Nov 12, 2019

தொழில் பரவாயில்லையா?

சமீபமாக தொழிற்துறை சார்ந்த நண்பர்களிடம் ‘பிஸினஸ் பரவாயில்லையா’ என்று கேட்பதையே விட்டுவிட்டேன். முன்பெல்லாம் நண்பர்களைச் சந்திக்கும் போது இந்தக் கேள்விதான் முதலில் எழும். அந்தக் கேள்வியில் ஒரு சுயநலம் உண்டு. ஐடி துறையில் எப்பொழுதுமே ஒரு நிலையாமை உண்டு. ஒருவேளை ஐடி துறை காலை வாரினால் என்ன செய்யலாம் என்று மண்டைக்குள் கணக்குப் ஓடிக்  கொண்டேயிருக்கும். அதனால்தான் அந்தக் கேள்வி. அவர்களின் துறை சார்ந்த சில நுணுக்கங்களைக் கேட்பேன். அவர்களின் பதில்கள் வழியாக ‘இது நமக்கும் கூட ஒத்து வரும்’ என்கிற மாதிரியான எண்ணம் வரும் போது மனதுக்கு கொஞ்சம் இதமாக இருக்கும். அவர்களது துறையில் கூட எதையாவது செய்து கொள்ளலாம் என்கிற நம்பிக்கை அது.

கோவையில் ஆவாரம்பாளையம் என்றொரு பகுதி பட்டறை தொழிலுக்குப் பிரசித்தம். நிறைய உபரிப் பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு கூடங்கள் அதிகம். அங்கே தம் நிறுவனத்தை நடத்தி வந்த ஒரு நண்பரைச் சந்தித்தேன். தெரியாத்தனமாக வழக்கம் போல கேள்வியை எழுப்பினேன். ‘மூடிவிட்டேன்’ என்றார். திக்கென்றிருந்தது. ‘வருமானத்துக்கு என்ன செய்யறீங்க?’ என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால் கேட்கத் தயக்கமாக இருந்தது. இதை விட அசிங்கமான கேள்வி ஒன்று இருக்க முடியுமா? ஒரு கணம் என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தேன். ‘கடன் மேல கடன் ஆகுதுங்க...சுமையைச் சேர்த்துட்டே போறதைவிட இதுதான் நல்லது’ என்றார். நெஞ்சுக்குள் ஏதோ அடைத்துக் கொண்டது. அவருக்கு ஒரு பெண் குழந்தை. அடுத்த வருடம் பள்ளிக்கூடம் மாற்றப் போவதாகச் சொன்னார். அதிகம் பேசிக் கொள்ளாமல் எழுந்து வந்துவிட்டேன். இதற்கு முன்பாகச் சந்தித்த போது சிரமமாக இருப்பதாகச் சொல்லியிருந்தார். ஆனால் மூடிவிடுவார் என்று நினைக்கவில்லை.

மிகைப்படுத்திச் சொல்லவில்லை- கடந்த ஏழெட்டு மாதங்களாகவே இப்படியான மனிதர்களைச் சந்திக்க நேர்கிறது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் பல மூடப்பட்டுவிட்டன. நெசவு, அத்துறை சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்தவர்கள், பெரு நிறுவனங்களுக்கு சிறு சிறு பணிகளைச் செய்து தரும் பட்டறைகள் என பல்வேறு தொழிற்துறையினர் இப்பொழுது தொழிலை முழுவதுமாகக் கைவிட்டுவிட்டார்கள். கட்டுமானத் தொழில் முடங்கியிருக்கிறது. அதைச் செய்து கொண்டிருந்தவர்களும் திணறுகிறார்கள். இப்படி பெரும்பாலானவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த பல தொழில்களை வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாமே அடி வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதை விலாவாரியாகப் பேசினால் அது ஒருவிதமான எதிர்மறையான மனநிலையை வாசிக்கிறவர்களுக்கும் சேர்த்து உருவாக்கிவிடக் கூடும்.

உண்மையிலேயே எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை. பெரும்பாலான காலங்களில் சிறப்பாக இருக்கும் உணவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நண்பர்கள் கூட ‘முன்ன மாதிரி இல்லைங்க’ என்கிறார்கள். முன்பு வாரம் ஒரு முறை வெளியில் உணவு உண்டவர்கள் கூட முடிந்தவரை வீட்டிலேயே சாப்பிடலாம் என்று நினைக்கத் தொடங்கியிருக்கக் கூடும். சுற்றுலாத்துறை எப்படியிருக்கிறது அத்துறை சார்ந்த நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள். எல்லோரிடமும் தம் சுய பொருளாதாரம் குறித்தான பய உணர்வு பீடித்துக் கொண்டிருக்கிறது. நாளை என்பது பற்றிய நம்பிக்கை மெல்ல மெல்ல உதிர்ந்து கொண்டிருக்கிறது. செலவு செய்யத் தயங்குகிறார்கள். அது அடுக்கி வைத்த சீட்டுக்கட்டு போல ஒவ்வொன்றையும் வீழ்த்திக் கொண்டிருக்கிறது.

ஒருவேளை தமிழகத்தில் நிலவும் மத்திய அரசின் மீதான எதிர்மனநிலையின் காரணமாக இப்படியொரு சூழல் இருக்கிறதோ என்ற சிறு நம்பிக்கை இருந்து கொண்டிருந்தது. ஆனால் தொழில் செய்கிறவர்களில் பாஸிட்டிவாக பேசுகிற எந்த மனிதரையும் சந்திக்க முடியவில்லை என்பதுதான் திகிலூட்டுகிறது. என்ன பிரச்சினை என்று யாரிடம் கேட்டாலும் ‘பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என ஒவ்வொரு அடியாக வீழ்த்திவிட்டது’ என்கிறார்கள். இன்னொரு நண்பர் சில மாதங்களுக்கு முன்பாக ‘நேர்மையாகச் செய்தால் ஜிஎஸ்டி நல்ல பலனையே தரும்’ என்று சொல்லியிருந்தார். அப்பொழுது அதை நம்பவும் செய்தேன். இப்பொழுது அப்படிச் சொல்லுகிற ஆட்களைக் கூடத் தேடிப் பிடிக்க முடிவதில்லை. தொழில்களைப் பொறுத்த வரைக்கும் ஒரு கயிற்றில் ஏற்கனவே உள்ள சிண்டுக்கு மேல் புதுப் புது சிண்டுகளாக விழுவதைப் போல நிறையச் சிக்கல்கள் விழுந்துவிட்டன என்றுதான் தெரிகிறது. துரதிர்ஷ்டம் என்னவென்றால் அனைத்து சிக்கல்களும் சிறு, குறு தொழில்களின் கழுத்தைத்தான் முதலில் நெரிக்கின்றன.

இன்றைக்கு பெரும்பாலான செய்தித்தாள்களில் முதல் பக்கச் செய்தியே கடந்த எட்டாண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழிற்துறை வீழ்ந்துவிட்டது என்பதுதான். முழுமையான இருளுக்குள் ஏதோவொரு தருணத்தில் வெளிச்சம் தென்பட்டுவிடும் என எவ்வளவு தூரம்தான் ஓடிக் கொண்டேயிருக்க முடியும்? யார் மீதும் குறை சொல்ல வேண்டும் என்பது நோக்கமில்லை. நீங்கள் சுய தொழில் செய்கிறவர்களாக இருப்பின் அல்லது சுயதொழில் செய்யும் நண்பர்களைக் கொண்டவர்களாக இருப்பின் ‘நீங்கள் நினைக்கிற மாதிரி எதுவுமில்லை’ என்று தர்க்கப்பூர்வமான வாதங்களுடன் சில வரிகளை எழுதுங்கள். அப்படியான சொற்களுக்காக மனம் காத்துக் கிடக்கிறது. உண்மையிலேயே அப்படியான சொற்களை எதிர்பார்க்கிறேன்.

ஏன் இவ்வளவு சிறு தொழில்கள் மூடப்படுகின்றன? ஏன் சுய தொழில் செய்கிறவர்கள் இப்படித் திணறிக் கொண்டிருக்கிறார்கள்? வேலையிழப்பு பற்றிய சரியான தரவுகள் நம்மிடம் இருக்கின்றனவா என்றெல்லாம் கேள்விகள் இருக்கின்றன. ஆனால் ஏதேதோ அர்த்தமற்ற பிரச்சினைகளில் கவனத்தை பெருங்கூட்டமாகச் செலுத்தி தற்காலிக ஆசுவாசத்தை அடைந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய பயத்தையும் கவலையையும் மறக்கடிக்கவே இத்தகைய சில்லரை பிரச்சினைகள் அவசியமானவை என்றும் கூடத் தோன்றுகிறது.

எப்படியிருப்பினும் எதிர்மறை சிந்தனையிலிருந்து மக்கள் வெளியில் வருவது மிக அவசியம். ஆனால் அதற்கான வாய்ப்புகளை அரசாங்கம்தான் உருவாக்கித் தர வேண்டும். இவையெல்லாம் எப்பொழுது தெளிவாகும் என்ற பிடிமானமே இல்லாமல்தான் இருக்கிறது. வேலை, பணி, வருமானம் ஆகியவற்றில் எதிர்மறையான சிந்தனைகளைக் கொண்டிருப்பது ஒருவிதமான மன அழுத்தத்தையே தரும். நம்பிக்கை முற்றாக அறுபட்டுக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று குழம்புகிற போதெல்லாம் போகிற வரைக்கும் போய்க் கொண்டிருக்கட்டும், தடை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்கிறேன். அதைத் தவிர வேறு என்ன செய்துவிட முடியும்?

9 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

// வாய்ப்புகளை அரசாங்கம்தான் உருவாக்கித் தர வேண்டும். //
அரசர் குளத்தை வெட்டினார். கரையில் மரத்தை நட்டார் ங்கறெதெல்லாம் வேலை வாய்ப்பு காக தான்.
இப்போது அது போன்ற வேலைகளை தேவையற்றவை என ஒதுக்கி செய்யாமல் விட்டு விடுகிறார்கள்.
ஒருத்தனோட செலவு இன்னொருத்தனோட வருமானம்.

Asok said...

I would like to share my experience about small business, we are moving to new env, but unfortunately business owners doesnt have knowledge about the changes. The reason is
1. Epensive labor
2. Labor cheating in terms of quality
3. 100% open transactions.

If you want to overcome above issue, you have to use the technology, some level of automation, monitoring the people, enough computer operation knowledge for accounts/business transactions. Unfortunately, our small business owners doesnot have that knowledge and dont like/want to upgrade them.

NAGARATHAN said...

முதலில் அரசு பிரச்சினை இருக்கிறதென ஒத்துக் கொள்ள வேண்டும். அதற்கப்புறம்தான் மரம் நடுவதும், குளம் வெட்டுவதும். ஆனால், சினிமா நன்றாக வசூலித்தது; அதனால் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது என்னும் மமேதைகளை வைத்துக் கொண்டு......

Sathiya said...

Ashok sir, Hotels, Rice mills, lathe shops cannot be automated, Va Ma is talking regarding those people, Example that i gave are few but there are many.

M.Selvaraj said...

சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு என் தம்பியிடம் போனில் பேசிக்கொண்டிருக்கும்போது நான் கேட்ட ஒரு கேள்விக்கு என் தம்பியின் பதில் 'இப்போ மக்களிடம் பணப்புழக்கம் இல்லை மக்கள் செலவு செய்ய தயங்குகிறார்கள் என்று" எனக்கு உண்மையாகவே அவனுடைய அந்த பதில் ஆச்சரியமாக இருந்தது. அவன் இந்த மாதிரி பேசுவபனே கிடையாது. உண்மையை சொன்னால் பத்திரிகை தொலைக்காட்சி செய்திகளையே கவனிப்பவன் அல்ல. இந்த கட்டுரையை வாசித்தவுடன் அவன் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது.

Yogi said...

Asok, not every problem in the world can be solved by automation or computers or snazzy apps. snooping in employees and blaming employees for wanting more percentage of the profit is not really the answer to anything. No body wants to be slaves anymore.

Asok said...

I am not talking about 100% automation, like if you have to take things to upstairs (2nd floor or 3rd floor), you have to use lyft/elevator. If you look for the people, you wont get it or you have to close your business. And monitoring their work using Camera,if you have big area or multiple places, better use Camera etc. you can use mobile mover for rice mills, people does not want to do any hard work. Small lathe shops are closed becos so many machinery to make those materials/product. Machinery/automation are big time implementation all over the place. YES, Small business owners cannot afford or doesnot know where and how to use it. Moreover Labor is very expensive now, so we have to look for some kind of machinery to make labors life easy, then only you can do business. This is my thought based on our business, I see many people leaving from this business because of the reasons which I mentioned earlier.

சேக்காளி said...

//Labor is very expensive now//
ஆனாலும் பீ அள்ளுவதற்கும் ,சாக்கடை சுத்தம் செய்யவும் அதிக கூலி கொடுக்க நாம் தயங்குவதே இல்லை.

Asok said...

Demand is based on your need. We have so much people for white color job and not much people for blue color jobs. Thats why labor is expensive. I do not want to blame about the labor and we have to accept the demand and plan & work it out. Every labor has to be treated as a owner, that could solve the issue which is not easy and we are in transition period. People are getting more smart and All developed states/countries are facing this issue.