Sep 26, 2019

இரட்டை உலகம்

ஒரு நண்பருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகத் திருமணம் ஆகியிருந்தது. என்னைவிட பத்து வயது சிறியவன். திருமணத்துக்குச் சென்று வாழ்த்தெல்லாம் சொல்லிவிட்டு வந்திருந்தேன். சமீபத்தில் ஒரு டீக்கடையில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது ‘கல்யாணமே பண்ணாம இருந்திருக்கலாம்’ என்றான்.  ‘அடப்பாவி’ என்று நினைத்துக் கொண்டு கையில் இருந்த காபியை ஒரு உறிஞ்சு உறிஞ்சிவிட்டு ‘மேல சொல்லு’ என்ற தொனியில் பார்த்தேன். இதெல்லாம் எந்தவிதத்திலும் தப்பிக்க முடியாத வழக்கு. அவன் துன்பத்தில் நமக்கு ஒரு சிற்றின்பம் அல்லது பேரின்பம். 

திருமணமான முதல் மூன்று நான்கு மாதங்களுக்கு பெரிய பிரச்சினைகள் ஒன்றும் இல்லை என்றான். அது தெரிந்ததுதானே. மோகம் முப்பது நாளும் ஆசை அறுபது நாளும் கழிந்த பிறகு நான்காவது அல்லது ஐந்தாவது மாதத்தில்தானே பிரச்சினைகள் உருவெடுக்கும்? மனைவியிடம் கடவுச்சொற்களையெல்லாம் கொடுத்து வைத்திருப்பான் போலிருக்கிறது. ‘ஃபேஸ்புக்கில் அவகிட்ட பேசறீங்க, ஹேங்கவுட்ல இருக்கிற இவ யாரு’ என்றெல்லாம் விதவிதமான கேள்விகள். ‘நீ அப்படிப்பட்ட ஆளா?’ என்றேன். ‘இல்லண்ணா..சும்மா பேசுவேன்’ என்றான். நம் இனம் என்று நினைத்துக் கொண்டேன்.

‘சந்தேகம்’ ‘பொஸஸிவ்னெஸ்’ என்பதெல்லாம்  முந்தைய தலைமுறையில் தெருவிலும், பேருந்து நிலையத்திலிருந்தும் அடுத்தவர்களிடமிருந்து வரும் சொற்களிலிருந்து தொடங்கும். இந்தத் தலைமுறையில் செல்போனிலிருந்துதான் தொடங்குகிறது.  ‘இதைப் பற்றித் தெரிந்தால் என்ன நினைப்பார்கள்?’ என்ற பயத்தில், அடுத்தவர்களுடன் பேசியதையெல்லாம் அழித்து வைத்திருந்தாலும் சிக்கிக் கொள்வோம். அதுவும் இந்த விவகாரங்களில் பெண்கள் ஆண்களைவிட அதிபுத்திசாலிகள். அப்படி அழித்ததைக் கண்டுபிடித்துவிட்டால் அவ்வளவுதான். சோலி சுத்தம். ஜென்மத்துக்கும் தப்பிக்க முடியாது.

‘எப்படிங்கண்ணா பேசாம இருக்கிறது?’ என்றான். அதுவும் சரிதான். 

திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து  தம்பதி சமேதகராக ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். அங்கே சில பெண்கள் வந்திருந்தார்கள். அவர்களில் பலருடனும் ஃபேஸ்புக் அல்லது சாட்டிங் வழியாகப் பேசியிருக்கிறேன். ஆனால் நேரில் யார் முகத்தையும் பார்த்து பேச முடியவில்லை. என்னுடைய அடிப்படையான பிரச்சினை இது. பள்ளிப்படிப்பு வரைக்கும் ஆண்கள் பள்ளி. கல்லூரிக்குச் சென்றவுடன் ஆங்கிலத்துடன் மாரடிக்கவே இரண்டு மூன்று வருடங்கள் கழிந்துவிட்டன. மூன்றாம் வருடம் பாதியில் தொடங்கி நான்காம் வருடத்தில் ஓரளவு சகஜமாகப் பேசத் தொடங்கியிருந்தேன். படிப்பே முடிந்துவிட்டது. அதன் பிறகு எம்.டெக் படித்த வி.ஐ.டி அற்புதமான சூழலை உருவாக்கிக் கொடுத்தாலும் வகுப்புத் தோழர்கள் எல்லோரும் ஆண்கள். வேலைக்குச் சென்ற இடம் விஜய் எலெக்ட்ரிக்கல்ஸ். மருந்துக்குக் கூட பெண்கள் இல்லாத பணியிடம். உதறியெறிந்துவிட்டு மென்பொருள் துறைக்குள் வந்து வாழ்வில் ரோஜாப்பூ மலரும் என்று நம்பிய தருணத்தில் ‘ஒரு ஜாதகம் வந்திருக்கு...பொருத்தம் நல்லா இருக்கு..நீ எப்போ பொண்ணு பார்க்க வர்ற?’ என்றார்கள். இனி நாமாக பெண் தேடி, அவளிடம் பேசி, காதல் கவிதை எழுதி, பூ கொடுத்து, காதலைச் சொல்லி...நடக்கிற காரியமா? ‘பொண்ணு கிடைச்சா சரி’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சரி சொல்லிவிட்டேன். 

புற உலகம் இப்படியென்றால் வெர்ச்சுவல் உலகம் நமக்கு எல்லாவிதமான சுதந்திரத்தையும் கொடுக்கிறது. யாருடன் வேண்டுமானாலும், எவ்வளவு பெரிய பிரபலமான மனிதர் என்றாலும், நாம் பேச விரும்பினால் பேசிவிட முடிகிறது. கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு நாளில் நாம் நடத்தும்- அலுவல் ரீதியிலான அல்லது தனிப்பட்ட உரையாடல்களில் எழுபது சதவீதம் எழுத்துரு (Text based conversation) வழியாகவே நடக்கிறது. எதிரில் இருப்பவர் அனுப்பும் ஸ்மைலிகளை, அவர் பயன்படுத்தும் வார்த்தைகள், வாக்கிய அமைப்புகளை வைத்தே அவரது மனநிலையைப் புரிந்து கொள்கிறோம். அன்பு, காதல், கோபம், காமம் என சகலத்தையும் ஆன்லைன் வழியாகவே கடத்திப் பழகிவிட்ட தலைமுறை இது. இதே இயல்புடன் புற உலகை அணுக முடிவதில்லை என்பதுதான் கணினி, செல்போன்களுடன் புழங்கும் பெரும்பாலானவர்களுக்கு உள்ள வரம் அல்லது சாபம்.

இப்படி இரு உலக சகவாசம் என்பது நம்மை இரட்டை ஆளுமைகளாக மாற்றுகிறது. இங்கே ஒருவிதமாகவும் அங்கே ஒரு விதமாகவும் நம்மையுமறியாமல் செயல்படுகிறோம். புற உலகில் இயல்பாக இருக்க முடிவதில்லை என்பதால் யோக்கியவான் என்று சொல்ல வேண்டியதில்லை. இரு உலகிலும் நம்முடைய உணர்வுகள் ஒன்றுதான். நம்முடைய ஆசாபாசங்கள் ஒரே மாதிரிதான். ஆனால் வெளிப்படுத்தும் தன்மை வேறுபடுகிறது. ஓர் உலகில் இயல்பாகப் புழங்குகிற ஒருவனால் மற்றொரு உலகில் அவ்வளவு இயல்பாக இருக்க முடிவதில்லை. இரண்டில் ஒன்றில் நாம் போலியாக இருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம். படித்த, நாற்பது வயதுக்குட்பட்ட பலருக்கும் இத்தகைய சிக்கல் உண்டு. ஆனால் இதில் நாம் எதுவும் செய்வதற்கில்லை. உலகமும், தொழில்நுட்பம், சூழலும் நம்மை அப்படி வடிவமைத்து வைத்திருக்கின்றன. 

முப்பத்தியேழு வயதாகிறது. இன்றைக்கு வரைக்கும் அப்படித்தான் இருக்கிறேன். சாட்டிங் வழியாக எவ்வளவுதான் இயல்பாகப் பேசினாலும் கூட நேரில் பார்க்கும் போது பெரிய சுவர் ஒன்று குறுக்கே நின்றுவிடும். விமலா மாதிரியான சில பெண்களுடன் நல்ல அறிமுகம் உண்டு. அவருடைய குடும்பச் சூழல் உள்ளிட்ட நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். ஆனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சில நிமிடங்களுக்கு மேல் நேருக்கு நேர் பார்த்துப் பேச முடியவில்லை. அவர் இதை வெளிப்படையாகக் கேட்ட போதுதான் உரைத்தது. யோசித்துப் பார்த்தால் அடிப்படையிலேயே இந்தச் சிக்கல் எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன். இளவயதில் பெண்களுடன் பழகாத பலருக்கும் இருக்கக் கூடிய கோளாறு. சிலர் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் இப்படித்தான் என்று நினைக்கிறேன். ‘நான்கு வருடங்களுக்கு முன்பாக உங்களிடம் பெங்களூரில் பேசினேன்; என்னிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை...அதன் பிறகு இப்பொழுதுதான் பேசுகிறேன்’ என்று ஒரு பெண் வாட்ஸாப்  செய்தி அனுப்பினார். வாட்ஸாப்பில் என்னால் பேசிவிட முடியும். ‘இன்றைக்கும் கூட நேரில் நீங்கள் பேசினால் தடுமாறுவேன்’ என்றேன். அதன் பிறகு இதையெல்லாம்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

வேணி கொஞ்சம் ஷார்ப்பான பெண். தம்பதி சமேதகராகக் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே ‘இவன் எந்தக் காலத்திலேயும் சாட்டிங்குக்கு மேல் நகரமாட்டான்’ என்று முடிவுக்கு வந்திருக்க வேண்டும். அதன் பிறகு மெல்ல மெல்ல தண்ணீர் தெளித்துவிட்டுவிட்டாள். இப்பொழுதெல்லாம் எதையும் கண்டுகொள்வதில்லை. அதுவொரு வகையில் பெரிய ஆசுவாசம். 

நம்மை நம்பி ஒருவர் புலம்பும் போது நம்முடைய அனுபவத்திலிருந்துதானே எதையாவது சொல்லித் தர வேண்டும்? டீக்கடையில் சந்தித்த அந்தத் தம்பிக்கு இதைத்தான் சொன்னேன். அவனுக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. அவனுக்குப் புரிந்து அவன் மனைவிக்கும் புரிய வேண்டும். திருமணத்துக்குப் பிறகு நம்மைப் பற்றி அடுத்தவருக்குப் புரிய வேண்டும் அல்லது ஒருவருக்கு ஏற்ப இன்னொருவர் வளைந்து விட வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்று நடக்கவில்லை என்றாலும் வசமாகச் சிக்கிக் கொண்டோம் என்றுதான் அர்த்தம். சண்டையும் சச்சரவும் ஓயவே ஓயாது. ஆரம்பத்திலேயே சரி செய்துவிடுவதுதான் நல்லதும் கூட. 

நவீன உலகம் நமக்கு வழங்கியிருக்கும் பல்வேறு சிக்கல்களில் இதுவொன்று. இதற்கு இன்னமும் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. இனி எதிர்வரும் காலத்தில் இரட்டை உலக மனிதர்களின் எண்ணிக்கை கணிசமாகக் கூடும். செல்போன்களும், கணினியும் அதைத்தான் நமக்குப் பரிசளித்துக் கொண்டிருக்கின்றன. புற உலகிலும், வெர்ச்சுவல் உலகிலும் இருவேறு விதமாக இருக்கக் கூடிய மனிதர்களுக்கு உருவாகக் கூடிய பிரச்சினைகள் பற்றிய உரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு, இத்தகைய உளவியல் சிக்கல் பற்றிய புரிதல்களை பரவலாக்கும் போது இளைய தலைமுறையின் பிரச்சினைகள் பெருமளவுக்குக் குறையக் கூடும். 

1 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

மணி, நான் 1969-71ல் அண்ணாமலை பல்கலை கழகத்தில் MSc-Physics படித்த போது27 பையன்கள் மற்றும் ஒரே ஒரு பெண் கடைசி வரை என் அந்த வகுப்பு தோழியிடம் பேசவில்லை, முடியவில்லை. பிறகு கல்லூரிஆசிரியர் பணிக்கு வந்த பிறகு தான் பெண்களிடமே இயல்பாக பேசி பழக முடிந்தது. இப்போது அந்த தோழியின் தொடர்பு எண் கிடைத்தால் பேச ஆவலுடன் உள்ளேன். இது தான் பலரின் நிலை.வாழ்க வளமுடன்