Sep 29, 2019

வீடு திரும்பல்..

எனக்கு சுமார் பத்து வயதிருக்கும் போது காவிரி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவுக்குள் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டிருந்தது. வாகன போக்குவரத்து எதுவுமில்லை. எங்கள் வீட்டில் ஒரு வயதான பாட்டி வந்து அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அவரது மகள் குடும்பம் சாம்ராஜ்நகர் பக்கத்தில் தோட்டமொன்றை குத்தகைக்குப் பிடித்து விவசாயம் செய்து கொண்டிருந்தனர். பிரச்சினை பெரிதாவதை உணர்ந்த தமிழ் குடும்பங்கள் தம்மால் இயன்றதை மட்டும் எடுத்துக் கொண்டு நடந்தே தமிழக எல்லைக்குள் நுழைந்துவிடுவது என சாரிசாரியாக கிளம்பியிருந்தனர். அந்த பாட்டிக்கும் அப்படியொரு செய்தி வந்திருந்தது. மகள் கிளம்பிவிட்டதாகச் சொல்லிவிட்டு அழுதார். அன்றைய தினம் முழுவதும் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் காலையில் பாட்டியின் மகள் குடும்பம் ஊர் வந்து சேர்ந்தது. 

வெறுமனே நடப்பது வேறு. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடப்பது வேறு. இரண்டுக்கும் வித்தியாசமிருக்கிறது இல்லையா? காலங்காலமாக உழைத்துச் சேர்த்த சொத்துக்களையெல்லாம் விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஏதோவொரு திசையில் ஓட்டமும் நடையுமாக நடப்பது எவ்வளவு கொடுமையான அனுபவம்?

இரண்டாம் உலகப்போரில் ரஷ்ய கம்யூனிச படைகளால் கைது செய்யப்பட்டு சைபீரியாவில் அடைக்கப்பட்ட சிலர் அங்கேயிருந்து நடந்தே இந்தியாவுக்குள் வந்தார்கள்.  சைபீரியாவில் முகாமில் அடைக்கும் போதே ‘இங்க உங்களுக்கு துப்பாக்கிகளைவிடவும் இயற்கைதான் காவல்; இயற்கைதான் பேய்’ என்று சொல்லித்தான் அடைக்கிறார்கள். மிகக் கொடூரமான குளிர். அடைக்கப்பட்டவர்களில் திருடர்களும், கொலைகாரர்களும் உண்டு. அரசியல் கைதிகளும் உண்டு. முகாமில் எப்பொழுது வேண்டுமானாலும் உயிர் போய்விடும். பசியினால், குளிரினால், நோயினால், துப்பாக்கி குண்டு ஒன்றினால், உடன் இருக்கும் சக கைதியினால்- எப்பொழுது உயிர் போகும் என்று யாருக்கும் தெரியாது. ஒருவேளை இத்தகைய காரணங்களினால் உயிர் போகவில்லையென்றால் பத்து வருடங்கள், இருபது வருடங்கள் என்று தண்டனைக்காலம் முழுவதும் அதிலேயே கிடந்து உழல வேண்டும். இங்கே சாவதற்கு பதிலாக தப்பிப் போய் செத்துத் தொலையலாம் என்று நினைத்துவிடும்படியான சூழல் அது.


The Wayback என்றொரு படம். பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான படம் அது. குழந்தைக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒட்டகம், பாலைவனம் என்றெல்லாம் அளந்துவிட்டேன். இரண்டு நிமிடங்களுக்கு மேல் பாலைவனம் பற்றி எதுவும் சொல்லத் தெரியவில்லை. அவன் உறங்கிய பிறகு பாலைவனம் சம்பந்தப்பட்ட திரைப்படங்களை இணையத்தில் தேடிய போது கிடைத்தது. சனிக்கிழமையே எழுதியிருந்தால் வார இறுதியில் நிறையப் பேர் பார்த்திருப்பார்கள். ஊர் சுற்றச் சென்றுவிட்டதால் எழுத வாய்க்கவில்லை. 

The Wayback தரமான படம். சைபீரியச் சிறை வளாகத்திலிருந்து கடுமையான பனியிரவில் குழுவாகத் தப்பிக்கிறார்கள். வீசும் பனிக்காற்று நடந்து செல்லும் கால் தடத்தை மறைத்துவிடும் என்பதால் அன்றைய தினம் தப்பித்துச் சென்றால் காவலர்களால் பின் தொடர முடியாது என்பது அவர்களின் திட்டம். தப்பிச் செல்லும் குழுவில் ஒவ்வொருவருக்கும் ஒரு பின்னணி. ஒவ்வொருவருக்கும் ஒரு மனநிலை. வெறித்தனமாக ஓடுகிறார்கள். நாள்கணக்கில், மாதக்கணக்கில் என்று பயணம் நீள்கிறது. உணவு, தண்ணீர் - சில நாட்களுக்கு மட்டுமே கைவசமிருக்கிறது. சைபீரியாவிலிருந்து மங்கோலியா, திபெத் வழியாக சிக்கிம் வரைக்கும் கிட்டத்தட்ட ஆறாயிரம் கிலோமீட்டர் தொலைவுப்பயணம் அது. அவ்வளவு தூரம் பயணிக்காமல் தப்பிக்க முடியாதா என்றுதான் தோன்றும்.  சைபீரியச் சிறை வளாகத்தின் கிழக்கில் சென்றாலும் படைகள் இருக்கின்றன; மேற்கிலும் படைகள் இருக்கின்றன. எனவே தெற்கு மட்டும்தான் ஒரே வழி என்று நடக்கத் தொடங்குகிறார்கள். தெற்கில் ரஷ்ய எல்லையைத் தாண்டி மங்கோலியாவுக்குள் நுழையும் போது அங்கேயும் கம்யூனிஸம்தான். புத்த கோவில் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. மங்கோலியாவும் தமக்கான போக்கிடமில்லை என்று திபெத்தை நோக்கி நடக்கிறார்கள். அங்கேயிருந்து இமயமலையைத் தாண்டினால் பிரிட்டிஷ் அரசாங்கம் தமக்கு புகலிடம் அளித்துவிடும் என்று நம்புகிறார்கள். 

சைபீரியாவில் பனி, மங்கோலியாவில் மணல் நிறைந்த பாலை என்று விதவிதமான நிலங்களைத் தாண்டி வருவதுதான் கதை.  ‘சும்மாவே நடக்கிறார்கள்’ என்று கதை எழுதினால் போரடிக்காதா? அதனால் இயற்கை பறிக்கும் உயிர்கள், இவர்களோடு இடையில் சேர்ந்து கொள்ளும்- அவள் வேறொரு முகாமிலிருந்து தப்பி வந்த பெண்- உணவுக்கான திண்டாட்டங்கள், நீருக்கான போராட்டங்கள் என கச்சிதமாகக் கலந்து இரண்டு மணி நேரமும் கவனம் சிதறாமல் பார்க்க முடிகிற படம். சில படங்களைப் பார்க்கும் போது ‘தப்பிச்சுடுவாங்களா?’ ‘எவ்வளவு பேர் தப்பிப்பாங்க?’ என்று கேள்விகள் தோன்றிக் கொண்டேயிருக்குமல்லவா? அப்படியான படம் இது. The long walk என்ற ஆங்கில நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். 

உலகப்போர், வரலாறு சம்பந்தப்பட்ட படங்கள் பெரும்பாலும் நம்மை உணர்வு ரீதியில் கிளறக் கூடியவை. அத்தகைய படங்கள் ஒரு பக்கம் என்றால், வரலாற்றின் முந்தைய பக்கங்களையும், அந்த மாபெரும் புத்தகத்தின் பக்க இடுக்குகளில் நசுங்கி அடையாளம் தெரியாமல் சிதைந்து போன சிறு பூச்சிகளின் சின்னஞ்சிறு கதைகளைத் தேடச் செய்யும் படங்கள் இன்னொரு பக்கம். சைபீரியாவிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த இந்த மனிதர்களும் அப்படியான சிறு பூச்சிகள்தான். வதை முகாம்கள் பற்றித் தேட வேண்டும் என்று மனதை கிளர்த்தும் பூச்சிகள் இவை. 

வதை முகாம்கள் பற்றிய வரலாறுகள் மிகக் குரூரமானவை. அங்கே நடந்தேறும் அநியாயங்கள் திகிலூட்டக் கூடியவை. உலகம் முழுக்கவும் பல்வேறு முகாம்கள் அப்படித் திறக்கப்பட்டிருக்கின்றன. சர்வாதிகார அரசுகள், சகல அதிகாரங்களும் கொண்ட அதிகாரிகள், அவர்கள் மேற்கொள்ளும் வதைகள் என பெரும்பாலான முகாம்கள் கொலைக் கூடங்களாகத்தான் வரலாறுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அரசாங்கம் அவற்றுக்கு விதவிதமான பெயர்களை வைக்கும். வெளியுலகம் அந்தப் பெயரில்தான் முகாம் பற்றிக் கேள்விப்படும். ஆனால் முகாம்களுக்குள் நடக்கும் கொடுமைகளை முகாம்வாசிகள் மட்டுமே அறிவார்கள். இந்தியாவிலும் கூட அப்படியொரு முகாம் வந்துவிடுமோ என்று நினைக்கும் போது விரல்களில் பதற்றம் பரவுவதை உணர முடிகிறது. 

மாபெரும் கனவுகளுடன் சேர்த்து வைத்த சொத்துகளையெல்லாம் விட்டுவிட்டு இழுத்து வரப்பட்டவர்கள்; உறவுகளை இழந்தவர்கள்; பெருங்கூட்டமாக அடைப்பட்ட வளாகங்களில் சொற்பமான உணவு, பரவும் நோய்கள், வாழவே வழியில்லை என்று மனரீதியில் உடைந்து போன உணர்வுகள் என்று முகாம்களை நினைக்கவே பயமாக இருக்கிறது. 

அசாமில் குடியிருக்கும்  ‘இந்தியர் அல்லாதவர்கள்’ என கணக்கெடுக்கப்பட்டவர்களுக்கு என முகாம் ஒன்று உருவாக்கப்படுவதாக செய்திகள் வெளியான போது அதிர்ச்சியாக இருந்தது. இந்த நாடு எந்தக் காலத்திலும் அப்படியான முகாம்களை அமைக்காத சுதந்திர தேசம் என்று கடந்த சில மாதங்கள் வரை நம்பிக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்.  

காந்தியை மட்டுமே கைக்கொள்ள வேண்டியிருக்கிறது!

6 எதிர் சப்தங்கள்:

NAGARAJAN said...

நமது நாடு சத்திரமல்ல. அஸ்ஸாம் மாநிலத்தில் திட்டமிட்டு திருட்டுத்தனமாக ஊடுரியவர்களை வெளியேற்றியே ஆக வேண்டும்.

Jaypon , Canada said...

ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை தெரியுமா? தேடி அதையும் படிங்க.

Yogi said...

Reading some of the comments here makes me realize how much hate politics have shaped our thinking. Very sad to see a society that used to be proud on their hospitality and humanity have been reduced to this. Nowadays "Tamilan" just means to show "Gethu" and other superficial egoistic boastings. All this "Other people are bad" "We are good" mentality is the foundation of the poison that is killing our society..slowly but steadily.

மதன் said...

உயிரை பணயம் வைத்து எல்லை தாண்டி வருபவர்கள் எல்லாரையும் தீவிரவாதிகள் என சித்தரிப்பதில் பெரும் வெற்றி கண்டுள்ளது இந்த அரசு. அவர்கள் மாற்று மதமாக இருப்பதும் ஒரு காரணம். ஆனால் நாட்டை விட்டு அகதியாகவோ வருவது நல்ல வாழ்வுக்கேயன்றி தீவிரவாதியாக அல்ல என்பதை எப்படி புரிய வைப்பது?

வசதியான வாழ்வுக்கு விசா எடுத்து போய் கிரீன் கார்டு வாங்கி செட்டில் ஆகலாம். அது நியாயம். அதே வசதிக்காக எல்லை தாண்டுபவன் தீவிரவாதி!!!!

சேக்காளி said...

"யாதும் ஊரே யாவரும் கேளீர்"
இப்பல்லாம் அர்த்தம் தெரியாமலயே சொல்லுறாங்களோ

தெல்லியூறான் said...

அண்ணா உங்களுக்கு மிக அருகில் இருக்கும் ஈழதேசம் நீங்கள் கூறிய அனுபவங்களை இரத்தமும் சதையுமாக அனுபவித்தவர்கள். 30.10.1995 அன்று யாழ்ப்பாண மக்கள் தலைவரின் வேண்டுகோளை ஏற்று காலம்காலமாக வாழ்ந்த இடத்தை விட்டு ஒரே இரவில் இடம்பெயர்ந்தார்கள்.

//வதை முகாம்கள் பற்றிய வரலாறுகள் மிகக் குரூரமானவை. அங்கே நடந்தேறும் அநியாயங்கள் திகிலூட்டக் கூடியவை.// ஈழத்திலும் அவ்வாறான வதைமுகாங்கள் இருந்தன.

//அசாமில் குடியிருக்கும் ‘இந்தியர் அல்லாதவர்கள்’ என கணக்கெடுக்கப்பட்டவர்களுக்கு என முகாம் ஒன்று உருவாக்கப்படுவதாக செய்திகள் வெளியான போது அதிர்ச்சியாக இருந்தது.//

தமிழகத்தில் ஈழ ஏதிலிகளுக்கு என்று பல சிறப்பு முகாங்கள் ஏற்கனவே உண்டு.

நீங்கள் அதனைப்பற்றியும் எழுதவேண்டும் என்பது எங்கள் பணிவான வேண்டுகோள்