Aug 16, 2019

போரடிக்குதுங்க..

‘வேலையை விட்டுட்டேன்’ என்று யாராவது சொல்லும் போது அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் வாரம் ஒருவராவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு புது ஐடியா இருக்கிறது. அதை வடிவத்துக்குக் கொண்டு வந்துவிட முடியும் என்று தீர்க்கமாக நம்புகிறார்கள். அவர்களிடம் பேசி முடித்த பிறகு அவர்களின் துணிச்சலை யோசித்துப் பார்க்க சற்று பயமாகவும் இருக்கும். ‘ஒருவேளை இப்பொழுது வரும் சம்பளம் வரவில்லையென்றால் அடுத்த மாத வருமானத்துக்கு என்ன வழி?’ என்று  என்னிடம் கேட்டால் பதில் இல்லை.

புதியதாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும், தொழிலதிபர் ஆக வேண்டும் என்றெல்லாம் என்னிடம் கனவுகள் இருந்ததில்லை. ஏதாவதொரு நிறுவனத்தில் ஒரு வேலை என்பதைத் தாண்டி எதுவுமில்லை. ஆனால் கடந்த பதினைந்து வருடங்களாகவே ‘நிரந்தரமான வேலை’ என்று எந்த இடத்திலும் நம்பியதில்லை. எந்த நிறுவனம்தான் நிரந்தரமானது? வெகு தூரப் பயணங்களில், பறவைகள் கத்தும் அந்திவேளைத் தனிமைகளில் ‘இந்த வேலை இல்லைன்னா?’ என்கிற கேள்வி திடீரென்று முளைத்துவிடும். அப்படியொரு எண்ணம் ஏன் வரும் என்றே தெரியாது. ஆனால் வரும். 

நம் காலத்தில் செல்போன் மட்டும் இல்லையென்றால் பெரும்பாலானவர்கள் மன உளைச்சலிலேயே செத்துவிடக் கூடும். செல்போன்கள் மிகப்பெரிய வடிகால்கள். எவ்வளவு பெரிய சுமையையும் யாரிடமாவது இறக்கி வைத்துவிட முடிகிறது. வேலை குறித்தான எண்ணங்கள் தோன்றும் போது அதற்கென்று சில நண்பர்களிடம் பேசத் தோன்றும். சரவணன் என்றொரு நண்பர் இருக்கிறார்- இவர் கை வைக்காத வேலையே இல்லை- ஸ்டேஷனரி பொருட்கள் விற்பது முதல் குன்னூரில் ரிசார்ட் தொடங்கி, வெளிநாட்டு ஏற்றுமதி வரைக்கும் எல்லாவற்றையும் ஒரு கை பார்த்திருக்கிறார். என்னைவிட நான்கைந்து வயது முன்பின்னாக இருக்கலாம். திடீரென்று வெளிநாட்டுப் பயணம் செல்வதாகச் சொன்னார். ‘எதுக்குங்க?’ என்று கேட்டால் சில பொருட்களைச் சொல்லி அதற்கான சந்தை அங்கே எப்படி இருக்கிறது என பார்த்து வர என்கிறார். உண்மையில் இப்படியான மனிதர்கள்தான் மிகப்பெரிய ஆச்சரியங்கள். எதையாவது உருட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது ‘இத்தனை வாய்ப்புகள் இருக்கின்றன; இவற்றில் நமக்கு ஒண்ணும் அமையாமலா போய்விடும்’ என்னும் நம்பிக்கையை உருவாக்கும் டானிக்குகள்.

‘மணி, வேலையைப் பத்தி இப்ப எதுக்கு நினைக்குறீங்க? புடிச்சிருக்கிற வரைக்கும் செய்யுங்க.அப்படியொரு சூழல் வரும் போது பார்த்துக்கலாம் விடுங்க’ என்பார். அடுத்த சில நிமிடங்களில் மனம் தெளிவாகிவிடும். 

இருக்கும் சொத்துகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு, கடன்களையெல்லாம் அடைத்துவிட்டு ‘இனி புதுசா வருமானத்துக்கு ஏதாச்சும் செய்யணும்’ என்று சொன்ன நண்பர்களைக் கூட எதிர் கொண்டிருக்கிறேன். நாற்பதுகளைக் கடந்த பிறகு starting with fresh என்பது எவ்வளவு பெரிய த்ரில்லான சமாச்சாரம்.

இதையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால் சமீபத்தில் ஒரு நண்பர் தமக்கு ஒரு வேலை வேண்டும் என்றார். ‘நல்ல சம்பளம் கொடுக்கிற அதே சமயம் வேலை நிரந்தரம்’ என்று இருக்கிற நிறுவனமாக வேண்டும் என்றார். முதல் கோரிக்கை சற்று சுலபம். இரண்டாம் கோரிக்கை லேசுப்பட்டதில்லை.  அவரே சில நிறுவனங்களைச் சொல்லி ‘இங்கெல்லாம் வேலையை விட்டுத் தூக்க மாட்டாங்க’ என்றார். அப்புறம் அங்கேயே போய்விடலாமே என்றால் ‘அங்க எல்லாம் போரடிக்குதுங்க’ என்கிறார். கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை.

யோசித்துப் பார்த்தால் நமது வாழ்க்கையில் அதிகபட்சம் முப்பதாண்டுகள் வேலை செய்வோமா? முப்பதாண்டுகளும் செக்கு மாடு மாதிரி ஒன்றையே சுற்றிக் கொண்டிருக்கலாமா அல்லது புதியதாக ஏதாவது முயற்சி செய்து பார்க்கலாமா என்பது நம் கைகளில்தான் இருக்கிறது. ‘ரிஸ்க் எடுக்கவெல்லாம் வேண்டாம்...இப்படியே இருந்துக்கிறேன்’ என்பது ஒரு வகை. அதுவும் தவறில்லை. குடும்பம், குழந்தைகள், அவர்களின் படிப்பு என எவ்வளவோ இருக்கிறது. எல்லாவற்றையும் கணக்குப் போட வேண்டும். ஒருவேளை மகன் மருத்துவப்படிப்பு சேர்ந்தால், அதுவும் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர்ந்தால் வருடம் இவ்வளவு லட்சங்கள் தேவைப்படும் என்று கணக்குப் போட்டு அதற்கு ஏற்ற முதலீடுகளைச் செய்கிற நண்பர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.

அதுவே ‘இது போரடிக்குது...புதுசா ஏதாச்சும் செய்யறேன்...சரியா வரலைன்னா அப்புறம் பார்த்துக்கலாம்’ என்பது இரண்டாம் வகை. பெரிய ரிஸ்க்தான். ஆனால் இதில்தான் சுவாரசியமிருக்கிறது. வாழ்தலுக்கான அர்த்தமும் இருக்கிறது. என்னைக் கேட்டால் மனதில் தைரியமும் தெளிவும் இருந்தால் இரண்டாம் வகையாகத்தான் இருக்க வேண்டும் என்பேன். செய்த வேலையையே திரும்பச் செய்து, ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி எல்லாவற்றையும் நிறைவு செய்வதைவிடவும், இந்த உலகில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளிலிருந்து நமக்குப் பொருத்தமான ஒன்றைப் பிடித்து அந்தக் குதிரையை அடக்குவதில்தான் பொதிந்து கிடக்கும் நம் வாழ்க்கைக்கான மொத்த அர்த்தத்தையும் கண்டறிவோம்.

மகன் படிக்க வேண்டும், மகள் படிக்க வேண்டும், அவர்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும், ஓய்வுக்குப் பிறகு ஒரு வருமானம் வேண்டும்- எல்லாம் சரிதான். ஆனால் நம் வாழ்க்கையை நாம்தானே வாழ வேண்டும்? 

சலிப்புத் தட்டினால் ஏதாவது புதிதாகத் தொழில்தான் செய்ய வேண்டும் என்றில்லை. பிடித்த துறையில், பிடித்தமான வேலையைக் கண்டறிவதும் கூட இதில்தான் வரும். புதிது புதிதாக தொழில்நுட்பங்கள் உருவாகியபடியேதான் இருக்கின்றன. உண்மையில் புத்தம் புதிய வேலையை எடுத்துச் செய்யும் போது ‘இந்த வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று கண்டறிந்து அதை மேலாண்மைக்குச் சொல்லலாம். ‘நீ இந்த வேலையைச் செய்; இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று யாரும் நம்மை அடக்கி வழி நடத்த மாட்டார்கள். அவர்களுக்கே கூட அது தெரியாமல் இருக்கும். நாம் சொல்லும்படி நம்மை வேலை செய்ய அனுமதிக்கிறார்கள் என்றால் அதைவிட வேறு என்ன பெரிய வேலைச் சுதந்திரம் இருக்கிறது? புதுப்புது துறைகளில் நுழைந்த நண்பர்கள் இதைத்தான் மிகப்பெரிய சந்தோஷமாகச் சொல்கிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் பொருளாதார நிர்பந்தங்கள் மட்டுமே நம் பாதையை நிர்மாணிக்குமானால் ஒரு குடும்பஸ்தனாக நிறைவான வாழ்க்கையை வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால் அதில் என்ன சுவாரசியம் இருந்துவிடும் என்று தெரியவில்லை. பொருளாதார நிர்பந்தங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கம்தான்; ஆனால் அது மட்டுமே எனது பாதையை, எனது வாழ்க்கை முறையை முடிவு செய்துவிட முடியாது என்று உறுதியாக நினைத்தோமானால் கொட்டிக் கிடக்கின்றன வாய்ப்புகள். சலிப்புகளை விட்டு வெளியே வந்து பிடித்ததை எடுத்துக் கொள்ளலாம். வாழ்ந்து முடித்துத் திரும்பிப் பார்க்கும் போது நாம் ஏறி வந்த மேடு பள்ளங்கள்தானே சுவாரசியத்தின் திறவுகோல்கள்!

5 எதிர் சப்தங்கள்:

venkat said...

இந்தப் பதிவிற்கு பதிலிட நான் தகுதியானவன். இரண்டு வருடம் முன்பு திடீரென்று ஒரு நாள் வேலையை ராஜினாமா செய்து விட்டேன். காரணம்? மிக எளிதானது. நான் வேலை பார்த்த நிறுவனத்தை விட, நான் கொஞ்சம் அதிகமாக வளர்ந்து விட்டேன். விளைவு? நிறுவனம் செய்கின்ற தவறுகளை பயப்படாமல் சுட்டிக் காண்பிக்க ஆரம்பித்தேன். என்னை எதிர்த்து பேசினால் வேலையை விட்டு விரட்டி விடுவேன் என்கிற பூச்சாண்டிக்கெல்லாம் பணியவில்லை. Freelancer என்கிற நிரந்தரமில்லா வேலை வாய்ப்புகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அதனை நோக்கி நகர்ந்தேன். வேலைக்கு மனு போட்ட பொழுது பதிலளிக்காத நிறுவனங்கள், freelancer என்றதும் பல்லை இளித்துக் கொண்டு பதிலளித்தன. அவர்களுக்குதான் நிரந்தரமாய் ஆள் தேவையில்லையே. ஜாகையை ஊருக்கு மாற்றி விட்டேன். (கோபி). வேலை வரும்பொழுது மட்டும் பயணம் செய்கிறேன். இரண்டு வருடம் முன்பு என்னை வேலையை ரிசைன் பண்ண வைத்தது விதியல்ல. கார்ப்பரேட் கம்பெனிகளை ஊருக்குள் விட்டு, ஓபன் எகனாமி என்கிற பெயரில் மக்களை காவு வாங்குகிற பொருளாதாரக் கொள்கையே

ramesh said...

எதுக்கெடுத்தாலும் கார்பொரேட் கம்பனியை குத்தம் சொல்றது இப்போ பேஷன் ஆயிடுச்சு. ஊருக்குள்ள கார்பொரேட் கம்பெனி வரதுக்கு முன்னால நம்ம என்ன சமீன்தாரா இருந்தோமா? இப்போ ஓரளவுக்கு எல்லாராலயும் சம்பாரிச்சி சாப்பிட முடியுது. அந்த நெலமை கூட 1990'கு முன்னால இல்லையே? 'வறுமையின் நிறம் சிவப்பு' படம் எல்லாம் மறந்து போச்சா?

சேக்காளி said...

// புத்தம் புதிய வேலையை எடுத்துச் செய்யும் போது ‘இந்த வேலையை இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று கண்டறிந்து அதை மேலாண்மைக்குச் சொல்லலாம். ‘நீ இந்த வேலையைச் செய்; இப்படித்தான் செய்ய வேண்டும்’ என்று யாரும் நம்மை அடக்கி வழி நடத்த மாட்டார்கள். அவர்களுக்கே கூட அது தெரியாமல் இருக்கும். நாம் சொல்லும்படி நம்மை வேலை செய்ய அனுமதிக்கிறார்கள் என்றால் அதைவிட வேறு என்ன பெரிய வேலைச் சுதந்திரம் இருக்கிறது? புதுப்புது துறைகளில் நுழைந்த நண்பர்கள் இதைத்தான் மிகப்பெரிய சந்தோஷமாகச் சொல்கிறார்கள்.
அதே.
19 வருசம் முடிச்சாச்சு.

Jaypon , Canada said...

நெகடிவாக சொல்கிறேன் என் நினைக்காதீர்கள். சித்தார்த் மற்றும் vb சந்திரசேகர் ஏன் நினைவுக்கு இப்போ வந்தார்கள் எனத்தெரியவில்லை. முயற்சியுடன் கவனமும் வரட்டும். Ramesh 👍

Amanullah said...

‘ஒருவேளை இப்பொழுது வரும் சம்பளம் வரவில்லையென்றால் அடுத்த மாத வருமானத்துக்கு என்ன வழி?’

இங்கே தான் முதல் சறுக்கல், இப்படி ஒரு எண்ணம் வந்தாலே, எல்லாம் போச்சு, என்ன ஆகும், இந்த மாதம் முடியவில்லை என்றால் அடுத்த மாதம் , தந்தா போச்சு

'புதியதாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும், தொழிலதிபர் ஆக வேண்டும் என்றெல்லாம் என்னிடம் கனவுகள் இருந்ததில்லை. ஏதாவதொரு நிறுவனத்தில் ஒரு வேலை என்பதைத் தாண்டி எதுவுமில்லை.'

கனவுகள் இல்லை என்றால், சாதிக்க வேண்டுமென்ற வெறி இல்லை, வெறி இல்லை என்றால் வெற்றி இல்லை.