Nov 14, 2019

சூடு

பண்டரிநாதனுக்கு வசந்தா சூடு போட்டுவிட்டாள். அவனுக்கு பதினான்கு வயது. லேசுப்பட்ட குறும்பு இல்லை. அதுவும் அரும்பு மீசை முளைக்க முளைக்க அவன் செய்யாத லோலாயமே இல்லை என்று ஆகிவிட்டது. போனமாதமே பண்டரிநாதன் வாய்க்காலில் தலைகீழாகக் குதிப்பதாக வந்து பாப்பாத்தி போட்டுக் கொடுத்த போது வசந்தாவுக்கு சுள்ளென்று ஏறியது. ஒத்தை ஆளுதான். அவனை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த வசந்தாவுக்கு இவன் எதையாவது செய்து ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிவிட்டால் குடி மூழ்கிப் போய்விடுமே என்றுதான் மொத்த பயமும். 

பாப்பாத்தி போனதும் பண்டரியிடம் ருத்ரதாண்டவத்தை வசந்தா ஆடினாலும் அதுவொன்றும் பெரிய பாதிப்பை உண்டாக்கவில்லை. பண்டரி இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுக் கொண்டிருந்தான். இப்படியேதான் இருக்கிறான். சொன்னபேச்சே கேட்பதில்லை. அழுதும் பார்த்துவிட்டாள். ம்ஹூம். கெட்டவார்த்தை பேசிப் பழகிவிட்டானாம். முக்கு இட்டேரியில் நின்று இல்லாத கெட்டவார்த்தையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான்.

‘உம்பையன் புதுசு புதுசா கண்டுபுடிச்சு பேசறான்..எங்களுக்கே அர்த்தம் தெரிய மாட்டேங்குது’ என்று பாப்பாத்தியேதான் போட்டுக் கொடுத்தாள். 

ஒருத்தி எத்தனை நாள்தான் பொறுத்துக் கொண்டேயிருப்பாள்? அதுதான் தோசை திருப்பியைக் காய்ச்சி குப்புற படுத்துக் கிடந்தவன் லுங்கியை மேலே தூக்கி உட்காருமிடத்துக்கு கொஞ்சம் கீழே தொடைக்கு கொஞ்சம் மேலாக வாகாக இழுத்துவிட்டாள். அவ்வளவுதான். பண்டரி துள்ளி எழுந்தான். ‘எதுக்குடி சூடு வெச்ச?’ என்று உச்சஸ்தாயியில் கத்தினான். வசந்தா எதையும் கண்டு கொள்ளாமல் தோசை திருப்பியை மீண்டும் அடுப்பில் வைத்திருந்தாள். சூடு பொறுக்க முடியாமல் கத்துகிறான் என்று முதல் கத்தலுக்கு எந்த பதிலும் சொல்லாமல் விட்டுவிட்டாள். அடங்காமல் மீண்டும் கத்தினால் இன்னொரு இழுப்பு இழுத்துவிட வேண்டியதுதான் என்பதற்காகத்தான் அடுப்பில் வைத்திருந்தாள். பண்டரி தோசை திருப்பியைப் பார்த்துவிட்டான். அது கனகனவென்று தகித்துக் கொண்டிருந்தது. இனி என்ன பேசினாலும் ஆபத்து வந்து சேரும் என்று ஓடிப் போய் இட்லிக்கு ஆட்டி வைத்திருந்த மாவை எடுத்து பின்பக்கம் பூராவும் அப்பிக் கொண்டான். கொஞ்சம் சில்லென்று இருந்தாலும் எரிச்சல் அடங்குவதாகவே தெரியவில்லை.

மனதுக்குள் என்னவோ கருவினான். ‘எதுக்கும்மா சூடு வெச்ச?’ என்றான். தண்டனைக்கு ஒரு காரணம் வேண்டுமல்லவா? காரணமே தெரியாமல் சூடு வாங்குவதுதான் பெருங்கொடுமையாகத் தெரிந்தது. அவன் பாட்டுக்கு சிவனே என்று படுத்துத் தூங்கிக் கொண்டுதான் இருந்தான். எவளாச்சும் பக்கத்து ஊட்டுக்காரி போட்டுக் கொடுத்திருக்கக் கூடும் என்பதுதான் அவனுடைய முதல் சந்தேகம். ஆனால் சூடு வாங்குகிற அளவுக்கு எந்தத் தப்பையும் சமீபத்தில் செய்ததாக நினைவில் இல்லை. 

‘உனக்கு காரணம் வேற சொல்லோணுமா? பேசற வாய்ல இழுத்துடுவேன் பார்த்துக்க’ என்றாள். அவள் இருக்கும் கோபத்தை பார்த்தால் இழுத்தாலும் இழுத்துவிடுவாள் போலிருந்தது.

பேசாமல் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டான். வீதியில் இருக்கும் வேப்பமரத்து நிழலில் இருக்கும் மண்மேட்டில் அமர்ந்து கொள்ளலாம் என்றுதான் வந்தான். அமரவும் முடியவில்லை. சூடு பட்ட இடத்தில் கனகனவென்று துடிப்பது போல இருந்தது. அப்படியும் இப்படியும் அலைமோதினால் பார்க்கிறவன் எல்லாம் கேட்பான். அதுவும் மாவு காட்டிக் கொடுத்துவிடும். பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என நினைத்தவன் மீண்டும் வீட்டுக்குள் புகுந்து லுங்கியை அவிழ்த்து வீசிவிட்டு ஜட்டியுடன் மல்லாக்க படுத்துக் கொண்டான். கோரைப்பாயில் புண் படாமல் இருக்க கால்களை மடக்கி வைத்திருந்தான். வசந்தா கதவைச் சாத்திவிட்டு கிளம்பி போய்விட்டாள்.

வாழ்க்கையில் முதல் சூடு இதுதான். கெட்ட வார்த்தை பேசியதற்கு சூடு போட்டிருப்பாளோ என்று தோன்றியது. ‘அவ என்ன சூடு வைக்கிறது?’ என்று சொல்லியபடியே அம்மாவை கெட்ட கெட்ட வார்த்தையில் கரித்துக் கொட்டினான். ஒரு கட்டத்தில் ‘என்னதான் இருந்தாலும் அம்மாவா போய்ட்டாளே’ என்று நினைத்தான். ‘அம்மா..பெரிய அம்மா..மசுரு மாதிரி..இப்படியா சூடு வெப்பா?’ என்று நினைத்த போது அழுகை முட்டிக் கொண்டு வந்துவிட்டது. ஒருவேளை அப்பன் உயிரோடு இருந்திருந்தால் அம்மா இந்தக் காரியத்தைச் செய்திருக்க மாட்டாள். ஆனால் அப்பனே வைத்தாலும் வைத்திருப்பான் என்று நினைத்த போது மீண்டும் அழுகை வந்துவிட்டது. இவன் பிறந்த கொஞ்ச நாளிலேயே அப்பன் போய்ச் சேர்ந்துவிட்டான். எந்நேரமும் குடிதான். குடித்து குடித்துதான் ஈரல் வெந்து போனதாகச் சொன்னார்கள். குடித்துவிட்டு வந்து வசந்தாவை சாத்துவானாம். இன்னமும் ஊரில் யாராவது சொல்லிக் காட்டுவார்கள்.

ஈயொன்று வந்து புண் மீது ஒட்டி நினைப்பை சூட்டுக்கே இழுத்து வந்தது.  ‘வப்பானோளி’ என்று மீண்டும் திட்டினான். அவன் சத்தம் அடங்கவும் வசந்தா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவன் சொன்னது அவளுக்கு காதில் விழுந்துவிட்டதா என்று தெரியவில்லை. அவள் ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை. ‘எனக்கு ஏன் சூடு வெச்ச?’ என்று தனக்குத் தானே கத்துவது போலக் கேட்டான். 

‘உனக்குத் தெரியாதா?’ என்று வசந்தா திருப்பிக் கேட்டாள்.

பதிலே சொல்லாமல் வளைத்துக் கொண்டிருக்கிறாள். அப்படியென்றால் எவளோ ஒருத்திதான் போட்டுக் கொடுத்திருக்கிறாள். எதுக்கால வீட்டு கவிதா ஜாக்கெட்டைத் திருடியது கூடக் காரணமாக இருக்கலாம். அதுவும் கூட அவனாகத் திருடவில்லை. கண்ணப்பன்தான் உசுப்பேத்திவிட்டான்.

‘அந்தக் கருமத்தைத் தூக்கிட்டு வந்து என்னடா பண்ணுறது?’ என்றான். 

‘நீ இன்னும் வயசுக்கு வரவே இல்லடா’ என்று அவமானப்படுத்துவது போல சொன்னான். 

‘யார் சொன்னது?’ என்று வேகம் வந்தவனாகச் சென்று காய்ந்து கொண்டிருந்த கருப்பு ஜாக்கெட்டையும் உள்பாடியையும் தூக்கிக் கொண்டு வந்துவிட்டான். இவனிடமிருந்து அதை வாங்கிய கண்ணப்பன் ‘அவ பார்த்தாளா?’ என்றான். 

‘இல்லை’ என்று தலையாட்டினான். பறித்துக் கொண்டு குரங்கைப் போல ஓடிவிட்டான். அதை வைத்து என்ன செய்வான் என்று புரியாமல் ‘வயசுக்கு வந்தா தெரிஞ்சுடும்’ என்று பண்டரி சமாதானம் சொல்லிக் கொண்டான். ஆனால் கவிதா எந்தச் சத்தமும் போடவில்லை. அப்புறம் ஏன் அம்மா சூடு வைத்தாள் என்று புரியாமல்தானே இருக்கும். 

‘வாய்க்கால்ல குதிச்சது போன வாரம்...அதுக்கு ஏன் இப்ப சூடு வெச்ச?’ என்றான். வசந்தா எதையும் காட்டிக் கொள்ளவில்லை. கிரைண்டர் சுவிட்சைப் போட்டு உளுந்து ஆட்டத் தொடங்கினாள். இனி என்ன கேட்டாலும் கடமுடா சத்தத்தில் அவளுக்கு காதில் விழாது. கிரைண்டருக்குள்ள கையை வெச்சு நசுங்கட்டும் என்று சாபம் விட்டான். ஆனால் இவன் சாபம் எல்லாம் பலிக்குமா? வசந்தா சன் மியூஸிக் சேனலை வைத்தாள். ‘நானே எரிச்சலில் கிடக்குறேன்..இவளுக்கு பாட்டு வேற’ என்றபடியே டிவியை பார்த்தான். த்ரிஷா மண்டி போட்டவாறு மபலியாசிபாபியாலியா என்று நகர்ந்து கொண்டிருந்தாள். நேரங்காலம் தெரியாமல் எதைக் காட்டுகிறாள் என்று தலையணை எடுத்து முகத்தில் வைத்து அமுக்கிக் கொண்டான்.

சூடு வாங்கியதற்கு இன்னொரு சம்பவம் கூடக் காரணமாக இருக்கலாம் எனத் தோன்றியது. ராமசாமி வாத்தியார் மகள் வழியில் போகும் போது ‘உங்கொப்பன்கிட்ட சொல்லி வை...உன் கையைப் புடிச்சு இழுத்து....’ என்று வாக்கியத்தை முடிக்காமல் பாதியை மட்டும் சொல்லி அனுப்பி வைத்திருந்தான். அதுவும் கூட தவறு ராமசாமி வாத்தியார் மேல்தான் என்று முழுதாக நம்பினான். வியாழக்கிழமை வீட்டுப்பாடம் கொடுத்து வெள்ளிக்கிழமை கொண்டு வரச் சொல்லியிருந்தார். எட்டாம் வகுப்பு கணக்குப்பாடம் எவ்வளவு கடினம் என்று உங்களுக்கே தெரியும். ஒரே நாளில் எப்படி முடிப்பது? எழுந்து நின்ற ஏழு பேரில் இவனும் ஒருத்தன். முட்டியைப் பெயர்த்து எடுத்துவிட்டார். அதற்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்றுதான் அவரது மகளிடம் சொன்னான். என்னதான் தைரியசாலியாக இருந்தாலும் பெண்ணுக்கு பங்கம் என்றால் பம்மிவிடக் கூடும் என்ற நினைப்பில் மிரட்டி அனுப்பியிருந்தான். ஒருவேளை அந்தாளுதான் நேருக்கு நேர் மோத வக்கில்லாமல் இப்படி பின்வாசல் வழியாக வந்து போட்டுக் கொடுத்துவிட்டானோ என்று கூடத் தோன்றியது.

‘வக்காரோலி...செஞ்சாலும் செஞ்சிருப்பான்’ என்று நினைத்தபடியே ‘எவனாச்சும் உன்கிட்ட எதையாச்சும் வத்தி வெச்சானுகளா?’ என்று மீண்டும் கத்தினான். த்ரிஷா பாடி முடித்திருந்தாள். அசினும் சூர்யாவும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

‘ஏ...உனக்கு விலாவாரியா சொல்லாணுமா?’ என்றாள். சத்தியமாக பண்டரிக்கு காரணமே தெரியவில்லை. இனிமேல் அவள் சொல்லப் போவது இல்லை எனத் தோன்றியது. இடது காலை எட்டி ஓங்கி உதைத்தான். அறைக்கதவு மூடிக் கொண்டது. கதவு அடித்த வேகத்துக்கு வசந்தாளுக்கு மறுபடி கோபம் வந்தது. ‘வந்தன்னு வைய்யி.....தோசைத் திருப்பிய முன்னாடி வெச்சு இழுத்து உட்டுடுவேன்’என்றாள். பண்டரி அதற்கு மேல் எதுவும் யோசிக்கவில்லை. எரிச்சலில் தூக்கம் வந்துவிட்டது.

வசந்தா சூடு வைக்க காரணம் குறிப்பிட்ட காரணம் எதுவுமில்லை. ஆனால் மகனை பயமில்லாமலேயே வளர்த்துவிட்டோம் என்று ஒரு வகையில் பதற்றம் தொற்றியிருந்தது அவளுக்கு. எதையாவது செய்து கொண்டிருக்கிறான். பண்டரி போகிற பாதை சரியில்லை என்று தொடர்ச்சியாக புகார்கள் வந்து கொண்டிருந்தன. தன்னுடன் பனியன் கம்பெனியில் வேலை செய்யும் பழனிசாமியிடம் சொல்லி அழுதாள். ‘அழுவாத..பதினாலு வயசுதானே ஆச்சு..வழிக்கு கொண்டாந்துடுரலாம்’ என்று ஆறுதல் சொன்னவனாக அவன்தான் சூடு வைக்கும் ஐடியாவைக் கொடுத்தான்.

மனிதமனம் சகமனிதர்களை எடை போடுவதற்கும் கட்டுக்குள் வைப்பதற்கு மேற்கொள்ளும் வழிமுறைகள் விசித்திரமானவையாகவே இருக்கின்றன. ஒரு மனிதன் யூகிப்பதை இன்னொரு மனிதனால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அப்படியொருவனால் புரிந்து கொள்ள முடியுமெனில் அவன் எதிராளியைவிட விஞ்சியவன் ஆகிவிடுகிறான்.

வசந்தாவுக்கு அந்தக் கணத்தில் பழனிசாமி பெரிய அறிவாளியைப் போலத் தோன்றினான். அதே தோரணையில் வசந்தாவிடம் பழனிசாமி மிகப்பெரிய குற்றச் செயலைச் செய்வது போல திட்டம் வகுத்துக் கொடுத்தான். ‘ஏ..எதுக்குன்னே தெரியக்கூடாது...எதாச்சும் தப்பு செஞ்சா சூடு போட்டுடுவாங்கிற பயம் மட்டும் இருந்துட்டே இருக்கோணும் பார்த்துக்க’ என்றான். அவன் சொன்னது சரியா தவறா என்றெல்லாம் புரியவில்லை. வசந்தாவுக்கு வேறு வழியும் தெரியவில்லை. இரண்டு நாட்களாக யோசித்துவிட்டுத்தான் வசந்தா நேரங்காலம் பார்த்துக் கொண்டிருந்தாள். பண்டரி குப்புறப் படுத்திருந்த போது இழுத்துவிட்டாள்.

‘அம்மா மேல பயம் இருந்தா வழிக்கு வந்துடுவான்..வரலைன்னா இன்னொருக்கா போடு’ என்று பழனிசாமி சொல்லியிருந்தான். முதல் இழுப்பை இழுத்துவிட்டாள். பண்டரிக்கு பயம் வந்துவிட்டதா என்று யாராவது மோர்பாளையத்துக்கு போனால் விசாரித்துவிட்டு வந்து சொல்லுங்கள்.

4 எதிர் சப்தங்கள்:

Radha Bala said...

Mani,

Arumaiyaana nadai; kadaisilyil oru punnagaiyai varavazhaithadhu; Superb; Keep writing :)

Regards,
Radha Bala

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

தயிர்பாளையம் தெரியும்;மோர்பாளையத்துக்கு யாராவது வழி சொல்லுங்களேன். ஒரெட்டு போய்த்தான் பார்க்கலாமே..

சேக்காளி said...

// ‘வந்தன்னு வைய்யி.....தோசைத் திருப்பிய முன்னாடி வெச்சு இழுத்து உட்டுடுவேன்’என்றாள். பண்டரி அதற்கு மேல் எதுவும் யோசிக்கவில்லை.//
பயம் வந்துடுச்சி.
செஞ்ச தப்பையெல்லாம் நினைச்சி பார்க்க ஆரம்பிச்சிட்டான்ல

Muralidharan said...

இளம் ரத்தம் அப்படிதான் ஆடும்; இதுக்கு பயம் மட்டும்தான் மருந்து.