Nov 2, 2019

மருத்துவர்களின் சம்பளம்

பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது டாக்டர் ஆகிவிட வேண்டும் என்று அம்மாவும் அப்பாவும் கனவு கண்டார்கள். பெரும்பாலான பெற்றோரின் கனவு அதுதான். ஆனால் அது என்ன அவ்வளவு எளிதான காரியமா? கவனம் சிதறாமல் வெறித்தனமாக படிக்க வேண்டும். அந்த வயதில் அப்படியானதொரு மனநிலை வாய்ப்பது வரம். மிகச் சிறப்பாக படிக்கக் கூடிய மாணவர்களுக்கு மட்டுமே அந்தக் கனவு சாத்தியமானது. இருநூறு மாணவர்கள் படித்த பனிரெண்டாம் வகுப்பில் இரண்டு அல்லது மூன்று பேர்கள் மட்டுமே அந்தக் கனவைத் துரத்துவதற்கான தகுதிகளுடன் இருந்தார்கள். அவர்கள் எம்.பி.பி.எஸ் சேர்ந்த போது கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அவர்கள் ஹவுஸ் சர்ஜன் ஆவதற்குள்ளாகவே பனிரெண்டாம் வகுப்பில் தொள்ளாயிரம் மதிப்பெண்களைக் கூட தாண்ட முடியாதவர்கள் போனாம்போக்கி கல்லூரியில் பொறியியல் சேர்ந்து ஏழெட்டு அரியர் வைத்து படித்து முடித்து ஏதாவதொரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருந்தார்கள். 

மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்கள் ஹவுஸ் சர்ஜன் முடித்து, அதன் பிறகு முதுகலைப் படிப்பை  முடித்துவிட்டு அரசுப்பணியில் சேரும் போது பொறியாளர்களின் சம்பளம் லட்சத்தைத் தாண்டியிருந்தது. அப்படித் தாண்டியவர்கள் ஆளே மாறியிருந்தார்கள். ஒன்றிரண்டு முறை அமெரிக்காவோ ஐரோப்பாவோ சென்று வந்தவர்களாகவோ அல்லது அங்கேயே டேரா போட்டவர்களாகவோ மாறிப் போனார்கள். உள்ளூரில் நறுக்கென்று சொத்தும் சேர்த்துவிட்டார்கள். ஆனால் மருத்துவம் படித்த பல நண்பர்களுக்கு இன்னமும் சொந்த வீடு இல்லை. முப்பத்தைந்தைக் கடந்துவிட்ட பிறகும் ‘பார்த்துக்கலாம்’ என்கிற நம்பிக்கையிலேயே இருக்கிறார்கள். அரசு மருத்துவராகப் பணியாற்றும் நண்பர்களைச் சந்திக்கும் போது சம்பளத்தைத் தவிர எல்லாவற்றையும் பேசிக் கொள்கிறோம். 

மருத்துவர்களில் கிட்டத்தட்ட பத்து வருட அனுபவம் நிறைந்தவர்கள் கூட எழுபதாயிரத்தை தாண்டி வாங்குவதில்லை. அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ‘நன்கு படித்தவர்கள்’ என்பதைத் தவிர அவர்கள் செய்த பாவம் என்னவென்றுதான் புரியவில்லை. பத்தாம் வகுப்பில் ஐநூறுக்கு நானூற்றைம்பது மதிப்பெண்களைத் தாண்டிய காலத்திலிருந்து ‘மருத்துவர்’ என்னும் பெருங்கனவைத் தூக்கிக் கொண்டு ஓடியதைத் தவிர அவர்கள் செய்த தவறு என்ன? 

பொறியியல் படித்தவர்களை மருத்துவர்களோடு மட்டும் ஒப்பிடவில்லை. தம் காலத்தில் தம்மோடு பள்ளியில் படித்த பெரும்பாலானவர்களோடு ஒப்பிடும் போது அரசு மருத்துவர்களின் பொருளாதார நிலை சற்று தாழ்வுதான் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஹார்டுவேர் கடை நடத்துகிறவன் கூட அதிகமாகச் சம்பாதிக்கிறான்.

இப்பொழுதெல்லாம் ஊதிய உயர்வு என்று யார் கேட்டாலும் வயிறு எரியும் கூட்டம் பெருகிவிட்டது. அவர்களுக்கு எதைப் பற்றியும் எந்த எழவும் தெரியாது. மத்திய தர மனநிலை என்று சொல்வார்கள்-அவர்களுக்கு தாம் நன்றாக இருந்தால் போதும்.  நாட்டைக் காப்போம் என்பார்கள். சுதந்திர தினத்துக்கு சட்டையில் தேசியக் கொடியைக் குத்தி தேசிய கீதம் பாடும் போது எழுந்து நிற்பதைத் தவிர துரும்பைக் கிள்ளிப் போட மாட்டார்கள். இந்த நாடு நாசமாகப் போக அடுத்தவர்கள் காரணம் என்பார்கள். ஆனால் தம்மிடமிருந்து எந்தப் பங்களிப்பும் இல்லை என்பதைப் பற்றிய எந்த லஜ்ஜையும் இருக்காது. எல்லோரையும் குற்றம் சொல்வார்கள். 

சுகாதாரத் துறையில் தமிழகத்தின் இடம் என்ன? 2018 ன் ஹெல்த் இண்டெக்ஸ் படி கேரளா, பஞ்சாப் மாநிலங்களுடன் சேர்த்து தமிழகமும் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருக்கிறது. யார் காரணம்?  பத்தாம் வகுப்பிலிருந்து மருத்துவக் கனவுகளைத் துரத்தியபடியே படித்து மருத்துவர்கள் ஆனார்கள் அல்லவா? அவர்கள்தான். அந்த மருத்துவர்கள் காட்டுவதுதான் தேசபக்தி. மேம்போக்காக ‘ஊழியர்களுக்கான சம்பளத்திலேயே பெரும்பகுதி போய்விடுகிறது’ என்று பேசுகிற அரைவேக்காட்டு அரசியல்வாதிகளின் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். சம்பளம் யாருக்குப் போகிறது? மருத்துவர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என அரசு செய்ய வேண்டிய வேலையைச் செய்து கொடுக்கிறவர்களுக்குத்தானே போகிறது? அவர்கள் வேலையைச் செய்து கொடுப்பதற்கான ஊதியத்தை அரசுதானே கொடுக்க வேண்டும்? ஊழியர்கள் அடிமாடுகளைப் போல எதைப் பற்றியும் யோசிக்காமல் வேலையை மட்டும் செய்ய வேண்டும் என்று கேட்பது எந்தவிதத்தில் நியாயம்? 

ஒருவன் தம்முடைய கோரிக்கையை முன்வைக்கும் போது உடனடியாக லஞ்சம் பெருகிவிட்டது, ஊழலில் கொழிக்கிறார்கள் என்று உத்தம காந்தியைப் போலவே பேசத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படி பேசிக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் வருமான வரியில் ஐந்து ரூபாயை மிச்சம் பிடிக்கலாம் என்று கணக்குப் போடுகிற கழிசடைகளாக இருப்பார்கள் என்று அவர்கள் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும். 

மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பெரும் சம்பளம் வாங்குகிறார்கள்; கிளினிக் நடத்தி கொள்ளையடிக்கிறார்கள் என்றெல்லாம் பேசுகிறவர்கள் ஒட்டுமொத்த மருத்துவர்களைப் பற்றியும் தெரியாத மடையர்கள். சென்னையிலும், கோவையிலும் இருக்கும் பெருநகர மருத்துவர்களைப் பார்த்துவிட்டுப் பேசுகிற வயிற்றெரிச்சல் பேர்வழிகள். மூன்றாம், நான்காம் தர நகராட்சிகள், சிற்றூர்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு கார்போரேட் மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கும், கிளினிக்கில் ஒரு நோயாளியைப் பார்த்துவிட்டு இருநூறும், முந்நூறும் வாங்குவதற்கும் வாய்ப்பேயில்லை. அத்தகைய மருத்துவர்களைப் பற்றி எல்லாம் ஏன் நினைப்பதேயில்லை? முன்பின் ஏதேனும் ஒரு பி.ஹெச்.சிக்காவது சென்றிருந்தால் நினைக்கலாம். 

சிறு பிரச்சினை என்றாலும் பெரு மருத்துவமனைகளுக்கு ஓடிப் போய் ‘எப்படியாச்சும் காப்பாத்திடுங்க’ என்று கதறுவார்கள். ஆஞ்சியோ செய்தாலே தப்பித்துவிடலாம் என்றாலும் பைபாஸ் சர்ஜரி செய்யச் சொன்னாலும் செய்து கொள்வார்கள். எவ்வளவு லட்சம் செலவு ஆனாலும் சொத்தை விற்று, கடனை வாங்கிக் கட்டிவிட்டு வருவார்கள். ஆனால் கிராமத்தில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் ‘எங்களின் ஊதியக் குறைபாட்டை நீக்குங்கள்’ என்று கோரினால் அவர்களுக்குக் கொடுக்கும் பணத்தில்தான் இந்த நாடே நாசமாகப் போவது போல துள்ளிக் குதிக்கிறார்கள். 

இந்தியா சுகாதாரப் பட்டியலில் சில இடங்கள் சரிந்தாலும் பதறுவோம். ஆனால் கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் நமக்கு அது பற்றியக்  கவலை கிஞ்சித்தும் இல்லை. இரண்டும் எவ்வளவு நெருங்கிய தொடர்பு உடையது என்பதை யோசிக்க வேண்டாமா?  மருத்துவர்கள் போராடுகிறார்கள்; அரசு எதிர்க்கிறது; அரசியல்வாதிகள் ஆதரிக்கிறார்கள்; போராட்டத்தைத் திரும்பப் பெறுகிறார்கள். என்ன வேண்டுமானாலும் நடந்து கொண்டிருக்கட்டும். அது அரசு ரீதியிலான பிரச்சினைகள். ஆனால் இங்கு சாமானிய மனிதர்களின் மனநிலை மாற வேண்டும். ஒருவன் தமக்கான ஊதியத்தைக் கேட்கிறான் என்றால் அவன் நிச்சயமாக ஏதோவொருவகையில் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்றுதான் பொருள். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் தெருவுக்கு வந்து ஊதிய உயர்வைக் கேட்பதில்லை. ஒருவரது கோரிக்கையில் இருக்கும் அடிநாதமான வலியையும், சிக்கல்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளாமல் தம்முடைய அரைவேக்காட்டுப் புத்தியைக் காட்ட வேண்டியதில்லை என்பதை மட்டும் திருமண மண்டபத்திலும், எழவு வீடுகளிலும், வாட்சாப்பிலும், பேஸ்புக்கிலும் பொங்குகிறவர்கள் புரிந்து கொண்டாலே போதும். வர வர அப்படிப் பொங்குகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. 

மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டார்கள். ஆனாலும் அவர்களது கோரிக்கைகளின் நியாயம் அப்படியேதான் இருக்கிறது. அவர்களோடு நிற்க வேண்டியது சாமானியர்களின் கடமை.

9 எதிர் சப்தங்கள்:

Kutti said...

well said ..

Prabakaran said...

இது அரசு மருத்துவர்களுக்கு மட்டுமல்ல. அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். அரசு ஊழியர்கள் என்றாலே இளக்காரமாகப் பார்ப்பதும், இவர்களுக்கு சம்பள உயர்வு ஒரு கேடா? என்பதும் பொதுப் பார்வையாக உள்ளது. நான் அரசுத் துறையில் பணியாற்றும் பொறியாளன். அரசுப் பொறியியல் கல்லூரியில் 90களில் படித்தவன். 19 வருட பணி அனுபவத்தில் தற்போது தான் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறேன். சம்பளம் மட்டும் பொருட்டல்ல. அரசுத் துறையில் ஒரு பொறியாளராக பணி புரிவது ஒரு சவாலான பணி. பல அரசியல் அழுத்தங்கள், மன அழுத்தம் ஆகியவற்றுடன் பணிபுரிய வேண்டும். பதவி உயர்வு எல்லாம் வந்தால் உண்டு. இந்நிலையில் அளிக்கப்படும் ஊதியம் எல்லாம் ஒன்றுமே இல்லை.

Sundar said...

அருமையான கருத்து. நன்றி...

ஆனால், எல்லோரையும் அவர், இவர் என்று சொல்லும்போது, ஹார்ட்வேர் கடை நடத்துபவர் மட்டும் ஏன் "அவன்"?

சேக்காளி said...

தல நம்ம சமஉ க்களுக்கெல்லாம் அதாம்ய்யா அந்த சட்டமன்றஉறுப்பினர் க்கெல்லாம் எம்புட்டு சம்பளம், அலவன்சு, பென்சனு ?

Jaikumar said...டாக்டர்களின் போராட்டம் அவர்களின் சம்பள உயர்வுக்கானது மட்டுமல்ல (டாக்டர்களின் ஊதியம் மிக சொற்பமாக n இருந்தாலும் கூட அது மட்டுமே அவர்களின் பிரதானமான கோரிக்கை அல்ல). தமிழ்நாட்டின் வலிமையான மருத்துவ கட்டமைப்பிற்கு ஆபத்தானதாக இருக்கும் அரசின் சமீபத்திய இரண்டு கொள்கை முடிவுகளை திரும்பப் பெற வலியுறுத்துவதும் இந்த வேலை நிறுத்தத்தின் பிரதானமான கோரிக்கை.

டாக்டர்களின் வேலைநிறுத்தத்தில் உள்ள இரண்டு முக்கியமான கோரிக்கைகளை பார்ப்போம்:

ஒன்று, அரசு பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு நடைமுறையில் இருந்து வந்த முதுநிலை படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு சமீபத்தில் நீக்கப்பட்டது. இதை திரும்பப் பெற்றுக்கொண்டு முதுநிலை படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு அரசு மருத்துவர்களுக்கு உறுதி செய்ய வேண்டும் என்பது ஒரு முக்கியமான கோரிக்கை. இந்தக் கோரிக்கை டாக்டர்களுக்கான கோரிக்கை மட்டுமல்ல மக்களுக்கான கோரிக்கை. அது ஏன் என பார்ப்போம்..

அடிப்படை மருத்துவ கட்டமைப்பில் தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது, ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தமிழ்நாட்டில் இருக்கிறது. கிராமப்புற, பொருளாதார நலிவடைந்த மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் மிக முக்கியமானது.

மருத்துவமனையில் நிகழும் பாதுகாப்பான பிரசவங்களில் எண்ணிக்கை வேறு எந்த மாநிலத்தை விட இந்த அதிகம், தடுப்பூசிகளை அத்தனை மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம், அதேபோல தொற்றுநோய்களை தடுப்பதில், குழந்தைகளுக்கான சத்துணவை மேம்படுத்துவதில் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் மிக மிக அவசியம்.

தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பிற்கு இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான் வலிமையான அடித்தளத்தை கொடுக்கின்றன. ஏன் தமிழ்நாட்டில் மட்டும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்றால், இங்கு எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான மருத்துவர்கள் இருக்கிறார்கள், சில மேம்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் துறைசார் வல்லுநர்கள் கூட இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பில் கொடுக்கப்பட்ட 50 சதவீத இட ஒதுக்கீடு.

எம்பிபிஎஸ் முடிக்கும் ஒரு மாணவன் இந்த இட ஒதுக்கீட்டுக்காக அரசுப்பணியில் சேருகிறான் இரண்டு வருட அரசு பணிக்கு பிறகு அவன் முதுநிலை படிப்பிற்கு சேருகிறான் ஆனால் இந்த இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டால், அரசு பணியில் சேரும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும், ஏனென்றால் எம்பிபிஎஸ் முடிக்கும் ஒரு மாணவன் முதுநிலை படிப்பிற்கு தயார் செய்வதையே விரும்புவான் அல்லது வெளிநாடுகளுக்கு செல்ல முற்படுவான். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் விளைவாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுமையாக செயல்படாமல் முடக்கப்பட்டு விடும், அவை முடங்கிப் போனால் நமது சுகாதார அமைப்பின் அடித்தளமே பலவீனமாகிவிடும். இதனால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கான சுகாதார அமைப்பு இல்லாமல் போய் விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

மருத்துவத்துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணமே நமது வலிமையான இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான், அவை முடங்கி போகும்போது தமிழ் நாட்டு மருத்துவ கட்டமைப்பே முடங்கிப் போகும் அபாயம் இருக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டுதான், அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

Jaikumar said...

இரண்டாவது முக்கியமான கோரிக்கை:

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை இருக்கவேண்டும் என்பது.

சமீபத்தில் தமிழ்நாடு அரசு மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் (MCI) குறைந்தபட்ச நெறிமுறைகளின்படி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருந்தால் போதும் என்று முடிவுசெய்தது, இதன் விளைவாக ஏராளமான பணியிடங்கள் குறைக்கப்பட்டன. பத்து டாக்டர்கள் இருந்த இடத்தில் இரண்டு அல்லது மூன்று டாக்டர்களே இருக்கும் நிலைக்கு நமது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மாறியுள்ளன. இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் ஏராளமான நோயாளிகளை கையாளுவதற்கு தேவையான மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும், அறுவைசிகிச்சைக்கு நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நம்பியிருக்கும் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் போன்ற ஒரு உயர்மட்ட அரசாங்க referrel சென்டரில் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை வந்தால் அது ஒட்டுமொத்த பொதுமருத்துவ கட்டமைப்பையும் சீர்குலைத்துவிடும். பொதுமருத்துவ கட்டமைப்பின் சீர்குலைவு என்பது மக்களின் அன்றாட வாழ்வில் நேரடி தொடர்புடையது. அதனால் அதற்கு எதிராகவும் மருத்துவர்கள் இந்த வேலைநிறுத்தத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

அதனால் அரசு மருத்துவர்களின் இந்த வேலை நிறுத்தம் என்பது, சீர்குலைந்து கொண்டிருக்கும் பொது மருத்துவ கட்டமைப்பை வலிமை படுத்துவதற்கானது. இன்னும் குறிப்பாகச் சொன்னால் இந்தப் போராட்டம் என்பது மக்களுக்கான போராட்டம்.

மருத்துவர்கள் சுயநலமாக மக்களிடமிருந்து அந்நியப்பட்டு இந்த போராட்டத்தை நடத்தவில்லை, வலிமையான தமிழ்நாட்டு மருத்துவக் கட்டமைப்பை பாதுகாக்க வேண்டியும், மக்களுக்கான அடிப்படை மருத்துவ உரிமைகளை உறுதி செய்ய வேண்டியுமே அவர்கள் போராடுகிறார்கள். எனவே மக்கள் மருத்துவர்களின் பக்கம் நிற்பது இன்றைய காலத்தின் அவசியமான ஒன்று.

மருத்துவர் Sivabalan Elangovan

நிவாஸ் திவிக said...

அருமை ��

Yogi said...

While the post touches lot of good points, saying that Doctors earning 50k is low and comparing it to other professions which might earn more is a disturbing line of thought. Everything should not be measured in terms of salary and getting rich. People who want to get rich SHOULD NOT become doctors. Teachers and Doctors should be people who are passionate about the field, who really want to help others by imparting their knowledge or assist others. People who want to get rich becoming doctors is the whole reason why hospitals and schools are a big business now. They should be run as a service not for profit. I am not saying don't give them good salary, but don't make the salary a sole reason for people to get into this profession.
Any 50k/70k is really not a bad salary. Problem is we are comparing it with everyone and getting pissed off. Everybody wants to live the high life, It looks like people forgot how to be content.

Muthu said...

// People who want to get rich SHOULD NOT become doctors. //

This is the feudalistic mindset. Those days are gone. We can't expect them to make sacrifices, though it's their passion. Just because they're passionate about something, doesn't mean that they shouldn't expect the salary which's market rate.

They're the service providers and they can and should expect the correct amount of fee for the quality of service they provide.