Dec 10, 2019

உதவி இயக்குநர்

ஒருவரை நேரில் பார்த்து அவர் என்ன தொழில் செய்கிறார் என்று சொல்ல முடியுமா என்றால் அது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆனால் வடபழனி, அசோக் நகர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சிலரைப் பார்த்தால் ‘இவர் சினிமாவில் இருக்கிறார்’ என்று கணித்துவிட முடிகிறது. இப்பொழுது ‘ஓலா’வில் பைக் பதிவு செய்து கொள்ளலாம். பேருந்தை விட சற்றே அதிகம்- ஆட்டோவை விட மிகக் குறைவு. முப்பது ரூபாய்க்கெல்லாம் பயணம் செய்துவிட முடிகிறது. கடந்த வாரம் சென்னை சென்றிருந்த போது அப்படித்தான் பதிவு செய்தேன். 

தலை நரைத்த ஒரு நபர் வந்தார். ஏறி அமர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு ‘நாள் பூராவும் வண்டி ஓட்டுவீங்களா?’ என்றேன். 

‘இல்லைங்க..பத்து மணிக்கு ஆபிஸ்...அதுவரைக்கும் ஓட்டுவேன்’ என்றார்.  அவருக்கு சந்து பொந்துகள் எல்லாம் தெரிந்திருந்தது. சொந்த ஊர் என்ன என்றெல்லாம் பொதுவான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பதிலைச் சொல்லிவிட்டு திருப்பி என்னைக் கேள்விகளைக் கேட்டார். இது வழக்கத்திற்கு மாறானது. என்னதான் பழகினாலும் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் முதல் பயணத்தின் போது நம்மிடம் கேள்விகளைக் கேட்கமாட்டார்கள். 

பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தவருக்கு நாற்பதுகளைத் தாண்டிய வயது. தலை நரைத்திருந்தது. குளித்து நெற்றியில் திருநீறு பூசியிருந்தார். ஏதோவொரு குக்கிராமத்துக்காரர். சென்னை வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கடந்துவிட்டதாகச் சொன்னார். நான் குறுக்குக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். 

ஒரு கட்டத்தில் ‘நீங்க என்ன நிருபரா?’என்றார். அவர் இயக்குநர் ஒருவரிடம் உதவியாளராக இருக்கிறார். மூன்று படங்களை இயக்கியவர் அந்த இயக்குநர். ஒரேயொரு படம் மட்டும் வணிக ரீதியில் வெற்றி என்றார். ஆனால் அந்தப் படத்தின் பெயரைக் கூட நான் கேள்விப்பட்டிருக்கவில்லை. அவருடைய அப்பா இயக்குநராக இருந்தாராம். அதனால் இவரும் நூல் பிடித்து சினிமாவுக்கு வந்துவிட்டார். இரண்டு மூன்று பேர்களை உதவியாளராக வைத்திருக்கிறார். அதில் பைக்காரரும் ஒருவர். சொற்ப சம்பளம். திருமணமாகி பிள்ளைகள் இருக்கிறார்கள். பள்ளிக்கூடம் செல்கிற வயது. வீட்டு வாடகை, கல்விச் செலவு என்று எல்லாமும் ஒரு வழி செய்து கொண்டிருக்கிறது. வருமானத்தைப் பெருக்க காலை ஆறு மணிக்கு பைக் எடுக்கிறார். மாலை அலுவலகம் முடிந்த பிறகு மூன்று மனி நேரம் ஓட்டுகிறாராம்.

பைக்காரரின் இயக்குநர் பற்றி துருவித் துருவிக் கேட்கவும்- என்ன துருவித் துருவி- அடுத்த படம் என்ன செய்யப் போகிறார், நடிகர் யார் என்றுதான் கேட்டேன். அதுவே அவருக்கு பயத்தை உருவாக்கிவிட்டது. ‘சார் எங்கேயாச்சும் வெளியில் தெரிஞ்சா எனக்கு பிரச்சினை ஆகிடும்’ என்றார். ‘அட அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க...சினிமாவில் எனக்கு சில நண்பர்கள் இருக்காங்க..’ என்றேன். அதன் பிறகு அவர் துருவித் துருவிக் கேட்க ஆரம்பித்துவிட்டார். தன் கஷ்ட ஜீவனத்தை வெளிப்படையாகச் சொல்லாமல், உள்ளேயும் மறைத்துவிட முடியாமல் அவர் திணறுவதாகத் தோன்றியது. 

உதவி இயக்குநர்கள் பற்றி எத்தனையோ கட்டுரைகளும் கதைகளும் எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஆனாலும் அதன் பரிமாணங்கள் மட்டும் பிடிபடுவதேயில்லை. சென்னையின் சில பகுதிகளில் எதிர்ப்படுகிறவர்களைப் பார்த்தால் ‘இவர் சினிமாவில் இருக்கிறார்’ என கணித்துவிட முடிகிறது என்று சொன்னேன் அல்லவா? அது எப்படி என்றால் சொல்லி வைத்தாற் போல அவர்களது கண்களின் வழியே ஒரு கனவைக் கண்டடைந்துவிட முடியும். உலகின் உச்சாணியை தமது சினிமாவின் வழியாக அடைந்துவிட முடியும் என்கிற நம்பிக்கையோடு ஓடிக் கொண்டிருப்பார்கள். பேச்சுக் கொடுத்தால் அது இன்னமும் உறுதிப்பட்டுவிடும். 

விஸூவல் கம்யூனிகேசன் படித்துவிட்டு பணக்கார வீட்டிலிருந்து வந்து கையில் காசும், ஓட்ட பைக்கும், லேப்டாப்புமாகச் சுற்றுகிற இளைஞர் கூட்டம் ஒரு பக்கம் என்றால், ஏதோவொரு கிராமத்திலிருந்து வந்து நான்கைந்து நண்பர்களுடன் சேர்ந்து புத்தகங்களை வாசித்துவிட்டு, கிடைத்த காசில் பசியாறிவிட்டு ‘எப்பவாச்சும் ஒரு படம் செஞ்சுடுவேன்’ என்று திரியும் இன்னொரு கூட்டம் என தமிழ் சினிமா இரு தரப்பையும் கலந்து அலைய விட்டுக் கொண்டிருக்கிறது. 

‘சினிமாவில் எல்லாமே ஒரு படத்தோட வெற்றியில்தான் இருக்கு. ஒரேயொரு படம் ஹிட் ஆகிட்டா போதும்...ஒரே நைட்டுல லைஃப் மாறிடும். கார்ல போவோம்; ஸ்டார் ஓட்டல்ல தங்குவோம்’ என்று சொல்வார்கள். பைக்காரரும் இம்மிபிசகாமல் அதையே சொன்னார். அப்படியொரு வெற்றிக் கனவுதான் சினிமாவுக்குள் வருகிறவர்களை இழுத்துக் கொண்டேயிருக்கிறது. 

சினிமா ஒரு கனவுலகம் என்று சொன்னால் அது பலரும் சொல்லிவிட்ட ஒரு க்ளிஷேதான். ஆனால் அதுதான் நிஜம். அந்த வண்ணக் கனவுலகம் எத்தனையோ பேர்களை உள்ளே இழுத்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு முறை சினிமாத்துறைக்குள் வந்துவிட்டவர்கள் மாயக்கட்டத்தில் சிக்கியவர்களைப் போலத்தான் எனத் தோன்றும். ‘இதை விட்டுட்டு போறேன்’ என்று சொல்லிவிட்டு போக முடியாமல் அதற்குள்ளேயே உழன்று கொண்டிருப்பவர்கள், ‘ஊர்ல ஆறு மாசம் வேலை செய்வேன்; இங்க வந்து ஆறு மாசம் சான்ஸ் தேடுவேன்’ என்கிறவர்கள், ‘இன்னும் ஒரேயொரு ப்ரொட்யூசர்கிட்ட சொல்லிட்டு வொர்க் ஆகலைன்னா போய்டுவேன்’ என்கிறவர்கள் என சகலரும் இங்கே இருக்கிறார்கள். 

‘யுடியூப் சானல்காரங்க பேசியிருக்காங்க..அது மட்டும் க்ளிக் ஆகிட்டா எனக்கான விசிட்டிங் கார்ட் ஆகிடும்’என்பவர்கள், ‘அந்த நடிகர் கதை கேட்கிறேன்னு சொல்லியிருக்காரு’ என்பவர்கள், ‘நீங்க எழுதுவீங்களா? நாம சேர்ந்து வொர்க் செய்வோமா’ என்பவர்கள், ‘ப்ரொட்யூசர் ஓகே சொல்லிட்டாரு..அடுத்த வாரம் ஆபிஸ் போட்டுடலாம்’ என்பவர்கள் என எல்லோருக்கும் இங்கே ஏதாவதொரு கொக்கி இருந்து கொண்டேயிருக்கிறது. அந்தக் கொக்கியிலிருந்து விலகி வேறொரு துறைக்குச் செல்வதெல்லாம் அவ்வளவு எளிதில்லை என்றுதான் தோன்றுகிறது.

பைக்காரரிடம் ‘நீங்க கதை வெச்சிருக்கீங்களா?’ என்றேன்.

‘மூணு கதை இருக்கு சார்...எல்லாமே பவுண்டட். ஒரு எழுத்து கூட மாத்த வேண்டியதில்லை...ஆனா இப்போ எல்லாம் யூத்கிட்டத்தான் ப்ரொட்யூசர்ஸ் கதை கேட்கிறாங்க’ என்று சலித்துக் கொண்டார். ‘யூடியூப்ல படம் பண்ணுறாங்க...ப்ரொட்யூசரைப் புடிச்சு ஓகே செஞ்சுடுறாங்க’ என்றார். ‘ம்’ கொட்டிக் கொண்டிருந்தேன்.  ‘ஆனா ஒண்ணு சார். நானும் கோபி நயினார் மாதிரி நானும் ஜெயிச்சுடுவேன்’ என்றார். இந்த நம்பிக்கைதான் அத்தனை உதவி இயக்குநர்களுக்குமான ஆக்ஸிஜன். 

தி.நகருக்கு முப்பத்தியேழு ரூபாய் ஆகியிருந்தது. என்னிடம் ஐம்பது ரூபாய் தாளாக இருந்தது. டீக்கடையில் சில்லரை வாங்கித் தருவதாகச் சொன்னார். ‘வாங்க டீ குடிப்போம்’ என்று சொல்லி குடித்தபடியே பேச்சைத் தொடர்ந்தோம். டீக்காசை நானே கொடுத்தேன். கிளம்பும் போது ‘உங்க வாட்ஸாப் நம்பர் கொடுங்க....என்னோட படம் அனுப்புறேன். பாருங்க’ என்றார். அறைக்கதவைத் திறப்பதற்கு முன்பாக இணைப்பை அனுப்பியிருந்தார். அதுவொரு யூடியூப் சானலுக்கான படம்.

5 எதிர் சப்தங்கள்:

Unknown said...

வாஸ்தவம் . சினிமா கனவுகள் , சொற்ப வருமானம் , ஓவர் நைட் சக்ஸஸ் ,
சென்னை கனவுத்தோழிற்சாலை சார்ந்த அன்றாட நிகழ்வுகளை மீண்டும் கண் முன்னே பார்க்க முடிந்தது , உங்கள் பதிவினால் . நன்றி நண்பரே . !!

- அந்தியூர் ஹரி

Muralidharan said...

Share the video link if it is not special to you alone. :)

CatherineAugustine said...

Pls share the link if you can.

S.NEDUMARAN , said...

ஒரே பாடலில் பணக்காரர் ஆவது நிஜமாகவே முடியும் திரையில் மட்டும்

சேக்காளி said...

கடேசி வரைக்கும் நீங்க ரெண்டு படத்துல வேலை பார்த்திருக்கிறேன்னு சொல்லவே இல்லை.
விடா கண்டனுக்கே கொடா கண்டன் இந்த மணி கண்டன் டா.