Aug 28, 2019

இடஒதுக்கீட்டில் ஏய்ப்பதில்லையா?

இட ஒதுக்கீடு பற்றிய தவறான புரிதல்களில் மிக முக்கியமானது ‘இட ஒதுக்கீட்டினால் நன்றாக படிக்கிறவர்களுக்கு வாய்ப்பு பறி போகிறது’ என்பது. அப்பட்டமாகச் சொன்னால் ‘சில குறிப்பிட்ட சமூகத்தினர் வேறு சில சமூகத்தினரின் வாய்ப்புகளை பறிக்கிறார்கள்’. உண்மையில் அப்படித்தான் நடக்கிறதா? சமூக, பொருளாதார விவகாரங்களில் செவி வழிச் செய்தியாகப் பேசுவதைவிடவும் சில புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால் நாமாகவே சிலவற்றைப் புரிந்து கொள்ள முடியும். 

தமிழகத்தில் சாதி வாரியான கணக்கெடுப்பு அவசியம் என்பது மரு.ராமதாஸ் உள்ளிட்டவர்களின் நீண்ட நாள் கோரிக்கை. எஸ்.சி/எஸ்.டி பிரிவினரின் துல்லியமான கணக்கு அரசாங்கத்திடம் இருக்கிறது. ஆனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை விவரம் இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை. ஒருவேளை சாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, மாநில அளவிலான சாதி வாரி விவரங்கள் வெளியாகுமானால் அது இட ஒதுக்கீடு குறித்தான தவறான புரிதலை நிச்சயமாகத் தகர்க்கும்.

கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தாலும் கூட சில அடிப்படையான உண்மைகள் புரியக் கூடும். 2001 ஆம் ஆண்டு மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 6,24,05,679 (ஆறு கோடியே இருபத்து நான்கு லட்சம்). அதில் எஸ்.சி பிரிவினர்- 1,18,57,504. (ஒரு கோடியே பதினெட்டு லட்சம் பேர்). எஸ்.டி பிரிவினர் 6,51,321 (ஆறு லட்சத்து ஐம்பத்தோராயிரம் பேர்). இதை அப்படியே சதவீதக் கணக்காக மாற்றினால்  எஸ்.சி - 19% பேர், எஸ்.டி- 1% பேர். கடந்த பதினைந்து வருடங்களில் எண்ணிக்கை கூடுதலாகியிருக்கலாமே தவிர சதவீதக் கணக்கு கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். 

இப்பொழுது இட ஒதுக்கீடு சதவீதங்களை எடுத்துப் பாருங்கள். தமிழகத்தில் எஸ்.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 18%; எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 1%. மொத்த மக்கள் தொகையில் 20% ஆக இருக்கக் கூடிய எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்கள் 19%. அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பத்தானே இடங்கள் ஒதுக்கப்படுகிறது? இதில் யாருடைய இடத்தை யார் பறித்துக் கொள்கிறார்கள்? 

நூறில் இருபது பேர் இருக்கும் இடத்தில், நூறு உணவுப்பொட்டலங்களிலிருந்து இருபது பொட்டலங்களை அவர்களுக்கு கொடுப்பதுதானே நியாயம்? அதைத்தான் இட ஒதுக்கீடு செய்கிறது. 

இட ஒதுக்கீட்டினால் முற்பட்ட சாதியினர் இட ஒதுக்கீட்டினால் கடுமையாக பாதிப்படைகிறார்கள் என்கிற வாதமும் உண்டு. பார்ப்பனர்கள் மட்டுமே முற்பட்ட வகுப்பினர் இல்லை என்பதை அனைவரும் அறிவோம்- ஆற்காட்டு வெள்ளாளர், கம்மவார் நாயுடு, கொங்கு நாயக்கர், நாயர், சைவ செட்டியார், சைவ ஓதுவார், வெள்ளாளர் என 78 சாதிகள் உண்டு. இவர்கள் அத்தனை பேரையும் சேர்த்தாலும் கூட தமிழக மக்கள் தொகையில், 15% என்ற எண்ணிக்கையைத் தாண்ட வாய்ப்பில்லை. ஆனால் முப்பத்தியோரு சதவீதம் இடம் பொதுப்பிரிவில் இருக்கிறது.

அதே நூறு உணவுப் பொட்டலங்களில் பதினைந்து பேர் இருக்கக் கூடிய இடத்தில் முப்பத்தியோரு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டினால் பாதிப்படைகிறார்கள் என்கிற வாதமும் கூட தவறானதுதான். தமிழகத்தில் 139 சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும், வன்னியர், வேட்டுவக்கவுண்டர், போயர் உள்ளிட்ட 41 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகவும் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு (பி.சி) 30% இட ஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20% இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கிறது.  தமிழகத்தின் மொத்த மக்கட்தொகையில் சற்றேறக்குறைய 65% பேர் இந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் இருப்பார்கள் என்று ஒரு கணிப்பு இருக்கிறது. அதில் ஐம்பது சதவீத இடங்கள் அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் வழியாக வழங்கப்பட்டிருக்கிறது. இன்னமும் கூடுதலாக வேண்டுமானால் பொதுப்பிரிவில் இருந்துதான் எடுக்க வேண்டுமே தவிர எஸ்.சி/எஸ்.டிக்கான பிரிவினரின் இடங்களில் கை வைக்க வேண்டியதில்லை என்று மேற்சொன்ன கணக்குகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

இதில்தான் பி.சி/எம்.பி.சி பிரிவைச் சார்ந்தவர்கள் ‘நாங்க அறுபத்தைந்து பேர் இருக்கிறோம், எங்களுக்கு ஐம்பது பொட்டலங்கள்தானே வழங்கப்பட்டிருக்கின்றன’ என்று கேட்கக் கூடும். சரிதான். ஆனால் முப்பத்தியொரு பொட்டலங்கள் வழங்கப்பட்ட இடத்தில் தம் எண்ணிக்கைக்கு ஏற்ப பதினைந்து பொட்டலங்களை முற்படுத்தப்பட்ட வகுப்பினர் எடுத்துக் கொள்கிறார்கள். உங்களில் சிலருக்கு அந்த மீதமிருக்கும் பதினைந்து பொட்டலங்களை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு தகுதி வந்திருக்கிறது. அவர்களுடன் போட்டியிட்டு அதை எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறது இட ஒதுக்கீட்டுக் கொள்கை.

இட ஒதுக்கீட்டின் சதவீதக் கணக்கு எதுவும் தேர்தல் வாக்குறுதிகளைப் போல போகிற போக்கில் அள்ளி வீசப்பட்டதில்லை. சமூகத்தின் பல்வேறு காரணிகளை அலசி ஆராய்ந்து, ஒவ்வொரு பிரிவுக்கு இத்தனை சதவீதம் என்று கணக்கிட்டுத்தான் இட ஒதுக்கீடு உருவாக்கப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டில் இந்தியா முழுவதும் ஒரே சதவீதக் கணக்குகளை பின்பற்றுவதும் சாத்தியமில்லை. சில மாநிலங்களில் முற்படுத்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், வேறு சில மாநிலங்களில் எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் அதிகமாக இருக்கக் கூடும். அப்படி மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் போது அந்தந்த மாநிலங்கள்தான் இட ஒதுக்கீட்டு சதவீதக் கணக்கை முடிவு செய்ய வேண்டும். இதில் வெறும் வாக்கு அரசியல் மட்டும் இருப்பதாக எடுத்துக் கொண்டால் அது நம் புரிதலின் போதாமைதான். தமிழகத்துக்கு 69% இட ஒதுக்கீடு வேண்டும் என்று வாங்கிக் கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிரச்சினை என்னவென்றால் சாதிய அடுக்குகளில் தம்மைவிட தாழ்ந்த அடுக்குகளில் இருப்பவர்கள் தம்மைவிடக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுவிட்டு தமக்கு சரிசமமாக வந்து அமர்ந்து கொள்கிறார்கள் என்ற எண்ணத்தினால்தான் இட ஒதுக்கீடு குறித்து படித்தவர்கள் கூட தவறாகப் பேசுகிறவர்கள். அப்படியான எண்ணம் கொண்டவர்கள் இந்தக் கட்டுரைக்கு முன்பு எழுதப்பட்ட  இன்னமும் எதற்கு இட ஒதுக்கீடு என்ற கட்டுரையை வாசிக்கவும். 

சமத்துவமற்ற சூழலில் வாழும் இரு மாணவர்களை, அவர்கள் பெற்ற மதிப்பெண்களை மட்டும் வைத்து அளவிட முடியாது. அளவிடவும் கூடாது. கூலி வேலைக்குச் செல்லும், படிப்பறிவே இல்லாத, கிராமப்புற பெற்றோரின் மகன் வாங்கக் கூடிய 450 மதிப்பெண்களும், நகர்ப்புறத்தில், நன்கு படித்தவர்களின் மகன், தனிப்பயிற்சி வசதிகள் எல்லாம் எளிதாகக் கூடிய ஒரு மாணவன் வாங்கக் கூடிய 450 மதிப்பெண்களும் எந்தவிதத்தில் சமமாகும்? முன்னவனின் 450 மதிப்பெண்கள் என்பது பின்னவனின் 475 மதிப்பெண்களுக்கு சமமில்லையா? குத்துச்சண்டை போட்டியில் கூட எடைப்பிரிவுகள் உண்டு. ஐம்பது கிலோ எடைப்பிரிவில் எண்பது கிலோ எடையுள்ளவன் கலந்து கொள்ள முடியுமா? மதிப்பெண்களை மட்டும் அளவீடாகக் கொள்வதற்கு முன்பாக அந்த மாணவர்களின் சமூக, குடும்பச் சூழல்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வதுதான் ‘சமூக நீதி’. அதைத்தான் இட ஒதுக்கீடு செய்கிறது. 

நூறு பேர்களில் இருபது பேர்கள் வலு குறைந்தவர்கள், பல தலைமுறைகளாக இருட்டறையில் கிடந்தவர்கள். அவர்களுக்கு கொஞ்சம் சலுகையாக தோட்டத்தில் கீழே கிடக்கும் தேங்காய்களைப் பொறுக்கி எடுத்து வரும் வேலையை மட்டும் கொடுக்கலாம் என்று மதிப்பெண்களில் சலுகை வழங்கப்படுகிறது. அறுபத்தைந்து சதவீதம் இருக்கக் கூடிய பி.சி/எம்.பி.சி பிரிவினர் சற்று வலு மிக்கவர்கள், கடந்த சில தலைமுறைகளாக சொத்து சேர்த்து வளம் பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னமும் சற்று கடுமையான வேலையாக  குட்டை மரங்களில் இருக்கும் தேங்காய்களைப் பறித்து வரச் சொல்லி அதன் பிறகு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. முற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெரும்பாலானவர்கள் நல்ல போஷாக்குடன் இருக்கிறவர்கள். காலங்காலமாக போஷாக்குடன் இருக்கும் அவர்களுக்கு நெட்டை மரங்களில் ஏறி தேங்காய் பறிக்கும் வேலை வழங்கப்படுகிறதே தவிர யாரும் யாரையும் ஏய்ப்பதில்லை. யாரையும் யாரும் சுரண்டுவதுமில்லை.

இதில் ‘க்ரீமி லேயர் கொண்டுவாங்க’ ‘ஒருவனே திரும்பத் திரும்ப அனுபவிக்கிறான்’ என்பதும் கூட பக்கத்து இலைக்கு பாயாசம் என்பது மாதிரிதான். புள்ளிவிவரம் எதையும் பார்க்காமல் மொத்தமாகப் பேசுகிறார்கள் என்று பொருள். இங்கு, அவரவர் சமூகப் பிரிவின் எண்ணிக்கைக்கு ஏற்பவே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது என்பதைத்தான் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. ஏற்கனவே சலுகைகள் பெற்று நன்றாக இருக்கும் அருந்ததியரைப் பார்த்து இன்னொரு அருந்ததியர் இன மாணவன் படிக்க வேண்டும். அப்படியொரு மாணவன் படித்து மேலே வரும் போது அவனுக்கான இட ஒதுக்கீட்டில்தான் அவன் இடம் பிடிக்கிறான். அடுத்த சமூகப்பிரிவின் இடத்தைப் பறிப்பதில்லை. ஏற்கனவே நன்றாக இருக்கும் இடைநிலைச் சாதி மாணவனும், தலித் மாணவனும் பொதுப்பிரிவில் போட்டியிடுமளவுக்கு மதிப்பெண்களை வாங்கத் தொடங்கும் போது சமநிலையை நோக்கி நகர்வதாக எடுத்துக் கொள்ளலாம்.

இட ஒதுக்கீட்டை சட்டமாக்கிய அம்பேத்கரே கூட இத்தனை ஆண்டுகளில் நீக்கிவிடலாம், அத்தனை ஆண்டுகளில் நீக்கிவிடலாம் என்று சொன்னார் என்பார்கள். ஆண்டுக் கணக்கு முக்கியமா அல்லது இட ஒதுக்கீட்டின் நோக்கம் முக்கியமா என்பதைத்தான் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுது பொதுப்பிரிவினருக்கான 31% இடத்தை- முற்படுத்தப்பட்ட சமூகத்தைத் தவிர பிற சமூகத்தினர் ஆக்கிரமிக்கத் தொடங்குகிறார்களோ போது சமநிலை உருவாகிவிட்டது என்ற அர்த்தத்தில் இட ஒதுக்கீட்டை முழுமையாக நீக்கிவிடலாம். 

13 எதிர் சப்தங்கள்:

Shankar said...

Dear Manikandan,

The exercise, which would provide "meaningful data", on how much "percentage" is being occupied by BC/MBC/SC/ST in Open Competition
For the last 10 years,
1) MBBS Selection List (Before and after NEET exams)
2) College of Engineering (CEG), Guindy, Anna University - Selection List

This would reveal "black and white", what is the current plight of so called backward people.

ramesh said...

நீங்கள் சொன்ன எல்லா கருத்துகளுடனும் உடன்படுகிறேன், க்ரீமி லேயர் தவிர.

Shankar said...

```இதில் ‘க்ரீமி லேயர் கொண்டுவாங்க’ ‘ஒருவனே திரும்பத் திரும்ப அனுபவிக்கிறான்’ என்பதும் கூட பக்கத்து இலைக்கு பாயாசம் என்பது மாதிரிதான்.```
அரசியலில் எப்படி 500 குடும்பங்கள், இந்தியா முழுவதையும் கிட்டத்தட்ட ஆட்சி புரிகின்றனவோ, அதே மாதிரி ஒவ்வொரு ஜாதியிலும் சில குடும்பங்கள் "repeated" ஆக பலன் பெற்று கொண்டிருக்கிறனர்.

தாழ்த்தப்பட்ட பிரிவில், ஒரு IAS, Bank Officer, Doctor இவர்களின் வாரிசுகளோடு ஒரு சாதாரண தாழ்த்தப்பட்ட மாணவனால் போட்டி போட்டு வெல்வது மிக கடினம்.

இட ஒதுக்கீடு என்பதே "முடவர்களுக்கு ஊன்றும் கோலாகவும், முடியாதவர்களுக்கு உதவும் கரங்களாகவும் தான் இருக்க வேண்டும்", வசதியானவர்களுக்கு ஆலவட்டம் வீசுவதை அமையக்கூடாது.

சேக்காளி said...

நேத்து வரைக்கும் நான் சொன்னத கேட்டுட்டு இருந்தவன் இன்னைக்கு என் கூட சமமா உக்காருதானே ங்கற எண்ணம் தான் எல்லாத்துக்கும் காரணம்.
இதில் பள்ளர்,பறையர்,சக்கிலியர்களும் அடக்கம்.
அவர்களிடம் என்ன தான் சொன்னாலும் கொண்ட குறிக்கோளிலிருந்து மாற மாட்டார்கள்.

முரசொலி மாறன்.V said...

ஒரு SC- IAS அப்பாவுக்கும் ,வங்கி அதிகாரியான அய்யர் அம்மாவுக்கும் பிறந்த ஒருவர் ,SC கோட்டாவில் IAS வாங்கும்போது ,அவர் அவரது சமூகத்தின் இடத்தை பிடித்தாலும் ,அது எந்தவகையில் நியாயம் ? அன்புமணி ராமதாசு மகனும் ,எனது கிராமத்தில் சித்தாள் வேலை பார்க்கும் ஒருவரது வாரிசும் ஒரு MBC இடத்துக்கு போட்டியிடுவது ,தனது சொந்த சமூகத்தையே சுரண்டுவது போல தானே ? இடஒதுக்கீடு பெற்றவர்களே மீண்டும் மீண்டும் பெற்றுக்கொண்டு இருந்தால் ,எப்போது சமநிலையை அடைய முடியும் ???

Vaa.Manikandan said...

முரசொலி மாறனுக்கும் சங்கருக்கும் ஒரு அன்புமணி ராமதாஸ்தான் தெரியும். கிராமங்களிலிருந்து மெல்ல மெல்ல ஆயிரக்கணக் கணக்கானோர் மேலே வருவது தெரியாது. எவ்வளவுதான் விளக்கமாக எழுதினாலும்- அய்யோ சார், அவரவர் சமூகத்தின் எண்ணிக்கைக்கு கிட்டத்தட்ட சமமாக இடங்களை அரசாங்கம் ஒதுக்கிக் கொடுக்கிறது; யாரும் அடுத்தவர்களின் இடங்களைப் பறித்துக் கொள்வதில்லை, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தமக்கான இடத்தை அடைகிறார்கள், சமூகத்தின் சமநிலையைக் கொண்டுவருவதற்கான ஒரு கருவிதான் இட ஒதுக்கீடு என்று என்று கூப்பாடு போட்டாலும் வாட்ஸாப்பில் வருவது போலவே பேசுகிறவர்களிடம் என்ன வாதிடுவது? :)

இரா.கதிர்வேல் said...

அருமை.

Shankar said...

மணிகண்டன்,

இட ஒதுக்கீடு என்பதே "முடவர்களுக்கு ஊன்றும் கோலாகவும், முடியாதவர்களுக்கு உதவும் கரங்களாகவும் தான் இருக்க வேண்டும்"

இல்லை என்றால் "சதவீத பிரதிநிதித்துவமா"?

இட ஒதுக்கீட்டின் குறிக்கோள், சமூக சமத்துவமா (அ) ஒவ்வொரு சாதியிலும் ஒரு மேட்டுக்குடியை உருவாக்குவதா ? இதில் தெளிவு கண்டபின் விவாதிக்கலாம்.

Shankar said...

இங்கு வாதம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது கிடையாது.

Reservation benefits should reach only the "deserved" in all the reserved communities.

Without the data on how some BC / MBC / SC / ST candidates are competitive enough to find the places in "Open Competition", உங்களுடைய எல்லா வாதங்களும் பொத்தாம் பொதுவாகவும் சொத்தையாகவும் இருக்கும்.

கிராமத்தில் இருக்கும் எந்த குப்பனும் சுப்பனும், Stanley Medical College (or) CEG Guindy
யிலோ M.D / M.S / M.E / M.Tech seat இடஒதுக்கீடு மூலம் பெறுவது கிடையாது. Even in UG in all the "premier" institutes, the representation of the "really needy" is still insignificant / negligible.

இதுவே வாதத்தின் சாரம்.

Thirumalai Kandasami said...

பலரின் கருத்தும் இதுதான் :-
1.) மனிதர்களுக்குள் ஏற்ற தாழ்விற்கு - சாதி வாரி இட ஒதுக்கீடு -> ஏற்றுக் கொள்கிறோம்.
2.) சாதிகளுக்குள்ளும் ஏற்ற தாழ்விற்கு - பொருளாதார இட ஒதுக்கீடு --> ஏற்றுக் கொள்ளமாட்டோம்.

இரண்டு விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லையெனில் பரவாயில்லை.
முதல் விளக்கத்தை ஏற்றுக்கொள்வோர் , இரண்டாவது விளக்கத்தை ஏற்காதது தான் வியப்பளிக்கிறது.

நான் விரும்புவது , இட ஒதுக்கீட்டில் பொருளாதார ஒதுக்கீடு. இட ஒதுக்கீட்டு சதவீதத்தில் எந்த மாற்றமுமில்லை.

உதாரணம் :
தற்போதைய நடைமுறை -> SC 19%
நான் விரும்புவது -> SC 19% --> SC ல் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு 13.3 % + SC ல் அனைவருக்கும் 5.7%
குறைந்தபட்சம் இதையாவது செய்யலாம் SC ல் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு 9 % + SC ல் அனைவருக்கும் 9%

Shankar said...

முடவர்களுக்கு ஊன்று கோலாகவும், முடியாதவர்களுக்கு உதவும் கரங்களாகவும் இருக்க ஏற்படுத்தப்பட்டதே இடஒதுக்கீடு. ஆனால், இன்று நடைமுறையில் இருக்கும் இடஒதுக்கீடோ, உண்மையான சமூக நீதிக்கு எதிராக உள்ளது. வாழையடி வாழையாகப் பயனடைந்தவர்களே, தலைமுறை தலைமுறையாய் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். ஜாதி அடிப்படையில் கொடுத்தால் கூட, பொருளாதார அடிப்படையையும் புகுத்த வேண்டும். அப்பொழுதுதான் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பில் உள்ள ஏழை - எளியவர்கள் பயன் பெறுவார்கள். அதுதான் உண்மையான சமூக நீதி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

SC/ST பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தும் அனைவருக்கும் போய் சேரவில்லையே . காரணம் என்ன. 20 % சதவீதத்தினரில் ஒன்றிரண்டு சதவீதத்தினரே சலுகையை அனுபவிப்பதுதான்
//இப்பொழுது இட ஒதுக்கீடு சதவீதங்களை எடுத்துப் பாருங்கள். தமிழகத்தில் எஸ்.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 18%; எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 1%. மொத்த மக்கள் தொகையில் 20% ஆக இருக்கக் கூடிய எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்கள் 19%. அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பத்தானே இடங்கள் ஒதுக்கப்படுகிறது? இதில் யாருடைய இடத்தை யார் பறித்துக் கொள்கிறார்கள்? // 18% பரவலாகப் பெற்றிருந்தால் பரவாயில்லை. இதில் 18% ஒதுக்கீட்டை குறிப்பிட்டவர்களே அதே இனத்தை சார்ந்தவர்களிடமிருந்து இரண்டு மூன்று தலைமுறையாக தட்டிப் பறித்துக் கொள்கிறார்கள் என்பதை கண்கூடாக காணமுடியும்.சலுகை பெற்ற குடும்பத்தினரே மீண்டும் மீண்டும் பெறுகிறார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு
.
//இதில் ‘க்ரீமி லேயர் கொண்டுவாங்க’ ‘ஒருவனே திரும்பத் திரும்ப அனுபவிக்கிறான்’ என்பதும் கூட பக்கத்து இலைக்கு பாயாசம் என்பது மாதிரிதான்// அது ஒரு திருப்தி சலுகைகள் உண்மையிலேயே இதுவரை பயன்படுத்தாவதர்களுக்கு கிடைக்குமாயின். இட ஒதுக்கீடு சரியான நபர்களுக்குத்தான் கிடைத்திருக்கிறது என்ற ம்னத் திருப்தி கொள்ள முடியும். கேள்வி கேட்க வாய்ப்பு இல்லை. நல்ல பொருளாதார நிலையில் உயர் அதிகாரியின் மகன் அல்லது மகள் சற்று குறைவான் மதிப்பெண் பெற்று சலுகைகளைஅனுபவிக்கும்போது மதிப்பெண் கூடுதலாக பெற்றவர்கள் ஆதங்கப் படுவது இயற்கைதானே!அதுவே ஒரு எழைக்கு கிடைத்தால் அந்த ஆதங்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை.
//அதே நூறு உணவுப் பொட்டலங்களில் பதினைந்து பேர் இருக்கக் கூடிய இடத்தில் முப்பத்தியோரு பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.// தவறான கணிப்பு முப்பது பொட்டலங்களும் 15% சதவிதத்தனருக்கு மட்டுமா கிடைக்கிறது. 18% சதவீதத்தினர் மற்றும் 50 % சதவீதத்தின்ருக்கும் பங்கு கிடைக்கத் தானே செய்கிறது. 30% அனைத்தையும் முறபட்ட இனத்தவரே அனுபவிப்பது போல் கூறுவது எப்படி நியாயமாகும். உண்மையில் 85%(50+18+17)உள்ளவர்களில் மிக சிறந்தவர்களோடுதானே இந்த 15 % போட்டிபோடவேண்டி இருக்கிறது. ஏதாவது ஒரு அரசுத் துறையை எடுத்துப் பாருங்கள் அதில் 10% முற்பட்டவர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள். உதாரணத்திற்கு கல்வித் துறை உயர் அலுவலர்களில் எனக்குத் தெரிந்து ஒருவர்கூட முறபட்ட இனத்தவர் இல்லை.
எனக்குத் தெரிந்து குறிப்பிட்ட முறபட்ட இனத்தவரில் பெரும்பாலோர் இந்த தலைமுறையில்தான் நல்ல நிலையை அடைந்திருக்கிறார்கள். இதற்கு முந்தைய தலைமுறையினர் சிலர் நடுத்தரமாக வாழ்ந்திருக்கலாம். ஆனாலும் பிற பிற்பட்ட இனத்தவரை விட வசதிகள் குறைவாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள். இப்பொழுதும் அதுபோன்ற பலரைக் காணமுடியும் பிறபட்ட இனத்தவருக்கு க்ரீமி லெயர் கடைபிடிப்பதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும். SC பிரிவனர் அனுபவித்தத அளவுக்கு எஸ்டி பிரிவினர் சலுகைகளை அனுபவிக்க வில்லை. எம்.பி.சி பிரிவில் நரிக்குறவர்களுக்கு அதன் பயன் சிறதளவுகூட போய் சேர்ந்த்திருக்கிறதா என்பது ஐய்மே. எஸ் டி பிரிவில்கூட டாக்டர் ஐஏஎஸ் களைக் காணமுடியும். ஆனால் ஒரே ஒரு நரிக்குறவர் டாக்டர் இருப்பாரா என்பது ஐயமே. இது பக்கத்துக்கு இலைக்கு பாயசம் அல்ல. பட்டினி கிடந்தவருக்குத்தான் கிடைத்தது என்ற திருப்தி அடைய முடியும்
//31% இடத்தை- முற்படுத்தப்பட்ட சமூகத்தைத் தவிர பிற சமூகத்தினர் ஆக்கிரமிக்கத் தொடங்குகிறார்களோ போது சமநிலை உருவாகிவிட்டது என்ற அர்த்தத்தில் இட ஒதுக்கீட்டை முழுமையாக நீக்கிவிடலாம். //31% சதவிதமும் முறபட்ட இனத்தவர்தான் இருக்கிறார்கள் என்று நம்புகிறீர்களா? உதாரணத்திற்கு தோராயமாக 2500 அரசு கோட்டா மெடிகல் சீட்டில் 750 சீட்டை முற்பட்ட இனத்தவர் பெற்றிருப்பார்கள் என்று உறுதியாக சொல்வீராயின் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொளவதில் எனக்குத் தயக்கமில்லை

shan said...

//மதிப்பெண்களை மட்டும் அளவீடாகக் கொள்வதற்கு முன்பாக அந்த மாணவர்களின் சமூக, குடும்பச் சூழல்களையெல்லாம்
//கணக்கில் எடுத்துக் கொள்வதுதான் ‘சமூக நீதி’. அதைத்தான் இட ஒதுக்கீடு செய்கிறது.

சமூக, குடும்பச் சூழல்களா இல்லை சாதி மட்டுமா?