Aug 29, 2019

குடும்பம்

கோயமுத்தூர்  வந்த பிறகு அடிக்கடி சென்னை வந்து செல்ல வேண்டியிருக்கிறது. தி.நகரில் மிக நெரிசலான ராமேஸ்வரம் தெருவில்தான் அறை. நண்பர் ஒருவரின் பயன்படுத்தப்படாத அலுவலக அறை அது. சுத்தம் செய்து சாவியை என்னிடம் கொடுத்துவிட்டார். தொடர்ச்சியாக தங்குவதில்லை. இரண்டொரு நாட்கள்தான். என்றாலும்,  இரவில் தனித்து இருக்க பயமாக இருக்கிறது. ஆள் வந்துவிடுவார்கள், அடித்துப் பறித்துவிடுவார்கள் என்றெல்லாம் எதுவுமில்லை.  திடீரென்று உடலுக்கு ஏதேனும் என்றால் என்ன செய்வது? கேட்க நாதி இருக்காது. 

நான் படித்த கல்லூரியின் விடுதி அறையில் தங்கியிருந்த பேராசிரியர் நெஞ்சுவலியால் கடந்த மாதம் இறந்து போனார். மாலை வரைக்கும் யாருக்கும் தெரியவில்லை. மாலையில் கதவு திறக்கப்படாத சந்தேகத்தில் தட்டியிருக்கிறார்கள். உடைத்துப் பார்த்தால் எப்பொழுதோ இறந்து போய்விட்டாராம். இதையெல்லாம் கேள்விப்படும் போது திக்கென்றிருக்கும். நாற்பதைத் தாண்டினால் இந்த பயம் இயல்பானதாகிவிடுகிறது.

யாராவது அறைத்தோழர் இருக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கிறேன் அல்லது பக்கத்து வீட்டிலாவது தெரிந்தவர்கள் இருக்க வேண்டும். இரண்டு நாட்கள் வந்து போனாலும் பக்கத்தில் ஆள் இருக்கிறார்கள் என்கிற ஆசுவாசம் இருக்கும். சுற்றிலும் ஆயிரக்கணக்கானோர் நடந்து சென்றாலும்- தி.நகர் ராமேஸ்வரம் தெருவில் ஆயிரம் பேர் என்பது மிக மிகக் குறைந்த எண்ணிக்கை- யாருமற்ற வனாந்திரத்தில் இருப்பது போல படுத்துக் கிடப்பது சரிப்பட்டு வராது என்கிற எண்ணம்தான் பல நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

முப்பதுகளின் மத்தியில், இளமையின் வேகம் குறைந்து நடுவயதின் பக்குவத்தில் இருக்கும் போது குடும்பம் என்கிற அமைப்பு ஒரு மனிதனுக்கு கொடுக்கக் கூடிய ஆன்ம பலத்தை உணரக் கூடிய பருவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொள்வேன். எவ்வளவுதான் பெரிய இக்கட்டு வந்து சேர்ந்தாலும் ‘பார்த்துக்கலாம்’ என்கிற தைரியத்தை அந்த அமைப்புதானே கொடுக்கிறது?

குடும்பத்தில் ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு வலிமை இருக்கிறது. ஒன்றரை வயதுக் குழந்தை நம்மைச் சிரிக்க வைத்தும், தனது மழலையில் உளறியும் நம்மை உற்சாகமூட்டிக் கொண்டிருக்கிறது என்றால் ஆயிரம்தான் வருத்தங்களைக் காட்டினாலும், வாழ்வே சலித்துப் போய் அமர்ந்திருந்தாலும் எழுபது வயது முதியவர் குடும்பத்தின் தூணாக இருக்கிறார். ‘என்ன இருந்தாலும் அப்பாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்; அம்மாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பலாம்’ என்கிற மனநிலை வந்து சேர இத்தனை வருடங்கள் பிடித்துவிடுகிறது. இதை முழுமையாக உணரும் போது கிளையின் முதிர்ந்த இலைகள் ஒவ்வொன்றாக விழத் தொடங்கிவிடுகின்றன.

எந்தவொரு உறவின் பாதையிலும் மேடு பள்ளங்கள் உண்டு. காதலிக்கும் வரைக்கும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தவர்கள் கூட திருமணம் முடிந்து ஆறாம் மாதம் எலியும் பூனையுமாக மாறிவிடுவார்கள். அடுத்த சில ஆண்டுகளுக்கு எதையெடுத்தாலும் குற்றச்சாட்டுகள், பிரச்சினைகள் என்று வெடித்துக் கிளம்பும் பூதாகரங்களில் எதிர் நீச்சல் போட்டு, முட்டி மோதி ஏதோவொரு தரப்பு அடங்கி ஒடுங்கி பிரச்சினைகளைச் சமன்படுத்திவிட்டால் அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு வண்டி ஓடிக் கொண்டேயிருக்கும். கணவன் மனைவிக்குள் இப்படியொரு பிரச்சினை என்றால், சகோதர பந்தத்துக்குள் இன்னொரு விதமான பிரச்சினை, இப்படி எந்தவொரு உறவிலும் சிக்கல்கள் நிறைந்துதான் கிடக்கும். அப்படி ஈகோ வெடித்து முட்டுச்சந்தில் நிற்கும் போது ஒரு தரப்பு ‘இனிமேல் இப்படியொரு சூழல் வந்தால் இப்படி விலகி விட வேண்டும்’ என்று உணர்ந்துவிட்டால் அதன் பிறகு அதே போன்ற காரணத்துக்காக அப்படியொரு முட்டுச்சந்து ஈகோ வெடிப்பு நிகழவே நிகழாது. இது இன்னலைக் கொண்டு வந்து சேர்க்கும் என்று புரிந்தவர்கள் அதற்கேற்ப நடந்து கொள்வார்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் சச்சரவுகள் உண்டு. மனஸ்தாபங்கள் நிலவும். ஆனால் ஏதோவொரு வலுவான ஈர்ப்பு சக்தி மட்டுமே குடும்பத்தை கட்டுறச் செய்கிறது. இழுத்துப் பிடித்திருக்கிறது. அம்மாவோ, அப்பாவோ, தாத்தாவோ, பாட்டியோ- வலுவான மனிதர் ஒருவர் வீட்டில் இருந்தால் அவர்தான் ஈர்ப்பு சக்தியாக இருப்பார். அப்படியான ஈர்ப்பு சக்தி வலு குறையாமல் இருக்கும் போதே உறவுகளின் சிக்கல்களைப் புரிந்து, மனிதர்களின் உறவின் பலம் இறுகிவிட்டால் அதன் பிறகு சிதறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்று எதுவாக இருந்தாலும் இவையெல்லாம்தான் உறவின் அடிப்படைச் சூத்திரங்கள் என நினைக்கிறேன். நம்மோடு நான்கு சுவருக்குள் எத்தனை மனிதர்கள் வாழ்கிறார்களோ அத்தனை பலமிக்கவர்களாக நாம் இருப்போம். நம்மால் அவ்வளவு கூடுதலான பணிகளைச் செய்துவிட முடியும்.

இன்றைய சூழலில் வலுவான ஒருவரையும் குடும்பத்தில் சக மனிதர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. ‘நான் ஏன் அடங்கிப் போக வேண்டும்?’ என்ற எண்ணமே இன்னொரு வலுவான மனிதரைச் சுருங்கச் செய்துவிடுகிறது. அப்படியொரு வலுவான மனிதர் அடங்கும் போது குடும்பத்தில் ஒவ்வொருவரும் மெல்ல விலகத் தொடங்கிவிடுவார்கள். இன்றைக்கு குடும்பம் என்கிற அமைப்பை ஏதேதோ காரணங்களுக்காகச் சிதைத்துவிட்டோம் என்பதுதான் நிதர்சனம். பொருளாதாரக் காரணங்களையே முக்கியமான காரணங்கள் என்று நாம் முன்னிறுத்தினாலும் மனிதர்களுக்குள் நிலவும் புரிதலற்ற தன்மையே முக்கியமான காரணம். ‘தனித்து இருப்பதே சந்தோஷம்’ என்று நம்புகிறோம். சந்தோஷத்தைவிடவும், உறவின் பலமே முக்கியம் என்பதை புரிந்து கொண்டவர்கள் அருகிக் கொண்டே வருகிறார்கள். செல்போனும், கம்யூட்டரும் தம்முடைய சந்தோஷத்துக்கான காரணம் என்று நம்புவதைப் போலவே தனிமையே நம்முடைய உச்சபட்ச ஆசுவாசம் என்று நம்புகிறோம். அதுதான் குடும்பத்தினரை ஒவ்வொருவராக விலகச் செய்துவிடுகிறது. கணவன்-மனைவி-குழந்தை என மூன்று பேர் மட்டும் வாழும் குடும்பத்திலேயே கூட மிகப்பெரிய விரிசல் கண்ணுக்குத் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பேசினால் பத்தாம் பசலித்தனமாகக் கூடத் தெரியலாம். 

மருத்துவ நண்பர் ஒருவர் ‘பேஷண்ட் ஒருத்தர் இருக்காருங்க...எண்பதைத் தாண்டிய வயசு..தனியா இருக்காரு’ என்றார். ஓய்வு பெற்ற அதிகாரி அவர். ஓய்வூதியம் வாங்குகிறார். அவருடைய செலவை அவரே பார்த்துக் கொள்கிறார். ஆனால் கேட்க ஆள் இல்லை. இரவில் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த போது உறவுக்காரப் பெண்மணியின் கதையைச் சொல்கிறார். அவருக்கு மூன்று மகள்கள். மூன்று மகள்களும் பார்த்துக் கொள்வதில்லை. தனித்து வாழ்கிறார். இன்றைக்கு இவையெல்லாம் மிகச் சாதாரணமான செய்திகளாகிவிட்டன. தினசரி எதிர்கொள்கிறோம். நம் உடலில் வலுவிருக்கும் போது இத்தகைய மனிதர்களின் வேதனையை துளி கூட புரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு இல்லை. ‘இதெல்லாம் எங்கதான் நடக்கல?’ என்று தாண்டிவிடுவோம். அப்படி நினைக்கிறவர்கள் ஒவ்வொருவருக்கும் சில நாட்களேனும் தி.நகர் ராமேஸ்வரம் அறையில் தங்கும் சூழலை கடவுள் உருவாக்கித் தர வேண்டும் என்று விரும்புகிறேன். 

6 எதிர் சப்தங்கள்:

droidster said...

ellorum kooda irundha saaga mattingala?

shan said...

Needed article. Needs to be translated in English. Specially below one.

ஒவ்வொரு குடும்பத்திலும் சச்சரவுகள் உண்டு. மனஸ்தாபங்கள் நிலவும். ஆனால் ஏதோவொரு வலுவான ஈர்ப்பு சக்தி மட்டுமே குடும்பத்தை கட்டுறச் செய்கிறது. இழுத்துப் பிடித்திருக்கிறது. அம்மாவோ, அப்பாவோ, தாத்தாவோ, பாட்டியோ- வலுவான மனிதர் ஒருவர் வீட்டில் இருந்தால் அவர்தான் ஈர்ப்பு சக்தியாக இருப்பார். அப்படியான ஈர்ப்பு சக்தி வலு குறையாமல் இருக்கும் போதே உறவுகளின் சிக்கல்களைப் புரிந்து, மனிதர்களின் உறவின் பலம் இறுகிவிட்டால் அதன் பிறகு சிதறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. கூட்டுக்குடும்பம், தனிக்குடும்பம் என்று எதுவாக இருந்தாலும் இவையெல்லாம்தான் உறவின் அடிப்படைச் சூத்திரங்கள் என நினைக்கிறேன். நம்மோடு நான்கு சுவருக்குள் எத்தனை மனிதர்கள் வாழ்கிறார்களோ அத்தனை பலமிக்கவர்களாக நாம் இருப்போம். நம்மால் அவ்வளவு கூடுதலான பணிகளைச் செய்துவிட முடியும்.

இன்றைய சூழலில் வலுவான ஒருவரையும் குடும்பத்தில் சக மனிதர்கள் பொறுத்துக் கொள்வதில்லை. ‘நான் ஏன் அடங்கிப் போக வேண்டும்?’ என்ற எண்ணமே இன்னொரு வலுவான மனிதரைச் சுருங்கச் செய்துவிடுகிறது. அப்படியொரு வலுவான மனிதர் அடங்கும் போது குடும்பத்தில் ஒவ்வொருவரும் மெல்ல விலகத் தொடங்கிவிடுவார்கள். இன்றைக்கு குடும்பம் என்கிற அமைப்பை ஏதேதோ காரணங்களுக்காகச் சிதைத்துவிட்டோம் என்பதுதான் நிதர்சனம். பொருளாதாரக் காரணங்களையே முக்கியமான காரணங்கள் என்று நாம் முன்னிறுத்தினாலும் மனிதர்களுக்குள் நிலவும் புரிதலற்ற தன்மையே முக்கியமான காரணம். ‘தனித்து இருப்பதே சந்தோஷம்’ என்று நம்புகிறோம். சந்தோஷத்தைவிடவும், உறவின் பலமே முக்கியம் என்பதை புரிந்து கொண்டவர்கள் அருகிக் கொண்டே வருகிறார்கள். செல்போனும், கம்யூட்டரும் தம்முடைய சந்தோஷத்துக்கான காரணம் என்று நம்புவதைப் போலவே தனிமையே நம்முடைய உச்சபட்ச ஆசுவாசம் என்று நம்புகிறோம். அதுதான் குடும்பத்தினரை ஒவ்வொருவராக விலகச் செய்துவிடுகிறது. கணவன்-மனைவி-குழந்தை என மூன்று பேர் மட்டும் வாழும் குடும்பத்திலேயே கூட மிகப்பெரிய விரிசல் கண்ணுக்குத் தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பேசினால் பத்தாம் பசலித்தனமாகக் கூடத் தெரியலாம்.

திருச்சிற்றம்பலம் நிவாஸ் said...

/திடீரென்று உடலுக்கு ஏதேனும் என்றால் என்ன செய்வது? கேட்க நாதி இருக்காது.

நான் படித்த கல்லூரியின் விடுதி அறையில் தங்கியிருந்த பேராசிரியர் நெஞ்சுவலியால் கடந்த மாதம் இறந்து போனார். மாலை வரைக்கும் யாருக்கும் தெரியவில்லை. மாலையில் கதவு திறக்கப்படாத சந்தேகத்தில் தட்டியிருக்கிறார்கள். உடைத்துப் பார்த்தால் எப்பொழுதோ இறந்து போய்விட்டாராம். இதையெல்லாம் கேள்விப்படும் போது திக்கென்றிருக்கும்/ இதே போன்று தான் எனக்கும் நானும் தனியே தான் அறை தங்கி எடுத்து தங்கி இருக்கிறேன் ... ஏதாவது ஒன்னு நமக்கு நடந்து விட்டால் .. அதனால் இரவில் கதவை வெளியில் இருந்து திறக்கும் அளவிற்கு சாத்திவிட்டு உறங்குகிறேன் ..விட்டுகிற்கு தகவல் சொல்ல என் போன் நம்பரை அறையில் எழுதி வைத்து உள்ளேன் ...

Jaypon , Canada said...

# Driodster, இது என்ன கேள்வி? You seems to be incognizant of the core meaning of his post.

சேக்காளி said...

இதை எல்லாம் வாசிச்சிட்டு
வருச கணக்கா ஒத்தயில கெடக்கோமே ன்னு மனச தளர உட்ராதடா கைப்புள்ள

சேக்காளி said...

//ellorum kooda irundha saaga mattingala?//
யாரும் இல்லாமல், யாருடனும் பேசாமல்(போனில் கூட) 24 மணி நேரம் இருக்கவும்.