Sep 25, 2019

அய்யோன்னு போவான்

ஒரு சவால்- தமிழகத்தில் பொறியியல் படிக்கும் பத்து மாணவர்களைத் தேர்ந்தெடுங்கள். அந்தப் பத்து பேர்களிடமும் ‘இண்டகிரேஷன், டிஃபரன்ஷியேஷனுக்கு சரியான விளக்கம் சொல்’ என்று கேளுங்கள். ஏழு பேருக்கு பதில் தெரியாது. இதனை சத்தியம் செய்தும் சொல்ல முடியும்.  பொறியியலில் எந்தத் துறை மாணவர்களிடமும் இப்படியான நிலைமைதான் இருக்கிறது. பெரும்பாலான மாணவர்களுக்கு ஆழ்ந்த அறிவு என்பதே இருப்பதில்லை.  ஃபீல்ட் தியரி குறித்துப் பேசினால் மின்னியல் மாணவன் திணறுவான். வெப்பவியல் பற்றி எந்திரவியல் துறை மாணவன் திணறுவான். இது பொறியியல் படிப்பின் அத்தனை துறைகளுக்கும் பொருந்தும். தமது படிப்புக்கு மிக முக்கியமான பாடங்களில் கூட படிப்பறிவற்றவர்கள் மிக மிக அதிகம். 

நண்பர் ஒருவர் பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் இருக்கிறார். கோவையில் இருக்கும் தமது நிறுவனத்துக்கு ஆள் எடுப்பதற்காக ராஜஸ்தான் வரைக்கும் சென்றார்கள். ‘இங்கு இல்லாத கல்லூரிகளா?’ என்று கேட்டால் ஒவ்வொரு வகுப்பிலும் பத்து மாணவர்கள் தேறினால் பெரிய காரியம் என்றார். அவர்களுக்கும் கூட பொறியியலில் ஆழ்ந்த புலமை இருப்பதில்லை. தேர்ந்தெடுத்தால் நாம் கற்பித்துக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கைதான். அந்த பத்துப் பேரைத் தேர்ந்தெடுக்கத்தான் டிசிஎஸ், சிடிஎஸ், விப்ரோ என்று நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. மிச்சமிருக்கும் ஐம்பது பொறியியல் மாணவர்களை பெரும்பாலான நிறுவனங்கள் சீந்துவதேயில்லை. 

இவர்கள் எல்லாம் எப்படி வேலை தேடுகிறார்கள்? ஓரளவு வசதி கொண்டவர்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை பயிற்சி நிறுவனங்களில் படித்துவிட்டு வேலைக்குச் செல்கிறவர்கள், சொற்ப சம்பளத்தில் ஏதாவதொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து பிறகு குறிப்பிட்ட துறையில் தேவையான அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு அடுத்தடுத்து உயர்கிறவர்கள்தான் கணிசமாக இருக்கிறார்கள். இவர்களிடம் பொறியியல் பற்றி முழுமையான அறிவு இருக்காது. அவர்கள் என்ன கோர்ஸ் படித்தார்களோ, எந்த வேலையைச் செய்கிறார்களோ அதில் மட்டும்தான் அறிவு இருக்கும். அதை வைத்துக் காலத்தை ஓட்டுகிறவர்கள்தான் இங்கே பெரும்பான்மையான பொறியியல் படிப்பு படித்தவர்கள். கடந்த இருபது அல்லது இருபத்தைந்து வருடங்களாகவே இதுதான் நிலைமை.

படித்தவர்களுக்கு வேலை இல்லை; இருக்கும் வேலைக்கு ஏற்ற தகுதியானவர்கள் இல்லை என்று பொறியியல் படிப்புக்கும் தொழிற்துறைக்குமான இடைவெளி மிகப்பெரியதாக உருவாகியிருக்கிறது. அதிகாரவர்க்கம் இந்த இடைவெளி குறித்துத்தான் கவனம் செலுத்த வேண்டும். பாடத்திட்டங்களை வடிவமைக்கிறவர்கள் இது பற்றித்தான் அக்கறை காட்ட வேண்டும். இருக்கும் பாடங்களின் எண்ணிக்கையை குறைக்கலாமா? பாடத்துக்கும், செய்முறைக்கும் தொடர்புகளை இன்னமும் உறுதியாக்கலாமா? போன்ற கேள்விகளை எழுப்பி புதிய ப்ராஜக்ட்கள், கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றில் மாணவர்களை அதிகளவில் ஈடுபடச் செய்து அவர்களின் கல்விப்புலமையைச் செழுமைப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். 

இந்த லட்சணத்தில்தான் அண்ணா பல்கலைக்கழகம் யோகா சொல்லித் தருகிறோம்; தத்துவவியல் சொல்லித் தருகிறோம் என்று குழறியடித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம்தான் இன்றைக்கு சமூக ஊடகங்களில் பேசு பொருள். இரண்டு நாட்கள் பேசுவோம். மீம்ஸ் போடுவோம். பிறகு விட்டுவிடுவோம். ஆனால் இதன் பின்னாலிருக்கும் அரசியல், பொறியியல் மாணவர்களை இப்படித் திசைமாற்றும் செயல்திட்டம் அபாயகரமானது. பாடத்திட்டத்தின் இணைப்பைத் திறந்து, பாடத்திட்டத்தை ஒரு முறை படித்துவிட்டு பொறியியலுக்கும், இந்தப் பாடத்திட்டத்துக்கும் எள் முனையளவும் சம்பந்தமிருக்கிறதா என்று பாருங்கள். 

கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக பொறியியல் கல்விக்கான தேவை, அவை உருவாக்கும் வேலை வாய்ப்புகள் பற்றிய மேம்போக்கான புரிதலாவது நமக்கு அவசியமாகிறது. தொண்ணூறுகளின் இறுதியில் இந்தியாவில் மிக அதிகளவில் மென்பொருள் நிறுவனங்கள் திறக்கப்பட்டன. அந்நிறுவனங்கள் அமெரிக்க, ஐரோப்பியர்களுக்கான வேலைகளைச் செய்து கொடுப்பவையாக இருந்தன. அங்கு பணியாற்ற அடிப்படையான ஆங்கில அறிவு கொண்டவர்கள் தேவைப்பட்டார்கள். வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க 12+4 வருடங்கள் படிப்பை படித்தவர்களுக்கு விசா வாங்குவது எளிது என்பதால் அதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட பொறியியல் கல்வி நிறுவனங்கள் இத்தேவையை நிறைவு செய்தன. நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப ஓரளவு ஆங்கிலம் தெரிந்தவர்களை கல்வி நிறுவனங்கள் ‘உற்பத்தி’ செய்தன. அவர்களை பெருமளவில் வேலைக்கு எடுத்து தமக்குத் தேவையான தொழில்நுட்பத்தில் ‘மட்டும்’ பயிற்சியளித்து தமக்குத் தேவையான ரோபோக்களாக அந்நிறுவனங்கள் மாற்றிக் கொண்டன. இதனால்தான் இத்தனை ஆயிரம் பேர்கள் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு வேலை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

தற்பொழுது சூழல் வெகுவாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பெரும்பாலான நிறுவனங்கள் தேக்க நிலையை அடைந்திருக்கின்றன. ஏற்கனவே இத்துறையில் பணியிலிருக்கும், கடந்த இருபதாண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டவர்களையே பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற சூழல்தான் நிலவுகிறது. அதனால்தான் புதியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் நிறுவனங்கள் வெகுவாக வடிகட்டுதலை மேற்கொள்கின்றன. இதை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம். தற்பொழுது பொறியியல் நிறுவனங்களும் அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரிகளும் தங்களுடைய குவியத்தை மாற்ற வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. 

பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு, வெறும் ஆங்கிலம் தெரிந்த ஒரு பட்டதாரி என்பதற்கு பதிலாக ‘முழுமையான பொறியாளர்களை’ உருவாக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. மேக் இன் இந்தியா, இந்தியா என்னும் வல்லரசு போன்ற கனவுகளைச் செயல்படுத்த வேண்டுமானால் தாம் படிக்கும் துறை குறித்த முழுமையான புரிதல்களைக் கொண்ட பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களாக வெளியில் வர வேண்டும். வெறுமனே மென்பொருள் துறையை நம்பாமல் பிற துறைகளுக்குத் தேவையான வல்லுநர்கள், சுயதொழில் தொடங்கக் கூடிய திறன் கொண்ட இளைஞர்கள் அதிகளவில் கல்லூரியிலிருந்து வெளிவர வேண்டும். கல்வித்துறையில் செயல்படுத்தப்பட வேண்டிய இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ளாமல் யோகா, சமஸ்கிருதம் என்று பொறியியல் படிப்பின் மொத்த இலக்கையும் குழிக்குள் தள்ளி, பின்னோக்கி இழுத்து, தமிழகத்தின் முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே இத்தகைய பாடங்களை நுழைத்து மழுங்கச் செய்யும் காரியத்தை மேற்கொண்ட யாராக இருந்தாலும், தமிழகத்தின் எதிர்கால தொழில்நுட்ப படிப்புக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்கிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கு பயந்து, வளைந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டு, படித்தவன் சூதும் வாதும் செய்தால்...போவான் போவான் அய்யோன்னு போவான்.

5 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//படித்தவன் சூதும் வாதும் செய்தால்...போவான் போவான் அய்யோன்னு போவான்.//
ஜந்தோஜம்

Gobi said...

இந்த இண்டகிரேஷன், டிஃபரன்ஷியேஷன் 11,12 வகுப்பு கணிதத்திலேயே வருவது, அங்கேயே யாருக்கும் புரிதல் இல்லை.

Itsdifferent said...

See the examples here of differential equations.
https://www.mathsisfun.com/calculus/differential-equations.html
Has anyone used such examples when they taught us these? they will just say dy/dx in different shapes and forms and ask us to solve. And we also did without knowing, why?
Not sure, if things have improved now in India or not. but when we studied maths is taught as history lesson, just theory, without any application examples, as why and what

S.NEDUMARAN , said...

இலக்கியம் தெரிந்த மணிக்கே இந்த புரிதல் இருந்தால் தமிழை அரசியல் முழக்கமாகவே தெரிந்து வைத்திருப்பவர் பற்றி கூறவும் வேண்டுமோ?

Saravanan Sekar said...

Its different said,

See the examples here of differential equations.
https://www.mathsisfun.com/calculus/differential-equations.html
Has anyone used such examples when they taught us these? they will just say dy/dx in different shapes and forms and ask us to solve. And we also did without knowing, why? //

Thank you, I wish such websites were there during our college days..


To Mani,
Just gone through the syllabus for B.tech IT in the link. The elective subject philosophy - looks like more like a entrance exam for Ramakrishna matt. (if at all they plan to introduce any such exam in future, for the matt)