Nov 21, 2019

என்ன இருந்தாலும் ஆம்பள...

கடந்த இரண்டு நாட்களாக திடீரென்று அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆண்கள் தின வாழ்த்துகள் கண்களில் தென்பட்டது. கிழவன் கோவணம் கட்டிய கதையாக. பெரும்பாலும் ஆண்களுக்கு ஆண்களே சொல்லிக் கொண்ட, சிதறிக் கிடந்தத அந்த வாழ்த்துகளைப் பார்த்த போது நினைவுகள் பால்யத்துக்கு போய்த்தான் நின்றது.

எனக்கும் தம்பிக்கும் ஒன்றரை வருடங்கள்தான் வயது வித்தியாசம். இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொள்வது சிரமம் என்பதாலோ என்னவோ பள்ளிக்கூடம் செல்லும் வரைக்கும் அமத்தாவிடம்தான் அதிகமாக இருந்த ஞாபகம். அமத்தா ஓர் ஆணாதிக்கவாதி. பெண்களைவிடவும் ஆண்களே உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் கொண்டவர். ‘என்ன இருந்தாலும் ஆம்பள’ என்கிற எண்ணத்தை விதைத்து வைத்திருந்தார். அதே நினைப்புடன்தான் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினேன்.பள்ளிக்குச் சென்ற முதல் சில வருடங்கள் முழுமையாக நினைவில் இல்லை.

இரண்டாம் வகுப்பு படிக்கும் போது சத்தியமங்கலத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். அங்கேயொரு ராட்சஸி ஆசிரியையாக இருந்தார். சித்ரா. இப்பவும் ஏதாவது முறையற்ற காமக்கதைகள், வில்லியாக யாரைவாயது சித்தரிக்க வேண்டுமானால் நான் பயன்படுத்துகிற பெயர் அது. அந்த ராட்சஸிக்கு எப்படித்தான் அப்படியெல்லாம் தோன்றுமோ தெரியவில்லை- வகுப்பறையில் ஒரு பையன், ஒரு பெண் என்று மாற்றி மாற்றி அருகில் அமர வைத்துவிட்டார். கொஞ்சம் விவரம் வந்த பிறகு அப்படி அமர்ந்திருந்தால் கூட எசகுபிசகாக எதையாவது செய்து பார்த்திருக்கலாம். அப்பொழுதெல்லாம் ‘கேர்ள்ஸ் மேல பாய்ஸ் முட்டக் கூடாது’ என்று தொடை இரண்டையும் சேர்த்து இறுக்கி அமர்ந்து கொள்வேன். இரண்டு பக்கங்களில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களில் ஒரு பெண்ணின் முகம் கூட ஞாபகமில்லை. ஆனால் இன்னொரு பக்கம் அமர்ந்திருந்த பானுவின் ஞாபகம் இருக்கிறது. அவளும் ஒரு ராக்காஸி. அவளுடைய வேலையே என்னைக் கிள்ளி வைப்பதுதான். எப்பொழுது வேண்டுமானாலும் கிள்ளி வைக்கும் உரிமை அவளுக்கு இருந்தது. ஆரம்பத்தில் எதிர்த்துப் பார்த்தேன். மிஸ்ஸிடம் சொல்லி வைத்தேன். ‘தொணதொணன்னு பேசிட்டு இருக்கான் மிஸ்’ என்று அவள் சமாதானம் சொன்னால் போதும். சித்ரா மிஸ்ஸூம் சேர்ந்து அடிப்பார். சித்ராவிடம் அடிவாங்குவதற்கு பதிலாக இவளது கிள்ளலோடு நிற்கட்டும் என்று அவள் என்னதான் கிள்ளினாலும் பொங்கி வரும் அழுகையை அப்படியே அடக்கிக் கொள்வேன். 

பானுவுக்கு ஒண்ணுக்கு வந்தால் கூட என்னைக் கிள்ளி வைப்பாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கர்ண கொடூரி. அப்படி அவள் கிள்ளிக் கிள்ளி, அமத்தா ஊட்டி வளர்த்த ‘என்ன இருந்தாலும் ஆம்பள’ என்பதெல்லாம் தொடை வழியாக வழிந்து கொண்டேயிருந்தேது. ‘அவளை எப்படியாச்சும் கொன்றுவிட வேண்டும்’ என்றெல்லாம் கூட திட்டமிட்டேன். அவளைப் பார்த்தாலே பயமாக இருக்கும். நாட்கள் செல்லச் செல்ல சித்ராவும் பானுவும் என் தொடை மீது கதக்களி ஆடி, குண்டம் இறங்கிக் கொண்டேயிருந்தார்கள். ஒருவழியாக அம்மாவுக்கு பணியிட மாறுதல் கிடைக்க அந்த வருடம் பள்ளிக்கூடம் மாற்றிவிட்டார்கள். அதனால் தப்பித்தேன். இல்லையென்றால் வெறியெடுத்த சைக்கோவாகியிருக்கக் கூடும். எப்படிச் சொல்கிறேன் என்றால் இன்று வரைக்கும் எனக்கும் அவ்வப்பொழுது கனவில் வந்து பானு கிள்ளி வைக்கிறாள்; கடிக்கிறாள். கடிக்கிறாள் என்றால் நடிகையொருத்தி நாயகனின் காதை செல்லமாகக் கடிப்பது போல நீங்கள் கருதிக் கொள்ளக் கூடாது. 

கடந்த வாரத்தில் வந்த கனவைச் சொல்கிறேன். வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பெண்ணின் உடல் மிதந்து வருகிறது. முகம் நீருக்குள் புதைந்திருக்கிறது. ஒரு நீண்ட குச்சியை எடுத்து உடலை இழுக்கிறேன். ஓர் அசைவுமில்லை. பக்கத்தில் வந்தவுடன் உடலைத் திருப்பினால் தலைமுடி மட்டும் கிராப் வெட்டப்பட்டு பானுவைப் போல இருக்கிறது. முகம் தெளிவில்லை. திடீரென்று எழுந்தவள் என்ன செய்திருப்பாள் என நினைக்கிறீர்கள்?  நன்றி சொல்லியிருப்பாள் என்று சிலர் கருதக் கூடும். தொடையைக் கிள்ளியிருப்பாள் என்று பலர் நினைக்கக் கூடும். இரண்டுமில்லை- முதல் வேலையாக கழுத்துக்குக் கீழாக தோள்பட்டையில் வெறுவெறுவென்று கடிக்கத் தொடங்கிவிட்டாள். ரத்தம் வாய்க்கால் நீரோடு கலந்து பிசுபிசுத்து ஓடுகிறது. எப்படித் தப்பித்தேன் என்று தெரியவில்லை. கனவில் பெண்ணொருத்தி வந்து கடித்து வைத்தாள் என்று மொட்டைத்தலையன் குட்டையில் விழுந்த மாதிரி சொன்னால் அடுத்தவர்களுக்கு எப்படியெல்லாம் கற்பனை ஓடும்? வெளியில் சொல்லவா முடியும்? உங்களிடம்தான் கொட்ட முடிகிறது. பானு இன்னமும் Nightmare என்பதை வேறு எப்படிப் புரிய வைப்பது. 

பானு கதை இப்படி என்றால் ஐந்தாம் வகுப்பில் மகேஸ்வரி என்றொருத்தி இருந்தாள். கருகருவென்று வாட்டசாட்டமாக இருப்பாள். ஐந்தாம் வகுப்பு வரைதான் என்னை இருபாலர் பள்ளியில் படிக்க வைத்தார்கள். மகேஸ்வரி ஒரு பெரிய ரவுடி. கையில் சிக்கினால் சாத்திவிடுவாள். அவளிடம் நான் வம்பு செய்ததாக எந்த நினைவுமில்லை. அன்றைக்கும் இப்படித்தான் ஒல்லிப்பிச்சானாக இருப்பேன். அவளிடம் வம்பு செய்கிற அளவுக்கு உடலில் ஓட்டம் போதாது. அப்படி ஓடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு நாள் மதிய உணவு இடைவேளையின் போது வேறொரு பெண்ணிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அப்பொழுது பார்த்து ஓர் ஆசிரியை வந்துவிட்டார். வகுப்பறையில் நான்கைந்து பேர்தான் இருந்தோம். டீச்சர் விசாரணையைத் தொடங்கினார். எல்லோரும் ஒவ்வொரு காரணத்தைச் சொன்னார்கள். முந்திரிக்கொட்டையாக நான்தான் மகேஸ்வரிதான் முழுமையான காரணம் என்று சொல்லிவிட்டேன். அப்பொழுதும் கூட ‘என்ன இருந்தாலும் ஆம்பள’ என்கிற எண்ணம் எனக்குள் உறங்கியிருந்திருக்க வேண்டும். டீச்சர் மகேஸ்வரியை நான்கு சாத்து சாத்திவிட்டுச் சென்றுவிட்டார். மகேஸ்வரி அழுது கொண்டிருந்தாள். அப்பொழுதாவது அமைதியாக இருந்திருக்கலாம். பக்கத்தில் போய் ‘இனிமே யாரையும் அடிக்காத’ என்றேன். சொல்லி வாய் மூடவில்லை. முறைத்துவிட்டு ஒரு தள்ளு தள்ளினாள் பாருங்கள். சுவரோடு சுவராக அப்பினேன்.  வெறியெடுத்து எழுந்தவள் நரம்படி நாராயணனாக இருந்த என் இரண்டு கைகளையும் பின்னால் சேர்த்து அவளது இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு தனது முட்டியை வைத்து முதுகில் நான்கைந்து இடி இடித்தாள். சுவரில் மோதிய போதே கண்கள் இருண்டு, பாதி சிறுநீர் பை நிரம்பியிருந்தது. அவள் முட்டியை வைத்து இடிக்கவும், சிறுநீர் பெருக்கெடுக்க மூச்சே நின்றுவிட்டது. திருப்பி அடிக்காவிட்டாலும் தொலைகிறது. என்னால் தப்பிக்கவும் முடியவில்லை. தனது வெறியெல்லாம் தீர்ந்த பிறகு ‘இனிமே டீச்சர்கிட்ட சொல்லி வைக்காத’ என்றாள். அழுதபடியே கழிப்பறையை நோக்கி ஓடினேன். அவளையும் கொன்றுவிட வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஐந்தாம் வகுப்பு வரைக்கும் அவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை. 

இப்பொழுது பானு, மகேஸ்வரியெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சிறு வயதிலேயே ‘என்ன இருந்தாலும் ஆம்பள’ என்கிற எண்ணத்தில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டவர்கள் அவர்கள்தான். ஒருவேளை அவர்களையும் கீழே போட்டு மிதிக்கும் ஆண்கள் கணவனாக வந்திருக்கலாம் அல்லது எவனாவது முரட்டு அடி வாங்கிக் கொண்டிருக்கலாம்.

பானு, மகேஸ்வரி மாதிரியான பெண்களை எல்லாம் எதிர்கொண்ட வாழ்க்கையில் அடுத்த ஏழு வருடங்களுக்கு பெண் வாசமே இல்லை. சைட் அடித்துக் கொண்டு திரிந்தாலும் பெண்களின் பக்கத்திலேயே போனதில்லை. அதனால் அவர்களும் என்னை அடிக்கவில்லை. ஆனால் பெண்களிடம் போனால் அடி விழும் என்கிற பயம் மட்டும் ஆழ ஒட்டிக் கொண்டது. பெண்கள் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கலாம். ஆனால் எனக்கு இந்த பயம்தான் அதிகம்.இந்த லட்சணத்தில் ‘ஆண்கள் தினம்’ வேறு கொண்டாடுகிறார்கள். ‘ஆணாகப் பிறந்ததற்கே வெட்கப்படுகிறேன் டோலி’ என்று ஆல்பர்ப்பஸ் அங்கிள் ஆவதற்கு முயற்சி செய்யும் போது கூட இந்த பயம்தான் எட்டிப் பார்க்கிறது.  இதையெல்லாம் சொன்னால் ‘கதை விடுறான்’ என்று முகமூடி ராஜேஷ் மாதிரியான ஆட்கள் கலாய்க்கக் கூடும். நீங்களே சொல்லுங்கள் - இந்தக் காலத்தில்  யாரைத்தான் கலாய்க்காமல் விட்டுவைக்கிறார்கள்? 

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

// தனது முட்டியை வைத்து முதுகில் நான்கைந்து இடி இடித்தாள்.//
இது முன் பக்கமா நடந்துருந்தா என்ன ஆகியிருக்கும்.
அன்னைக்கே "என்ன இருந்தாலும் ஆம்பள" ங்கற இந்த பதிவு எழுதுவதற்கான ஆதாரம் பறி போயிருக்கும்.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

#இது முன் பக்கமா நடந்துருந்தா என்ன ஆகியிருக்கும்.
அன்னைக்கே "என்ன இருந்தாலும் ஆம்பள" ங்கற இந்த பதிவு எழுதுவதற்கான ஆதாரம் பறி போயிருக்கும்#
மணிக்கு சரியான சேக்காளியே தான்.. வாழ்க வளமுடன்

Jaikumar said...

வைரவிழா பள்ளியில் படித்த நீங்கள் பக்கத்தில் இருக்கும் பழனியம்மாள் பள்ளி தாவணிசிட்டுகளை சைட் மட்டுமே அடித்தேன் என சொல்லுவது எனக்கு நம்பிக்கை இல்லை.