சில நாட்களுக்கு முன்பாக திரு. சரவணனின் பெற்றோரின் அறுபதாம் கல்யாணத்தை முன்னிட்டு ஏதேனும் ஒரு ஏழைப் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கிற திட்டத்தைச் சொல்லியிருந்தேன் அல்லவா? சரவணன், ஒரு பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்றுதான் சொன்னார். ஆனால் நாங்கள்தான் அதே தொகையில் மூன்று பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று திட்டமிட்டோம். சரவணன் சற்றே தயங்கினார்.
‘மூன்று பெண்களா? பெரிய காரியம்’ என்பது அவருடைய சந்தேகமாக இருந்திருக்கும். யோசித்தால் பெரிய காரியமாகத்தான் தெரியும். மாப்பிள்ளை தேடிப் பிடிப்பதுதான் சிக்கலான காரியம். ஆனால் மாப்பிள்ளையை பெண் தரப்பிலேயே முடிவு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு சீர் வரிசை வழங்கி வாழ்க்கையைத் தொடங்கி வைக்கிற வேலையைத்தான் நாம் செய்கிறோம். பல லட்ச ரூபாய்களில் நடத்தப்படும் திருமணங்கள்தான் சிக்கலானவை. பல வீடுகளில் ஒரு லட்ச ரூபாய் என்பதே பெரிய செலவாகப் பார்க்கிறார்கள். அப்படியான எளிய குடும்பங்களுக்கு இத்தகைய உதவிகளைச் செய்வதெல்லாம் சிரமமே இல்லை.
மூன்று பெண்கள் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. வேறு சில பெண்களிடமிருந்தும் கோரிக்கைகள் வந்திருந்தன. ஆனால் மூவர்தான் நம்முடைய இலக்கு என்பதால் வந்திருந்த விண்ணப்பங்களை அனுப்பியவர்கள் இல்லங்களுக்கு நேரில் சென்று பார்த்து, விசாரித்து அவர்களிலிருந்து வடிகட்டி இந்த மூவரையும் இறுதி செய்திருக்கிறோம்.
மூன்று பெண்களுக்கும் சீர்வரிசை என கட்டில், மெத்தை, மிக்ஸி, கிரைண்டர், குத்துவிளக்கு, சிறிய பீரோ, சமையல் பாத்திரங்கள் என அனைத்தும் சேர்த்தும் முப்பத்தைந்தாயிரம் ரூபாய் ஆகிறது. தம்பதியினருக்கு நல்லதொரு பட்டுப்புடவை, வேஷ்டி சட்டை என ஐந்தாயிரம் ரூபாய்க்குத் திட்டம். அது போக, ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ஒரு பவுனில் ப்ரேஸ்லெட் வாங்கித் தந்துவிடலாம். அதுவொரு முப்பதாயிரம் ரூபாய்.
பணிகளை ஆரம்பித்துவிட்டோம். சீர்வரிசை உள்ளிட்ட பொருட்களின் கடைகளில் விசாரணை செய்தாகிவிட்டது. வரும் நாட்களில் பொருட்களை இறுதி செய்தால் போதும். ‘எங்களுக்கும் ஏதாவதொரு வேலையைக் கொடுங்க’ என்று சரவணன் கேட்டார். என்ன வேலையைத் தருவது என்று குழப்பமாக இருந்தது. ‘மூன்று பெண்களுக்கும் தலா ஒரு பவுனில் ப்ரேஸ்லெட் வாங்கி வரும் போது எடுத்து வாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறேன்.
நவம்பர் 3 ஆம் தேதியன்று நிகழ்வை நடத்தவிருக்கிறோம். பள்ளி வளாகம் ஒன்றில் நடத்துவதற்கு இனிமேல்தான் அனுமதியினைக் கோர வேண்டும். வரும் வார இறுதிக்குள் இடம் முடிவாகிவிடும். எதற்கு இப்பொழுதே சொல்கிறேன் என்றால் வாய்ப்பிருப்பவர்கள் நிகழ்வில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம் என்றுதான். நிகழ்ச்சி கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெறும்.
சந்தியா என்கிற பெண் பற்றி முந்தைய கட்டுரையில் எழுதியிருந்தேன். மற்ற இரண்டு பெண்களும் தாய், தந்தை இல்லாதவர்கள். கிராமத்துப் பெண்கள்.
காலையில் பத்தரை மணிக்கு வாழ்த்தரங்கம். சிறப்பு விருந்தினராக யாரை அழைக்கலாம் என்று யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது. கட்டுரையை முழுமையாக வாசித்துவிட்டு யாரை அழைத்தால் சிறப்பாக இருக்கும் என்று பரிந்துரையைச் செய்யவும். வாழ்த்தரங்கம் முடிவுற்றவுடன் நண்பகல் பனிரெண்டு மணி தொடங்கி ஒன்றரை மணி வரை மதிய உணவு. சுமார் இருநூறு பேர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யும் திட்டமிருக்கிறது. தம்பதியினரின் உறவினர் சுமார் நூறு பேர் வரக் கூடும். இன்னுமொரு நூறு பேர் நிசப்தம் தொடர்புடையவர்கள். பெரிய விருந்தெல்லாம் இல்லை- எளிய உணவை ஏற்பாடு செய்ய வேண்டும். உணவு முடிந்தவுடன் ஒவ்வொரு பெண்ணையும் சீர்வரிசை அடுக்கப்பட்ட தனித்தனி வண்டிகளில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு நாமும் கிளம்பிவிடலாம்.
அனைத்து செலவுகளையும் சரவணன் குடும்பமே ஏற்றுக் கொள்கிறது. அவரது பெற்றோரின் அறுபதாம் திருமணத்திற்கு செலவு செய்யாமல் அந்தத் தொகையில் இப்பெண்களுக்கு இந்த உதவியைச் செய்கிறார்கள்.
அனைத்து செலவுகளையும் சரவணன் குடும்பமே ஏற்றுக் கொள்கிறது. அவரது பெற்றோரின் அறுபதாம் திருமணத்திற்கு செலவு செய்யாமல் அந்தத் தொகையில் இப்பெண்களுக்கு இந்த உதவியைச் செய்கிறார்கள்.
சரவணன் தமது பெற்றோருடன் ஊரிலிருந்து வருகிறார். பெண்களை சரவணனின் பெற்றோர் வாழ்த்தி சீர்வரிசையை வழங்குவார்கள். மணவறை அலங்காரம் கூட திட்டத்தில் உண்டு. உணவு, மணவறை ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களுடன் இனி பேச வேண்டும். நிகழ்ச்சியை சுவாரசியமாக்க வேறு ஏதேனும் சில நிகழ்வுகளைச் செய்யலாமா என்கிற எண்ணமும் இருக்கிறது.
மூன்று பெண்களும் இந்த உதவியினைப் பெற மிகத் தகுதியானவர்கள். விண்ணப்பங்களிலேயே ஓரளவு புரிந்து கொள்ள முடியும். வாய்ப்பிருப்பவர்கள் வந்திருந்து மனப்பூர்வமாக வாழ்த்தவும். மூன்று பெண்களின் வாழ்வு வசந்தங்களுடன் தொடங்கட்டும். நிசப்தத்தின் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்று நினைத்து நினைத்து தள்ளி வைத்தவர்கள் இந்நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்ளவும். நிகழ்ச்சி முழுமையாக இறுதி செய்யப்பட்டவுடன் அக்டோபர் மாதத்தின் இடைநாளில் முழுமையான விவரங்களுடன் எழுதுகிறேன்.
குறிப்பு: தனிப்பட்ட ஒருவர், தமது தாய் தந்தையரின் அறுபதாம் திருமணத்திற்கு ஆகும் செலவை, ஏழைப் பெண்ணுக்குக் கொடுத்துவிட முன்வருகிறார். அதற்கென தகுதியான பெண்களை அடையாளம் கண்டறிந்து கொடுத்து, அவருக்கான உதவிகளைச் செய்திருக்கிறோம். அவருக்கான உதவி என்பதைவிடவும் அந்தப் பெண்களுக்கு நம்மால் இயன்ற சிறு உதவி இது.
குறிப்பு: தனிப்பட்ட ஒருவர், தமது தாய் தந்தையரின் அறுபதாம் திருமணத்திற்கு ஆகும் செலவை, ஏழைப் பெண்ணுக்குக் கொடுத்துவிட முன்வருகிறார். அதற்கென தகுதியான பெண்களை அடையாளம் கண்டறிந்து கொடுத்து, அவருக்கான உதவிகளைச் செய்திருக்கிறோம். அவருக்கான உதவி என்பதைவிடவும் அந்தப் பெண்களுக்கு நம்மால் இயன்ற சிறு உதவி இது.
5 எதிர் சப்தங்கள்:
Thanks for Mr.Saravanan & you Manikandan
திருமண உறவில் இணையும் இதயங்களின் வாழ்வு சிறக்க வாழ்த்துகள் !!
உதவி செய்பவர்கள், களப்பணியாற்றுகளுக்கும் அன்பு வாழ்த்துகள்..
Very Good Initiative. All the best future for three girls.
please invite Tamil professor Dr G Gnanasambandam.
He also conducts marriage in as per traditional tamil method.
மணமக்களுக்கு வாழ்த்துக்கள். சரவணனுக்கு நன்றி. மணிக்கு ஒரு பூங்கொத்து
Post a Comment