Aug 7, 2019

கண்ணியின் சந்தோஷம்

இன்றைய தினம் இப்படி விடிந்திருக்கிறது. அங்குராஜிடமிருந்து வந்திருக்கும் மின்னஞ்சல் இது.

வணக்கம் சார்,

நான் அ.அங்குராஜ். தற்போது 4ம் ஆண்டு B.E(ECE), கோவை CIT கல்லூரியில் படித்து வருகிறேன். 2016-ம் ஆண்டு அரசு தாமஸ் சார் மூலமாக தங்களிடம் உதவிதொகை கேட்டு வந்திருந்தேன். கடந்த 4 வருடங்களாக எனக்கு நிதி உதவி மட்டுமின்றி SUPER SIXTEEN மூலமாக ஆளுமைத் திறன் வளர்ப்பு மற்றும் ஆங்கிலப் பயிற்சி வாயிலாக மெருகேற்றியுள்ளீர்கள். நான் தற்பொழுது ***** TECHNOLOGIES என்ற நிறுவனத்தில் Campus Recruitment இல் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். 

இந்நிலையை அடைய எனக்கு உதவி செய்த தங்களுக்கும் தங்கள் வாசகர்களுக்கும் என்  மனமார்ந்த நன்றி.

இப்படிக்கு
அ.அங்குராஜ்

நான்காண்டுகளுக்கு முன்பாக அங்குராஜை அவரது பள்ளி ஆசிரியை திருமதி.ரமாராணி மூலமாக அறிந்தோம். மாணவனுக்கு அம்மா இல்லை என்றும், சித்தி வீட்டில் வளர்வதாகவும் சொன்னார். சித்தி கூலித் தொழிலாளி. அங்குராஜ் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில், தமிழ் வழியில் படித்த மாணவன். கல்லூரியின் விடுதிக் கட்டணம் உட்பட நிசப்தம் வழியாகவே முழுக் கல்வி உதவியையும் பெற்று வந்தவர் ஆரம்பத்தில் ‘ஐ.எஸ்.ஆர்.ஓவில் சேர்வதுதான் இலட்சியம்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

‘முதல்ல ஏதாவது ஒரு வேலையை வாங்கிடு....அதன் பிறகு இலக்கு என்னவோ அதை நோக்கி போய்க்கலாம்...ஒருவேளை ஐ.எஸ்.ஆர்.ஓவில் சேர முடியலைன்னா சிக்கல் ஆகிடும்’ என்று சொல்லியிருந்தேன். கடந்த ஒரு வருடமாகவே வளாக நேர்காணல்களுக்குத் தயார் செய்து வந்தான். அவ்வப்பொழுது அழைத்துப் பேசுவதுண்டு. முதலில் சில நிறுவனங்களில் வேலை கிடைக்கவில்லை. அது இயல்பானதுதானே. அவன் சற்று வருத்தமுற்றது போல பேசினாலும் தளர்வடைந்திருந்ததாகத் தெரியவில்லை. அங்குராஜ் தளர்வடையக் கூடியவனில்லை.

நேற்றிரவு அவன் அழைத்திருந்த போது அழைப்பை எடுக்க இயலவில்லை. இனிப்புச் செய்தியை சொல்வதற்குத்தான் அழைத்திருக்க வேண்டும். இன்று காலையில் இம்மின்னஞ்சலைத் திறந்தேன். மின்னஞ்சலைப் பார்த்துவிட்டு அழைத்துப் பேசினேன். வருடத்திற்கு ஆறரை லட்ச ரூபாய் சம்பளம். நேற்றே வேலைக்கான கடிதத்தையும் கொடுத்துவிட்டார்கள். எளிய கிராமத்து மாணவனுக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் கிடைத்துவிடும்?

சூப்பர் 16- ன் முதல் அணி மாணவன் அங்குராஜ். துடிப்பானவன். இத்தகைய மாணவர்கள் பெரும்பாலும் சுயம்புகள். லேசாகக் கோடு காட்டினால் போதும். அவர்களே பிடித்துக் கொள்வார்கள். ‘மெருகேற்றியுள்ளீர்கள்’ என்பது கூட பொருத்தமானதில்லை. அவனது உழைப்பையும், திறமையும் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறேன். கல்லூரியின் விடுமுறை நாட்களில் திருமண நிகழ்ச்சிகளில் உணவு பரிமாறச் செல்வான். சொற்ப சம்பளம்தான். உணவு பரிமாறிவிட்டு அங்கேயே கூட்டத்தோடு கூட்டமாக இரவில் படுத்துக் கொள்வான். ‘நான் என்ன படிக்கிறேன் தெரியுமா? என் கல்லூரி என்ன தெரியுமா?’ என்று அத்தனை ஈகோவையும் அடித்து நொறுக்கிவிடக் கூடிய வேலை அது. அங்குராஜ் இந்த வேலைக்குச் செல்வது தெரிந்தாலும் கூட ‘படிப்பு கெடாமல் பார்த்துக்க’ என்று மட்டும் சொல்வேன். 

உழைக்கும் மாணவர்களைத் தடுக்க வேண்டியதில்லை. எவ்வளவு கடினமான வேலைகளை வேண்டுமானாலும் அவர்கள் செய்யலாம். அவர்களது உழைப்பு எதிர்காலத்தில் பெரும் மகிழ்வை அவர்களுக்கே கொடுக்கும். வெற்றி பெற்ற எந்த மனிதனுமே கடந்த காலத்தில் மிகப்பெரிய சிரமங்களைத் தாங்கியவர்களாகவே இருப்பார்கள். There is nothing like easy win. வாழ்வின் உயரங்களைத் தொட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்கும் போது தாம் கடந்து வந்த பாதை குறித்து ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமிதம் இருக்க வேண்டும். ‘அதையெல்லாம் தாண்டித்தான் இதை அடைந்திருக்கிறேன்’ என்று நினைத்து அசைபோடும் போதுதான் அவனது ஒவ்வொரு வெற்றிக்கும் அர்த்தம் உண்டாகும். அவர்கள் கடந்து வந்த சிரமங்களும், உழைப்புமே அடுத்த தலைமுறைக்கான உந்துசக்தி கொண்ட கதைகளாக மிஞ்சும்.

சி.ஐ.டி கல்லூரிக்கும், மின்னணுவியல் துறைக்கும், ஒவ்வொரு பேராசிரியர்களுக்கும், ரமாராணி உட்பட அங்குராஜின் ஆசிரியர்கள் அனைவருக்குமே இந்த வெற்றியில் மிகப்பெரிய பங்கிருக்கிறது. 

நிசப்தம் ஒரு தூண்டுகோல். ஒவ்வொரு விதத்திலும் நிசப்தம் வழியான செயல்பாடுகளுக்கு ஆதரவாக நிற்கும் அனைத்து வாசக நண்பர்களுக்கும் அங்குராஜின் வெற்றி சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடும்.

எத்தனையோ மாணவர்கள் காசோலையை வாங்கிய பிறகு திரும்ப அழைத்தது கூட இல்லை. உள்ளபடியே எனக்கு அதில் நிறைய வருத்தமுண்டு. ஆனால் என்ன செய்ய முடியும்? தொடர்பில் இருக்கும் ஒவ்வொரு மாணவரும் தமது வெற்றியின் ஒவ்வொருபடியாக ஏறும் போது அதற்கு ஏதாவதொரு வகையில் உதவியாக இருக்க முடிகிறது என்பதுதான் நமக்கான திருப்தி. அங்குராஜிடம் ‘நீ வந்துடு’ என்று சொன்னால் எதற்கு என்று கூட கேட்காமல் பையை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு பேருந்து பிடித்து வந்துவிடுவான். பல நிகழ்ச்சிகளுக்கு அவனை அப்படித்தான் அழைத்திருக்கிறேன். நம் மீது முழுமையாக நம்பிக்கை கொண்ட ஒரு மாணவன் புன்னகைக்கும் போது நம்மையுமறியாமல் மனம் நெகிழ்ந்துவிடுகிறது.

‘சூப்பர் 16’ அடுத்த அணிக்கு, முதல் அணி மாணவர்கள் ராஜேந்திரன் (ஐஐடியில் முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்) மற்றும் அங்குராஜ் இணைந்து வகுப்பை நடத்தப் போகிறார்கள். எவ்வளவு பெரிய சந்தோஷம் இது? கண்களைப் பனிக்கச் செய்யும் நிறைவை உணர்கிறேன். ராஜேந்திரனிடமும் அங்குராஜிடமும் 'எதைப் பத்தியும் பயப்படாதீங்க..நாங்கதான் உதாரணம்’ என்று மாணவர்களுக்கு உணர்த்தும்படியாகத் தயாரிப்புகளைச் செய்யச் சொல்லியிருக்கிறேன். அங்குராஜூம் ராஜேந்திரனும் ஒரு படி மேலே ஏறிவிட்டார்கள். தமக்கு கீழாக இருக்கும் இன்னும் எத்தனையோ மாணவர்களைக் கை தூக்கிவிடும் சங்கிலித் தொடரில் ஒரு கண்ணியின் சந்தோஷத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

21 எதிர் சப்தங்கள்:

ரமாராணி, கோபி. said...

மிகவும் மகிழ்வாக உள்ளது. அங்குராஜ் என் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்- ரமாராணி.

dhana said...

இதை படிக்கும் போது ஏற்படும் மனநிறைவு நிஜமாலுமே புல்லரிக்க வைக்கிறது.
goosebumps moment.
The one who comes from the similar background will feel the same really..
Congrats Anguraj , Mani Anna & Team

Anonymous said...

super thalaiva

தேவா said...

வாழ்த்துக்கள்.

Kodees said...

Congrats Mani, I feel very proud of you. It's just a small step, miles to go!.

ச. கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அங்குராஜ், நிசப்தம் அணி, அவரது ஆசிரிய பெ௫மக்கள்.
தங்களின் பயணம் மென்மேலும் சிறந்து தொடர மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள். - ச.கோபிநாத்

Murugesh Kandasamy said...

Awesome! Awesome Mani Anna!
Congrats Anguraj, There you go!


Ponchandar said...

வாழ்த்துகள் ! ! ! ... பாராட்டுக்கள் ! ! ! உங்கள் இருவருக்கும்..

raki said...

all kudo for all of you including anguraj

let this be a role model for others who avail the support and willing to strive hard

kandhu said...

அற்புதமான அலாவுதீன் விளக்காய் நீங்கள் பாராட்டுக்கள்

Jaypon , Canada said...

உதவிய அனைவருக்கும் உதவி பெற்று இன்று மிளிரும் இளந்தளிர்களுக்கும் என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.

Sherwin said...

வாழ்த்துக்கள் அங்குராஜ், மணி

சுவடுகள் said...

மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது மணி. மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்- நீங்கள் எங்கள் நண்பர் என்பதில் பெருமையடைகிறோம்.
ரமணன்& மீரா


சேக்காளி said...

Nothing to tell other than

சேக்காளி said...


இதை தவிர வேறென்ன சொல்ல

Nachimuthu said...

தோழர் நான் உங்களின் முகநூல் நண்பன்.

உங்களின் முகநூல் பதிவுகளில் இதுபோன்ற கல்வி உதவித்தொகை,அரசுப்பள்ளிகளுக்கு கட்டுமானப்பணிகள் பற்றிய செய்திகளை படிக்கும்போது எனது நண்பர்களுக்கும் பகிர்வேன்.
இப்போது அங்குராஜ் பற்றிய இந்த பதிவு உண்மையிலும் மன மகிழ்வை தருகிறது வாழ்த்துக்கள். இன்னும் பல ஆயிரம் அங்குராஜ்களை உங்களின் அறப்பணியின் மூலம் உருவாக்க வாழ்த்துகிறேன்

நாடோடிப் பையன் said...

Mani

My hearty congratulations to you for driving the initiative, to those who helped you in this journey, and those youngsters who have 'made it'.

Best wishes for the other students who are pursuing their dream to gain higher education and gainful employment.

Anand Viruthagiri said...

Heartiest Congratulations Anguraj !!

This is so blissful to read Mani, the chain that you are creating could be one of the best examples of humanity.

ShankarGanesh said...

Best wishes to Ankuraj..

Thirumalai Kandasami said...

வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி

sundararajan c said...

Happy. innum ithupol niraya article varanum