தன்னை வேலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டதாக ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இத்தகைய மின்னஞ்சல்களை எதிர்கொள்ளும் போது திக்கென்றிருக்கும். பதினேழு வருட அனுபவம் கொண்டவர் அவர். குழந்தைகள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டில் ஒற்றைச் சம்பளம். வீட்டுக்கடன் இருக்கிறது. பெரிய அளவில் வேறு சேமிப்புகள் இல்லை. ‘ஏதாவது உதவ முடியுமா’ என்று கேட்டிருந்தார். யாராவது நண்பர்களிடம் விசாரித்துப் பார்க்கலாம் என்று விடுமுறை தினத்தில் சிலரை அழைத்து முயற்சித்துக் கொண்டிருந்தேன்.
பேசிய நண்பர்களிடமெல்லாம் மின்னஞ்சல் அனுப்பியவருக்கான வேலை குறித்துக் கேட்டுவிட்டு அடுத்த கேள்வியாக ‘இப்போதைக்கு வேலைச் சந்தையில் ஏதேனும் பிரச்சினை வருமா?’ என்றுதான் கேட்டேன். விசாரித்த நண்பர்களில் ஒருவர் அதே நிறுவனத்தில் வைஸ் பிரஸிடெண்ட் ஆகிவிட்டார். அவர் உட்பட பலருக்கும் வேலைச் சந்தை குறித்தான குழப்பம் இருக்கிறது.
சமீபமாக இந்தியப் பொருளாதாரம் குறித்து நல்ல செய்தி எதுவுமில்லை. என் பொருளாதார சிற்றறிவுக்கு எட்டிய வரையில் சமீபத்தில் பயமூட்டக் கூடிய செய்திகள்-
1. 2016 ஆம் ஆண்டில் உலக அளவில் ஆறாவது பெரிய பொருளாதாரமாக (based on GDP ranking) இருந்த இந்தியப் பொருளாதாரம் இப்பொழுது ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
2. எட்டு முக்கியத்துறைகளில் (Core Industry)ஜூன் மாத வளர்ச்சி 0.2 சதவீதம் குறைந்திருக்கிறது. (கடந்த ஐம்பதாண்டுகளில் முதன் முறை இது).
2. சேவைத் துறை கடந்த பதின்மூன்று மாதங்களில் முதன்முறையாக சுருங்கியிருக்கிறது. சந்தையில் தேவை (Demand)என்பது வெகுவாகக் குறைகிறது.
3. ஆட்டோமொபைல் துறை மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. மாருதி உட்பட பல நிறுவனங்கள் அடி வாங்கியிருக்கின்றன.
4. 2019 ஜூன் மாதத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ஏற்றுமதி 10% அளவுக்கு குறைந்திருக்கிறது.
5. பங்குச் சந்தைகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை முதலீட்டாளர்கள் திரும்ப எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
6. எல்&டி தலைவர் ஏ.எம்.நாயக் ‘சூழல் மிகச் சவாலாக இருக்கிறது’ எனச் சொல்லியிருக்கிறார். ஹெச்.டி.எஃப்.சி தலைவர் தீபக் ‘பொருளாதார மந்தநிலை தெளிவாகத் தெரிகிறது’ என்கிறார். ஆனால் அவர் இதனை தற்காலிகமான மந்தம் என்றுதான் நம்புகிறார். இவையெல்லாம் உதாரணங்கள் மட்டுமே. இன்னமும் பல கார்போரேட் பெருமுதலாளிகளும் இந்தப் பல்லவியை சமீப காலமாக பாடத் தொடங்கியிருக்கிறார்கள்.
7. முதல் காலாண்டில் வரி வசூல் 1.4% மட்டுமே உயர்ந்திருக்கிறது. நிதியமைச்சர் தனது பட்ஜெட்டில் 18% அளவிற்கு இந்த ஆண்டு வரி வசூல் இருக்கும் என்று கணக்குப் போட்டிருக்கிறார்.
8. சுயமாகத் தொழில் செய்யும் எந்த நண்பரும் ‘பரவாயில்லை’ என்று சொல்வதில்லை. யாரைக் கேட்டாலும் ‘ரொம்ப சிரமம்’ என்றுதான் புலம்புகிறார்கள்.
மொத்தத்தில் தேசத்தின் பொருளாதாரச் சூழல் குறித்தான நல்ல செய்திகளைவிடவும் கெட்ட செய்திகளே அதிகமாகக் கண்ணில்படுகின்றன. எல்லாமே ஏதோவொரு வகையில் நம்மை பீதியூட்டக் கூடியவையாகவும் இருக்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதாரம் சுணங்கினால் கடைசியில் அகப்பட்டுக் கொள்வது சாமானியனாகத்தான் இருப்பான். பொதுவாக, பொருளாதாரம் ஒரு சுழற்சியாகத்தான் இருக்கும். குறிப்பிட்ட அளவுக்கு வளர்ந்து பின்னர் ஒரு தாழ்ச்சி வரும்- மீண்டும் உயரும். (Cycle) இந்தியப் பொருளாதாரமும் அப்படியான சுழற்சியினால்தான் சற்று மந்தநிலையை அடைந்திருக்கிறது என்றால் தப்பிவிடலாம். ஆனால் பலரும் இது அமைப்பு ரீதியிலான மந்த நிலை என்கிறார்கள். (Structural). சில அடிப்படையான சிக்கல்களினால், முதலீட்டாளர்கள் தயங்குவதனால் போன்ற பல காரணிகளால்தான் மந்தநிலை உருவாகியிருக்கிறதே தவிர சுழற்சியினால் இல்லை என்கிறார்கள். இத்தகைய எதிர்மறையான அனுமானங்கள்தான் அன்றாடங்காய்ச்சிகளை பயமூட்டுகின்றன.
யாரையும் பயமூட்டுவதற்காகவோ, இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி தவறான எண்ணத்தை விதைக்கவோ இதை எழுதவில்லை. பொதுவாக இத்தகைய விவகாரங்களைத் தொடும் போது அனானிமஸாக சில பின்னூட்டங்கள் வரும். ‘இந்த நாட்டின் பொருளாதாரம் எப்படி வலுவாக இருக்கிறது தெரியுமா?’ என்று நாம் நினைப்பதற்கு முற்றும் மாறாக பத்திரம் வாசிப்பார்கள். அப்படியிருந்தால் மிக மிகச் சந்தோஷம். அதைத்தானே ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பதும் கூட. ஆனால் பொருளாதாரம் சார்ந்த எதிர் மறையான எண்ணம் ஏன் பரவலாகியிருக்கிறது என்பதை கவனித்துத்தானே ஆக வேண்டும்? ஒருவேளை செய்திகளில் வருவது உண்மையாக இருந்தால் தலைக்கு மேல் வெள்ளம் வரும் போது மாதச் சம்பளத்துக்காரர்களுக்கு எட்டிப் பிடிக்கக் கூட எதுவும் சிக்காது.
இந்திய அளவிலான இந்தப் பிரச்சினைகள் தகவல் தொழில்நுட்பத் துறையை நேரடியாக அல்லது பெரிய அளவில் உடனடியாக பாதிக்க வாய்ப்புகள் குறைவு ஏனெனில் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை நம்பித்தான் இருக்கின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கும் வேலையில் வருமானத்தில்தான் இந்திய பணியாளர்களுக்கு ரொட்டித் துண்டை வழங்கிவருகின்றன. அதனால் இப்போதைக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் இந்தியத் தொழில்துறையில் பணியாற்றுகிறவர்கள், இந்திய நிறுவனங்களை, இந்தியச் சந்தைகளை மட்டுமே நம்பியிருக்கும் நிறுவன ஊழியர்கள்- ஆட்டோமொபைல் துறை, உற்பத்தித் துறை உள்ளிட்டவற்றில் பணியாற்றுகிறவர்கள் போன்றவர்கள் சற்று தயார் நிலையிலேயே இருப்பதுதான் நல்லது என்கிறார்கள். வயிற்றில் புளியைக் கரைப்பது மாதிரிதான் என்றாலும் கூட கண்ணுக்கு முன்பாக ஒரு சுனாமி எழுந்து கொண்டிருக்கிறது என்றுதான் அந்த வைஸ் ப்ரெசிடெண்ட் சொன்னார்.
வழக்கமாக பொருளாதாரம் தளரும் போது அரசாங்கம் பெரும் தொகையைக் கொட்டி (Stimulus Package) மீண்டும் வேகமெடுக்கச் செய்வார்கள் என்பதுதான் வரலாறு. கட்டமைப்புகளை மேம்படுத்த ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொட்டி வேலை வாய்ப்புகளைப் பெருக்கி, பொருளாதாரச் சக்கரத்தைச் சுழற்றிவிடுவார்கள். ஆனால் இந்தியாவில் போர்தான் வரும் போலிருக்கிறது. அப்படி ஏதாவது அக்கப்போர் நிகழ்ந்து பணத்தையெல்லாம் போரில் முடக்கினால் சோலி சுத்தம் என்றுதான் சொல்கிறார்கள். அப்படி எதுவும் வராமல் தலைப்பாகையோடு போக மோடியும், நிர்மலா சீதாராமனும், அமித்ஷாவும், ராஜ்நாத் சிங்கும்தான் அருள் பாலிக்க வேண்டும்.
ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஆஞ்சநேயா!
4 எதிர் சப்தங்கள்:
//‘இந்த நாட்டின் பொருளாதாரம் எப்படி வலுவாக இருக்கிறது தெரியுமா?’ என்று நாம் நினைப்பதற்கு முற்றும் மாறாக பத்திரம் வாசிப்பார்கள்//
போன 22ம் தேதி தான் நெலாவுக்கு சந்திராயன் 2 ஐ அனுப்புனோம்.
இப்ப அது பூமியை படம் எடுத்து பூமிக்கே அனுப்புது.
அதுல அந்த படத்துல நீங்க சொன்ன எந்த ப்ரசனையுமே இல்ல.
ஒங்களுக்கு மோடி ரெண்டாந்தடவயும் செயிச்சிட்டாருன்னு பொறாம . குறிப்பா நிர்மலாக்கா தேர்தல் ல போட்டி போடாமயே நிதி மந்திரி ஆயிட்டாங்கன்னு வயித்தெரிச்சல்.
அது தான் இல்லாததயும் பொல்லாத்தயும் சொல்லுறீங்க.
நடிகர் ஜெய் ரூபத்துலேயும் ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் ரூபத்துலேயும் அந்த ஆண்டவனே வந்து ஒங்கள தண்டிப்பான் பாருங்க.
8. சுயமாகத் தொழில் செய்யும் எந்த நண்பரும் ‘பரவாயில்லை’ என்று சொல்வதில்லை. யாரைக் கேட்டாலும் ‘ரொம்ப சிரமம்’ என்றுதான் புலம்புகிறார்கள். ///// இதுதான் என் இப்போதைய நிலை. எங்கும் தொழில் இல்லை.
உண்மைதான். https://economictimes.indiatimes.com/industry/auto/auto-news/two-lakh-jobs-cut-in-last-3-months-across-automobile-dealerships-fada/articleshow/70519603.cms
இந்தப் பிரச்னை எல்லாம் யாரும் பேசக்கூடாதுன்னுதான நாங்க 35A, 370 எல்லாம் நீக்கியிருக்கோம்; காஷ்மீர பிரிச்சிருக்கோம். Anti Indians இன்னும் பேசுறீங்க.....😌
Post a Comment