அண்ணா,
டிஜிட்டல் வளர்ச்சியை கவனித்து வருகிறவனாக, நான் தெரிந்து வைத்திருக்கும் சில புள்ளி விவரங்கள் இவை.
1. சராசரியாக ஒவ்வொரு இந்தியனும் ஒரு நாளைக்கு 2.5 மணி நேரங்களை தனது தளத்தில் செலவிடுவதாக யுடியூப் சமீபத்தில் ஓர் அறிக்கையில் தெரியப்படுத்திருக்கிறது. இந்தியாவில் டிஜிட்டல் நுட்பத்தின் வளர்ச்சி விகிதத்தைக் கணக்கில் கொண்டு அவர்கள் (யுடியூப்) தரமான உள்ளடக்கத்திற்கு மிக அதிகளவில் முதலீடு செய்வது தெரிகிறது. உதாரணமாக: LetsMakeEngineeringSimple, StudyIQ etc).நல்ல உள்ளடக்கம் எனில் நிறைய பார்வையாளர்கள் நேரத்தைச் செலவிடுவார்கள் என்பதுதான் இதில் மறைமுக உத்தி. பார்வையாளர்களைக் கட்டிப் போடும் கணக்கீடு. இதே போலத்தான் யுடியூப் ஒவ்வொருவரின் அனுபவத்தையும் தனிப்பட்டதாக (personalize) மாற்ற கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களை எதை வைத்து இழுத்துப் பிடிக்க முடியும் என்று கவனித்து அதை மட்டுமே கண்ணில் காட்டுகிறார்கள்.
2. வெற்றிகரமான இணைய செயலிகள் ஒரு ஃபார்முலாவைப் பின்பற்றுகின்றன-அவர்களது செயலியில் நீங்கள் செலவிடும் நேரத்துக்கும், அந்தச் செயலியில் நீங்கள் செய்யும் செயலுக்கும் ஏதாவதொருவிதத்தில் உங்களுக்கான வெகுமதியைத் தந்துவிடுகின்றன. பொருளாதார வெகுமதி என்றில்லை; ஏதாவதொரு வெகுமதி. அவர்களது செயலி வடிவமைப்பே கூட நீங்கள் அடிக்கடி வரும்படிதான் அமைந்திருக்கும். எவ்வளவு முறை நீங்கள் ஒன்றைச் செய்தாலும் அது எதையும் மாற்றாது என்று தெரிந்தும் செய்து கொண்டேயிருப்போம்.
3. இணையத்தைப் பொறுத்தவரைக்கும் வரைமுறைப்படுத்த சட்டம் இயற்றுவது கூட சவாலான காரியம்தான். இன்றைக்கு ஒரு பிரச்சினை என்று நாம் கருதிக் கொண்டிருப்பது நாளை வேறொரு வடிவம் பெற்றிருக்கும். இந்த உலகம் கணிக்கவே முடியாத வேகத்தில் உருமாறிக் கொண்டிருக்கிறது.
4. https://www.parentcircle.com/gadget-free-hour/ இந்த தளத்தை முயற்சித்துப் பாருங்கள்.
உடல்ரீதியாக என்பதைவிடவும், மனிதர்கள் உளவியல் ரீதியாக தங்களது செல்போனுடன் பிணைக்கப்படுகிறார்கள்.
*********
இணையத்தை செல்போன் வழியாகப் பயன்படுத்துவதைக் குறைக்க சரியான திட்டமிடல் அவசியம். எதைக் குறைக்க வேண்டும், எப்படி குறைக்க முடியும் என்கிற திட்டமிடல் நம்மை ஓரளவு வெற்றியடையச் செய்யும். நாம் மிக அதிகமாகப் பயன்படுத்தும் மூன்று செயலிகளை எடுத்துக் கொள்ளலாம்- WhatsApp, Facebook and YouTube.
இந்த மூன்றிலும் நம்மோடு தொடர்பினை உடனடியாக முழுமையாக மாற்றுவது சாத்தியமில்லை. ஆனால் சிறு சிறு மாற்றங்களை தொடர்ச்சியாகச் செய்ய முடியும். நான் பின்வரும் வழிகளில் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.
1. WhatsApp
- முகப்பு படத்தையோ, நிலைத்தகவலையோ அடிக்கடி மாற்றுவதில்லை. (குறைந்தபட்சம் பதினைந்து நாட்கள்)- முகப்புப்படமே இல்லாமல் இருந்தால் இன்னமும் சிறப்பு.
- கடைசியாக எப்பொழுது பார்த்தேன் என்பதை யாருமே பார்க்க முடியாதபடிக்கு மாற்றி வைத்திருக்கிறேன். அடுத்தவர்கள் அனுப்பும் செய்தியை பார்த்ததற்கான அத்தாட்சியான ‘ப்ளூ டிக்’ என்பதை மறைத்து வைத்திருக்கிறேன். (இவை யாருக்கும் உடனடியாக பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்னும் நிலையை உருவாக்குகிறது)
- முக்கியமில்லாத குழுமங்களிலிருந்து வெளியேறிவிடுகிறேன் அல்லது ம்யூட் செய்துவிடுகிறேன்.
2. Facebook
- செயலியை நீக்கிவிடுங்கள்; மெஸஞ்சரும் செல்போனில் அவசியமில்லை. தேவைப்படும் போது ப்ரவுசர் வழியாகத் திறந்து கொள்ளலாம்.
3. YouTube
- ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் நினைவூட்டல் வைத்துக் கொள்கிறேன். பதினைந்து நிமிடங்களில் வீடியோ நின்றுவிடும்.
- வீடியோக்களுக்கான முன்னுரிமைகளை வரையறுத்து வைத்திருக்கிறேன். விருப்பமற்ற வீடியோக்களில் ‘Not Interested' என குறித்துவிடுவேன்.
இன்னமும் நிறைய எழுத விரும்புகிறேன். இப்போதைக்கு இவை போதும் எனத் தோன்றுகிறது.
மணிவண்ணன்.
மணிவண்ணன், பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். தற்சமயம் வேலையை உதறிவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக சென்னையில் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.
4 எதிர் சப்தங்கள்:
#மணிவண்ணன், பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். தற்சமயம் வேலையை உதறிவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக சென்னையில் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்#
சமுதாயம் பயனுள்ள சேவையைப் பெறும் வகையில் இன்னொரு, இந்த மணி குடிமைப்பணியில் விரைவில் அமர வேண்டும் என வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்
True one
Detailed analysis by Mr.Manivannan. Surely he will be a successful IAS administrator.
மிக்க மகிழ்ச்சி, நேரம் கிடைத்தால் இந்த புத்தகம் படியுங்கள் -
* The Shallows – What the Internet Is Doing to Our Brains
புத்தகம் கிடைக்கவில்லை என்றால் ANYBOOKS appஇல் (https://www.anybooks.app/landingpage) கிடைக்கும்.
கூடுதல் தாவல்.,
* முடிந்தால் TELEGRAM உபயோகிக்கவும் (whatsapp மாற்று)
Post a Comment