Aug 9, 2019

மன்னா மெஸ்

‘தொழில் தொடங்கலாம்’ என்று சொல்வது சுலபம். ஆனால் அது எவ்வளவு எளிய காரியமா என்ன? நினைத்தவர்கள் எல்லாம் தொழில் தொடங்குவதாக இருந்தால் திரும்பிய பக்கமெல்லாம் தொழிலதிபர்கள்தான் இருப்பார்கள். அதற்கென்று தனியான மனநிலை தேவை. கணக்கிடும் திறமை வேண்டும். கணக்கு என்றால் வெறும் பொருளாதாரக் கணக்கு மட்டும் இல்லை.

பொதுவாக நம் ஊர்களில் தொழில் தொடங்குவது என்றால், நிறைய முன்னோடிகள் இருக்கும் தொழிலாகப் பார்த்து தேர்வு செய்வது ஒரு வகை. ஹார்டுவேர் கடை, உணவகம், துணிக்கடை என்று திரும்பிய பக்கமெல்லாம் கண்களில் படும் ஏதாவதொரு தொழிலை ஆரம்பிப்பார்கள். போட்டி இருக்கும். வருமானமும் மெல்லத்தான் உயரும். ஆனால் ரிஸ்க் சற்று குறைவு. விழுவது போலத் தெரிந்தால் யாரிடமாவது கேட்டுக் கொள்ளலாம். 

இரண்டாவது வகை யாருமே யோசிக்காத ஒன்றைத் தொழிலாக எடுத்துச் செய்வது. ‘இதெல்லாம் சம்பாதிக்க உதவுமா?’ என்று அடுத்தவர்கள் தயங்குமிடத்தில் அதிரடியாகக் களமிறங்குவார்கள். உலக அளவிலும் சரி, நாடளவிலும் சரி-  மிகப்பெரிய தொழிலதிபர்களாக நம் கண்களில் தெரிகிறவர்கள் அப்படியான ஒன்றில் வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள். போட்டி குறைவாக இருந்தாலும் ரிஸ்க் அதிகம். சரியாக அமைந்துவிட்டால் பணம் கொழித்துவிடும். ஆனால் சறுக்கினால் கை கொடுக்கக் கூட ஆள் இருக்காது. ‘அதைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதே’ என்று ஒதுங்கிக் கொள்வார்கள்.

முதல் வகை சற்றே எளிதானது எனத் தெரிந்தாலும் கூட அலேக்காகத் தூக்கிவிடலாம் என்றெல்லாம் கற்பனை செய்யக் கூடாது. எவ்வளவு நுட்பங்கள் இருக்கின்றன? இரண்டு நாட்கள் ஜெயராஜூடன் சுற்றிக் கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெயராஜை நான்கைந்து வருடங்களாகத் தெரியும். பத்து வருடங்களுக்கு முன்பாக அச்சரப்பாக்கத்தில் லாரி ஓட்டுநர்களுக்கு என அசைவ உணவகம் ஒன்றைத் தொடங்கியவர். ஆனால் தோல்வி. அசைவ உணவில் வெல்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஆரம்பித்த தொழில் சுணங்கிவிட, விட்டுவிட்டு ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் என்று ஏதேதோ தொட்டுவிட்டு கடந்த வருடம் ‘மன்னா மெஸ்’ ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பத்தில் அச்சரபாக்கத்தில் ஊருக்குள் சிறிய கடைதான். அதன் பிறகு வளர்ச்சி கண்ணில் தெரிய தேசிய நெடுஞ்சாலைக்கு ஜாகையை மாற்றிவிட்டார். 

சென்னை செல்லும் வழியில் மேல்மருவத்தூருக்கு நான்கைந்து கிலோமீட்டருக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலையில் மன்னா மெஸ் இருக்கிறது. அசைவத்தில் ஆரோக்கியம் என்பதுதான் Tag line. உணர்ச்சிவசப்பட்டு ‘அப்படியே எதிர்த்த மாதிரியும் ஒரு கடையை ஆரம்பிச்சா அந்தப் பக்கமா போற கூட்டத்தையும் இழுத்துடலாம்ல’ என்றேன். அறிவுரைதானே? காசா பணமா? அள்ளிவிட்டால்  'கிடக்கிறது கழுதை' என்று இத்தகைய மனிதர்களிடம் பேசக் கூடாது. பல்பு கொடுத்துவிடுகிறார்கள்.

இப்பொழுது மெஸ் இருப்பது சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் வழியில். ‘சென்னையிலிருந்து ஊருக்குப் போகும் போது இருக்கும் மனநிலை வேற; ஊரிலிருந்து திரும்பவும் சென்னைக்கு வரும் போது இருக்கும் மனநிலை வேற’ என்றார் ஜெயராஜ். சைக்காலஜி புரிகிறதா? எப்பொழுதுமே ஊருக்குச் செல்லும் போது ஒரு கொண்டாட்ட மனநிலை இருக்கும். நல்ல இடமாக நிறுத்தி, உணவுண்டு, குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, திருப்தியாகச் செல்கிறவர்கள் அதிகம். அதுவே ஊரிலிரிந்து திரும்பி மாநகரை நோக்கிச் செல்லும் போது ‘எப்போடா போய் சேருவோம்’ என்கிற மனநிலைதான் இருக்கும். வண்டியில் இருக்கும் குழந்தைகளின் அட்டகாசம், எதிர்ப்படும் போக்குவரத்து நெரிசல் என எல்லாமும் சேர்த்து வண்டியை ஓட்டுகிறவனை கடுப்பிலேயே வைத்துக் கொண்டிருக்கும். சாப்பிட வேண்டிய நேரத்தில் கிடைத்ததை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுவார்கள். அவர்களும் வாடிக்கையாளர்கள்தான். அவர்களும் உண்பார்கள்தான். ஆனால் நாம் என்ன மாதிரியான உணவகத்தை ஆரம்பிக்கிறோம் என்பதைப் பொறுத்து சாலையின் இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என முடிவு செய்ய வேண்டும்.

ஆக, கடை ஆரம்பிக்கும் இடத்தைத் தேர்ந்தெடுப்பதிலேயே கூட இவ்வளவு சூட்சமங்கள் அடங்கியிருக்கின்றன.

‘இந்த ஆளு எப்படியெல்லாம் யோசிக்கிறாரு’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படியெல்லாம் யோசிக்கவில்லையெனில் நான்கு மாதத்தில் Break-even ஐ அடைவது சாத்தியமில்லை.

ஏ.சி கூட இல்லை; வெறும் மெஸ்தான். ஆனால் பல பிரபலங்கள் உண்டுவிட்டுப் போகிறார்கள். நான் சென்றிருந்த போது புஷ்பவனம் குப்புசாமி வந்திருந்தார். முகம் தெரிந்த பிரபலங்கள் ஒரு கணக்கு என்றால் தம்மை வெளியில் காட்டிக் கொள்ளாத பெரும் ஆட்கள் வேறு கணக்கு. ஐந்தாயிரம் ரூபாயை பணியாளர்களுக்கு டிப்ஸ்ஸாக மட்டுமே ஒருவர் கொடுக்கிறார். துபாயில் தொழிலதிபராம். நம் ஊர்க்காரர்தான். அவர் பெயரைக் குறிப்பிட வேண்டியதில்லை. சென்னையில் ஒரு மிகப்பெரிய சொத்து- சுமார் ஆயிரம் கோடியாவது இருக்கும்- விலை பேசிக் கொண்டிருப்பதாக ஜெயராஜிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் உடான்ஸ் விடுகிறாரோ என்று கூட நினைத்தேன். இணையத்தில் தேடினால் அப்படித்தான் இருக்கிறது. வாயடைத்துப் போனேன். அந்தச் சொத்தின் விலை முடிந்தால் அவர் யாரென்று வெளிப்படையாகச் சொல்லலாம். 

‘இவ்வளவு பெரிய கை ஏன் இங்க வந்து சாப்பிடுது’ என யோசிக்கத் தோன்றுமல்லவா? 

அதற்கும் ஒரு காரணத்தை வைத்திருக்கிறார்கள். தினசரி மதியம் பனிரெண்டு மணிக்கு பணியாளர்களை நிறுத்தி இறைவணக்கம் செய்கிறார்கள். ஜெயராஜ் இரண்டு நிமிடங்கள் அவர்களிடம் பேசுகிறார். அதன் பிறகுதான் உணவு பரிமாறத் தொடங்குகிறார்கள். வீட்டில் சாப்பிவிட்டுச் செல்லும் உணர்வு வர வேண்டும், எதையும் கொண்டு போய் கிண்ணங்களில் கொடுக்காமல் வீடுகளில் பரிமாறுவதைப் போலவே கேட்டுக் கேட்டு பரிமாற வேண்டும் என்பது தொடங்கிச் சின்னச் சின்ன விஷயங்கள். ஒரு பாடமே படிக்கலாம்.

‘உணவு எப்பொழுதும் திகட்டவே கூடாது’ என்பது மாதிரியாக நிறைய உணவு சார்ந்த மனோவியலும் பேசுகிறார். ‘ஜிகிர்தண்டா வாங்கி வைக்கலாம்..ஆனா சாப்பிட்டு முடிச்ச பின்னாடி ஹெவி ஆகிடும்..அப்படி ஒரு எண்ணம் வரவே கூடாது அடுத்து எப்போ சாப்பிடலாம்ன்னு தோணுற மனநிலைதான் நல்ல உணவுக்கான அடையாளம்’ என்று கிளறக் கிளற புதியதாக ஒன்றைச் சொல்கிறார். அர்ப்பணிப்பும், தொழிலை அக்குவேறு ஆணிவேறாக புரிந்து கொள்ளாமலும் இதெல்லாம் சாத்தியமில்லை எனத் தோன்றியது. 

இரண்டு நாட்களாக அவர் சொன்னவற்றையெல்லாம் எழுதிவிடலாம்தான். ஆனால் அவற்றில் சில அவருடைய தொழில் ரகசியங்களாகக் இருக்கக் கூடும். 

பெரிய விளம்பரம் எதுவுமில்லாமல் அடுத்தவர்கள் சொல்லிச் சொல்லியே துபாய் தொழிலதிபர் வரைக்கும் வந்து போகிறார்கள். ஜெயராஜ் குறித்தும் மன்னா மெஸ் குறித்தும் எழுதுவதற்கு அவரது வெற்றி பெற்ற உணவகம், உணவின் சுவை என்பதையெல்லாம் கடந்து அவர் பேசுகிற உணவு சார்ந்து மக்களின் மனோவியலும், அதற்காக அவர் எடுத்தாளும் நுண்மையான செயல்களும்தான் உண்மையிலேயே அசத்துகிறது.

எந்தத் தொழிலை எடுத்தாலும் வாடிக்கையாளர்களின் இத்தகைய மனநிலை அறிதல்தான் மிக முக்கியம். நாற்பது வயதில் தொடங்கினாலும் சரி; இருபதிலேயே தொடங்கினாலும் சரி- தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்பதற்கு ஜெயராஜ் மாதிரியான ஆட்கள்தான் உதாரணமும் கூட. 

சமீபத்தில் ஒரு நண்பர் தொழில் தொடங்குவது பற்றிப் பேசினார். ஒருநாள் ஜெயராஜை பார்த்து பேசிட்டு வாங்க என்றேன். ஏனென்றால் ஜெயராஜ் ஒரு ஜகஜாலக் கில்லாடி.

மன்னா மெஸ் பற்றிய சலனப்படம் ஒன்று-

3 எதிர் சப்தங்கள்:

Amanullah said...

"இரண்டாவது வகை யாருமே யோசிக்காத ஒன்றைத் தொழிலாக எடுத்துச் செய்வது. ‘இதெல்லாம் சம்பாதிக்க உதவுமா?’ என்று அடுத்தவர்கள் தயங்குமிடத்தில் அதிரடியாகக் களமிறங்குவார்கள். போட்டி குறைவாக இருந்தாலும் ரிஸ்க் அதிகம். சரியாக அமைந்துவிட்டால் பணம் கொழித்துவிடும்." RED BUS,OLA,UBER, எல்லாம் இப்படி ஆரம்ப்பிக்பட்டவைதான்.

சேக்காளி said...

பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் ட்ட தொழில் ஆரம்பிக்கலாமா வேண்டாமா ன்னு கேட்டு முடிவு எடுக்கலாம்

ரமாராணி said...

தொழில் துவங்கி நஷ்டப்பட்டவர்களையும், வெற்றி பெற்றவர்களையும் பார்த்திருக்கிறேன். அதற்கு பின்புலத்தில் இவ்வளவு விசயங்கள் உள்ளன என இப்போது தான் அறிய முடிகிறது. வாழ்த்துகள் ஜெயராஜ்...