Nov 26, 2019

எங்கேயிருக்கிறது அப்படியொரு ஊர்?

வார இறுதியில் தொடங்கி நேற்று வரைக்கும் பல ஊர்களுக்கும் சென்று வந்தேன். பல ஊர்கள் என்றால் சில மாவட்டங்கள். தமிழகத்திலேயே பின் தங்கிய மாவட்டங்கள் என சிலவற்றை அடையாளம் கண்டறிந்து அவற்றில் மிகவும் பின் தங்கிய ஊர்களுக்கு சென்று பார்க்க வேண்டும் என்பதுதான் திட்டம். பின்தங்கிய என்ற சொல்லுக்கு வரையறை வேண்டுமல்லவா? அடிப்படை வசதிகளே எதுவுமில்லாத ஊர்; குடிநீர், மின்சாரம், சாக்கடை வசதிகள் என எதுவுமற்ற ஊர். அப்படியொரு கிராமம் இருக்கிறதா எனக் கண்டறிந்துவிட வேண்டும் என என்றுதான் கிளம்பினேன்.

இப்படியான ஊர் சுற்றலுக்கு வடக்கத்திக்காரர்தான் காரணம். என்னுடன் முன்பு ஒரே நிறுவனத்தில் பணியாற்றியவர். உத்தரப்பிரதேசம். கோவை வந்திருந்தார். பேச்சுவாக்கில் ‘உங்க மாநிலம் நல்லா இருக்குங்க’ என்றார். ‘அறுபதாண்டு காலமாகவே தொடர்ந்து முன்னேறி வரும் மாநிலம் எங்களுடையது’ என்று பெருமையடித்தேன். கல்வி, மின்சாரம், சுகாதாரம், சாலைவசதிகள் என இங்கே செயல்படுத்தப்பட்ட பல நீண்டகாலத் திட்டங்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக்கின்றன என்றேன். அது அவருக்கு சுள்ளென்று குத்தியிருக்க வேண்டும். 

‘நாம் நகரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்’ என்றார். 

‘இங்கே கிராமங்கள் கூட பெருமளவு வளர்ச்சியடைந்திருக்கின்றன’ என்ற போது ‘அடிப்படை வசதிகளே இல்லாத கிராமம் என ஒன்று கூடத் தமிழகத்தில் இருக்காது என நினைக்கிறீர்களா?’ என்றார்.  

‘இல்லை’ என்று உறுதியாகச் சொல்லவில்லை. எனக்கும் சந்தேகமாகத்தான் இருந்தது. தமிழகத்தில் பனிரெண்டாயிரத்து சொச்சம் ஊராட்சிகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஊராட்சியிலும் சராசரியாக நான்கைந்து குக்கிராமங்கள் இணைந்திருக்கும். அப்படியென்றால் ஐம்பதாயிரம் குக்கிராமங்களாவது இருக்க வேண்டும். ஐம்பதாயிரம் கிராமங்களில் எந்த வசதிகளுமற்ற ஒரு கிராமம் கூடவா இருக்காது? 

ஃபேஸ்புக்கில் அப்படியொரு கேள்வியைக் கேட்ட போது பலரும் பள்ளிகள் இல்லை, குடிநீர் வசதி இல்லை என்று சொன்னார்களே தவிர முழுமையான வசதிகளற்ற கிராமம் என்று எதையும் சுட்டிக்காட்டவில்லை. ஒருவேளை அப்படியொரு கிராமம் ஏதேனுமொரு மூலையிலிருந்தால் அங்கேயிருப்பவர்களுக்கு ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் கூட பேரதிசயம்தான். அவர்கள் இங்கே வந்து ‘எங்கள் ஊரில் எதுவுமில்லை’ எனச் சொல்ல வாய்ப்பில்லை. தேடினால் கிடைத்துவிடக் கூடும். அதனால்தான் கிளம்பிச் சென்றேன்.

தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி என்று பயணிக்க வேண்டியிருந்தது. சில ஊர்களில் நண்பர்கள் கிடைத்தார்கள். சில ஊர்களில் இருசக்கர வாகனம் கிடைத்தது. சில ஊர்களில் டவுன் பஸ்தான். உதாரணமாக ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை அங்கேயிருந்து டவுன் பஸ் பிடித்து வனப்பகுதிக்குள் சென்றால் இரவு ஒன்பதரை மணிக்கு கடைசிப் பேருந்து என்றார்கள். அதை விட்டுவிட்டால் அங்கே படுத்துக் கொள்ளக் கூட வசதியில்லை. யார் வீட்டுக் கதவைத் தட்டுவது?

பால் கறந்து விற்பனை செய்ய வழியில்லாத கிராமங்களில் கூட மேய்ச்சல் மாதிரியான தொழிலைச் செய்து கொண்டிருக்கிறார்கள். வருமானமே இல்லாமல் இதை ஏன் மேய்க்கிறார்கள் என்றுதான் முதலில் தோன்றியது. பால் கறந்து அவர்களே குடிக்கிறார்கள். தயிர் நிறைய சேர்த்துக் கொள்கிறார்கள். மிச்சத்தை கன்றுக்குட்டிக்குக் கொடுக்கிறார்கள். மாடுகளை வேறு ஊர்களுக்கு ஓட்டிச் சென்று சந்தையில் விற்று பணத்தை வாங்கி வருகிறார்கள். மளிகைக் கடையில் பீடி, தீப்பெட்டி தவிர எதுவுமில்லை.‘ஒரு ரூபாய் கூட கையில் இல்லாம வாரம் பூரா ஓட்டிடுவோம்’ என்று ஒரு இளைஞன் சொன்னான். பைக் வைத்திருக்கிறார்கள். பெட்ரோலும் டாஸ்மாக் சரக்கும் கள்ளச் சந்தையில் கிடைக்கிறது. இப்படி எழுதிக் கொண்டே போகலாம். 

பல ஊர்களிலிருந்து அவசர அவசரமாகத் திரும்பி வர வேண்டியிருந்தது. குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு பேருந்து இருக்காது, சாலையில் வனவிலங்கு குறுக்கே வரும், இருளில் வண்டி ஓட்டுவது சிரமம் என வெவ்வேறு காரணங்கள். வந்துவிட்டேன். 

இப்படியான தேடல் குறித்து திட்டமிட்ட போது சில நண்பர்கள் ‘நானும் வர்றேன்’ என்றார்கள். அவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு செல்லவே விரும்புகிறேன். ஆனால் இத்தகைய பயணங்களில் தனிமை வேறொரு அனுபவத்தைக் கொடுக்கிறது. வனப்பகுதிக்குள் செல்போன் வசதி இல்லாமல் டவுன்பஸ்ஸில் பயணிக்கும் போது மனம் எங்கெங்கோ அலைந்து திரிந்தது.  கிராமங்களில் இந்தியாவின் ஆன்மாவை கிராமங்களில் கண்டறிய முடியும் என்று நிறையப் பேச்சாளர்கள் மேடையில் முழங்கியிருக்கிறார்கள். பல எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் எழுதியிருக்கிறார்கள். தமிழகத்தின் ஆன்மாவைக் கண்டறிந்துவிடுவோம் என்ற நம்பிக்கையிலேயே பேருந்தில் அமர்ந்திருந்தேன். அதனை சொற்களால் வர்ணிக்க முடியுமா எனத் தெரியவில்லை. 

முதற்கட்ட பயணத்தில் எவ்வளவு தூரம் பயணித்தாலும் அங்கேயும் கூட மின்சாரம் இருக்கிறது. கிணற்றிலிருந்து நீர் எடுத்து ஊருக்கு விநியோகிக்கிறார்கள். ஓரளவுக்கேனும் சாலை வசதிகள் இருக்கின்றன. இந்த வருடம் பரவலாக மழை பெய்து வறட்சியற்று இருக்கின்றன. பள்ளிக்கூடங்கள் அருகாமையில் இருக்கிறது. ஆக முழுமையாகப் பின்தங்கிய கிராமத்தைக் கண்டறிந்துவிட முடியும் என்கிற முயற்சியில் இப்போதைக்கு தோற்றிருக்கிறேன். 

நண்பரொருவர் தருமபுரியில் மின்வாரியத்தில் பணியாற்றுகிறார். ‘கரண்ட்டே இல்லாத கிராமம் ஏதாச்சும் உங்க ஏரியாவில் இருக்கா?’ என்று கேட்டால் ‘எனக்குத் தெரிஞ்சு இல்ல’ என்றார். உண்மையிலேயே அந்த விதத்தில் தமிழகம் மிக முன்னேறிய மாநிலம்தான். 




விழுப்புரம் பகுதியில் இருளர் குடியிருப்புகள், திருவண்ணாமலை ஜவ்வாது மலையோர கிராமங்கள் போன்று சிலவற்றைக் குறிப்பிட்டு அங்கேயெல்லாம் வசதிகள் இல்லை; நாகையில் அப்படியான கிராமங்கள் இருக்கின்றன என்றெல்லாம் சிலர் சொன்னார்கள். குடியிருப்புகள் அப்படி இருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் பல தரப்பு மக்களும் கலந்து வாழும் கிராமம் அப்படி இருக்கக் கூடுமா எனத் தெரியவில்லை.  தமிழகத்தில் இன்னமும் பயணிக்க வேண்டியதும் பார்க்க வேண்டியதும் நிறைய கிராமங்கள் இருக்கின்றன எனத் தெரியும். ஆனால் இப்போதைக்கு எதுவுமிருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

தமிழகத்தின் பின் தங்கிய மாவட்டங்கள் என்றால் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையைச் சொல்லலாம். அங்கே பயணித்த வரையில் எந்த அடிப்படை வசதியுமே இல்லாத கிராமம் என எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ள கிராமங்கள் நிறைய இருக்கின்றன. உதாரணமாக நல்ல சாலை வசதிகள் இல்லை. மருத்துவ, சுகாதார வசதிகள் இல்லை என்று தனித்தனி பிரச்சினைகள் உள்ள கிராமங்களைத் தாண்டி வந்தேன். ஆனால் அனைத்துப் பிரச்சினைகளும் உள்ள கிராமத்தைக் கண்டறிய முடியவில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல இன்னமும் அலைய வேண்டியிருக்கிறதுதான். அலைவேன்.

யார் வேண்டுமானாலும் என்ன விமர்சனம் வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும். கடந்த அறுபது எழுபதாண்டுகளில் தமிழகம் கண்டிருக்கும் வளர்ச்சி அற்புதமானது. அதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடிகிறது.

ஒருவேளை அப்படியான கிராமம் ஏதேனும் இருப்பின் சொல்லுங்கள். பார்த்துவிடலாம். 

9 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

#ஒருவேளை அப்படியான கிராமம் ஏதேனும் இருப்பின் சொல்லுங்கள். பார்த்துவிடலாம்#
அதன் பிறகு என்ன செய்யப்போகிறீர்கள், மணி

சேக்காளி said...

செயல் வீரன்

Asok said...

Glad to know our villages are upgraded some level. If we travel to other countries, villages are so much improved than Tamilnadu, which means we are so much corrupted individually. Actually very much disappointment even though our current generation had enough education but the growth ratio is so much slow. Younger generation should think more about society and need some more sacrifices to make it happen. Mani is an example for that, we people reading this site are also showing more interest and more awareness. Still we need more and more awareness to take our country to next level without any selfishness.

Sankar said...

"யார் வேண்டுமானாலும் என்ன விமர்சனம் வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும். கடந்த அறுபது எழுபதாண்டுகளில் தமிழகம் கண்டிருக்கும் வளர்ச்சி அற்புதமானது. அதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடிகிறது. மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ள கிராமங்கள் நிறைய இருக்கின்றன. உதாரணமாக நல்ல சாலை வசதிகள் இல்லை. மருத்துவ, சுகாதார வசதிகள் இல்லை என்று தனித்தனி பிரச்சினைகள் உள்ள கிராமங்களைத் தாண்டி வரலாம். ஆனால் அனைத்துப் பிரச்சினைகளும் உள்ள கிராமத்தைக் கண்டறிய முடியும் என்கிற நம்பிக்கையில்லை. தமிழகம் அற்புதமான மாநிலம்தான்!" - Happy to see this and know about this. But I am also amazed at the growth Singapore has made in last 60 years (after its independence in 1965). I know both are completely different perspectives/stories, not easily comparable in terms of size and context, and I am not trying to oppose your valid perspective; but don't know why this thought comes to my mind at this time and bothering me.

kkkk said...

இதனை பார்க்கும் போது புரட்சியாளர் சே குவரா motor cycle பயணம் தான், என் கண் முன் வந்து போகிறது.

Paramasivam said...

நல்ல செய்தி கேட்ட மகிழ்ச்சி. நான் மதுரைக்கு தெற்கே சென்றதில்லை. வட தமிழகத்தில் நீங்கள் வரையறுத்த கிராம்ம் இல்லை என கூற முடியும்.

Dr. K. Kalaiselvi said...

I went hills side remote places such as makkampalayam, kundri and Bargur. There is no transport facility in makkampalayam and kundri. Without STF permission and their support we cant go there..

amma said...

Sir,
Vellaikoil near kodaikanal.
some yrs back No electricity and bus facility.we went by trecking.
Now i dont know the situation.If any contacts in Kodaikanal pls enquire.

kasivel said...

Understood that your soul is searching for VILLAGE ADOPTION by your decided Bench mark. Sure you will get it soon. Advance congrats.