கடந்த சில ஆண்டுகளில் தமிழகம் முழுக்கவும் பரவலாக குளங்கள் மேம்பாடு, பசுமை வளர்ப்பு ஆகியவற்றில் விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது. நிறையப் புகார்கள் முன்வைக்கப்பட்டாலும் பணிகள் நடக்கின்றன என்பதுதான் உண்மை. சமீபத்தில், மராமத்து பணிகளுக்காக குளங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் என்று சில குளங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. குளத்து மண்ணை வெளியில் விற்பனை செய்ய அனுமதியில்லை. அது சரியான முடிவுதான் என்றாலும் மண்ணை விற்பனை செய்யாமல், ஒரு லட்ச ரூபாயை வைத்துக் கொண்டு குளத்தை மேம்படுத்துவது சாத்தியமில்லாத காரியம். குளத்தை ஆழப்படுத்தாவிட்டாலும், கரைகளை மட்டும் மேம்படுத்திக் கொள்ளுங்கள் என்று அரசாங்கம் அறிவுறுத்தியிருக்கிறது.
வெகு சில ஊர்களில் பணிகள் வெகு வேகமாக நடக்கின்றன. மண்ணை விற்பனை செய்ய அனுமதியில்லை என்றாலும் அரசல்புரசலாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு நாம் தூர் வாரிய கோட்டுப்புள்ளாம்பாளையம் குளத்துக்கு பத்து பைசா கூட செலவாகவில்லை. அது வேறு கணக்கு. குளத்திலிருந்து மண்ணை அள்ளிக் கொள்ள ஆட்சியர் அனுமதியளித்திருந்தார். உள்ளூர்க்காரர்கள் மண்ணை எடுத்து விற்பனை செய்தார்கள். அதுவே மண் அள்ளும் எந்திரம், ட்ராக்டர் வாடகைக்கு சரியாக இருந்தது. உள்ளூர்வாசிகளே அணி திரண்டு செய்ததால் மிகச் சுலபமாக பணி முடிந்து, குளம் ஆழமாகி, நீரும் நிரம்பியது. கோட்டுப்புள்ளாம்பாளையத்தின் குளத்தைப் பொறுத்த வரைக்கும் குளத்தின் கரைகளை மேம்படுத்தவில்லை. மண் அள்ளப்பட்டு குளத்தின் ஆழம் மட்டும் அதிகரிக்கப்பட்டது.
பொதுவாக, ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து குளங்களின் கரைகளை மட்டும் வலுப்படுத்தினால் அர்த்தமேயில்லை. இதுவரையிலும் பார்த்ததில் பல குளங்களின் நீர்வரத்து பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. நீர் வரத்துப் பாதைகளைச் சரி செய்யாமல், மண்ணை அள்ளி கரையில் போட்டு குளத்துக்கு மேக்-அப் மட்டும் செய்து என்ன பலன்? அதனால் நீர் வரத்துப் பாதைகளைச் சரி செய்வதாக இருந்தால் குளத்தில் கை வைக்கலாம். அப்படியான குளங்களில்தான் பணியும் செய்ய வேண்டும். கோட்டுப்புள்ளாம்பாளையம் குளத்தைத் தூர் வாரிக் கொண்டிருந்த போது அந்தக் குளத்துக்கும் கோபிபாளையம் குளத்துக்கும் இணைப்பு இருப்பதைப் பற்றிச் சொன்னார்கள். கோட்டுப்புள்ளாம்பாளையம் குளத்தில் நீர் நிரம்பினால் வழிந்தோடும் நீரானது அடுத்து கோபிபாளையம் குளத்துக்குத்தான் வந்து சேரும்.
அந்தச் சமயத்திலேயே கோபிபாளையம் குளத்தையும் தூர் வாரலாம் என்றார்கள். எனக்குத்தான் பயமாக இருந்தது. அகலக்கால் வைத்து சிக்கிக் கொண்டால் வம்பாகிவிடும். அதனால் ஒரு வருடம் ஆகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தோம். சமீபத்தில் அரசு ஒதுக்கிய ஒரு லட்ச ரூபாயை வைத்துக் கொண்டு உள்ளூர்காரர்கள் வேலையைத் தொடங்கிவிட்டார்கள். இதுவரை மொத்தமாக இரண்டு லட்சத்து எண்பத்தாறாயிரம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். ஒரு லட்ச ரூபாய் அரசாங்கம் கொடுத்துவிட்டது. மண் விற்பனையில் சற்றேறக்குறைய ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் திரட்டிவிட்டார்கள் போலிருக்கிறது. இன்னமும் ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. ஐம்பதாயிரம் ரூபாயை உள்ளூர் மக்களிடையே திரட்டிக் கொண்டார்கள். ஐம்பதாயிரம் ரூபாயை நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து கொடுத்திருக்கிறோம்.
இத்தகைய சிற்றூர்களில் குளம் தூர்வாருவதோடு மட்டும் செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதில் அர்த்தமில்லை. அதன் தொடர்ச்சியாக சில காரியங்களைச் செய்ய வேண்டும். அதற்காக உள்ளூர் இளைஞர்களைத் திரட்டி ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஒரு கூட்டம் நடத்தினோம். குளத்துக்கு அருகாமையில் உள்ள புனித திரேசாள் ஆரம்பப்பள்ளியில் கூட்டம் தொடங்கியது. அமைதியான உள்ளூர் இளைஞர்கள். கேள்வி கேட்கவே தயங்கினார்கள். தொடக்கத்தில் அப்படித்தான் இருப்பார்கள். இந்தக் கூட்டத்துக்காக தயாரிப்புகளையும் செய்திருந்தேன். சில நிமிடங்கள் பொதுவான விஷயங்களைப் பேசிவிட்டு ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ‘அமேசான் - பூமியின் நுரையீரல்’ என்ற பவர் பாய்ண்ட்டை விளக்கினேன்.
சில ஆசிரியர்கள், நிசப்தத்துடன் இணைந்து செயல்படும் நண்பர்கள், சமூக ஆர்வலர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் உரையாடலில் கலந்து கொண்டார்கள்.
தயாரிப்புகளைச் செய்ய இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. பேச்சைக் கேட்கப் போகிறவர்கள் மாணவர்கள் இல்லை- பல்வேறு தரப்பிலான இளைஞர்கள். அங்கே இருக்கக் கூடிய எல்லோருக்கும் புரியும் படியான எளிய தகவல்களாக இருக்க வேண்டும், அதே சமயம் அதன் உள்ளர்த்தம் வலுவானதாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கேற்ப தயாரித்திருந்தேன்.
அமேசான் எங்கேயிருக்கிறது, அதன் பரப்பளவு, அங்கேயிருக்கும் உயிரினங்கள் போன்ற பொதுவான விவரங்களில் தொடங்கி, அங்கு எண்பதாயிரம் இடங்களில் தீப்பற்றி எரிவது குறித்து பேச்சு தொடர்ந்தது. எரிந்தால் என்ன விளைவுகள் உண்டாகும்? மரங்களின் தேவை என்பது நமக்கு ஆக்ஸிஜனைக் கொடுப்பதற்காக என்று நினைத்தால் அது தவறு. பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிஜனில் சுமார் 50-70% கடலிலிருந்துதான் பெறப்படுகிறது. இன்னொரு கணக்கும் இருக்கிறது- சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 550 லிட்டர் ஆக்ஸிஜன் தேவை. ஒரு சுமாரான மரம் 110 லிட்டர் ஆக்ஸிஜனைக் கொடுத்துவிடும். ஒரு மனிதனுக்கு நான்கு மரங்கள் கொடுக்கும் ஆக்ஸிஜன் போதுமானது. நான்காயிரம் கோடி மரங்கள் மொத்த மனிதர்களுக்கும் சேர்த்துப் போதுமானது. அமேசானில் மட்டுமே சுமார் 39,000 கோடி மரங்கள் இருக்கின்றனவாம். அப்படியென்றால் உலகம் முழுக்கவும் எவ்வளவு மரங்கள் இருக்கக் கூடும்? ஆக, மரம் நட்டு வளர்ப்பது மனிதர்களுக்கான ஆக்ஸிஜனுக்கு இல்லை.
காடுகள் எரிவதும், மரங்கள் குறைவதும் நம்மை புவி வெப்பமயமாதலில் சிக்க வைக்கும். தொழிற்துறையின் அசுரத்தனமான வளர்ச்சியினால் புவி வெப்பமயமாதல்தான் நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினை ஆகிக் கொண்டிருக்கிறது. கார்பன் டை ஆக்ஸைடின் அளவு அதிகரிக்க அதிகரிக்க புவியின் வெப்பம் அதிகரிக்கும். அது துருவங்களில் நிறைந்திருக்கும் பனியைக் கரையச் செய்யும். இதுதான் புவியின் இப்போதைய மிகப்பெரிய ஆபத்து. அதிகரிக்கும் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்ச இன்னமும் நிறைய நிறைய மரங்கள் தேவை. அதற்காகத்தான் நாம் மரங்களைத் தொடர்ந்து காக்க வேண்டியிருக்கிறது; நட வேண்டியிருக்கிறது.
பிரேசிலுக்கும் - ப்ரான்ஸுக்குமான பிரச்சினைகள், வலதுசாரி சிந்தனை கொண்ட பிரேசில் அதிபரின் நிலைப்பாடு போன்ற சில விவகாரங்கள் குறித்துப் பேசியதும் அந்த இளைஞர்களுக்கு புதிதாக இருந்தது. இத்தகைய உலகளவிலான பிரச்சினைகளில் நாம் எந்த மாற்றத்தையும் உண்டாக்கிவிட முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் நம்மால் இயன்ற அளவில் பசுமையைக் காப்போம் என்று ஈர்ப்பதுதான் பேச்சின் நோக்கம். அதை சரியாகவே செய்துவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள்.
இத்தகைய உரையாடல்களைத்தான் கிராமங்கள்தோறும் முன்னெடுக்க வேண்டும் என நினைக்கிறேன். சற்றே ஆழமான விவரங்களை இளைஞர்களிடம், அவர்களுக்கு புரியும் வகையில் கொடுத்துவிட்டால் விழித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு ஊருக்கும் சென்று கொண்டிருக்க சாத்தியமில்லை. ஆனால் சாத்தியமிருக்கும் இடங்களில் எல்லாம் இத்தகைய செய்திகளையே இளைஞர்களிடம் விரிவாகப் பேச வேண்டும்.
பிரேசிலுக்கும் - ப்ரான்ஸுக்குமான பிரச்சினைகள், வலதுசாரி சிந்தனை கொண்ட பிரேசில் அதிபரின் நிலைப்பாடு போன்ற சில விவகாரங்கள் குறித்துப் பேசியதும் அந்த இளைஞர்களுக்கு புதிதாக இருந்தது. இத்தகைய உலகளவிலான பிரச்சினைகளில் நாம் எந்த மாற்றத்தையும் உண்டாக்கிவிட முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் நம்மால் இயன்ற அளவில் பசுமையைக் காப்போம் என்று ஈர்ப்பதுதான் பேச்சின் நோக்கம். அதை சரியாகவே செய்துவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள்.
இத்தகைய உரையாடல்களைத்தான் கிராமங்கள்தோறும் முன்னெடுக்க வேண்டும் என நினைக்கிறேன். சற்றே ஆழமான விவரங்களை இளைஞர்களிடம், அவர்களுக்கு புரியும் வகையில் கொடுத்துவிட்டால் விழித்துக் கொள்வார்கள். ஒவ்வொரு ஊருக்கும் சென்று கொண்டிருக்க சாத்தியமில்லை. ஆனால் சாத்தியமிருக்கும் இடங்களில் எல்லாம் இத்தகைய செய்திகளையே இளைஞர்களிடம் விரிவாகப் பேச வேண்டும்.
பேசுவோம்.
6 எதிர் சப்தங்கள்:
//பேசுவோம்.//
ம்
Very good effort.
You can record such videos/interactions and post it on youtube.
Congrats on your endeavor! Pleased to read.
Well done Manigandan.
Inspiring! Siru thuli peru velan!
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா...
Post a Comment