Nov 12, 2019

முல்ஹாலண்ட் ட்ரைவ்

இலக்கியம் படிக்க ஆரம்பித்த புதிதில் ‘என்ன இது நேரடியா சொல்லுற மாதிரி இருக்கு?’ என்று நிறைய இலக்கிய உரையாடல்களில் கேட்க நேர்ந்தது. எதையுமே புரியாமல் எழுதினால்தான் நல்ல இலக்கியம் என்று மண்டைக்குள் பதியத் தொடங்கியிருந்த பருவம் அது. உண்மையில் புரியாமல் எழுதுவது தரமான இலக்கியம் ஆகிவிடாது. இலக்கியத்தை கலாய்க்கும் பல பேர் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரே எழுத்துதான் - நான் வாசிக்கும் போது என்னுடைய அனுபவத்துக்கு ஏற்ப எனக்கொரு புரிதலை அளிக்க வேண்டும். நீங்கள் வாசிக்கும் போது உங்களுடைய அனுபவத்துக்கு ஏற்ப உங்களுக்கான புரிதலை அளிக்க வேண்டும். இந்த அடிப்படை புரியாமல் வாசிக்கும் போது கடியாகத்தான் இருக்கும். ‘என்னய்யா எழுதி வெச்சிருக்கானுக?’எரிச்சல் வரும். ஒருவகையில் பிடிபட்ட பிறகு நம் அறிவு குறித்தும், நம் புரிதல் குறித்தும் நமக்கு ஒரு திருப்தி கிடைக்கும். அந்த திருப்திதான் வாசிப்பின்பத்தின்(Reading Pleasure) அடிப்படையாகவும் இருக்கும்.

இப்படி குண்டக்க மண்டக்க காலம் ஓடிக் கொண்டிருந்த போது என்னை இலக்கியவாதி என்று நம்பத் தொடங்கியிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் திரைத்துறையிலும் நட்புகள்  உருவாகின. அங்கே சில விவாதங்களுக்குப் போகும் போது இலக்கியவாதி என்கிற கித்தாப்புடன் எதைச் சொன்னாலும் ‘புரியற மாதிரி சொல்லுங்க’ என்றுதான் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். நேரடியாகச் சொன்னால்தான் பி மற்றும் சி சென்டர்களில் எடுபடும் என்பது சினிமாக்காரர்களின் வாதம். இலக்கியத்தைப் போல திரையில் மூடுமந்திரம் அவசியமில்லை; வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்க வேண்டும். திரையும் இலக்கியமும் வெவ்வேறு படகுகள் என்று புரிந்த கொள்ள வெகு காலம் பிடிக்கவில்லை. இலக்கியம் தனி; திரைமொழி தனி அதுதான் நம் ஊரின் நம்பிக்கை.

திரைப்படங்களின் ரசிகனாகவும் அப்படித்தான் உணர்கிறேன். தமிழின் மிகச் சிறந்த படம் என்றாலும் கூட பெரும்பாலான மனிதர்களுக்கு ஒரே புரிதலைத்தான் உருவாக்குகின்றன. அந்நிய மண்ணில் தயாரிக்கப்பட்ட தரமான திரைப்படங்களைத் தேடிப் பார்க்கத் தொடங்கிய பிறகும் கூட எழுத்தில் ‘ஆளுக்கொரு புரிதல்’ என்பது மாதிரி திரைப்படங்களில் அது சாத்தியமில்லை என்பதுதான் ஆணித்தரமான நம்பிக்கையாகவும் இருந்தது. இரண்டு மணி நேர காட்சி ஊடகத்தில் அதை எப்படிச் செய்ய முடியும்? ஆளுக்கொரு புரிதலை உருவாக்குகிறேன் என்று சுவாரசியம் கெட்டுவிடக் கூடாது; பார்வையாளன் குழம்பி விடக் கூடாது. இப்படி நிறையச் சிக்கல்கள் இருக்கின்றன. ஆனாலும் அது சாத்தியமில்லாத சமாச்சாரம் இல்லை என்றுத சமீபத்தில் பார்த்த ஒரு படம் புரிய வைத்திருக்கிறது. 

Mulholland drive என்றொரு படம். 2001 ஆம் ஆண்டில் வெளியாகியிருக்கிறது. படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்பாக இந்தப் படம் பற்றி எப்படித் தெரியும் என்று குறிப்பிட வேண்டும். நிறையப் படங்களைப் பார்க்கிறவர்களுக்கு அடுத்து என்ன படம் என்னும் போது சிலரின் பரிந்துரையை நம்புவது வாடிக்கையாக இருக்கும். ஃபேஸ்புக்கில் பாரி என்னும் நண்பர் பிபிசியின் இருபத்தோறாம் நூற்றாண்டின் சிறந்த நூறு படங்களின் பட்டியல் வெளியிட்டிருந்தார். அப்பொழுதே ‘அடுத்தடுத்து பார்க்க வேண்டிய படங்கள்’ எனக் குறித்து வைத்துக் கொண்டேன். இனி வரிசையாகப் பார்த்துவிட வேண்டும். வாரம் மூன்று படங்கள் என்றாலும் கூட சீக்கிரம் பார்த்து முடித்துவிடலாம். அந்தப் பட்டியலில்தான் முல்ஹாலண்ட் ட்ரைவ் இருந்தது.  


டேவிட் லின்ச் எழுதிய இயக்கியிருக்கும் திகில் படம். 

இரவு நேரத்தில் முல்ஹாலண்ட் ட்ரைவ் சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருக்கும். அதில் இரண்டு ஆண்களும் பின்புற இருக்கையில் பெண்மணியும் அமர்ந்திருப்பார். இடையில் நிறுத்தப்படும் காரிலிருந்து துப்பாக்கியுடன் இறங்கும் ஓர் ஆண் அந்தப் பெண்ணைக் கீழே இறங்கச் சொல்வான். அந்தச் சமயத்தில் எதிரில் வேகமாக வரும் கார் ஒன்று நின்று கொண்டிருக்கும் இவர்களது வண்டியின் மீது மோதும். அந்த விபத்திலிருந்து தப்பிக்கும் பெண்மணி தடுமாறியபடியே ஒரு வீட்டை அடைவாள். அந்த வீட்டில் குடியிருந்த பெண்ணின் உறவுக்காரப் பெண்மணி ஒருத்தி- அவளுக்கு ஹாலிவுட் நாயகியாக வேண்டும் என்பது கனவு- வந்து சேர்வாள். அடிபட்டவளுக்கு தமது பெயர் உட்பட அனைத்து மறைந்திருக்கும். ஆனால் நடிகையின் கனவுடன் இருப்பவள் இவளை அரவணைத்துக் கொள்வாள். விபத்து, அடிபட்ட பெண்ணின் பின்னணி ஆகியவற்றைத் தேடுவார்கள். 

அவ்வளவுதான் கதையாகச் சொல்ல முடியும்.  ‘இதுதான் கதை’ என்று யாருமே தெளிவாகச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. படத்தைப் பார்த்த பிறகு, படம் குறித்தான கருத்துகளை இணையத்தில் துழாவினால் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி புரிந்து வைத்திருக்கிறார்கள். எதையாவது விட்டுவிட்டோமோ என்று மீண்டுமொரு முறை பார்க்கத் தொடங்கினேன். முதல் முறை என்ன புரிந்ததோ கிட்டத்தட்ட அதேதான் இரண்டாவது முறை பார்க்கும் போதும் தோன்றியது. அப்படியென்றால் நம் புரிதல் சரிதான்.

திரைப்பட ஆர்வலர்களுக்கு மிகச் சிறந்த தீனி இது. இலக்கிய ஆர்வலர்களுக்கும்தான். yts.lt தளத்தில் கிடைக்கிறது. டோரண்ட் வழியாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். படத்தைத் தரவிறக்கம் செய்துவிட்டு சற்று தயக்கத்துடனேயேதான் பார்க்கத் தொடங்கினேன். ஆனால் இரண்டு முறை பார்க்க வைத்துவிட்டார்கள். சமீபத்தில் பார்த்த திரைப்படங்களில் மிகச் சிறந்த படம். தொழில்நுட்ப ரீதியாகவும் துளி கூட கவனம் சிதறவில்லை.

என்னதான் திரைப்படத்தை சிலாகித்துப் பேசினாலும் நம்மைவிட சிலாகிக்கும், திரைமொழியை ஆராயும் திரை ஆர்வலர்கள் கணக்கு வழக்கில்லாமல் இருக்கிறார்கள். மிகச் சிறந்த திரை ரசிகர்களை எதிர்கொள்ள நேர்கிறது. தம்முடைய அறிவுஜீவித்தனத்தை எந்தவிதத்திலும் வெளிக்காட்டாமல் திரைப்படங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசிவிடுகிறார்கள். கலாய்க்கவும் தயங்குவதேயில்லை. அசுரன் படத்தில் பிரகாஷ்ராஜின் மகிழ்வுந்து நுழையும் போது பின்னால் ஒரு ஸ்கூட்டி வருவதைக் கூட மீம் ஆகத் தயாரித்திருந்தார்கள். எவ்வளவு நுணுக்கமாகப் பார்த்திருக்க வேண்டும்? திரைப்படங்களை இப்படியெல்லாம் அடித்து அலசுகிறவர்களைப் பார்த்தால் வெகு ஆச்சரியமாகவும் இருக்கும். படம் முழுவதும் மிகுந்த கவனத்துடன் பார்த்திருக்காவிட்டால் அப்படியெல்லாம் விவாதிப்பதற்கு வாய்ப்பேயில்லை. சமூக ஊடகங்கள் இத்தகைய ஆச்சரியங்களுக்கு நிறைய இடத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

திரைப்படங்களில் சற்றே சற்றான ஆர்வமிருப்பினும் படத்தை ஒரு முறை பார்த்துவிடுங்கள். படம் பற்றி உரையாடுவோம்.

4 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//அக்கு வேறு ஆணி வேறாக//
Spare என்பதை தமிழில் அக்கு என்று சொல்லலாமா?

Muthu said...

// நேரடியாகச் சொன்னால்தான் பி மற்றும் சி சென்டர்களில் எடுபடும் என்பது சினிமாக்காரர்களின் வாதம். இலக்கியத்தைப் போல திரையில் மூடுமந்திரம் அவசியமில்லை; வெட்டு ஒன்று துண்டு இரண்டாக இருக்க வேண்டும். திரையும் இலக்கியமும் வெவ்வேறு படகுகள் என்று புரிந்த கொள்ள வெகு காலம் பிடிக்கவில்லை. இலக்கியம் தனி; திரைமொழி தனி அதுதான் நம் ஊரின் நம்பிக்கை. //

உண்மைதான். ஆனால் நம்மூர் சினிமாக்காரர்களில் பலர் சினிமா என்பது காட்சி ஊடகம் என்பதை மறந்துவிடுகிறார்களோ என்று தோன்றுகிறது. காட்சியாலேயே எளிதாக உணர்த்தக்கூடியவற்றுக்கெல்லாம் ’அதாவது நீ அப்படி சொல்ற’ பாணியில் படுத்தும்போது பற்றிக்கொண்டுவரும்.

மக்களை இன்னமும் முட்டாள்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்களா ?

Ram said...

மணிகண்டன், yts.lt போல முன்னொரு முறை படம் பார்க்க ஒரு வலைதளத்தைக் குறிப்பிட்டிருந்தீர்களே (f movies மாதிரி ஞாபகம்), அதை மறுபடி சொல்ல முடியுமா? நன்றி.

Vaa.Manikandan said...

Ram,

Solarmovies இப்பொழுது அந்தத் தளம் சரியாக இல்லை. அடிக்கடி URL மாற்றுகிறார்கள். அதில் தரவிறக்கம் செய்ய முடியாது. Online Streaming மட்டும்தான்.