விகடன் குழுமத்திலிருந்து தடம், சுட்டி உட்பட நான்கு இதழ்களை நிறுத்திவிட்டார்கள். விகடன் குழுமத்தின் பத்திரிக்கைகள் என்பதால் இந்தச் செய்தி சமூக வலைத்தளப் பரப்பில் ஓரளவுக்கு கவனம் பெற்றிருக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களில் பல அச்சு இதழ்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அப்படி நிறுத்தப்பட்ட பத்திரிக்கைகளும் இதழ்களும் எந்தச் சலனத்தையும் எங்கேயும் உருவாக்குவதில்லை. எதுவுமே நடக்காதது போல இந்த உலகம் அதன் போக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தடம் நின்று போவதாலும் அல்லது வேறு சில பத்திரிக்கைகள் நின்று போவதாலும் ‘இலக்கியமே காலி’ என்றெல்லாம் எதுவுமில்லை என்றாலும் கூட ஒரு முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதத்தை நாம் உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். இலக்கியம், வியாபாரம், கார்போரேட் என்ற எல்லாவிதமான விமர்சனங்களையும், விவாதங்களையும், சச்சரவுகளையும் தாண்டி கடந்த சில பத்து ஆண்டுகளாக உயர்ந்து வந்த வாசகர்களின் எண்ணிக்கை இனிமேல் படிப்படியாகக் குறையும் என்றுதான் அனுமானிக்க வேண்டியிருக்கிறது. அது எந்தவிதமான வாசகர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம்- வாசிக்கிறவர்களின் எண்ணிக்கை குறைகிறது. அவர்களை மல்ட்டி மீடியா கபளீகரம் செய்கிறது.
இது இலக்கியம் அல்லது அச்சு ஊடகம் சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை. எழுத்து சார்ந்த பிரச்சினை. மிகப்பெரிய அரக்கனாக எழுந்து நிற்கும் மல்ட்டி மீடியாவின் முன்பாக எழுத்து நடுங்கி சுருண்டு போகிறதோ என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. Text Vs Multimedia என்னும் போரில் வீழ்கிற தளபதிகளாகத்தான் இத்தகைய பத்திரிக்கைகள் விழுவதயும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இது இலக்கியம் அல்லது அச்சு ஊடகம் சார்ந்த பிரச்சினை மட்டுமில்லை. எழுத்து சார்ந்த பிரச்சினை. மிகப்பெரிய அரக்கனாக எழுந்து நிற்கும் மல்ட்டி மீடியாவின் முன்பாக எழுத்து நடுங்கி சுருண்டு போகிறதோ என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. Text Vs Multimedia என்னும் போரில் வீழ்கிற தளபதிகளாகத்தான் இத்தகைய பத்திரிக்கைகள் விழுவதயும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
பொதுவாக, வாசிப்பு என்பது சற்றே பொறுமை தேவைப்படுகிற செயல். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஒரு தகவலைத் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வாசிக்க வேண்டியது அவசியமானதாக இருந்தது. ஆனால் எழுத்து வழியாகவே ஒன்றைத் தெரிந்து கொள்ள முடியும் என்ற சூழலை இப்பொழுது தொழில்நுட்பம் அடித்து துவம்சம் செய்துவிட்டது. பல கிராமத்துப் பள்ளிகளில் கூட ஸ்மார்ட் வகுப்பறைகள் வந்துவிட்டன. QR கோடு கொண்டு திரையில் பாடம் நடத்துகிறார்கள். நகர்ப்புற பள்ளி மாணவர்களுக்கு iPad கட்டாயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் கூகிளிலும், யூடியூப்பிலும் பாடங்களைப் படிக்கிறார்கள். எழுத்தின் அவசியம் பள்ளிகளிலேயே குறையத் தொடங்கிவிட்டது.
வளரும் தலைமுறை என்று மட்டுமில்லை. வயதில் மூத்தவர்களும் அப்படித்தான். எழுத்துக் கூட்டி படிப்பதற்கான பொறுமையை பலரும் இழந்துவிட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பேருந்து நிலையத்தில் அல்லது ரயிலில் அல்லது இழவு வீட்டில் கூட கவனித்துப் பார்த்தால் பத்துப் பேரில் எட்டுப் பேர்களாவது கண்களை செல்போனில் வைத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் செல்போனில் கூட வாசிப்பதில்லை. உருட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். ஸ்வைப்பிங் மட்டும்தான். அதுவும் நிழற்படங்கள் அல்லது சலனப்படங்கள் மட்டும்தான். எனக்குத் தெரிந்து அம்மா, மாமனார், தாய் மாமன் என்று அறுபதைத் தாண்டிய பலரும் யூடியூப் வீடியோக்களிலும் வாட்ஸாப் வீடியோக்களிலும்தான் தலையைக் கொடுக்கிறார்கள் அது பாட்டுக்கு ஓடிக் கொண்டேயிருக்கிறது.
வாசிப்பு மீதான ஆர்வம் குறைந்துவிட்ட அல்லது வாசித்தால்தான் ஒன்றைத் தெரிந்து கொள்ள இயலும் என்கிற அவசியம் இல்லாத ஒரு சூழலில் அச்சுத்துறை மட்டுமில்லை- எழுத்தின் எந்த வடிவமும் அடி வாங்கத்தான் செய்யும். எழுத்தில் வாசிப்பதை விட ஒரு வீடியோவில் பார்த்துவிட்டுப் போய்விடலாம் என்கிற மனநிலை வந்த பிறகு ஏன் எல்லாவற்றையும் வாசித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
வார இதழ்களில் கூட பல சமரசங்களை மேற்கொள்ள வேண்டிய சூழல் எப்பொழுதோ வந்துவிட்டது. நிறையப் படங்கள், துணுக்குகள் என்று எழுத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்துவிட்டார்கள். செய்தித்தாள்களுக்கு வேறொரு பிரச்சினை- எந்தச் செய்திக்கும் ஒரு நாள் காத்திருக்க வேண்டியதில்லை. உடனுக்குடன் தெரிந்து விடுகிறது. அடுத்த நாள் செய்தித்தாள் அச்சாகி வந்ததைப் பார்த்துத்தான் செய்தியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை. அதே போல, கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான புத்தகக் கண்காட்சிகள் மிக இலாபம் ஈட்டித் தந்தன. இப்பொழுது எந்த ஊரிலும் எந்தப் புத்தகக் கண்காட்சியிலும் சொல்லிக் கொள்ளுமளவுக்கு விற்பனை இல்லை என்கிறார்கள். ஒரு வருடம், இரு வருடங்கள் என்றால் சரியாகிவிடக் கூடும் என்று சொல்லலாம். தொடர்ச்சியாக பல வருடங்களாக மந்தமாகவே இருக்கிறதென்றால் உள்ளூர வேறு என்னவோ ஒரு பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம் இல்லையா?
இப்படி பல்வேறு நெருக்கடிகளும் இன்னல்களும் எழுத்தை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. வாசிக்கக் கூடியவர்களின் பரப்பு பனிப்பாறைகளைப் போல சுருங்கி வருகிறது.
ஃபேஸ்புக்கில் எழுத்துக்குத் தரும் முக்கியத்துவத்தைவிட படங்களுக்குத் தான் தருகிறார்கள். வெறும் 140 எழுத்துகள்தான் என்பதால் ட்விட்டர் தப்பித்திருக்கிறது. இணையப் பத்திரிக்கைகளும் வீடியோ கண்டெண்ட்டைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றன. ஒன்றுமே கிடைக்காதபட்சத்தில் ‘அடித்த கணவன்... மனைவி என்ன செய்தால் தெரியுமா?’ என்று கொக்கி போட்டு உள்ளே இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்பிலும் கூட ஆன்லைன் பாடங்கள் முழுக்கவும் வீடியோ கண்டெண்ட்டாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த வேகத்தில் போனால் அடுத்த சில பத்தாண்டுகளில் எழுத்துகள் வாசகப்பரப்பில் தலைப்புகளுக்கும், அதிகபட்சமாக சப்டைட்டிலுக்கும் மட்டுமே தேவைப்படக் கூடிய வஸ்தாக மாறிவிடக் கூடும்.
எழுத்து தமக்கான முக்கியத்துவத்தை இழப்பதனால் என்ன விதமான இழப்புகள் உண்டாகக் கூடும் என்று பெரிய அளவில் யோசிக்க முடியவில்லை. காலமும் தொழில்நுட்பமும் வெறித்தனமாக ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமது வேகத்தில் ஓடி வர முடியாத எல்லாவற்றையும் அவை வீசி எறிந்துவிடும். டிஜிட்டல் பிரிண்டிங் வந்த பிறகு சுவரில் சித்திரம் எழுதுகிறவர்கள் காணாமல் போனது போல, ஆட்டோமொபைல் வந்த பிறகு மாட்டு வண்டி செய்யும் ஆசாரிகள் மறைந்ததைப் போல, கம்யூட்டர் பூட்டுகள் வந்த பிறகு திண்டுக்கல் பூட்டுகள் மரியாதை இழந்தைதப் போல, மண்சட்டிகள் இல்லாமல் போனதைப் போல, அமேசான் எரிவதைப் போல என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர நம்மால் என்ன செய்துவிட முடியும்?
8 எதிர் சப்தங்கள்:
Cut-off மார்க் வாங்க மட்டுமே பன்னிரண்டாண்டு பள்ளிக்கல்வி என்னும் சூழ்நிலையில், செய்தித்தாள் படிக்கக்கூட மாணவர்களை அனுமதிக்காமல் கணிதப்பாடமும் அறிவியல்பாடமும் ஆங்கில வழியில் திணிக்கப்படுகின்ற சூழ்நிலையில் பத்திரிகை எப்படி விற்பனையாகும்? கடந்த 20 ஆண்டுகளில் பெற்றோரும் பள்ளிக்கூடங்களும் மருத்துவ, பொறியியல் படிப்புகள் மீதான வெறியில் இளம் சந்ததியின் தமிழ் வாசிப்பு ஆர்வத்தை அடியோடு அழித்துவிட்டனர். இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பு வாசிப்பு ஆர்வம் வந்தாலும் தமிழ் வாசிக்கும் திறனோ பயிற்சியோ இருப்பதில்லை. ஆங்கில pulp fiction'ஐ நாடுகிறார்கள். Chetan Bhagat போன்றவர்கள் எழுதும் கண்ராவியை நாடிப்போவதில் வியப்பென்ன?
வள்ளுவர் கூட "செவிச்செல்வம்" என்றுதான் குறிப்பிடுகின்றார். சாக்கிரட்டீஸ் எழுத படிக்கத்தெரியாதவர் என்றும் கூறுவார்கள். 18-ஆம் நூற்றாண்டு வரை பெரிய மன்னர்கள், செல்வந்த அக்பர் மாதிரி எழுத-படிக்கத்தெரியாதவர்கள். அச்சுத் தொழில் நுட்பம் தோன்றிய 19ஆம் நூற்றாண்டுவரை பெரும்பாலானா மக்களுக்கு எழுதி-படிக்க தெரியாது. மேற்கு உலக நாடுகள் தவிர, இந்தியாவில் 1950 வரை கல்வியறிவு குறைவு.1970-முதல்தான் அறிவொளி இயக்கங்கள் தோன்றின. கால் வாய்ப்படு, அரைவாய்ப்படு எல்லாம் என் தாத்தா மனப்பாடமாக சொல்வார்.அதேபோல, எழுத்து வந்த பின்பு வளர்ச்சி, எல்லாம் இருந்தது. பேசி, கேட்பது செய்திகளை திரித்து விடும் ஆனால் எழுத்து மாறாது. காலப்போக்கில் 150 வருடங்களாகத்தான் எழுத்து பெரும் பங்கு வகிக்கின்றது. அடுத்த கட்டத்திற்கு மனிதன் செல்லும்போது, இது தேவையில்லாம போய்விடும். ஆனால் அறிவை பரப்ப மற்ற ஊடகங்கள் வந்துவிட்ட பின்பு, இணையம், வீடியோ இதன் மூலம் அறிவு வளரும்.
"எண் என்ப ஏனை எழுத்தென்ப" என்பதும் திருக்குறள்தானே!
ழீடியோவிலும் பேசப்படும் வசனங்கள், சப்டைட்டில்களுக்கு எழுத்து தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். வாசிப்பாளர்களும் எழுத்தாளர்களும் அரிவார்ந்த சமுகத்தை பேணி வளர்க்கும் இடத்தில் தொடர்ந்து இருப்பார்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு இன்றும் இருக்கிரது.
We will end up with eye related problems in early stage.
அருமையான அலசல்
வாசிப்பு மிகவும் தேவை
ஆனால்,
நடைபேசியில் வீடியோ பார்ப்பது
வாசிப்புக்கு ஈடாகாது!
//எழுத்து தமக்கான முக்கியத்துவத்தை இழப்பதனால்//
எழுத்து வெளியாகும் முறை தானே மாறியிருக்கிறது. ஓவியம் தவிர்த்த மற்ற எல்லா கலைக்கும் எழுத்து அத்தியாவசியம் தானே.
எழுத்தின் வாசமே இல்லாமல் ஒரு திரைப்படத்தை உருவாக்குவது சாத்தியமா என்ன?
https://www.hindutamil.in/news/opinion/columns/212969-.html
Post a Comment