Nov 14, 2019

ஃபாத்திமாக்கள்

சுதர்சன பத்மனாபன் என்னும் பேராசிரியர்தான் தன்னுடைய தற்கொலைக்குக் காரணம் என செல்போனில் குறித்து வைத்துவிட்டு  அந்த மாணவி இறந்திருக்கிறார். ஃபாத்திமா லத்தீப்.

வழக்கமான தற்கொலைகளைவிடவும், வழக்கமான கொலைகளைவிடவும் ஒரு இளம் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது மனதைச் சலனமடையச் செய்துவிடுகிறது. ஐஐடிதான் இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிறுவனம். அங்கே சேருவதற்கே கடும் போட்டி நிலவும் சூழலில் அந்த இளந்தளிர் எத்தனை கனவுகளுடன் காலடி எடுத்து வைத்திருக்கும்? எத்தனை வருடங்களாகத் தயாரிப்புகளைச் செய்திருப்பாள்?

ஃபாத்திமா குறித்தான செய்திகளை நேற்றிலிருந்து தேடி வாசித்துக் கொண்டிருக்கிறேன். படிக்கச் சேர்ந்த ஆறேழு மாதங்களில் கனவுகளை எரித்து, நம்பிக்கையைத் தகர்த்து, தூக்கில் ஏற்றிச் சாவடிக்கிறது என்றால் அது என்ன பெரிய கல்வி நிறுவனம்? 

ஒவ்வொரு ஐஐடியிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கிறார்கள். அதில் இப்படி ஒன்றிரண்டு சம்பவங்கள் நிகழ்வது தவிர்க்க இயலாததுதான். ஆனால் ஒரு புள்ளிவிவரத்தைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் ஐஐடிகளில் மட்டும் 52 தற்கொலைகள் நடந்திருக்கின்றன. அதில் சென்னை ஐஐடியில்தான் உச்சபட்சம். 14 தற்கொலைகள் சென்னை ஐஐடியில் மட்டும் நிகழ்ந்திருக்கின்றன. அதுவும் இந்த ஆண்டில் மட்டும் நான்கு தற்கொலைகள். ஏதோ உறுத்துகிறது அல்லவா? மத்திய அரசின் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டி நடத்தப்படும் நிறுவனத்தில் ஏன் இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 

ஒரு மாணவியின் சாவின் பின்னணியில் இருப்பது வெறுமனே மன அழுத்தம்தானா? வீட்டை விட்டு பிரிந்திருப்பது, கடும் போட்டி போன்ற அழுத்தங்கள் மட்டுமே அவர்களைத் தூக்குக் கயிறைத் தேட வைத்துவிடுகிறதா?  ஃபாத்திமாவின் சாவையும் கூட அப்படித்தான் முடித்து வைப்பார்கள். வீட்டை விட்டு பிரிந்ததனால் வருத்தத்தில் இருந்தாள்; அதனால் இறந்துவிட்டாள் என்று ஏற்கனவே செய்திகள் கசியத் தொடங்கியிருக்கின்றன. எந்தவொரு மனிதனும் சாகும் போது இன்னொருவனை நோக்கி கைநீட்டினால் அதனை உறுதியாக நம்பலாம். அதனால்தான் மரண வாக்குமூலங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகின்றன. அப்படியான முக்கியத்துவம் வாய்ந்ததுதான் ஃபாத்திமா குறிப்பிட்டிருக்கும் பெயரும் என்றே நம்புகிறேன்.

ஐஐடி போன்ற பெரு நிறுவனங்களில் நடைபெறும் துர்சம்பவங்கள் இரும்புக் கோட்டைக்குள் நடைபெறும் சம்பவங்களாகவே இருக்கின்றன. எப்படியாவது அமுக்கிவிடுகிறார்கள். சில நாட்களில் எதுவுமே நடக்காதது போல இயல்பு நிலைக்கும் திரும்பி விடுகிறார்கள். 

இத்தகைய சம்பவங்கள் நிகழும் போது தொடர்ச்சியான விவாதங்கள் நடைபெற வேண்டும்.எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க தீர்வுகளை நோக்கி நகர வேண்டும். அதற்கென அரசும், கல்வி நிறுவனங்களும் வெளிப்படையான விசாரணைக்கும்,  தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவும் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களுக்குள் கட்சி அரசியல் நுழையாமல், மதச்சாயம் பூசப்படாமல், பிற சாதி வெறுப்புணர்வு தலை தூக்காமல் இருக்க தொடர்ச்சியான முன்னெடுப்புகள் அவசியம். அதற்கு எதிராக யாரேனும் நடப்பதாகத் தெரிந்தால் தயவு தாட்சண்யமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் துணிச்சலும், தைரியமும் நிர்வாகத்திற்கு இருக்க வேண்டும். ஆனால் நிர்வாகமே இதற்கெல்லாம் வளைந்து போகிறது என்பதைத்தான் நாம் பேச வேண்டியிருக்கிறது. வெறுமனே தொழில்நுட்பத்தில் நம்மை முன்னோக்கி இழுத்துக் கொண்டு ஓடும் இத்தகை நிறுவனங்கள்தான் சமூகநீதியைப் பொறுத்தளவில் நம்மை பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துக் கொண்டிருக்கின்றன. 

பெரு நிறுவனங்களில் தவறுகள் நடைபெறுவது இயல்பு. அதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டு, இனிமேலும் தவறு நடக்காமல் தடுக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் அவசியம். அதுதான் வெளிப்படைத்தன்மை. ஆனால் ‘பெயர் கெட்டுவிடும்’ என்று அமுக்குவதிலேயே குறியாக இருப்பதுதான் கார்போரேட் கலாச்சாரம். இன்றைய அரசுகளும், கல்வி நிறுவனங்களும் கூட அத்தகைய கலாச்சாரத்தை பின் தொடர்வதுதான் பெரும் வருத்தத்தைத் தருகிறது. 

ஃபாத்திமாவின் மரணத்தை மதம் சார்ந்த பிரச்சினையாக மாற்ற வேண்டியதில்லை என்று நடுநிலை பேசுவதாக நடிக்கலாம். ஆனால் ஒருவேளை பேராசிரியர் இசுலாமியராக இருந்து இறந்த பெண் இந்துவாக இருப்பின் இன்றைய ஊடகச் சூழல் அதனை எவ்வாறு விவாதித்திருக்கும் என யோசிக்க வேண்டியிருக்கிறது. அப்படியொரு சம்பவம் நடந்திருப்பின் இந்தச் சமூகம் எப்படி அதனை விவாதப் பொருளாக்கியிருக்குமோ அதற்கு எள்ளளவும் குறைவில்லாமல் இந்தச் சம்பவத்தையும் விவாதிக்க வேண்டும். இதனை இந்து x இசுலாமியர் பிரச்சினையாக மட்டுமே முன்னிறுத்தும் போது அது பொதுமைப்படுத்துவது ஆகிவிடுகிறது.  வெறுமனே இந்து இசுலாமியர் என்ற பிரச்சினை மட்டுமில்லை. அப்படி மேம்போக்காக எடுத்துக் கொள்ளாமல் அதைத்தாண்டி நுணுக்கமாக அணுக வேண்டும். இதில் இருக்கும் பார்ப்பனியம், சாதிய உணர்வு, பேராசிரியர்கள் மட்டத்திலும் படர்ந்திருக்கும் பிற சாதி வெறுப்பு, வல்லாதிக்கம் போன்றவற்றை அலச வேண்டும். இந்தச் சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை பற்றிய புரிதலை எளிய மனிதர்களுக்கும் இத்தகைய சம்பவங்களின் வழியாக உணர்த்த வேண்டும். நமக்கான எல்லைகளை யாரோ வரையறுத்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதும், சமூக நீதியை நாம் எந்தக் காலத்திலும் துரத்திக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது என்கிற உண்மையும் முகத்தில் அறைய வேண்டும்.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை.

இரண்டு நாட்களில் #JusticeforFathima என்பதை மறந்துவிடுவோம். சுதர்சன பத்மனாபனும் இன்ன பிறரும் வழக்கம் போல சோற்றுப் போசியை எடுத்துக் கொண்டு வேலைக்குச் செல்வார்கள். ஃபாத்திமாதான் திரும்பவே மாட்டாள்.

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//இரண்டு நாட்களில் #JusticeforFathima என்பதை மறந்துவிடுவோம்//
அப்படி மறக்குற வரைக்கும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கும்.
பறக்க நினைக்குறவங்க திருப்பி தாக்கணும்ன்னு அவசியமில்ல. ஆனா மறந்து விடக் கூடாது

mokkai said...

Va Manikandan
She mentioned 3 professors names. Before writing anything do some research.
No pointing in spreading incomplete messages and tarnish a particular community.

Aravind said...

கல்விநிலையங்கள் மட்டுமில்லை. வீடுகளிலும் மாணவர்களின் கல்வித்தேவை, கற்பிக்கும் முரை பற்றி எவ்வளவு புரிந்து ஆதரவு கொடுக்கிரார்கள் என்று சிந்திக்கவேண்டும். உங்கள் மற்றொரு பதிவில் குரிப்பிட்டுள்ள காரணமே தெரியாமல் அண்டைவீட்டார் சொன்னார் என்பதர்காக சூடு வைத்த அண்ணை போலதான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கும்போது நூற்றுக்கணக்கான மாணவர்களை மேய்க்கவேண்டிய நிலையில் உள்ள ஆசிரியர்களால் எந்த அளவு மாணவர்கள் உளநிலையில் தனிக்கவணம் செலுத்தமுடியும் என்று சிந்திக்கவேண்டும்.

சேக்காளி said...

// காரணமே தெரியாமல் அண்டைவீட்டார் சொன்னார் என்பதர்காக சூடு வைத்த அண்ணை போல//
அது காரணமே இல்லாமல் வைக்கப் பட்ட சூடு அல்ல.
அவன் பயப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக வைக்கப் பட்ட சூடு

வெட்டிபையன் said...

இதே சமயத்தில் மற்றொரு முஸ்லிம் மாணவியும் தற்கொலை செய்து கொண்டார். அவரும் மற்றொரு மாநிலத்தை சேர்ந்தவர் தான்.
https://timesofindia.indiatimes.com/city/trichy/girl-ends-life-after-finding-english-tough-as-a-medium/articleshow/72046908.cms
இந்த விஷயம் கவனத்திற்கு அனைவரது வராமல் போனது ஏன்?. பொருளாதார காரணமா? செல்வாக்கா? அவரது மதமா? (கல்லூரியும் சிறுபான்மை கல்லூரி)