Nov 5, 2019

ஆனந்தம்

ஞாயிற்றுக்கிழமை மூன்று பெண்களுக்கும் சீர்வரிசை வழங்கும் விழாவை மிகச் சிறப்பாக நண்பர்கள் நடத்தி முடித்துவிட்டார்கள். முடித்துவிட்டோம். சுபரஞ்சனி, சந்தியா, ஆனந்தி என மூன்று பெண்கள்- பெற்றோரின் ஆதரவின்றி வளர்ந்த பெண்கள். மணமேடை அமைத்து, அருப்புக்கோட்டையிலிருந்து வந்திருந்த மணிவிழா தம்பதியினரை நடுவில் அமரச் செய்து அவர்களுக்கு இருபுறம் மணமக்களை அமர வைத்திருந்தோம். 


(மெடோனா டீச்சர்)

மெடோனா டீச்சர் எனக்கு ஆறாம் வகுப்பு ஆசிரியை. அவர்தான் முழுமையான தயாரிப்புகளோடு வந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பள்ளிக்காலத்தில் எனது தலைமையாசிரியர் இனியன். அ.கோவிந்தராஜூ; அவர் மணமக்களை வாழ்த்தி பேசினார். ஓய்வுபெற்ற ஆசிரியர் அவர். தகவல் சொன்னதோடு சரி. கரூரிலிருந்து பேருந்து பிடித்து வந்துவிட்டார். 

(முனைவர் இனியன். அ.கோவிந்தராஜூ)

ஞாயிறு காலையிலிருந்தே அரசு தாமஸ் மண்டப வேலைகளைத் தொடங்கியிருந்தார். மதியவாக்கில் அவரோடு இணைந்து கொண்டேன். பிறகு ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். வேலை நடந்து கொண்டேயிருந்தது. மதியம் இரண்டு மணிவாக்கில் முழுமையாகத் தயாராகிவிட்டோம். பொதுவாகவே எனக்கு ஒரு ராசி உண்டு. ஒரு காரியத்தைத் தொடங்கினால் போதும். உடனடியாக அதைச் செய்து முடிக்க ஒரு கூட்டம் கை கோர்த்துவிடும். முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அந்தக் கூட்டம் இறுதியில் அத்தனை பெருமைகளையும் எனக்கு வழங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். இந்நிகழ்விலும் அதுதான் இம்மிபிசகாமல் நடந்தது.

ஊரின் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களை தனிப்பட்ட முறையில் நேரில் கூடச் சந்தித்து அழைக்கவில்லை. ‘நல்ல காரியத்தைச் செய்கிறார்கள்’ என்றே வந்திருந்தார்கள். அருப்புக்கோட்டையிலிருந்து சங்கரமூர்த்தி அவர்கள் குடும்பத்தோடு வந்து சேர்ந்தவுடன் நிகழ்வு தொடங்கியது. அக்குடும்பத்தினரே தொடக்கத்தில் வரவேற்று இறுதியில் நன்றியும் சொன்னார்கள்.

நிகழ்வில் சில உள்ளூர் பெரியவர்கள் மணமக்களை வாழ்த்திப் பேசினார்கள். அதன் பிறகு மணமக்களுக்கு சங்கரமூர்த்தி தம்பதியினர் தலா ஒரு சவரனில் தங்கச் சங்கிலியை அணிவித்து, சீர் வரிசைப் பொருட்களை வழங்கினார்கள். 


மிக்ஸி, கிரைண்டர், சமையல் பொருட்கள், மளிகை என அவர்கள் குடும்ப வாழ்வினைத் தொடங்குவதற்கான அத்தனை பொருட்களையும் தேடித் தேடி வாங்கியிருக்கிறோம். நிகழ்வு முடிந்த பிறகு பெண்களின் வீடுகளுக்குச் செல்வதற்கென தயாராக இருந்த மூன்று வண்டிகளும் மேடைக்கு அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்தன.

(திரு.சங்கரமூர்த்தி குடும்பம்)

மணப்பெண்களில் ஒருவர் நன்றி கூறிப் பேசினார். அதன் பிறகு நானும், முத்தாய்ப்பாக தலைமையாசிரியரும் பேசினோம். மதியம் மூன்றரை மணிக்குத் தொடங்கி ஐந்தரை மணிக்கு உரைகள் நிறைவடைந்தன. சிற்றுண்டியுடன் கூட்டம் நிறைவடைந்தது.

வந்திருந்த கூட்டத்தைப் பார்க்கும் போது நல்ல காரியத்தைச் செய்யும் போது பலரும் நம்மோடு நிற்பார்கள் என்பதைத் திரும்பத் திரும்ப உணர்த்துவதாக இருந்தது. ஆனால் அதே சமயம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. கல்வி, மருத்துவம் என்கிற காரியங்களைச் செய்து கொண்டிருந்தால் அரசியல்வாதிகளுக்கு எதுவும் உறுத்துவதில்லை. ஆனால் திருமணம் என்றால் பதறிவிடுவார்கள் போலிருக்கிறது. ‘யாரு அந்தப்பையன்?’ என்று ஒரு முக்கியமான மனிதர் கேட்டதாகச் சொன்னார்கள்.  அவர் இன்னமும் என் தலையைப் பார்க்கவில்லை போலிருக்கிறது. இனிமேல் ‘யாரு அந்த ஆளு?’ என்று கேட்கச் சொல்ல வேண்டும். நல்லவிதத்தில் கேட்டாரோ, கெட்டவிதத்தில் கேட்டாரோ தெரியாது- அதை அம்மா கேள்விப்பட்டு ‘உன்னை எதுக்கு விசாரிக்கிறாங்க?’ என்று குழம்பிவிட்டார். இதையெல்லாம் செய்தால் ஒருவன் அரசியலுக்கு வந்துவிடுவான் என்று நினைப்பதைப் போன்ற ஒரு முட்டாள்தனம் இருக்கிறதா? தலைவலி!

இன்றைய சூழலில் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் ஐந்து கோடி ரூபாயாவது தேவைப்படும். இருக்கிற சொத்தையெல்லாம் விற்றாலும் கூட பத்தாத தொகைக்கு தலையை அடகு வைத்து கடன் வாங்க வேண்டும். அப்படியே செலவு செய்தாலும் வைப்புத் தொகையாவது மிஞ்சுமா?. இந்த நிதர்சனம் எனக்கு நன்றாகவே தெரியும். எல்லாவற்றையும் தேர்தல் அரசியலுடன் பிணைத்துப் பார்ப்பது அபத்தம்.   ஒன்றிரண்டு பேர் வெளியில் வந்தாலும் ‘நமக்கு எதுக்கு வம்பு?’அடங்கச் செய்துவிடுகிற பிணைப்பு அது. அதனால் எல்லாவற்றையும் அரசியலோடு முடிச்சுப் போட வேண்டியதில்லை. இதையெல்லாம் செய்தால் இப்படியெல்லாம் விளக்கம் கொடுக்க வைத்துவிடுகிறார்கள். தெரிந்த ஊரில் இத்தகைய காரியங்களைச் செய்யும் போதே மண்டை காய்ந்துவிடுகிறது. தெரியாத ஊரில் ஆட்களைத் திரட்டி ஏற்பாடுகளைச் செய்து நடத்தியிருந்தால் கண்ணாமுழி திருகியிருக்கும். 

ஊடக நண்பர்களும் நிகழ்வுக்குத் திரளாக வந்திருந்தார்கள். செய்திக்குறிப்புக்காக அவர்களின் ஒலிவாங்கியில் பேசச்  சொன்னார்கள். மேடையில் இருப்பவர்களிடம் பேசுங்கள் என நாசூக்காகத் தவிர்த்தேன். இத்தகைய காரியங்கள் நடக்கின்றன என வெளியில் தெரிவது தவறில்லை. இத்தகைய காரியங்களை எவனோ ஒருவன் செய்து கொண்டிருக்கிறான் என்பதும் கூட பலருக்கும் தெரியலாம். அதுவே போதும். ஆனால் முகத்தை வெளியில் பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. இதைத்தான் மேடையிலும் சொன்னேன். கடைசி வரைக்கும் இப்படியே சிறு வட்டத்திற்குள் இருந்தால் போதும் என்றுதான் உளப்பூர்வமாக விரும்புகிறேன்.

(ராசிக்காரன் பந்தாவுக்காக இந்தப் படத்தை பதிவிடுகிறான்)

ராசிப்படி பெருமை தேடித்தருவதற்காகவே கூடிய ஆசிரியர்கள், உள்ளூர்வாசிகள், கொச்சினிலிருந்து வந்து மணமக்களுக்கு தனிப்பட்ட முறையில் அன்பளிப்பை வழங்கிய ராதாகிருஷ்ணன், அது போலவே கோவையிலிருந்து வந்திருந்து அன்பளிப்பை வழங்கிய ஓய்வு பெற்ற பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் சென்னை, கோவை, ஈரோடு என வெளியூர்களிலிருந்து வந்திருந்த நிசப்தம் வாசக நண்பர்கள் என நல்ல கூட்டம். அரசு தாமஸ், கலைசெல்வி, ரமாராணி, கார்த்திகேயன், இளங்கோ, வரதராஜன், ஸ்ரீனிவாஸ், பாலு, நிவாஸ், ஒழலக்கோவில் நண்பர்கள், தெற்குப்பதி இளைஞர்கள், அடர்வனம் குழு, நிசப்தம் மாணவர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல வேண்டும். ஜீவா, விக்னேஸ்வரன் போன்றவர்கள் நம்மாட்கள்.

மண்டபத்தை இலவசமாகக் கொடுத்த வெங்கடேஸ்வரன் அவர்களில் தொடங்கி மைக் செட் அமைத்துக் கொடுத்த வெங்கிடு வரைக்கும் அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி.

ஆத்மார்த்தமான ஒரு செயலைச் செய்திருக்கிறோம். மூன்று பெண்களின் முகத்திலும் இருந்த மகிழ்வினை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உணர்ந்திருக்க முடியும். நிகழ்வு முடிந்த பிறகு பெரும்பாலானவர்கள் நெருங்கி வந்து பேசினார்கள். எதிராளி நம் கைகளைப் பற்றுகிற தொனியிலேயே நாம் புரிந்து கொள்ள முடியும் என்பதை உணர்த்தும் விதமாக இறுகப்பற்றி நெகிழ்ச்சியாகப் பேசினார்கள். ஒருவகையில் அது நம்மை நெகிழ்த்துவிடுகிற பற்றுதல். நண்பர் சரவணக்குமாரும் அவரது அண்ணன் சசிக்குமாருக்கும் எனது அன்பு. பெற்றோரின் மணிவிழாவை இப்படியானதொரு அன்பு சார்ந்த செயலாக மாற்ற முடியும் என்ற வாய்ப்பினை அவர்கள்தான் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். 

ஒரேவிதமான காரியங்களைத் தொடர்ந்து செய்வதற்கான வாய்ப்புகள் அமைவதில்லை. ஆனால் இப்படியொரு வாய்ப்பு மீண்டும் மீண்டும் அமைய வேண்டும் என விரும்புகிற நிகழ்வாக அமைந்துவிட்டது. எல்லோரையும் அனுப்பி வைத்துவிட்டு நானும் தாமஸ் சாரும் பைக்கை கிளப்பிக் கொண்டு கிளம்பினோம். குளிர்காலம் தொடங்கிவிட்டதை உணர்ந்து கொள்ளும் விதமான காற்று முகத்தை வருடியது. அது காற்றின் குளிர்ச்சியா அல்லது ஆழ்மனதின் குளிர்ச்சியா எனத் தெரியவில்லை.

நிழற்படங்கள் - அன்பு நண்பர் ஈரோடு மூர்த்தி.

11 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

முது மணமக்களை பார்த்து உள்ளோம்; மற்றும் புது மணமக்களையும் பார்த்து உள்ளோம். ஆனால் இவர்களை ஒருங்கே ஓரிடத்தில் பார்த்தது நெகிழ்வாக இருந்தது. நேரில் வந்து வாழ்த்துவதற்கு வாய்ப்பு அளித்த மணி மற்றும் நிசப்தம் நண்பர்களுக்கு நன்றி.
"குழலினிது யாழினிது என்ப தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதார்"
ஆம். நிசப்தம் இப்போது மழலையில் பேச ஆரம்பித்து விட்டது,கேட்க மிகவும் இனிமையாக இருந்தது.வாழ்க வளமுடன்

சேக்காளி said...

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு நிகழ்வு. நிகழ்விற்குக் காரணமான அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Thirumalai Kandasami said...

மகிழ்ச்சி

M.Selvaraj said...

மணிவிழா தம்பதிகளின் நல்மனத்திற்கு வாழ்த்துக்கள். இனி நிறைய தம்பதிகள் இதை போன்று பொன்னான நிகழ்வுகளை செய்வதற்கு விரும்புவார்கள். நிகழ்வுகளை ஒருங்கிணைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். (வா.மணிகண்டன் அவர்கள் கொஞ்சம் குண்டாகிட்டீங்க போல இருக்கே)

செ. அன்புச்செல்வன் said...

விடாமல் நிசப்தம் வாசித்துக்கொண்டு வருகிறேன். உங்கள் முயற்சிகள், செயல்பாடுகள் யாவும் போற்றத்தக்கவை. அவற்றில் கிரீடம் போன்ற நிகழ்வாக இது இருக்கிறது. எல்லோருக்கும் வாழ்த்துகள்!! உங்களனைவருக்கும் அன்பும் நன்றியும் பாராட்டுகளும்!!

இரா.பூபாலன் said...

மகிழ்ச்சி. வாழ்க ..

Ranjith said...

அருமையான முயற்சி! அழகான நிகழ்வு!
நிசப்தம் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

நாடோடிப் பையன் said...

Mani,

This is so inspiring. Hats off to you, the sponsors, and volunteers.

You have assembled a great group of volunteers.

Best wishes to the newly married.

Jothi Nadesan said...

வாழ்க வளமுடன்

Muthu said...

மணமகள்களது மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். செயல்படுத்திய உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.