Dec 4, 2019

கொங்கும் அருந்ததியரும்

தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் வன்னியர்-பறையர் என்பதைப் போல தெற்கில் தேவர்-தேவேந்திர குல வேளாளர் என்று சாதியக் கட்டமைப்பு இருப்பது போல, மேற்கை எடுத்துக் கொண்டால் கொங்குவேளாளர்- அருந்ததியர் என்கிற கட்டமைப்பு. கொங்கு வேளாளர்கள் நிலங்களில் காலங்காலமாக ஊழியம் செய்து வரும் அருந்ததியர்கள் ஒப்பீட்டளவில் பறையர்களைவிடவும், பள்ளர்களைவிடவும் பல படிகள் கீழே இருக்கிறார்கள். எதில் ஒப்பீடு செய்வது என்றால் எல்லாவற்றிலும்தான் - கல்வி, வேலை வாய்ப்பு, வசதி என எதையும் ஒப்பிடலாம். வடக்கிலும் தெற்கிலும் தலித் மக்களிடையே இருக்கும் அரசியல் விழிப்புணர்வு மேற்கில் இருக்கும் அருந்ததிய மக்களிடையே இல்லை என்பதுதான் உண்மை நிலை. 

அருந்ததிய மக்களின் உரிமைகளை உரத்துச் சொல்லும் அரசியல் இயக்கங்கள் கூட எதுவுமில்லை. ஒன்றிரண்டு இயக்கங்கள், சிறு தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் வலுவற்றவர்கள். தேர்தல் அரங்கிலோ அல்லது அரசாங்கத்திடமோ உறுதியான உரிமை பேரங்களை நிகழ்த்துமளவுக்கு திறனற்றவர்கள். அப்படியான தலைவர்களும் இயக்கங்களும் வளரவேயில்லை என்பதைவிடவும் வளரவிடவில்லை என்பதுதான் வரலாற்று உண்மையாக இருக்கக் கூடும். 

கொங்குப்பகுதியில், ‘அவங்களுக்கு என்ன மேலே வந்துட்டாங்க’ என்று அருந்ததியர்களைச் சுட்டிக்காட்டி பேசுவதை மிக இயல்பாகக் கேட்க முடியும். அருந்ததிய இளைஞர்கள் பலரும் வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். பெரும்பாலும் சுற்றுவட்டாரத்தில் இருக்கக் கூடிய மில்களுக்குத்தான் வேலைக்குச் செல்கிறார்கள். வெளிப்படையாக சாதி தெரிந்தால் உணவு விடுதிகள், கடைகளில் ‘புழங்காத சாதியினரை’ வேலைக்கு வைத்துக் கொள்ளமாட்டார்கள். அந்தவிதத்தில் மில்களும், தொழிற்சாலைகளும் சற்று பொருத்தமானவை. இப்பொழுது பல அருந்ததிய இளைஞர்கள் பைக் வைத்திருக்கிறார்கள். செல்போன் வைத்திருக்கிறார்கள். அதை வைத்துக் கொண்டு ‘அவங்களுக்கு என்ன’ என்கிறவர்கள் அதிகம்.

வெறுமனே பைக் வைத்திருப்பதும், வீட்டில் தொலைக்காட்சி வைத்திருப்பதும்தான் சமூக முன்னேற்றமா? அருந்ததிய மக்களில் அடிப்படையான அரசியல், சமூகக் கட்டமைப்பு புரிந்த, தம் இன மக்களை சமூகநீதி அடிப்படையில் மேலே கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணம் மிகுந்த இளைஞர்கள் மிகக் குறைவு. அப்படியொரு விழிப்புணர்வு மேற்குப்பகுதியில் ஏற்படவே இல்லை என்பதுதான் பரிதாபமான உண்மையும் கூட.

கொங்கு மண்டலத்தில் ‘அருந்ததியரை நாங்கள் நன்றாகப் பார்த்துக் கொள்கிறோம்; எங்களுக்குள் எந்தப் பிரச்சினையுமில்லை’ என்று நிறையப் பேர் பேசுவதைக் கேட்க முடியும். இதை எழுதிய பிறகு குறைந்தபட்சம் நான்கைந்து கவுண்டர்களாவது ‘நாங்கதான் எங்கள் தோட்டத்தில் பணியாற்றிய பழனியின் பேத்தி திருமணத்தை நடத்தி வைத்தோம்’ ‘சுக்காவின் மகனைப் படிக்க வைத்தோம்’ என்றெல்லாம் எதிர்வினையாற்றுவார்கள். ஒவ்வொரு முறையும் எதிர்கொள்ளக் கூடிய எதிர்வினைதான் இது. தலைமுறை தலைமுறையாக தோட்டத்தில் பணியாற்றியவன் இன்னமும் தம் பேத்தியின் திருமணத்துக்கும், மகனின் படிப்புக்கும் அடுத்தவர்களின் கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற உண்மையை வசதியாக மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு ‘இதையெல்லாம் செஞ்சு கொடுக்கிறோம் தெரியுமா’ என்பதுதான் வாதமாக முன்வைக்கப்படுகிறது. ஒருவகையில் இது உறிஞ்சுதல் இல்லையா?

‘நீங்க எல்லாம் வேலைக்கு போய்ட்டா நாங்க எப்படி விவசாயம் பண்ணுறது? பொழைக்கிறது?’ என்கிற கேள்வியின் நாசூக்கான வடிவங்களை பல வகைகளில் எதிர்கொண்டபடியே இருக்கிறோம். அருந்ததியர்கள் தேர்தல் ஒதுக்கீட்டின் வழியாக உள்ளாட்சிகளில் இடம் பெறுவது, திருமண மண்டபத்தில் அனுமதி கேட்பது என எல்லாமே பலருக்கும் ஒவ்வாமைதான். இதுவரை வரையப்பட்ட கோடுகளை விட்டு வெளியே கால் வைக்கிறார்கள் என்கிற பதற்றம் இருந்து கொண்டேயிருக்கிறது.  மறுக்க முடியுமா? ‘எங்க தாத்தன் காலத்துல செருப்பு கூட போடாம இருந்தவன் இன்னைக்கு பைக்கில் லிப்ட் கேட்கிற அளவுக்கு வளர்ந்துட்டான்’ என்றெல்லாம் ஏகப்பட்ட விடலைகள் எரிச்சல் அடைகிறார்கள். 

சமூக வளர்ச்சி, சமத்துவம் என்கிற சொற்கள் வெறுமனே பைக், செல்போன் என்பதில் இல்லை. அது பணத்தால் மட்டும் எடை போடப்படுவதில்லை. அவர்களுக்கான மரியாதை, சமூக அந்தஸ்து, சமூகத்தில் நிலவும் உரிமைகள் என பல காரணிகளைச் சார்ந்தது. ஒரு ஆதிக்க சாதி இளைஞனுக்கு கிடைக்கக் கூடிய எல்லாமும் ஒரு தலித்துக்கு கிடைக்கிறதா? இன்னமும் குறிப்பாகக் கேட்டால் ஒரு கவுண்டர் இன இளைஞனுக்கு கிடைக்கும் உரிமையும், சமூக அந்தஸ்தும் அருந்ததிய இளைஞனுக்கு கிடைக்கிறதா? இந்தக் கேள்விக்கு ஆம் என்ற பதில் கிடைக்கும் வரை இங்கு சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன என்றுதான் அர்த்தம். அதுவரைக்கும் என்னதான் ‘கவுண்டர்கள் நல்லவர்கள்’ என்று சொன்னாலும் ‘அவர்களை கமுக்கமாக அமுக்கியே வைத்திருக்கும் சாதிதான் இது’ என்பதுதான் கசப்பான உண்மையாக இருக்கும். 

இத்தகைய விமர்சனத்தை முன்வைத்தால் ‘அதான் நாங்க பிரச்சினையில்லாமல் இருக்கிறோமே? அப்புறம் ஏன் வம்பு பேசறீங்க?’ என்ற கேள்வி எழுப்பப்படக் கூடும். அவர்களிடம் ‘வீட்டுக்குள்ள விடுவீங்களா? அவர்களுக்கு நீங்கள் குடிக்கும் அதே டம்ளர்ல தண்ணி தருவீங்களா?’ என்று கேட்டால் அதிர்ந்து போவார்கள்.  பிரச்சினையில்லாமல் இருக்கிறோம் என்பதன் ஆழமான அர்த்தம்- அவர்கள் இன்னமும் தங்களுக்கு அடங்கியே இருக்கிறார்கள் என்பதுதான். 

‘வீட்டுக்குள் விட்டுவிட்டால் உரிமை கிடைத்துவிடுமா?’ என்கிற குறுக்குக் கேள்வி எழாது என நினைக்கிறேன். இது அடிப்படையான எளிய கேள்வி. அதே சமயம் பதில் சொல்ல விரும்பாத கேள்வி. துணிந்து அதற்கான பதிலை நம்மால் சொல்ல முடியுமென்றால் மட்டுமே சமூக சமத்துவம் என்பதன் நுனியையாவது பிடித்திருக்கிறோம் என்று அர்த்தம். அது வரைக்கும் ‘நாங்க நல்லவங்க’ என்று சொல்லிக் கொள்வது கூட சமூகத்தை ஏமாற்றுகிற சால்ஜாப்புதான். அருந்ததியர்கள் அமைதியாக இருப்பதால்தான் இவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

இன்னமும் அப்பட்டமாகப் பேசினால் வடக்கிலும் தெற்கிலும் உரிமைகளை உரக்கக் கேட்கும் குரல்கள் மேற்கில் இல்லை என்பதுதான் கொங்குப்பகுதியில் பெரும்பாலானவர்களுக்கு நிம்மதியாக இருக்கிறது. வன்முறை அவசியமேயில்லை; ஆனால் மனமாற்றம் தேவையாகிறது. ஆனால் மனமாற்றம் இல்லாததால்தானோ என்னவோ யாராவது ‘இதெல்லாம்தான் வளர்ச்சியா?’ என்னும் போது பலரும் பதறிவிடுகிறார்கள். தேவையில்லாமல் குளறுபடிகளைச் செய்கிறார்கள் என்று கோபமாகிறார்கள். எங்கேயாவது யாராவது ஒன்றிரண்டு இடங்களில் துள்ளும் போது அவர்களை அடக்க, ஏவல் புரிய அரசும், ஆளும் வர்க்கமும், அதிகாரிகளும் இருக்கிறார்கள். இதுதான் கள நிலவரம். இதுதான் கள எதார்த்தம். 

10 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//எங்கேயாவது யாராவது ஒன்றிரண்டு இடங்களில் துள்ளும் போது அவர்களை அடக்க, ஏவல் புரிய அரசும், ஆளும் வர்க்கமும், அதிகாரிகளும் இருக்கிறார்கள். இதுதான் கள நிலவரம்.//
கள நிலவரம் அல்ல
களவாணிகளின் நிலவரம்.

செந்திலான் said...

இப்படி எழுதிட்டால் போதும் முற்போக்காளர் பட்டம் கிடைத்துவிடும் நாலு புக்கு எச்சா விக்கும். இது போல எழுதுவதே தலித் அல்லாதவருக்குச் சாதகமாக முடியும். அறிவுஜீவிகளின் ஆழ்மனதில் என்ன இருக்கிறது? பார்ப்பனர்களிடம் அரிவாளைக் காட்டி நிலத்தைப் பிடுங்கிய கோபி பகுதி கவுண்டர்கள் நிலத்தை அருந்ததியர்களுக்குத் தருவீரா?

Asok said...

You are really brave, you are 100% correct. Last generation is not changing easily, it is very hard to talk to them either. Another good thing, Dalits understand the situation, they are just going out and earning money instead lose their respect locally. Thats why the agriculture labor is very expensive. Still gounders are blaming them for expensive labors. Looks like next generation are positive, they dont want to see those differences unless people are not politically motivated.

செந்திலான் said...

Nobody is blaming costly labors. Technology changes everything. I think you live in utopian era. By the way costly labor issue is not new, its there from tirupur revolution. But still agriculture is surviving. This guy needs to sell few copies more by acquiring a progressive label that's all. We don't need labors from arunthathiayr in near future, that's the situation technology bringing

செந்திலான் said...

வெறுமனே சமமாக நடத்துவது மட்டும் தீர்வாகாது. நிலப்பகிர்வும் தேவை அதை நீங்களே தொடங்கி வைக்கலாம். அதை விட்டு போகாத ஊருக்குப் பஸ் ஏறாதீங்கப்பா

Paramasivam said...

திரு செந்திலால் கூறுவதிலும் உண்மை உள்ளது. மறுக்க முடியாது.

செந்திலான் said...

அடிப்படை நேர்மை இருந்தால் இதை வாசியுங்கள் மணிகண்டன். இந்தப் பின்னூட்டத்தையும் அனுமதியுங்கள். உங்களைப் போன்ற (போலி) முற்போக்காளர்களுக்காகவே எழுதப்பட்டது.
https://web.archive.org/web/20070819103400/http://tamil.sify.com/kalachuvadu/april05/fullstory.php?id=13710501

Jaypon , Canada said...

நல்லா பொரிஞ்சிரிக்கீங்க. பாரதி இப்படித்தான் பொரிந்தான். வீட்டுக்கும் கூட்டிச் சென்றான் தலித்தை.

நீங்க உங்க சொந்த ஊர்ல இருக்கிற இரண்டு தலித்துகளை வீட்டுக்கு கூட்டி போய் உங்க வட்டிலில் சாப்பாடு போட்டு சமமா சாப்பிடுங்க. உங்க அம்மாவும் வீட்டுக்கார அம்மாவும் எப்படி நடத்துகிட்டாங்கனு எழுதுங்க.

எனக்கும் சில கவுண்டர்களின் ஆணவப்போக்கு அதிர்ச்சியடையச் செய்கிறதுதான். அட தலித்தை விடுங்க. தன் சாதிக்குள்ளேயே இருக்கிறவன் இல்லாதவன் பிரிச்சுப் பார்த்து ஆணவத்துடன் நடப்பாங்க.அது தனி விவாதம்.

சேக்காளி said...

Jaypon , Canada said//. தன் சாதிக்குள்ளேயே இருக்கிறவன் இல்லாதவன் பிரிச்சுப் பார்த்து ஆணவத்துடன் நடப்பாங்க//
அப்புறம் மத்த சாதிக்காரனையெல்லாம் நினைச்சியே பாக்கக் கூடாது.

செந்திலான் said...
This comment has been removed by the author.