Nov 6, 2019

மாயக் கட்டம்

திருமணம் என்பது மாயக்கட்டம். வெளியில் இருப்பவர்கள் உள்ளே நுழையவும் உள்ளே இருப்பவர்கள் வெளியே சென்றுவிடவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றொரு வாசகம் உண்டு. யார் இதைச் சொல்லியிருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இது என்ன கம்பசூத்திரமா? திருமணம் செய்து கொண்ட பெரும்பாலானவர்கள் சொல்லிவிடுவார்கள். 

அதுதான் மாயக்கட்டம் அல்லவா? பிறகு ஏன் எல்லோரும் திருமணத்தை வற்புறுத்துகிறார்கள் என்று கேட்கலாம்தான். ஆனால் தனிமனிதர்களை இழுத்துப் பிடிக்கும் மூக்கணாங்கயிறாக இந்த பிணைப்பு இல்லாமல் இருந்தால்  மனிதர்களின் பக்குவம், சமூக ஒழுங்கமைவு என்பதெல்லாம் தாறுமாக சிதறிவிடக் கூடும். இல்லையா? தறிகெட்டு ஓடும் மனதை இழுத்துப் பிடிக்க ஒரு ஆள் அவசியம் என்பது சர்வ நிச்சயம். 

கவனித்துப் பார்த்தால் பத்து வயது வரைக்கும் குழந்தைகள் பெற்றோர் சொல்பேச்சு கேட்பார்கள். ஒன்றும் பிரச்சினை இருக்காது. அதற்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக வயதோடு சேர்ந்து கோபம், காமம் மற்றும் இன்னபிற உணர்ச்சிகளும் பெருகும். பதினாறு பதினேழு வயதுகளில் பெற்றோர் என்ன சொன்னாலும் அவர்களுக்குக் கசப்புதான். அப்பொழுது காமத்தை பெரும்பாலும் தன்னளவிலும், கோபத்தை வெளியிலும் காட்டத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் அத்தனை சமயங்களிலும் எல்லோரிடமும் கோபத்தைக் காட்டிவிட முடியாதல்லவா? எதிரில் இருப்பவன் வலுவானவனாக இருந்தால் பல்லை பொறுக்கிக் கொண்டுதான் வர வேண்டும். உள்ளுக்குள் இருக்கும் கோபத்தை வெளியிலும் படபடவெனக் காட்டிவிட முடிவதில்லை. இதையெல்லாம் ஒழுங்கு செய்ய தமக்கென ஒரு இணை இருந்தால் செளகரியமாக இருக்குமல்லவா?

திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆரம்பகட்டத்தில் காமம் பெருக்கெடுக்கிறது. அது மெல்லப் பழகும் போது தூங்கிக் கொண்டிருந்த கோப மிருகம் மீண்டும் எட்டிப்பார்க்கிறது. அதுவரையிலும் காமத்தைக் காட்டிய இணையிடம் கோபத்தையும் அது காட்டும். இதுதான் மிக முக்கியமான தருணமும் கூட. குடும்பம் இறுகுவதும் உடைந்து சிதறுவதும் இந்தக் காலகட்டத்தில்தான். ‘இவன்/ள் யாரு கோபத்தைக் காட்ட?’ என்று முரட்டுத்தனமாக எதிர்த்தால் பீங்கான் பாத்திரத்தில் விழும் உரசலைப் போலத்தான். அதுவே, இணையிடம் எதிர்ப்படும் மாற்றத்துக்கு ஏற்ப தம்மை வளைத்தோ அல்லது இணையின் சரியான பலவீனத்தைக் கண்டறிந்து அதை வைத்தே தம் வழிக்குக் கொண்டு வரும் சூத்திரதாரிகள் திருமண பந்தத்தைக் காத்துவிடுகிறார்கள். பெரும்பாலான குடும்பங்கள் அப்படித்தான் தப்பிக்கின்றன. அதாவது, உருவாகி வெளிவரும் கோபம் இரண்டு வழிமுறைகளில் அடங்குகிறது- ஒன்று இணை அடங்கிப் போய்விடுவார்கள் அல்லது தட்டி, நெகிழ்த்தி, எதிர்த்து அடக்கிவிடுவார்கள். இப்படித்தான் ஏதாவதொரு வகையில் கோபத்துக்கான வடிகாலாகவோ அல்லது கோபமே இல்லாமல் மொக்கையாக்கிவிடும் சம்பவமோ கால ஓட்டத்தில் நடந்துவிடுகிறது.

குடும்பம் என்கிற அமைப்பு அவசியமா இல்லையா என்பதெல்லாம் தனியாகப் பேசப்பட வேண்டிய சமாச்சாரங்கள். அப்படிப் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளுக்குள்ளாகப் புதைந்து கிடந்தாலும் நம் பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர்காலத்துக்காக குடும்பம் என்கிற அமைப்பினை உடைக்காமல் இருப்பதுதான் நல்லது என்கிற சிந்தனைதானே இங்கு பெரும்பாலானவர்களுக்கும் இருக்கிறது? அப்படியென்றால் மேற்சொன்ன இரண்டு வழிகள்தான் கண் முன்னால் இருப்பவை.

வெளியில் என்னதான் கெத்தாகத் திரிந்தாலும் வீட்டுக்குள் அடங்கி நடக்கும் பெரிய மனிதர்கள் பல பேர்கள் இருக்கிறார்கள். அது தவறே இல்லை. ஆரம்பத்தில் ஈகோ இருக்கத்தான் செய்யும்; ‘நீ சொல்லி நான் என்ன கேட்கிறது?’என்று எரிச்சல் வரும். ஆனால் இணையிடம் ஒரு பயம் வந்தால் தப்பிவிட்டோம் என்று பொருள். அதுவே நம்மை எல்லைகளைத் தாண்டுவதிலிருந்து கொஞ்சம் தயங்கச் செய்துவிடுகிறது. 

மேலோட்டமாகப் பார்த்தால் திருமணம், குடும்ப அமைப்பு என்பதெல்லாம் காமமும், தனிமனிதக் கோபமும் அடங்கவும், மனிதன் தனிமனிதப் பக்குவத்தை அடைவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தந்துவிடுகிறதுதான். ஆனால் இவை மட்டுமே மனித வாழ்வின் சிக்கல்கள் இல்லை அல்லவா? மனிதர்களுக்கு நடிக்கத் தெரியும். தெரிகிறது. உணர்ச்சிகளைப் போலியாக அடக்கிக் கொள்ளத் தெரிகிறது. அப்படி அடக்கி வைத்துக் கொள்ளும் உணர்ச்சிகள் மனிதனை சும்மா விட்டு வைப்பதில்லை. உள்ளுக்குள் அலைகழிக்கப்படும் அவனுக்கு இன்றைய தொழில்நுட்பம் பல்வேறு வழிவகைகளை உருவாக்கித் தந்திருக்கிறது. ஏதேதோ குளறுபடிகள்; எதையாவது விசித்திரமாகச் செய்துவிட முடியும் என்கிற ஆர்வத்தையும், குறுகுறுப்பையும் உருவாக்கித் தருகிறது. அதுதான் பல்வேறு வகைகளில் சிக்கல்களைக் கொண்டு வந்து சேர்க்கின்றன. ரகசியமாக மூன்றாம் மனிதர்கள் உள்ளே வருவதில் தொடங்கி என்னனென்னவோ நடந்துவிடுகிறது.

சீர்வரிசை வழங்கும் விழாவில் இதையொட்டித்தான் பேசினேன். 

நேற்று ஒரு செய்தி கண்ணில்பட்டது. ‘ஆபரேஷன் ஓபன் டோர்’ என்று அமெரிக்காவில் நியுஜெர்சி மாகாணத்தில் ஒரு தில்லாலங்கடி வேலையை காவல்துறையினர் நடத்தியிருக்கிறார்கள். சாட்டிங், டேட்டிங் என இருக்கும் பிரபல் ஆப்கள் வழியாக உள்ளே நுழைந்து வேட்டையாடிக் கொண்டிருப்பவர்களுக்கு கொக்கி வீசியிருக்கிறார்கள். தொடங்கும் போது ‘நான் பதினைஞ்சு வயசு, பதினான்கு வயசு’ என்று சொல்லியிருக்கிறார்கள். குழந்தைகள் என்பதால் விட்டு விலகியிருந்தால் பிரச்சினை இருந்திருக்காது. இருந்தாலும் பரவாயில்லை என்று சாட்டிங்கை தொடர்ந்தவர்களிடம் பசப்பி, தம் இடத்துக்கு வரச் சொல்லி தகவல் அனுப்பி, வந்தவுடன் கையும் களவுமாக பிடித்துவிட்டார்கள். ஐஎஸ் தீவிரவாதிகளைப் பிடித்ததைவிடவும் பெரிய பெரிய கதையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

‘பெற்றோர்களே, கவனமாக இருங்கள்..உங்கள் குழந்தைகளையும் இவர்களைப் போன்றவர்கள் வேட்டையாடக் கூடும்’ என விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சிக்கியவர்களின் பட்டியலில் இந்தியர்களும்- குறிப்பாக தமிழர்களும் உண்டு. அமெரிக்க நண்பர்கள் அவர்கள் அகப்பட்டதைக் கதை கதையாகச் சொல்கிறார்கள். பரிதாபமாகவும் இருக்கிறது. தடம் மாறுவது மனித இயல்புதான். எல்லோருமே இரும்பு மனநிலையோடு இருக்க முடியும் என்று சொல்லிவிட முடியாது. வாய்ப்புகள் வசப்படும் வரைக்கும்தான் மனிதர்கள் புனிதர்கள். சஞ்சலம் அலைகழித்துக் கொண்டிருக்கும் போது வகைதெரியாமல் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது என்பதை சிற்றின்ப மனம் மறந்துவிடுகிறது. அப்படித்தான் சிக்கியிருக்கிறார்கள். திருமணம் ஆனவர்கள், குழந்தைகளைக் கொண்டவர்களாம். விசா அனுமதி துண்டிக்கப்பட்டுவிட்டது. 

குடும்பம், திருமண பந்தத்தைத் தாண்டி என்னவோ மனிதர்களை இழுத்துக் கொண்டேயிருக்கிறது. இல்லையா? மீனுக்கு வீசப்படும் தூண்டில் போலத்தான். சிக்காமல் கவ்வி இழுத்துவிட முடியும் என்றுதான் மீன்கள் நம்புகின்றன. பல மீன்களுக்கு இழுக்கும் வித்தை தெரிந்திருக்கிறது. சில மீன்கள் சிக்கிக் கொள்கின்றன. சிக்கிக் கொள்ளும் மீன்களின் வலியை விடவும் அந்த மீன்களின் குடும்பம் எதிர்கொள்ளும் வலி மிகக் கொடுமையானது.

4 எதிர் சப்தங்கள்:

நிவாஸ் திவிக said...

அருமையான செய்தி. இன்றைய வாழ்க்கை சூழலின் பிரதிபலிப்பு.

TK said...

Good one Mani. One of your top articles.

சேக்காளி said...

//மீனுக்கு வீசப்படும் தூண்டில் போலத்தான்//
தூண்டிலில் சிக்கினால் மீனின் விரும்பத்தினால் ஏற்பட்டது என சொல்லலாம்.
வலை என்றால் என்ன செய்ய?

Muthu said...

ஏற்கனவே 'டேட்லைன் எம்.எஸ்.என்.பி.ஸி’ என்ற தலைப்பிலும் தூண்டிலிட்டு பிடித்திருக்கிறார்கள்.