போலிசார் கடமையாகக் கொள்ள வேண்டும்

M.Selvaraj said...

‘நால்வரும்தான் குற்றவாளிகள் என்பது 100% உண்மையாக இருந்தால் சுட்டுக் கொன்றதில் தவறேயில்லை. சம்பவம் நடந்த இடத்தில் உயிரோடு எரித்துக் கொன்றிருந்தாலும் தகும்’
உங்களின் இந்த கருத்தில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப கருத்தை பதிந்துள்ளீர்கள்.
ஒரு பெண் தனியாக ரோட்டில் நின்றாலே அந்த பெண்ணை நாசம் செய்து கொலை செய்கிறார்கள் என்றால் என்ன மாதிரியான ஒரு நாட்டில் நாம் வாழ்கிறோம் என்ற எண்ணமே முதன்முதலாக அந்த செய்தியை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது. அந்த நேரத்தில் அந்த பெண் என்ன துடி துடித்து மரணமடைந்திருப்பாள் என்றுதான் மனம் வேதனையுற்றது ஆனால்…
போக்குவரத்து ஊழியர்களை வேலை நீக்கம் செய்தபின்னர் பொதுமக்களின் அதிருப்தியினால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரின் செல்வாக்கு கொஞ்சம் சரிவடைத்திருந்த நேரம் தன் செல்வாக்கை மீண்டும் உயர்த்திக்கொள்ள அவருக்கு கிடைத்த ஒரு வாய்ப்பே இந்த என்கவுண்டர்.
குற்றவாளிகளை அல்லது குற்றம் சுமத்தப்பட்டவர்களை போலீசார் சுட்டுக் கொலை செய்தது ஏற்புடையதல்ல. குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்களின் மூலம் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி (இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க தெலுங்கானா அரசு உத்தரவிட்டது) அதிகபட்சம் மூன்று முதல் ஆறு மாதத்திற்குள் தூக்குத்தண்டனை கொடுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் வரவேற்றிருக்கலாம். அதைவிட்டுவிட்டு அதே இடத்தில கொண்டு சுட்டுகொல்வேன் என்பது சரியான முறையல்ல. நீதிமன்றங்களால் நீதி கொடுக்க முடியாதென்றால் நீதிமன்றங்களை கலைத்து விடுங்கள்.

அடுத்து பொதுமக்களாகிய நம்முடைய மனநிலை. இன்று காலைமுதல் சமூக வலைத்தளங்களில் ஒரே என்கவுண்டர் ஆதரவு கோசம்தான். இது ஒரு மோசமான மனநிலை. பொதுமக்கள் நாம் எப்போதுமே என்கவுண்டர் க்கு ஆதரவு தரக்கூடாது. காவல்துறையினருக்கு உள்ள உச்ச அதிகாரம்தான் இந்த என்கவுண்டர் என்ற கொலைச்செய்யும் உரிமை. காவல்துறையினருக்கு உச்ச அதிகாரம் கிடைத்தால் அவர்கள் நினைத்தபடி விளையாடலாம்.
இதே தூத்துக்குடியில் தமிழ்நாட்டு காவல்துறை பதிமூன்று பேரை சுட்டுக்கொலை செய்ததையும் நாம் மறந்துவிடக்கூடாது. பாதிக்க பட்ட பெண்ணின் பெற்றோரின் வலியும், வேதனையும் , கோபமும் புரிந்துகொள்ளக்கூடியதே, அவர்களின் கோபத்தையும் வலியையும் நீதிமன்றம் மூலம் தூக்கு தண்டனை வாங்கி கொடுத்து தணித்திருந்தால் அது இந்திய நீதித்துறையின் மீது பொதுமக்களுக்கு ஒரு நம்பக தன்மையை ஏற்படுத்தியிருக்கும்.
உங்களின் பின்வரும் கருத்துடன் உடன்படுகிறேன்:
அப்படியெல்லாம் செய்யமாட்டார்கள் என்று அரசியல்வாதிகளையும், காவல்துறையையும் முழுமையாக நம்புகிறீர்களா? கேட்கவே நாதியில்லாத லட்சக்கணக்கான மக்கள் உலவும் நாடு இது. யாரை வேண்டுமானாலும் இழுத்துச் சென்று ‘சம்பவம்’ செய்துவிட்டு பொதுமக்களின் அழுத்தத்தை போக்கிவிட்டு கைதட்டலும் வாங்கிக் கொள்வதற்கான எல்லாவிதமான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

Ram said...

இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு, சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை இல்லை. சட்டத்தை மதிக்காமல் பெண்ணைக் கொன்றவனுக்கும், சட்டத்தின் முன் நின்று தன் நிலைப்பாட்டை எடுத்துக்கூறி மரண தண்டனையிலிருந்து தற்காத்துக் கொள்ள சட்டம் அவனுக்கு வழங்கும் வாய்ப்பை புறவாசல் வழியாய்ப் பறித்து அவனை என்க்கெளண்ட்டர் கொலை செய்பவனுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? குற்றம் செய்தவன் தகுந்த தண்டனை பெற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அவ்வளவு உறுதியாய் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதை நேர்வழியில் காண்பித்து, ஓட்டைகளின் பலன் அவர்களுக்குச் செல்லாமல், விரைவாய் ஒரு தீர்ப்பைப் பெற்றிருந்த்தால் பாராட்டி இருக்கலாம்.

இந்தியர்களுக்கு, குறிப்பாக இந்தியாவில் வாழும் இந்தியர்களுக்கு, சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை இல்லை. இவர்களை ஆள்பவர்கள் மட்டும் உத்தம சிகாமணிகளாகவா இருப்பார்கள்.

சுப இராமநாதன்

சேக்காளி said...

என்ன த்த சொல்ல

senthilkumar said...

மணிகண்டன் அவர்களே, நமது சட்டமும், அதன் ஓட்டையையும், ஏதர்த்த நிலையை புரிந்து கொண்டுதான் பேசுகிறீர்களா? தினமலரில் வந்த கட்டுரையின் முக்கிய பகுதியை இங்கே பதிவு செய்கிறேன்.

நமது சட்டத்தைப் பற்றியும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பற்றி தெரிந்தும் இவர்கள் இப்படி பேசுவது தான் வேதனையின் உச்சம்.2010ம் ஆண்டு 11 வயது கோவை பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது நாட்டையே உலுக்கியது.
கோவை சம்பவத்தின் இன்னொரு குற்றவாளியான மனோகரனை 'என்கவுன்டர்' செய்யாமல் கைது செய்த போலீசார், அவரை அழைத்துக்கொண்டு வழக்கு விசாரணை முடியும் வரை கோர்ட் கோர்ட்டாக படியேறி இறங்கிக்கொண்டு இருந்தனர். ஒரு வழியாக அவருக்கு 2012, நவ.1ல் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது. சுப்ரீம் கோர்ட் வரை அவர் அப்பீல் செய்தார். ஒரு வழியாக அங்கும் துாக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இது நடந்தது இந்த ஆண்டு. அதாவது, கீழமை கோர்ட்டில் துாக்கு தண்டனை வழங்கப்பட்டு 9 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது தான் துாக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இனி கருணை மனுவெல்லாம் இருக்கிறது. இதில் இன்னொரு வினோதம் என்னவென்றால், துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை துாக்கில் போட நம்ம நாட்டில் ஆள் இல்லையாம். டில்லி நிர்பயா வழக்கில் இதனாலேயே குற்றவாளிகளை துாக்கிலிட முடியவில்லை. அந்த கொடூர குற்றவாளிகள் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். கோவை மனோகரனும் அதே போல உயிர் தப்பிவிடுவார். அடுத்து, இந்தியாவில் துாக்கு போட கயிறு கிடைக்கவில்லை என்று சொன்னாலும் சொல்வார்கள். இப்படிப்பட்ட சட்டம் இருந்தால் கொடூர குற்றங்களை செய்வோர் எப்படி பயப்படுவார்கள்?

தொண்டர்கள் புடைசூழ, பாதுகாப்பு படையினர் அணி வகுத்து வர, போக்குவரத்தையே நிறுத்தி வழிவிட... என்று எந்த பிரச்னையும் இல்லாமல் சென்று வரும் அரசியல் தலைவர்களுக்கு சாதாரண மக்களின் கஷ்டம் எங்கே புரியப் பகிறது. அதனால் தான், சட்டம், மனித உரிமை மீறல் என்றெல்லாம் பேசி குற்றவாளிகள் கொட்டமடிக்க உதவுகிறார்கள். தெலுங்கானா என்கவுன்டர் பற்றிய தகவல் கிடைத்ததுமே நாடு முழுவதுமே பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

senthilkumar said...

ஆங்காங்கே இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகளை கொளுத்தியும் பெண்கள் கொண்டாடி உள்ளனர். 'என்கவுன்டர்' நடந்த இடத்திலேயே போலீசாரை தோளுக்கு மேல் துாக்கி வாழ்த்தி உள்ளனர். பொதுமக்களில் சிலர், போலீசாரின் காலில் விழுந்து வணங்கி நன்றியை தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் உண்மையான மனநிலை இது தான். பொதுஜனம் யாரும் மனித உரிமை மீறலையோ, சட்டத்தின் பேரால் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதையோ விரும்பவில்லை. கொலை செய்யப்பட்ட பெண்ணை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே. மக்களுக்காகத் தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் இல்லை. இங்கு தான் எதிர்க்கட்சிகளுக்கு இடிக்கிறது.

ஒரு என்கவுன்டர் இப்படி கொண்டாடப்பட்டால், அந்த கொண்டாட்டத்தின் பலன், அந்த மாநில, மத்திய ஆளுங்கட்சிகளுக்கு போய்விடுமே என அஞ்சுகின்றன. இதை நேரடியாக சொல்ல இவர்களுக்கு தைரியம் இல்லை. எனவே தான் சட்டம், மனித உரிமை என்ற திரைக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார்கள்.

இப்போதும், இனிமேலும் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, அவர்களுக்கு என்கவுன்டரை வரவேற்கும் மக்கள் சொல்லும் செய்தி இதுதான். கொடூர குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை தாருங்கள். அது தான் எங்களுக்கு வேண்டும் என்பது தான். மக்கள் எப்போதுமே எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். இப்படித் தான் பேசுவார்கள்'' என்று சர்வ சாதாரணமாக இதை கடந்துவிட முடியாது.

ஆங்கிலேயர்கள் வகுத்த, உளுத்துப்போன சட்டங்களைப் பார்த்து, பார்த்து, செய்வதறியாது திகைத்து, வேறு வழியில்லாததால் தான் மக்கள் இந்த மனநிலைக்கு வந்துள்ளனர் என்பதை ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், மனித உரிமை பேசுவோரும் புரிந்துகொள்ள வேண்டும். சட்டங்களில் உடனடியாக மாற்றம் கொண்டு வர வேண்டும்.

வளைகுடா நாடுகளில் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் இருக்கின்றன. அதுவும் உடனுக்குடன் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்படும். மற்ற நாடுகளில் இருந்து அங்கு வேலைக்கு செல்வோர் அங்குள்ள சட்டங்களை கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டும். எவ்வளவு பெரிய போக்கிரியாக இருந்தாலும் அங்கு வேலை செய்யும்போது அடங்கி, ஒடுங்கி வாலைச் சுருட்டிக்கொண்டு இருந்தே ஆக வேண்டும்.

*அது போன்ற சட்டங்களை நம் நாட்டிலும் கொண்டு வர வேண்டும். அப்போது தான் கற்பழிப்புகளையும் கொலைகளையும் யாரும் கனவில் கூட நினைக்க மாட்டார்கள்.

பொது ஜனம் யாரும் மனித உரிமை மீறலையோ, சட்டத்தின் பேரால் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதையோ விரும்பவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே. மக்களுக்காகத் தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் இல்லை.

kailash said...

In Delhi two years ago Ryan international school kid Pradyuman Thakur was murdered in the school toilet , police immediately arrested school bus driver Ashok kumar and conducted the case , Later CBI found that driver was innocent and he dint had any role in that murder and then CBI framed a 11th std. student of the same school . Driver was released , as per collective conscience if police has encountered Driver then we all would have said driver needs that punishment for killing a kid . Police botches up many cases some times to tone down the anger of public in such high sensitive cases some will be identified as culprits and it takes time to prove their guilt or innocence . Instead of givign some timeframe we police should not give punishment , this might scare similar culprits for shorter period and public will be happy after that same trend will continue .

Paramasivam said...

இந்த நால்வரும் குற்றம் புரிந்தவர்கள் என நம்புவோம்.
இனிமேலாவது இப்படிப் பட்ட குற்றம் புரிய ஒரு பயம் மற்றும் தயக்கம் வரும் பாருங்கள். அந்த வகையில்
வரவேற்போம்.

Subramanian said...

Mobile phone is the major reason for a spurt in these cases. Taking videos and distributing clips has become easy and the amount of such content in twitter,facebook and instagram is enermous. Mothers should educate their children to respect women and not invade their space. Generational change is required.Till such time our women relatives are not safe when travelling alone at night.