Dec 2, 2019

இதனை இதனால்...

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

1330 குறட்பாக்களிலும் இது மனதுக்கு நெருக்கமானது. சிலரைப் பார்க்கும் போது இந்தக் குறள் ஏனோ மனதுக்குள் திரும்பத் திரும்ப ஒலிக்கும். எல்லோராலும் எல்லாக் காரியத்திலும் வென்றுவிட முடிவதில்லை. ‘இவனுக்கு இதுதான்’ என்று எங்கோ விதிக்கப்பட்டிருக்கிறது.

வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. எனக்கு நிறைய வேலைகள் இருந்தன. ஆனால் ஜி.விஸ்வநாதன் வருகிறார் என்பதால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருந்தேன். அவருக்கு எண்பது வயதாகிறது. விக்கிப்பீடியாவைப் பார்க்காமல் அவரைப் பார்த்தால் எந்தவிதத்திலும் கணிக்க முடியாது. அறுபது வயது என்று கணக்கிட்டாலே அதிசயம்தான். அவரது பேச்சும் அப்படித்தான். எதையாவது பற்ற வைத்துவிடுவார்.

1984 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலம். அப்பொழுது ஜி.விஸ்வநாதன் அமைச்சர். ‘எங்கள் ஊரில் ஒரு அரசு பொறியியல் கல்லூரி வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கிறார். அரசிடம் பணமில்லை என்று சொன்ன எம்.ஜி.ஆர் ‘வேணும்ன்னா நீங்க காலேஜ் கட்டுங்க..நான் பர்மிஷனுக்கு வழி செய்கிறேன்’ என்கிறார். அன்றைக்கு வேலூரில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் கொட்டகையுடன் கூடிய கல்லூரியாகத் தொடங்கப்பட்டதுதான் இன்றைய வி.ஐ.டி. நேற்றைய சந்திப்பில் இதைச் சொன்ன ஜி.வி, ‘அப்போ மாசம் மொத்தமாவே இருபதாயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தோம்’ என்றார். கல்லூரி முதல்வருக்கு மூன்றாயிரம் என்பது அதிகபட்ச சம்பளம். மொத்தப் பணியாளர்களுக்கும் சேர்த்து மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் தொடங்கப்பட்ட கல்லூரி. இன்றைக்கு வேலூரில் மட்டும் மாதம் இருபது கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். சென்னையில் ஒரு வளாகம் இருக்கிறது. அங்கே ஆறு கோடி ரூபாய். போபால், ஆந்திராவில் இருக்கும் வளாகங்களில் எவ்வளவு என்று தெரியவில்லை. மொத்தம் நாற்பத்தாறாயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். 

வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் இன்றைக்கு மிகப்பெரிய சாம்ராஜ்யம். சாம்ராஜ்யம் என்றால் பெரிய நிறுவனம் என்ற அர்த்தத்தில் இல்லை. இந்தியாவில் முதல் பத்து தனியார் கல்வி நிறுவனங்களைப் பட்டியலிட்டால் இதுவும் ஒன்று. சமீபத்தில்தான் Institution of Eminence பட்டியலில் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் எந்தவொரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடனும் எந்த வகையிலும் போட்டியிடத் தகுதியான கல்வி நிறுவனம் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இந்தியாவிலேயே மிக அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பிரசுரம் செய்யும் கல்லூரி இதுதான். இதெல்லாம் முப்பத்தைந்து வருடங்களில் சாத்தியமாகியிருக்கிறது. ஒற்றைத் தலைமுறையில் அடைந்திருக்கும் வளர்ச்சி இது.

கூட்டத்தில் ஜி.வி. பேசியதைக் கேட்ட பிறகு கஸ்தூரி ஸ்ரீனிவாசன் ஆடிட்டோரியத்தின் - கோவை கஸ்தூரி மில்ஸ் ஸ்ரீனிவாசனின் வரலாறும் சுவராசியமானதுதான்; அதைத் தனியாகப் பேச வேண்டும்-  வளாகத்தில் தனியாக அமர்ந்து கடந்த முப்பதாண்டுகளில் ஜி.வி அடைந்திருக்கும் உயரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன்.  ஒரு கவுன்சிலராக இருந்து பார்த்தால் கூட அதிகார போதை நம்மை விலக அனுமதிக்காது. ‘எத்தனை கோடி செலவானாலும் பரவால்ல...ஜெயிச்சுடணும்’ என்று வெறியெடுக்க வைத்துவிடும். ஆனால் அமைச்சராக இருந்தவர் அவர். நினைத்திருந்தால் இன்றைய காலகட்டம் வரைக்கும் கூட இருந்திருக்க முடியும். அரசியல், அதிகாரம், கரை வேட்டி என எல்லாவற்றையும் விட்டுவிட்டு கல்லூரி மட்டும்தான் என்று அதற்குள்ளேயே உழன்று கொண்டிருப்பதால் மட்டுமே இவ்வளவு பெரிய கல்வி சாம்ராஜ்யத்தை நிர்மாணித்திருக்கிறார் என்று தோன்றியது. 

மதிய உணவுக்குப் பிறகு குழுவாக நிழற்படம் எடுக்க வேண்டும் என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். நிழற்படத்தைவிடவும் அவர் பேசியதை அசைபோடுவதிலேயே மனம் நிலைத்திருந்தது. எழுந்து செல்லவே இல்லை.

எத்தனையோ பேர் தொழில் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் புதிதாகத் தொழிலைத் தொடங்குகிறவர்கள் அத்தனை பேரும் வென்றுவிடுகிறார்களா என்ன? வெல்வதற்கு என ஏதோ ஒரு சூட்சமம் அல்லது சூத்திரம் இருக்கிறது. இல்லையா? தமது தொழிலை வெறுமனே பணம் சம்பாதிக்குமிடமாகப் பார்க்கிறவர்களால் அத்தகைய வெற்றியை ஒரு போதும் அடைய முடிவதில்லை. பணம் தன்னைத் துரத்த வைக்கும். எந்தவிதமான ஒட்டும் உறவுமின்றி அதன் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறவர்கள் அர்த்தமில்லாத ஒரு வேட்டையை நிகழ்த்தியதைப் போல ஓய்ந்து போவார்கள் அல்லது தாம் துரத்திச் சென்றதை அடைந்த பிறகு இன்னொன்றை துரத்தத் தொடங்கிவிடுவார்கள். வெறுமனே materialistic ஆன துரத்தல்தான் அது.

சந்தர்ப்பவசத்தால் அல்லது தாம் விரும்பிய ஒன்றைத் தொடங்கிய பிறகு அதனுடன் தமக்கு உருவாகும் காதலே காலகாலத்துக்கும் நிலைத்த புகழுடன் கூடிய வெற்றியைத் தருகிறது. அத்தொழிலின் மீதான தமது காதலைக் கண்டறிவதுதான் சூட்சமம். ஜி.விஸ்வநாதன் அந்த மாதிரியான ரோல்மாடல். கல்வி நிறுவனம் தொடங்கினோம், சம்பாதித்தோம் என்றில்லை; இன்றைக்கும் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கே முதலில் கல்லூரியின் முன்னாள் மாணவர்களைத்தான் சந்திக்கிறார். ஒரு கூட்டம் சேர்ந்துவிடுகிறது. பல ஊர்களில் முன்னாள் மாணவர்களின் வீடுகளில்தான் உண்கிறார். எத்தனை கல்வித்தந்தைகளுக்கு இது சாத்தியம்? கல்வி நிறுவனங்களைத் தொடங்குவது, வருமானம் பார்ப்பது தாண்டி காரை விட்டு கீழே இறங்காதவர்கள்தான் இங்கே அதிகம். 

ஜி.வி முன்னாள் மாணவர்கள் பெரும்பாலானவர்களை பெயர் சொல்லி அழைக்கிறார். அதுதான் பெரிய ஆச்சரியம்.

முன்பொருமுறை வி.ஐ.டி பற்றி பேசும் போது ‘காசு கொடுக்கிறதில்லையா? சும்மாவா படிக்க வெச்சாங்க’ என்று ஒருவர் விமர்சித்தார். காசு கொடுத்துதான் படித்தேன்; ஆனால் கொடுத்த காசுக்கு வஞ்சகமில்லாமல் உருமாற்றி வெளியில் அனுப்பினார்கள் என்று பதில் சொன்னேன். ஆயினும், அவர் கேட்ட கேள்வி அவ்வப்போது உறுத்திக் கொண்டேதான் இருக்கும். ஒரு பொருளுக்கான விலையைக் கொடுத்த பிறகும் ஏன் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைய வேண்டும்? நேற்றைய நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாகக் கூட- ‘இவர் வர்றாருன்னா எதுக்கு ஒவ்வொரு ஊர்லேயும் இவ்வளவு பேர் கூடுறாங்க’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன். 

கூட்டத்தில் சிலர் ‘என் அத்தனை வளர்ச்சிக்கும் நீங்கதான் சார் காரணம்’ என்று மனதார பேசினார்கள். படிப்பைத் தாண்டி எதையோ ஊன்றியிருக்காவிட்டால் சுட்டாலும் அப்படிப் பேசத் தோன்றாது. 

அய்யாவுதான் நினைவுக்கு வந்தான். வேமாண்டம்பாளையம் பள்ளிக்கூடத்தில் முதல் மாணவன் அவன். அவனுடைய அப்பா மரமேறிக் கொண்டிருக்கிறார். இவனது மதிப்பெண்ணைத் தெரிந்து ஏதோவொரு தனியார் கல்வி நிறுவனத்தினர் வீடு தேடி வந்துவிட்டார்கள். ‘எல்லாமே ஃப்ரீ’ என்று கொக்கி போட்டார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு விவரமில்லை. அய்யாவின் அண்ணனுக்கு அந்தக் கல்வி நிறுவனத்தில் சேர்க்க பெருவிருப்பம். சேர்த்துவிடும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். யதேட்சையாக அவர்களைச் சந்திக்க நேர்ந்து வி.ஐ.டியின் ‘ஸ்டார்ஸ்’திட்டம் பற்றிச் சொன்னேன். அத்திட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு பைசா செலவில்லை. அய்யாவு முயற்சித்தான். கிடைத்துவிட்டது. இப்பொழுது வி.ஐ.டியில் படித்துக் கொண்டிருக்கிறான். ஊருக்கு சென்று வரும் செலவு தவிர எதற்குமே காசு வாங்குவதில்லை. சில மாதங்களுக்கு முன்பாக அய்யாவுவைப் பார்த்தேன். ஆளே மாறியிருந்தான். இனி அவன் மேலேறிவிடுவான் என்று முழுமையாக நம்பத் தொடங்கினேன்.

இங்கே நம்மைச் சுற்றிச் சுற்றி ஏமாற்றுகிறவர்கள்தான் அதிகம். தமது உழைப்புக்கும் அதிகமான விலையை நிர்ணயித்துவிட்டு சிக்கியவுடன் ‘இனி எப்படி போனா எனக்கென்ன?’ என்கிற மனநிலை கொண்ட வியாபாரிகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கல்வி என்பது வியாபாரமில்லை என்று நம்புகிறவர்கள் அரிது. ஒருவன் தம்மைத் தேடி வந்துவிட்ட பிறகு ‘நம்மிடம் வந்துவிட்டான். இனி எல்லாக்காலத்திலும் இவனைக் கைவிடக் கூடாது’ என்று நினைக்கிற எண்ணம் ஜி.வி மாதிரியான ஒரு சிலருக்கு மட்டுமே உண்டு. அதனால்தான் உணர்வுப்பூர்வமான பிணைப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். கல்லூரி என்பது நான்கு வருடப் படிப்பு மட்டுமில்லை; அதன் பிறகும் கூட நீயும் நானும் ஒரே குடும்பம் என்று ஒவ்வொரு ஊராகச் சென்று புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் குடும்பம் குடும்பமாக முன்னாள் மாணவர்கள் வருகிறார்கள் என்று தோன்றியது. எண்பது வயதைக் கடந்த பிறகு எத்தனை பேர் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்? அப்படித்தான் ஜி.விஸ்வநாதனை நினைக்கும் போதெல்லாம் அந்தக் குறளும் நினைவுக்கு வந்துவிடுகிறது. 

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

தனியார் கல்வி என்றாலே நல்ல அபிப்ராயம் கிடையாது எனக்கு.
உங்கள் கட்டுரை அந்த எண்ணத்தை சலனப் படுத்தியுள்ளது.

Dr. K. Kalaiselvi said...

Salute Thiru. G. V. sir..

SPS@Sai pitchai Sadan said...

Super sir ..i was also there in the meeting..you have captured everything..& your contribution to the society is also amazing

Paramasivam said...

இதை படித்த பிறகு, திரு ஜிவி மேல் ஒரு தனி மரியாதை வந்து விட்டது