‘ஒரு கதை சொல்லுங்க சார்’
முனியப்பனிடம் அப்படி யாருமே சார் போட்டு பேசியதில்லை. வாய்க்கால் ஓரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவனைப் பார்க்க வந்திருந்த கவினுக்கு அப்படித்தான் பேச வந்தது. முனியப்பனை அவன் இவன் என்று எழுதக் கூடாது. அவருடைய வயது அவருக்கே தெரியாது. ஆனால் ஊரில் பொடிசுகள் கூட அப்படித்தான்- போடா வாடா என்று அழைப்பார்கள். முனியப்பன் எதையும் கண்டுகொள்வதில்லை. பள்ளத்து தோட்டத்து பண்ணாடி வீட்டில் பரம்பரை பரம்பரையாக பண்ணையத்தில் இருக்கிறார்.
முனியப்பனுக்கு கல்யாணம் இல்லை. வீட்டில் இருந்தவர்களுக்கு வரிசையாகச் செய்து வைத்துவிட்டு முனியப்பனை விட்டுவிட்டார்கள்.
‘என்ன கதை சாமி?’ என்றார்.
கவினுக்கு முனியப்பன் பற்றி ஒரு கல்லூரி பேராசிரியர் சொல்லி அனுப்பியிருந்தார். நெடு நெடுவென இருப்பார் எனவும், தலையில் உருமால் கட்டிக் கொண்டு புண்ணாக்கு கார ஆயா குடிசைக்குப் பக்கத்தில் எருமை மேய்த்துக் கொண்டிருப்பார் என்பதும்தான் அடையாளம். கவின் வந்திருந்த சமயத்தில் அங்கே முனியப்பனைத் தவிர யாருமில்லை. கண்டுபிடிப்பதிலும் பெரிய சிரமமில்லை.
‘என்ன கதை வேணும்ன்னாலும் சொல்லுங்க’
கவினுக்கு சில கதைகள் தேவையானதாக இருந்தது. வித்தியாசமான கதைகள். அவன் சினிமாவுக்கு முயற்சித்துக் கொண்டிருந்தான். ஒற்றை வரியைப் பிடித்துவிட்டால் வளர்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தான். அப்படித்தான் கல்லூரி பேராசிரியரிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
‘கதை சொல்லுறதுல்ல முனியப்பனை அடிச்சுக்க முடியாது’ என்றார் பேராசிரியர்.
முனியப்பன் சொல்லுகிற கதைகள் உண்மையா, பொய்யா என்றெல்லாம் தெரியாது. அந்தி சாயும் நேரம் தொடங்கி விடிய விடிய அவர் சொல்லுகிற கதைகள் பிரசித்தம். அண்ணமார் கதை, நளமகராஜா கதை, அரிச்சந்திர புராணம் என்றெல்லாம் தொடங்கினால் மாதக் கணக்கில் கதை நகரும். ஆடு மாடுகளைப் பட்டியில் அடைத்துவிட்டு உணவை முடித்துக் கொண்டு ஊர் களத்தில் ஒன்று கூடுவார்கள். வெற்றிலையை மென்று குதப்பி கொஞ்சத்தை விழுங்கிக் கொண்டு, மீதியை உமிழ்ந்துவிட்டு கதையை ஆரம்பிப்பார் முனியப்பன். அதிகாலை வரை நீளும். மறுபடியும் அடுத்த நாள் விட்டதிலிருந்து நீளும்.
‘இப்போவெல்லாம் யாரு கதை கேட்குறா சொல்லு சாமி’ என்று கவினிடம் கேட்டார் முனியப்பன்.
தொலைக்காட்சி அதன் பிறகு செல்போன் என ஒவ்வொன்றாக வந்த பிறகு கதை கேட்கிற ஆர்வம் வற்றிவிட்டதாக முனியப்பன் நம்பினார். அது பெரும்பாலானவர்களின் நம்பிக்கை மட்டும்தான் என்பது கவினின் நம்பிக்கை. ஆனால் இன்னமும் நல்ல கதைகளைக் கேட்க எங்கேயாவது யாராவது இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள் என்று கவின் நினைத்துக் கொண்டான். பவா செல்லதுரை கதை சொல்வதை யூடியூப் வீடியோக்கள் வழியாகக் கேட்கிறவர்கள் இருந்து கொண்டேதானே இருக்கிறார்கள் என்றும் அவனுக்குள் அந்தக் கணத்தில் தோன்றியது. தி.ஜாவின் பரதேசி வந்தான் கதையை பவா சொல்வதை முந்தாநாள்தான் கேட்டிருந்தான். இருபத்தைந்தாயிரம் பேருக்கும் மேல் அந்த வீடியோவைப் பார்த்திருந்தார்கள்.
‘உங்க கதையைச் சொல்லுங்க’
கவின் இப்படிக் கேட்டதும் முனியப்பனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. அங்கேயிருந்த பிள்ளையார் திண்டுக்கு முன்பாக கீழாக அமர்ந்து கொண்டார். தம் கதையைச் சொல்லச் சொல்லி யாராவது இதுவரை கேட்டிருக்கிறார்களா என்று யோசித்துப் பார்த்தார். யாருமே கேட்டதாக நினைவில் இல்லை. ஆனால் அப்படியொருத்தன் கேட்கும் போது சொல்வதற்கு தம்மிடம் என்ன கதை இருக்கிறது என்று தமக்குள்ளாகவே கேட்டுக் கொண்டார்.
‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சாமி’
முனியப்பன் உடலில் தெம்பு இருக்கும் வரை தோட்டங்காட்டு வேலைகளைச் செய்தார். இப்பொழுது ஆய்ந்து போய்விட்டார். நான்கைந்து எருமைகளையும் இரண்டு மூன்று மாடுகளையும் மேய்ப்பதே கூட பெரிய சிரமமாக இருக்கிறது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே மாதமானால் அநாதைப் பணம் வந்துவிடுகிறது. ஒத்தை ஆளுக்கு அதுவே போதும்தான். ஆனால் குடிசையில் படுத்துக் கிடக்கவும் மனம் ஒப்பவில்லை. விடிந்தும் விடியாமலும் எழுந்து வந்துவிடுகிறார்.
‘நீ போய் எங்கேயாச்சும் உழுந்துடாத’
பண்ணாடிச்சி வாரம் இரண்டு மூன்று முறையாவது இதைச் சொல்லிவிடுகிறார். முனியப்பன் கேட்பதாக இல்லை. ஒருவேளை தடுமாறி விழுந்தால் சாயந்திரம் வரைக்கும் யாரும் வந்து பார்க்கப் போவதில்லை. ஆளைக் காணவில்லை என்று பண்ணாடி அனுப்பி வைக்கும் ஆள் தேடி வரும் போது ரத்தம் சுண்டியிருக்கும் என்பது முனியப்பனுக்கும் தெரியும். எப்படியும் போகப் போற உயிர்தான். குடிசைக்குள் கிடந்தால் நாற்றம் வரும் வரைக்கும் கேட்க நாதியில்லை. இதுவாவது ஒரு நாளில் கண்டுபிடித்துவிடுவார்கள்.
‘ஊர்ல ஒரு அம்மிணி இருந்துச்சு...அந்தக் கதையைச் சொல்லுறேன்’
கவினுக்கு அது ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது. ஆனால் குறுக்கே எதையும் கேட்டுவிடக் கூடாது என்று முடிவு செய்து வைத்திருந்தான். அது கதை சொல்லுகிறவரின் போக்கை மாற்றிவிடக் கூடும் என்பதால் வெறும் உம் கொட்டினான்.
‘அவங்கப்பனுக்கு ஆறாவதா பொறந்துச்சு. ஆறும் பொட்டையா போயிடுச்சுன்னு வெசனம்ன்னா வெசனம்....’
காதல் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்று கவின் நினைத்துக் கொண்டான். ஏனோ அந்தக் கணத்தில் அவனுக்கு அப்படித்தான் தோன்றியது. ஒருவேளை இந்தக் கிழவனே கூட அந்தப் பெண்ணைக் காதலித்திருக்கக் கூடும். ஆனால் அதை ஒத்துக் கொள்வாரா என்று தெரியவில்லை.
பெயரற்றவள் வயதுக்கு வந்த போது வீட்டில் மூன்று பெண்களுக்குத் திருமணம் ஆகாமல் இருந்தது. சொத்து எதுவுமற்ற அப்பன் திணறத் தொடங்கியிருந்தான். முதல் மூன்று பெண்களுக்கு ஆளுக்கு ஏழெட்டு பவுன் நகை போட்டு அனுப்பி வைத்திருந்தான். முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்பு நடந்த கதை போலத்தான் தெரிந்தது. எட்டாம் வகுப்போடு பள்ளியை விட்டு நின்று வயல் வேலைக்குச் செல்லத் தொடங்கியிருந்தாள் பெயரற்றவள்.
‘அவ ஒவ்வொரு நாளும் ஜொலிச்சுட்டு இருந்தா..’
அவர் அப்படிச் சொன்னது கவினை சிலிர்க்கச் செய்யவில்லை. ஒருவேளை யாராவது அவளை வன்புணர்ந்து கொன்றிருப்பார்களோ என சந்தேகப்பட்டான். ஆனால் கதை கேட்கும் போது இப்படியெல்லாம் மனம் அலைவுறாமல் ஒரு கிடையில் நிற்க வேண்டும். ஆனால் கவினுக்கு சாத்தியமாகவில்லை. கிழவனால் தன் மனதை ஒருமுகப்படுத்திவிட முடியும் என்கிற நம்பிக்கை அவனுக்கு இல்லை.
‘நீ நினைக்கிற மாதிரி காதல் கதையும் இல்லை...அவளை ஒருத்தனும் கெடுக்கவும் இல்ல...எந்திரிச்சு போ’
ஓங்கி அறைந்தது போல இருந்தது கவினுக்கு. அவரது கண்ணைப் பார்த்தான். முனியப்பன் முகத்தை எங்கேயோ திருப்பிக் கொண்டார். அதற்கு மேல் அவர் பேசுவாரா என்று தெரியவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தான். முனியப்பன் சொல்ல வந்த கதை கவினுக்கு இனிமேல் தெரியாமலே போய்விடக் கூடும். ஆனால் ஆர்வமாக இருக்கும் உங்களை அப்படி விட்டுவிட முடியாது. கதை இதுதான்.
பெயரற்றவளின் பெயர் சித்ரா. ஜொலிக்கிற சிலைதான். பாவாடை தாவணியிலிருந்து பெரும்பாலானவர்கள் கூச்சத்தோடு சுடிதாருக்கு மெல்ல மாறிக் கொண்டிருந்த காலத்தில் அவள் பாவாடை தாவணியிலேயே சுற்றிக் கொண்டிருந்தாள். வயல் வேலையை முடித்துவிட்டு பாவாடை ஜாக்கட்டோடு வாய்க்காலில் குளித்து தாவணியை நீரில் கசக்கிப் பிழிந்துவிட்டு மேலே சுற்றும் போது அது அங்கங்களுடன் ஒட்டிக் கிடக்கும். அப்பொழுது அவளை முனியப்பன் பார்த்திருக்கிறார். எந்த ஆணையும் திணறச் செய்துவிடுகிற தருணங்கள் அவை. துணி ஓரளவுக்கு காயும் வரை கரையிலேயே நின்று கொள்வாள். முனியப்பனின் இளமையை சித்ராதான் கரைத்துக் கொண்டிருந்தாள்.
இன்னமும் மூன்று பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற பாரத்திலேயே சித்ராவின் அப்பன் போய்ச் சேர்ந்த பிறகு அத்தனை சுமையும் சித்ராவின் அம்மா தலையில் விடிந்தது.
நான்கு பெண்களும் வேலைக்குச் சென்றார்கள். அதில் ஒருத்தி திருப்பூரில் மில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த சக்திவேலுடன் ஓடிப் போய்விட்டாள். அதுவொரு தீபாவளி நாள். அவன் போனஸ் வாங்கி வந்திருந்தான். இதை வைத்துக் கொண்டு எங்கேயாவது போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று அவளிடம் சொன்னதை அவள் நம்பினாள். விடிகாலையில் பண்ணாடி வீட்டில் முதல் பட்டாசுச் சத்தம் கேட்ட போது சித்ராவின் வீட்டில் ஒரு ஆள் குறைந்திருந்தது. தொலையட்டும் சனியன் என்று கரித்துக் கொட்டினாலும் அம்மாவுக்கு அது ஆசுவாசமாக இருந்தது. இன்னமும் இரண்டு பெண்கள்தான். எப்படியும் கட்டிக் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. நான்கைந்து நாட்களுக்குப் பிறகு மூவரும் வழக்கம் போல வயல் வேலைக்குச் செல்லத் தொடங்கினார்கள்.
அடுத்த இருவரையும் எவனாவது நோட்டம் விடக் கூடும் என அம்மா கருதினாள். ஆனால் அடுத்த மூன்றாவது மாதத்தில் திடீரென சித்ராவால் படுக்கையை விட்டு எழ முடியவில்லை. முந்தின நாள் வேலைக்குச் சென்றுவிட்டு வந்து படுத்தவள் எழ முயற்சித்த போது சாத்தியமாகவில்லை. ஆரம்பத்தில் அதன் வீரியம் புரியவில்லை. ஆனால் அவளது இடுப்புக் கீழாக துளியும் அசைவில்லை. ஒவ்வொரு நாளும் சித்ரா தலையை அசைக்காமல் அழுது கொண்டிருந்தாள். கோவில் சிலை கிடப்பது போலக் கிடந்தவளை நாட்டு வைத்தியர்களை அழைத்து வந்து பார்த்தார்கள். எண்ணெயைத் தடவி, பச்சிலையைப் பூசி எனப் பார்க்காத வைத்தியமில்லை. இனி வாய்ப்பில்லை என்றார்கள்.
செலவு ஏறிக் கொண்டேயிருந்தது. அம்மாவும் அக்காவும் தங்களது சக்தியை இழந்துவிட்டார்கள். அப்பன் இறந்த போதும், தனக்கு கால்கள் இயங்காத போது எப்படியெல்லாம் பயம் இருண்டு வந்தததோ அதைவிட அதிகமாக அவள் அம்மாவையும் அக்காவையும் அழைத்த அந்த காலை நேரத்தில் உணர்ந்தாள். அவர்கள் இவளை விட்டுவிட்டு வெகுதூரம் சென்றிருந்தார்கள். மயக்கம் அவளது கண்களில் இருட்டிக் கொண்டு வந்தது. தமக்கு அம்மாவும் அக்காவும் இருப்பதாக நம்பிக் கொண்டிருந்தவளின் மொத்தப் பிடிமானமும் நொறுங்கிப் போனது.
‘பெற்ற மகளை விட்டுவிட்டு ஓடிப்போவார்களா?’
சூழல் நெருக்கும் போது மனிதர்கள் எந்த முகத்தையும் அணிந்து கொள்ளத் தயாராகவே இருக்கிறார்கள். யாரும் எந்தவொரு முடிவையும் எடுத்துவிடுகிறார்கள். அதில் பெரும்பாலான முடிவுகள் அடுத்தவர்களால் யூகிக்க முடியாதவையாகவே இருக்கின்றன.
முனியப்பன் சித்ராவுக்கு கஞ்சி ஊற்றினார். ஆனால் அதற்கு மேல் அவரால் எதையும் செய்ய முடியவில்லை. சித்ரா அவரை அனுமதிக்கவுமில்லை. ‘இப்படியே செத்துடுறேன்’ என்று அழுதாள். அவளைச் சமாதானப்படுத்த இயலாதவராக அவளைத் தொடாமல் அவளைச் சுற்றிலும் சுத்தம் செய்தார். சம்பந்தமில்லாத ஒரு ஆண் தமக்காக இதையெல்லாம் செய்வதைப் பார்த்து சித்ரா ஓலமிட்டு அழுதாள். அவளது அழுகை ஊரையே திகிலடையச் செய்வதாக இருந்தது. ஆனால் யாரும் வரவில்லை. முனியப்பன் தலையைக் குனிந்தபடி அவளது கழிவுகளை பெருக்கிக் கொண்டிருந்தார். அவர் அவளுக்கு பணிவிடை செய்வதை ஊரே ஆச்சரியமாகப் பார்த்தது. என்னதான் சுத்தம் செய்தாலும் அவள் மலம் கழிப்பதும், சிறுநீர் கழிப்பதும் குடிசையை நாறச் செய்தது. அவளது ஆடைகளை மொய்த்த ஈக்களும் பூச்சிகளும் புழுக்களும் மற்றவர்களை நெருங்க விடவில்லை. அழகுச் சிலையாக இருந்தவள் மெலிந்து, தோல் சுருங்கி, முடி உதிர்ந்து, உதடுகள் வறண்டு மெல்ல மெல்ல உதிர்ந்த பிறகு முனியப்பன் ஊருக்குள் செய்தி சொன்னார். நான்கைந்து பேர்கள் வந்தார்கள். எல்லாம் முடிந்த பிறகுதான் பண்ணையத்துக்குச் சென்றார்.
‘உனக்கு என்ன அவ மேல அத்தனை அக்கறை?’ பண்ணாடிச்சி கேட்ட போது அவருக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.
‘மத மசுரு பாரு இவனுக்கு...மூஞ்சிய குத்திட்டு போறான்’ என்று பண்ணாடிச்சி மனதுக்குள் கருவிக் கொண்டார்.
பிறகு மெல்ல சித்ராவை எல்லோரும் மறந்து போனார்கள்- முனியப்பனைத் தவிர. முனியப்பன் இந்தக் கதையை யாரிடமும் பேசியதில்லை. ஏனோ கவினிடம் சொல்லிவிட வேண்டும் என விரும்பினார். ஆனால் என்ன நினைத்தாரோ அவரே தவிர்த்துவிட்டார். ‘இது காதல் கதை இல்லையா?’ ‘இந்தக் கதை உனக்கு எப்படித் தெரியும்?’ என்றெல்லாம் நீங்கள் கேட்டுவிடாதீர்கள். எந்த பதிலைச் சொன்னாலும் உங்களுக்கு நம்பிக்கை வராது.
2 எதிர் சப்தங்கள்:
நடந்திருக்கலாம் என்று நம்புமளவிற்கு உண்மை போலவும் தோன்றுகிறது. ஒருவேளை "மின்னலோ" என்றும் ஐயமாக உள்ளது. உண்மை தானே, மணி.வாழ்க வளமுடன்
//‘பெற்ற மகளை விட்டுவிட்டு ஓடிப்போவார்களா?’//
போவார்கள்
Post a Comment