Sep 10, 2019

பையன் டிரைவரா இருக்கான்....

காலையில் ஆறேகால் மணிக்கு கோவையிலிருந்து சென்னை கிளம்பும் தொடரூர்தி ஒன்றிருக்கிறது. அதில் கிளம்பினால் மதிய உணவுக்குச் சென்னை வந்து சேர்ந்துவிடலாம். 185 ரூபாய் டிக்கெட். ஆனால் அந்த நேரத்தில் சரவணம்பட்டியிலிருந்து ரயில்நிலையம் வந்து சேர போக்குவரத்து வசதிதான் சிரமம். ஓலாவில் வந்துவிடலாம். அது கிட்டத்தட்ட ரயில் கட்டணம் அளவுக்கு ஆகிவிடுகிறது. அடிப்படையிலே கஞ்சப்பயலான எனக்கு, காரில் ஏறி அமர்ந்தவுடன் இது ஒருவிதமான கடுப்பை உருவாக்கிவிடும். பெரும்பாலான ஓட்டுநர்களிடம்ம், சென்னை போகும் அளவுக்கான செலவு, ரயில்நிலையத்துக்குச் செல்ல ஆகிவிடுகிறது என்று சொல்லிவிட்டு ஓட்டுநரின் முகத்தைப் பார்ப்பேன். பெரும்பாலானவர்கள் சிரித்துவிட்டு பதில் சொல்ல மாட்டார்கள். ‘காத்தாலேயே ஒரு சாவுகிராக்கி’ என்பது மாதிரியான சிரிப்பாக அது இருக்கும்.

இந்த முறை ஒரு கண்ணாடி போட்ட பையன் கார் எடுத்து வந்திருந்தான். அதே வாக்கியத்தை அட்சரம் பிசாகமல் சொன்னேன். ‘உங்களை  யாராச்சும் பஸ்ல போக வேண்டாம்ன்னு சொன்னாங்களா?’என்றான். எதிர்பாராத தாக்குதலில் ஒரு வினாடி திகைத்து அவனைப் பார்த்தேன். ‘சொகுசு வேணும்ன்னா அதுக்கு செலவு செய்யணும்ல சார்...நாலரை மணிக்கு பஸ் ஸ்டாப் வந்து நில்லுங்க...எப்படியும் ஒன்றரை மணி நேரத்தில் ரயில்வே ஸ்டேஷனுக்கு போய்டலாம்..இருபத்தஞ்சு ரூபாய்ல முடிஞ்சுடும்.....அஞ்சு மணி வரைக்கும் தூங்கி, அஞ்சரை மணிக்கு கிளம்பி ஆறேகாலுக்கு ஸ்டேஷனுக்கு போகணும்ன்னா இருநூறு ரூபா ஆகத்தான் செய்யும்...’ என்றான். அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை. பேசினால் வாய் மேலேயே குத்துவான் போலிருந்தது.

பேச்சை மாற்றிவிடுவதுதான் உத்தமம் அல்லது அமைதியாக இருந்து கொள்ள வேண்டும். சொற்களால் நம்மைத் திக்குமுக்காடச் செய்யும் ஆட்களிடம் பேச்சுக் கொடுத்தால் சுவாரசியமாக இருக்கும். பேச்சை மாற்றிவிடலாம் என்று ‘நைட் பூரா வண்டி ஓட்டிட்டு இருக்கீங்களா?’ என்றேன்.

இருபத்து நான்கு மணி நேரப் பணி. இன்று காலை எட்டு மணிக்கு வண்டியை எடுத்தால் அடுத்த நாள் காலை எட்டு மணி வரைக்கும் ஓட்டம்தான். பையன் பி.ஈ முடித்திருக்கிறான். சிவில் இஞ்சினியர். படித்து முடித்துவிட்டு ஏதோ நிறுவனத்தில் சைட் இஞ்சினியராக இருந்திருக்கிறான். பனிரெண்டாயிரம் ரூபாய் சம்பளம். ஞாயிறு மட்டும் விடுமுறை. இடையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாளன்று வர வேண்டிய ஓட்டுநர் விடுப்பு எடுத்துக் கொள்ள, ஓலா வண்டியொன்றுக்கு ஓட்டுநராக இருக்க சிவில் இஞ்சினியரான இவனை அழைத்திருக்கிறார்கள். வீட்டில் சும்மாதானே இருக்கிறோம் என்று செல்ல, ஆயிரத்து இருநூறு ரூபாய் கொடுத்தார்களாம். மாதம் முழுவதும் பணியாற்றினால் பனிரெண்டாயிரம் ரூபாய். ஒரே நாளுக்கு ஆயிரத்து இருநூறு ரூபாய். பத்து நாளில் மொத்த சம்பளத்தையும் வாங்கிவிடலாம். பையனுக்கு ஆசை துளிர்விட்டுவிட்டது. 

கடந்த இரண்டாண்டுகளாக இதுதான் தொழில். மூன்று சொந்த வண்டி இருக்கிறது. எல்லாம் இ.எம்.ஐதான். இவரையும் சேர்த்து மொத்தம் ஆறு ஓட்டுநர்கள். சுவாரசியம் என்னவென்றால் ஆறு பேருமே பொறியியல் பட்டதாரிகள். இவரது ஜூனியர்கள். ஆறு பேரும் ஒரே வீட்டில் தங்கியிருக்கிறார்கள். ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வீட்டு வாடகைக் கணக்கு. அது போக மாதம் இருபதாயிரம் ரூபாய் சம்பளம். வண்டி ஓட்டுகிற நாட்களில் இருநூறு ரூபாய் பேட்டா. மிச்சமாகும் தொகையெல்லாம் இவருக்கு.

‘எதிர்காலத்திலும் இதுவே போதுமா?’ என்றேன். பொதுவாக உடல் உழைப்பைக் கோரும் பணிகளில் தொடக்கத்தில் வரும் வருமானத்திலிருந்து பெரிய வளர்ச்சி இருக்காது. படிப்படியாகத்தான் உயரும். ஆனால் மூளை சார்ந்த பணிகளில் அப்படியில்லை. வருடத்திற்கு மூன்று லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறவன் இன்னொரு நிறுவனம் மாறும் போது ஐந்தரை லட்சம் வாங்குவது இயல்பானது. 

இதுவே வீட்டில் தெரியாதாம். இன்னமும் பையன் பொறியாளாராக இருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாதமானால் ஒன்பதாயிரம் ரூபாயை வீட்டுக்கு கொடுத்துவிடுகிறார். ‘அதிகமாகக் கொடுக்க ஆரம்பிச்சா பொண்ணு பார்க்கிறேன்னு கிளம்பிடுவாங்க’ என்றார். அதுதான் அவருடைய மிகப்பெரிய பயம். என்னதான் சம்பாதித்தாலும் ‘பையன் டிரைவர்’ என்றுதானே சொல்வார்கள் என்று கேட்டார். அது சரிதான். ‘பி.ஈ படிச்சுட்டு டிரைவரா இருக்கான்’ என்பதை இளக்காரமாகத்தான் பார்ப்பார்கள். எல்லாவற்றையும் வெளியுலகுக்குக் காட்டிக் கொள்வதில்தானே இருக்கிறது?

என் அரை மண்டைக்குத் தெரிந்த சில ஐடியாக்களையெல்லாம் சொல்லியிருக்கிறேன். ‘என்னதான் சம்பாதிச்சீங்கன்னாலும் வண்டியைக் கொண்டு போய் வீட்டில் நிறுத்தினால் அப்படித்தான் சொல்லுவாங்க...ஆனது ஆகட்டும்ன்னு ஒரு ஆபிஸ் போடுங்க’ என்றேன்.

அலுவலகம் ஒன்றை வைத்துக் கொண்டு ‘ட்ராவல் ஏஜென்ஸி’ என்று பெயரைப் போட்டு, தனக்குக் கீழாக ஆறு பேர் பணியாற்றுவதை சற்று முறைப்படுத்தி எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்துக் கொண்டால் ‘பையன் ட்ரைவர்ன்னு சொல்லமாட்டாங்க..சொந்தமா ட்ராவல்ஸ் வெச்சிருக்காருன்னு சொல்லுவாங்க’ என்றேன். அந்தக் கணத்தில் தோன்றியது இது. இன்னமும் சற்று யோசித்தால் இதையே பிரமாண்டப்படுத்திக் காட்டிவிடலாம். மூன்று வண்டிகள், ஐந்தாறு பணியாளர்கள், கை நிறைய வருமானம், இன்னமும் வயது இருக்கிறது- இதுவே பெரிய சாதனைதான். ‘வீட்டில் சொல்லிடுங்க..சொந்தமா பிஸினஸ் பண்ணுறேன்னு சொல்லுங்க..மறைச்சு மறைச்சு வெச்சுட்டு இருக்கிறதே நம்முடைய தாழ்வு மனப்பான்மைதான்’ என்றேன். செய்வதை வெளிப்படையாக, தைரியமாகச் சொல்லிவிட வேண்டும். முதலில் பதறுவார்கள். பிறகு அவர்களே ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள்.  

படிப்பு ஓர் அடையாளம் என்பதைத் தவிர ஒன்றுமில்லை. கிட்டத்தட்ட அத்தனையும் கடைசியில் பணம் சம்பாதிப்பதில்தான் போய் நிற்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு யுக்தி, ஒரு வழிமுறை. நமக்கு சம்பாதிக்க இதுதான் வழி என்று தெரிந்துவிட்ட பிறகு ‘அய்யோ இதையெல்லாம் படிச்சுட்டு, இந்த வேலையைச் செய்யறதா’ என்று தயங்க வேண்டியதில்லை. அப்படியே நாம் துணிந்தாலும் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் விடமாட்டார்கள்.  ‘படிப்புக்குத் தகுந்த வேலையைப் பாரு’ என்பார்கள். வெற்றி பெற்றுவிடுவோம் என்று நம்பிக்கையிருந்தால் எந்தச் சொற்களையும் காதில் போட்டுக் கொள்ள வேண்டியதில்லை. அப்படி அடுத்தவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு படிப்பை மட்டுமே பற்றிக் கொண்டு நின்றால் இந்த உலகத்தில் இருக்கக் கூடிய வாய்ப்புகளையெல்லாம் அது மறைத்துவிடும். சம்பாத்தியத்துக்கும் படிப்பும் சம்பந்தமே இல்லை. கவனித்துப் பார்த்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற பெரும்பாலானவர்களுக்கு அவர்களது படிப்புக்கும், அவர்களது உயரத்திற்கும் சம்பந்தமே இருக்காது. நம்மைச் சுற்றிலும் ஏகப்பட்ட பாதைகள் இருக்கின்றன. எது பொருத்தமோ அந்த பாதையில் நம் அடையாளங்களையெல்லாம் துறந்துவிட்டு இலக்கை மட்டுமே குறியாக வைத்துக் கொண்டு ஓடத் தொடங்க வேண்டும்.

வேலை, சம்பளம், வருமானம் என்று பயப்படுகிறவர்கள் அத்தனை பேருக்கும் இது பொருந்தும். வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தை அடைய ஆயிரம் வழிகள் இருக்கின்றன. பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பிரச்சினை நம் அடையாளங்களும், நம் ஈகோவும்தான்.

வார இறுதியில் தொலைபேசியில் அழைப்பதாகச் சொன்னார். அநேகமாக சனி,ஞாயிறுகளில் ஒரு நாள் விரிவாகப் பேசுவோம் என நினைக்கிறேன். ஆறேகால் மணிக்கு ரயிலைப் பிடிக்க வேண்டிய பதற்றம் எனக்கு. ரயிலில் யாராவது மொக்கை போட கிடைக்காமலா போய்விடுவார்கள்? அங்கேயும் ஒரு கதை கிடைக்கும் என்று நினைத்தபடியே நூற்றியெழுபது ரூபாயைக் கொடுத்துவிட்டு வேகமாக ஓடி வந்து வண்டியைப் பிடித்துவிட்டேன். 

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

அட நம்மாளு.
ஒவ்வொருவரும் நல்ல வாய்ப்பு வரும் வரை படித்த படிப்பை தூக்கி தூர வைத்து விட்டு உடலுழைப்பு சார்ந்த வேலைக்கு வந்தால் நாட்டில் நிறைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

Avargal Unmaigal said...

உண்மைதான்

Avargal Unmaigal said...

மேலை நாடுகளுக்கும் இந்தியாவீற்கும் உள்ள வித்தியாசம் இதுதான். வேலையை வைத்து மதிப்பிடுவது மேலைநாடுகளில் இல்லை அப்படி இருக்கும் என்று சொன்னால் அது இங்கு வசிக்கும் இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர்களிடம் மட்டும்தான் இருக்கும்