எப்பொழுதெல்லாம் மனம் சற்று சோர்வுறுகிறதோ அப்பொழுதெல்லாம் சில டானிக் பாட்டில்களிடம் பேசுவது வழக்கம். திருப்பதி மகேஷ் அப்படியானவர். தெலுங்குவாலா. தமிழ் படிப்பார்; எழுதுவார். பிறக்கும் போதே விழியிழந்தவர். அவரைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன். மகேஷ் அறிமுகமான போது பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் மகேஷ் அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளவே மாட்டார். ‘பரிதாபத்தையெல்லாம் நீங்களே வெச்சுக்குங்க’ என்று புறங்கையால் தள்ளிவிட்டுப் போகிற மனம் அவருக்கு வாய்த்திருக்கிறது.
திடீரென அழைத்து ‘ஒரு படம் பார்த்தேன் சார்; அட்டகாசம்’என்பார். ஒரு கணம் திகைப்பாக இருக்கும். இவர் எப்படி பார்த்திருக்க முடியும் என்று குழம்ப வைத்துவிடுவார். ‘நீங்க பார்த்துட்டீங்களா? ஹீரோயின் சூப்பர்ல’ என்பார். நாயகியின் அழகைச் சொல்கிறாரா, கதாபாத்திரத்தைச் சொல்கிறாரா என்று தெரியாது. அலுவலகக் கசகசப்பில் இருக்கும் போது அழைப்பார். ‘ஒரு பொண்ணு இன்னைக்கு பஸ்ல பக்கத்து சீட்ல உட்காந்து பேசிட்டு வந்துச்சு சார்..செம சார்’என்பார். அழகைச் சொல்கிறாரா, ஆளுமையைச் சொல்கிறாரா என்று திணறுவேன். ஆனால் அவரிடம் பேசி முடித்து இதையெல்லாம் யோசிக்கும் போது அன்றைய தினத்துக்கான ஒரு மலர் மலர்ந்தது போல இருக்கும்.
பட்டப்படிப்பை முடித்துவிட்டு, வங்கித் தேர்வில் தேர்ச்சியடைந்து தற்சமயம் திருத்தணியில் அரசு வங்கியில் பணியாற்றுகிறார். அதுவும் வாடிக்கையாளரைச் சந்திக்கும் பணி. ‘இந்தப் பையனால எப்படி முடியுது?’ என்று பலமுறை வியந்திருக்கிறேன். மிக இயல்பாக இந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் மகேஷ் போன்றவர்கள் அற்புதமான வெளிச்சப்புள்ளிகள். வெளிநாடுகளுக்கு பயணித்தாலும், வெளியூர்களுக்கு பயணித்தாலும் சிலாகிப்பார். ஒவ்வொன்றையும் ரசித்துப் பேசுவார். அங்கேயிருக்கும் சீதோஷ்ணம் மட்டுமில்லை- ‘சிங்கப்பூர் அவ்வளவு சுத்தமா இருக்கு’ என்று கூடச் சொல்லியிருக்கிறார். எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் மிக அதனாலேயே மகேஷை எனக்கு மிகப் பிடிக்கும்.
இந்த உலகத்தில் யாருக்குத்தான் குறையில்லை? புறவயமாக, வெளிப்படையாகத் தெரிகிற குறைகளை மட்டுமே குறைகள் என நினைத்து நாம் உச்சுக் கொட்டிக் கொண்டிருக்கிறோம். எனக்கு இல்லாத பிரச்சினைகளா? ஆனால் நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் பலமடங்கு பலம் நிறைந்தவன் என்று ஒரு மனிதன் நமக்கு முன்னால் முஷ்டியை மடக்கிக் காட்டும் போது ‘எதையோ சொல்லித் தர்ற நீ’ என்று அப்படியே ஏற்றுக் கொள்ளத் தோன்றுகிறது.
மகேஷ்தான் யாழினி ஸ்ரீ பற்றிச் சொன்னார். மகேஷ் ஒரு டானிக் பாட்டில் என்றால் யாழினி அவரை விட இருமடங்கு இருக்கிறார். முகம் தவிர எந்தப் பகுதியையும் அவரால் அசைக்க முடியாது. அம்மாவை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் வாழ்க்கை. அவரது பேச்சு யுடியுப்பில் இருக்கிறது. ஒரு முறை கேட்டுப் பார்க்கவும். பல முறை கேட்டுவிட்டேன். யாழினி ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். “மரப்பாச்சியின் கனவுகள்”. தலைப்பே எதையெல்லாமோ நினைக்கச் செய்துவிடுகிறது.
திருப்பூர் பொன்னுலகம் வெளியிட்டுள்ள இந்தத் தொகுப்பையும் கூட மகேஷ் அனுப்பி வைத்துவிட்டு ‘கவிதையை படிச்சுட்டு யாழினி பேசறதைக் கேளுங்க சார்’ என்றார். நான்கைந்து கவிதைகளை வாசித்துவிட்டு யாழினி பேசுவதைக் கேட்டேன். அழுகை வந்தது. சோகம் எதுவுமில்லை. அது ஒருவகையிலான நெகிழ்ச்சி.
வானளக்கும் ஆசையில்
காற்றுவெளிதனில் அலைகிறது
புல்புல்தாராவின்
மஞ்சள் அலகில் கவ்வப்பட்ட
ஈசலின் உதிர்ந்த இறகு.
இப்படியொரு கவிதை. ஒரு கணம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அமர்ந்துவிட வேண்டும் எனத் தோன்றியது.
நமக்குத்தான் உலகிலேயே மிக அதிகமான சோதனைகள் என்றுதான் பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொள்கிறோம். அப்படியெல்லாம் எதுவுமேயில்லை. நம்மைவிடவும் ஆயிரம் மடங்கு சுமைகளோடு மனிதர்கள் இருக்கிறார்கள். இருக்கிறார்கள் என்பதைவிடவும் வாழ்கிறார்கள் என்பதுதான் பொருந்தும். வாழ்ந்து காட்டுகிறார்கள். சுமைகளும், வலிகளும் நம்மை அழுத்தும் போதெல்லாம் ‘இதெல்லாம் ஒரு சுமையா?’ என்றும் ‘இந்த வலியைக் கூடத் தாங்க முடியாதா?’ என்றும் கேள்விகளை எழுப்பக் கூடிய டானிக் பாட்டில்களாக நம்மைச் சுற்றி நிறைந்திருக்கிறார்கள்.
யாழினி ஸ்ரீயின் கவிதைகள் குறித்து எழுதவும், உரையாடவும் நிறைய இருக்கின்றன. கோவையில்தான் வசிக்கிறாராம். வாய்ப்பு கிடைக்கும் போது ஒரு முறை நேரில் சந்தித்துப் பேசிவிட வேண்டும் என இருக்கிறேன். வாழ்த்துகள் யாழினி! நீங்கள் இன்னமும் வெகுதூரம் பயணிக்க வேண்டும். தொடர்ச்சியாக எழுதவும், உங்கள் எழுத்துக்களால் இந்த உலகினை அளக்கவும், உச்சம் தொடவும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
சமீபத்தில் ஒரு நண்பர் அழைத்திருந்தார். யாருக்காவது பிரச்சினை என்றால் இவனிடம் பேசலாம் என்று நினைப்பதும் அரிதுதான். அந்த நம்பிக்கையை உருவாக்குவது எளிதில்லை. அதனால் யாராக இருந்தாலும் காது கொடுத்துக் கேட்பேன். உடல்ரீதியிலான பிரச்சினை அழைத்திருந்தவருக்கு. சிறிய பிரச்சினையாகத்தான் தெரிந்தது. ஆனால் அவரது தரப்பிலிருந்து பார்த்தால் இமாலயமாக உயர்ந்து நிற்கும் பிரச்சினை. உடைந்து போயிருந்தார். பேசுகிற போது இடையிடையே அவருக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்தது. பொறுமையாகக் கேட்டுவிட்டு மகேஷ் குறித்தும் யாழினி குறித்தும்தான் சொன்னேன்.
டானிக் பாட்டில்கள் நமக்கு உணர்த்துவது ஒன்றுதான் - நீங்கள் பிரச்சினை என்று நம்பிக் கொண்டிருப்பதை விட்டு வெளியில் வந்து நின்று பார்த்தால் எதுவுமே இல்லாதது போல இருக்கும். நாமாக வெளியேறினால் உடனடியாக தப்பிவிடலாம். ஒருவேளை திணறிக் கொண்டிருந்தால் காலமே நம்மை வெளியில் தள்ளிவிடும். நீங்கள் நம்புகிற எந்தப் பிரச்சினையும் நிரந்தரமானதில்லை. அதை மட்டும் உறுதியாக நம்பலாம்.
யாழினியின் கவிதைத் தொகுப்பையும், அவர் பேசுகிற வீடியோவையும் நண்பருக்கு அனுப்பி வைத்துவிட்டு ஒரு வரியையும் வாட்ஸாப்பில் அனுப்பினேன். அதுவும் கூட யாழினியின் கவிதை வரிகள்தான் -
டானிக் பாட்டில்கள் நமக்கு உணர்த்துவது ஒன்றுதான் - நீங்கள் பிரச்சினை என்று நம்பிக் கொண்டிருப்பதை விட்டு வெளியில் வந்து நின்று பார்த்தால் எதுவுமே இல்லாதது போல இருக்கும். நாமாக வெளியேறினால் உடனடியாக தப்பிவிடலாம். ஒருவேளை திணறிக் கொண்டிருந்தால் காலமே நம்மை வெளியில் தள்ளிவிடும். நீங்கள் நம்புகிற எந்தப் பிரச்சினையும் நிரந்தரமானதில்லை. அதை மட்டும் உறுதியாக நம்பலாம்.
யாழினியின் கவிதைத் தொகுப்பையும், அவர் பேசுகிற வீடியோவையும் நண்பருக்கு அனுப்பி வைத்துவிட்டு ஒரு வரியையும் வாட்ஸாப்பில் அனுப்பினேன். அதுவும் கூட யாழினியின் கவிதை வரிகள்தான் -
முடிவறியாது துள்ளும் மனதுள்
கருமை பூசி கெக்கலிக்கிறது எதிர்காலம்.
இப்போதைய உடனடித் தேவை
சிறு புன்னகை மட்டுமே.
அவ்வளவுதான். எதையும் கடந்துவிட ஒரு சிறு புன்னகை மட்டும்தான் தேவையானதாக இருக்கிறது!
தொடர்புக்கு:
பொன்னுலகம் பதிப்பகம் - 8870733434
யாழினி ஸ்ரீ - yalinisri100@gmail.com/ +91 97152 89560
2 எதிர் சப்தங்கள்:
// அவரைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன்//
வேலைக்கு சேந்ததும் வாங்குன மொத மாசத்து சம்பளத்த நிசப்தத்திற்கு குடுத்தாரே அவரு தான?
யப்பாஆஆஆஆஆஆ
Post a Comment