Aug 27, 2019

இன்னமும் எதற்கு இடஒதுக்கீடு?

அம்மாதான் அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரி. சித்தி பள்ளிக்கூடம் தாண்டவில்லை. மாமனும் அதே நிலைதான். திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தாண்டாத அப்பிச்சி ‘ஒருவேளை, அவ படிச்சா காட்டை வித்துடலாம்’ என்று அம்மா படித்துக் கொண்டிருந்த போது சொன்னாராம். காட்டை விற்பதற்குத் தயாராக இருந்தார்களே படித்தே தீர வேண்டும் என்றெல்லாம் வற்புறுத்தவில்லை என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கள் அப்பாவின் கதை வேறு மாதிரி. பெரியப்பா டிப்ளமோவில் தோல்வியடைந்துவிட்டார். அப்பா எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி. ஆனால் அதன்பிறகு படிப்பதற்கான சூழல் வீட்டில் இல்லை. ஒண்ணேமுக்கால் ஏக்கர் வயலைத் தவிர வேறு சொத்து எதுவுமில்லை. அப்பாவுக்குப் பிறகு அத்தை இருந்தார். அவரது திருமணச் செலவு, சித்தப்பா  என்றெல்லாம் கணக்குப் பார்த்துவிட்டு வேலை தேடத் தொடங்கிவிட்டதாகச் சொல்வார். அப்பாவின் தரப்பிலும் ‘படிச்சா படி இல்லைன்னாலும் பிரச்சினையில்லை..செலவு பண்ண முடியாது’ என்கிற கதைதான். 

மூன்றாம் தலைமுறையான எங்கள் தலைமுறையில் நிலைமை மாறியது. என்னையும், தம்பியையும் அம்மாவும் அப்பாவும் அடிப்பது உண்டு, மிகக் கடுமையாகக் கண்டிப்பார்கள், அம்மா அழுவார், அம்மா அழுவதைக் காட்டி அப்பா வருந்துவார் ஆனால் இதையெல்லாவற்றையும் ஒரே காரணத்துக்காகவே செய்தார்கள் என்றால் அது ‘ஒழுங்கா படி’ என்பதை வலியுறுத்த மட்டும்தான். ‘படிப்பு மட்டும்தான் சொத்து’ என்று திரும்பத் திரும்பச் சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் படிப்பிலிருந்து விலக முயற்சித்து அகப்பட்டுக் கொள்ளும் போதெல்லாம் அப்பா அடித்தும், அம்மா அழுதும் மாற்றுவார்கள். அம்மாவும் அப்பாவும் சொன்னது போலத்தான் நடந்தது. படிப்புதான் இன்றைய வாழ்க்கைக்கு ஒரே அடிநாதம். ஒருவேளை படிக்காமல் இருந்திருந்தால் அம்மாவும் அப்பாவுக்கும் இருந்த வசதியை விடவும் கூடுதலான வசதியை அடைய இன்னமும் பல வருடங்கள் ஆகியிருக்கலாம் அல்லது சாத்தியமே இல்லாமல் போயிருக்கலாம். 

இதை எதற்காகச் சொல்ல வேண்டியிருக்கிறது என்றால்  ‘படிச்சே தீரணும்’ என்று ஒற்றைப் பாதையில் தம் குழந்தைகளைச் செலுத்த குறைந்தபட்சம் மூன்று தலைமுறைக் காலமாவது தேவைப்படுகிறது. படித்தால் படிக்கட்டும் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை என்னும் பெற்றோர், ஒருவேளை படித்தால் படிக்க வைக்கத் தயாராக இருக்கும் பெற்றோர், படித்தே தீர வேண்டும் என்று மாறும் பெற்றோராக மாற இத்தனை பெரிய தொடர்ச்சி தேவையாக இருக்கிறது. கூடவே அமர்ந்து, இப்படித்தான் படிக்க வேண்டும், இதெல்லாம் நமக்கான வாய்ப்புகளாக இருக்கின்றன என்று மகனிடம் என்று சொல்கிற நிலைமைக்கு வர நான்கு தலைமுறைகளாகிவிடுகிறது- என் மகனுக்கு நான் சொல்லக் கூடும். 

நான்காவது தலைமுறையில் ‘இனி உன் மகனுக்கும் இட ஒதுக்கீடு தேவையா?’ என்று யாராவது கேட்டால் தேவையில்லை என்று சொல்வேன். ஆனால் அதே சமயம் ‘பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு’ என்றெல்லாம் தூக்கிக் கொண்டு வந்தால் ‘முட்டாள்’ என்று எகிறிவிடத் தோன்றும். அப்படித்தான் ஒரு கூட்டம் உருட்டிக் கொண்டிருக்கிறது. இப்படி உருட்டுகிற கூட்டத்தில் மூளைச்சலவை செய்யப்பட்ட நிறைய இடைநிலைச் சாதியினர் இருப்பார்கள். கவுண்டர், நாடார், தேவர், வன்னியர் என அந்தச் சாதிக்கார இளைஞர்கள் புரிதலே இல்லாமல் ‘பள்ளனும், பறையனும் நம் இடத்தைப் பறித்துக் கொள்கிறார்கள்’ என்பார்கள்.  ‘ஆமாம்ல’ என்று அதில் இருக்கும் விஷமத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் ‘இட ஒதுக்கீட்டை ஒழிப்போம்’ என்று கிளம்புகிறார்கள்.

உண்மையில் கவுண்டர், நாடார், தேவர், வன்னியர் உள்ளிட்ட இடைநிலைச் சாதிகளும் கூட முழுமையாக முன்னேறிவிடவில்லை. அத்தனை பேருக்கும் கல்வி கிடைத்துவிடவில்லை. இன்னமும் பல ஆண்டுகளுக்குப் பிறகே ‘படித்தே தீரணும்’ என்று சொல்லக் கூடிய பெற்றோர்கள் அமையும் வாய்ப்பு அமையக் கூடும். எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளில் நிலைமை இன்னமும் மோசம். இன்னமும் எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று தெரியாது. பல லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளியில் பாதியில் நின்றுவிடுகிறார்கள். பெற்றோர்களும் கண்டுகொள்வதில்லை. நிலைமை இப்படியிருக்க, இட ஒதுக்கீடு குறித்து தவறான புரிதல் மூலமாக இடைநிலைச் சாதியினரை ஒரு கூட்டம் இழுத்துவிடக் காரணமாக என்ன இருக்கிறது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. ‘இட ஒதுக்கீடு இனி தேவையில்லை’ என்று உருட்டுகிறவர்களின் கண்களுக்குத் தெரிவதெல்லாம் எங்கேயாவது அரசு அலுவலகத்திலும், ஆசிரியராகவும், அரிதாக பொறியியல் முடித்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்ட ஒரு சிறு கூட்டம்தான். ‘அவனுகதான் மேல வந்துட்டானுகளே’ என்று அவர்களைச் சுட்டிக்காட்டித்தான் பேசுகிறார்கள். ‘அவனுகளுக்கு என்ன...பைக் வெச்சிருக்கானுக’ ‘அரசியல் பேசறாங்க’ ‘திமிரா நடந்துக்கிறாங்க’ என்பதில்தான் இடைநிலைச்சாதி இளைஞர்கள் எரிச்சலைக் காட்டுகிறார்கள். 

இத்தகைய தம்பிகளிடம் மனப்பூர்வமாகச் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான் - உங்கள் கண்களை உறுத்துவது மிக மிகச் சிறு கூட்டம் மட்டும்தான். இன்னமும் ஏகப்பட்ட மக்கள் மேலேறி வர வேண்டியிருக்கிறது. அவர்களைப் போலவேதான் கவுண்டர்களிலும், வன்னியர்களிலும், தேவர்களிலும் மோசமான பொருளாதாரச் சிக்கல்களில் லட்சக்கணக்கான குடும்பங்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றன. இங்கு சமத்துவம் கொண்ட சமுதாயம் அமைய இன்னமும் பல வருடங்கள் தேவைப்படும். யாரோ பேச்சைக் கேட்டு ‘இட ஒதுக்கீடு தேவையில்லை’ என்று குரல் எழுப்புவதும், ‘பொருளாதார இட ஒதுக்கீடு அவசியம்’ என்றெல்லாம் பேசுவதும் பள்ளர், பறையரைக் காலி செய்வது மட்டுமில்லை- நம் தலையிலும் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதைப் போலத்தான். 

இட ஒதுக்கீடு குறித்து அடிப்படையான புரிதலை உருவாக்கிக் கொள்ள வேண்டும்- தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது. அதாவது, வேலை அல்லது கல்வியில் நூறு இடங்கள் காலியிருந்தால் 30% இடங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (பி.சி)- (26.5%- முஸ்லீம் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு; 3.5%- இசுலாமியர்களுக்கு), 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்.பி.சி), 18 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு (அதில் 3% அருந்ததியருக்கு), 1 சதவீதம் பழங்குடியினருக்கு. மீதமிருக்கும் 31% பொதுப்பிரிவினருக்கு. (இது ஓப்பன் கோட்டா- யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்). உதாரணமாக, பி.சி.பிரிவைச் சார்ந்த ஒருவன் 98% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவனுக்கு பொதுப்பிரிவில் இருக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். எஸ்.டி. மாணவன் 98% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் அவனுக்கும் பொதுப்பிரிவிலேயே இடம் ஒதுக்கப்பட்டு, எஸ்.சி.பிரிவுக்கான 18% இடத்தில் எழுபது சதவீதமோ, அறுபது சதவீதமோ மதிப்பெண்ணைப் பெற்றிருக்கும் வேறொரு எஸ்.சி மாணவனுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும், அந்த முறையை மாற்ற வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறவர்களுக்கு ஒன்றை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. எந்தக் காலத்தில் பொது போட்டிக்கு என இருக்கும் 31% சதவீத இடங்களையும் பி.சி பிரிவினரும், எம்.பி.சி பிரிவினரும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினரும் நிரப்பத் தொடங்கி, ஓ.சி பிரிவினருக்கு பொதுப்பிரிவிலும் கூட இடங்களே இல்லை என்னும் நிலைமை வரும் போது வேண்டுமானால் இட ஒதுக்கீட்டில் கை வைக்கலாம். இன்றைக்கும் கூட ஓப்பன் கோட்டாவில் எந்தப் பிரிவினர் அதிகம் இருக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால் அது நமக்கு பல உண்மைகளை எடுத்துக் காட்டக் கூடும். இன்றைக்கும் கூட ஓ.சி பிரிவினர்தான் பெரும்பாலான பொதுப்பிரிவு இடங்களை நிரப்புகிறார்கள். அதற்கான காரணம், மற்ற பிரிவினர் முட்டாள்கள், படிக்கத் தகுதியற்றவர்கள் என்றெல்லாம் அர்த்தமில்லை. சில பிரிவினர் பரம்பரை பரம்பரையாக படிப்பை பிடித்துக் கொண்டிருக்கிறவர்கள். பல தலைமுறைகளுக்கு முன்பாகவே ‘படிப்புதான் சொத்து’ என்று அவர்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் பல சாதிகள் கடந்த ஒன்றிரண்டு தலைமுறையாகத்தான் படிக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியிருக்க ‘எல்லா சமூகத்தினரும் ஒரே அளவுதான்’ என்று பேசுவது எந்தவிதத்தில் நியாயம்? எப்படி தராசின் இரு தட்டுகளில் நிறுத்தி வைக்க முடியும்? இதுதான் சமூகநீதியின் அடிப்படையாக இருக்க வேண்டும். 

இதே கணக்குத்தான் ‘பொருளாதாரம் சார்ந்த இட ஒதுக்கீடு’ என்னும் தவறான புரிதலுக்கும் பொருந்தும். அரசின் பொருளாதார அளவீட்டின்படி, யாரெல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்ட சம்பளம் வாங்குகிறார்களோ அவர்கள்தான் வசதியானவர்கள். அரைச் சம்பளம் வாங்கினாலும் வருமான வரி கட்டுகிறவர்கள் வசதியானவர்கள் ஆனால் காண்ட்ராக்டர்கள், அரசியல்வாதிகள், பெருவிவசாயிகள், கணக்குக் காட்டாத தொழிலதிபர்கள் என சகலரும் வசதியற்ற ஏழைகள்தான். அதனால் பொருளாதார ரீதியிலான கணக்கெடுப்பு என்பதே இந்தியாவில் அபத்தமானது. மக்களை ஏய்க்கக் கூடியது. 

தமிழகத்தின் நிலம், இங்கே நிலவும் சாதிய அடுக்குகள், கிராமங்களில் வாழும் மக்களின் நிலை, உண்மையான பொருளாதாரச் சூழல்கள் என பல காரணிகளை எடுத்துக் கொண்டு இட ஒதுக்கீடு குறித்துப் பேச வேண்டும். இதையெல்லாம் புரிந்து கொண்டவர்கள் ‘இப்பொழுதே இட ஒதுக்கீட்டை ஒழிப்போம், மாற்றுவோம்’ என்றெல்லாம் பேச மாட்டார்கள். ஒருவேளை புரிந்தும் அப்படிப் பேசினால் அவர்களிடம் ‘மனசாட்சி எங்கேயிருக்கிறது’ என்று தாராளமாகக் கேட்கலாம். அவர்களின் மனதுக்குள் விஷமிருக்கிறது என்று அர்த்தம்.

நாம் செல்ல வேண்டிய தூரம் வெகுதூரமிருக்கிறது. 

11 எதிர் சப்தங்கள்:

Gopal bhavani said...

இட ஒதுக்கீடு என்பது ஏதோ பட்டியலின மக்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்ற எண்ணம் இட ஒதுக்கீட்டில் பயனடையும் அனைவர் மனதிலும் உள்ளது.69 சதவீத இட ஒதுக்கீட்டின் தேவையும் ,மேலும் தற்போது நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீடு முறை ஏன் தொடர வேண்டும் என்பவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய கட்டுரை.

Saravana Kumar N said...

இருபத்தைந்து தேர்வின் முக்கியத்துவம் எனக்கு தெரிந்தது. வேலையை விட்டுவிட்டு சென்னை வந்து பார்த்தால் கல்லூரி இரண்டாம் வருட மாணவன், தேர்வுக்கு தகுந்த மாதிரி கல்லூரியில் துறையும் தேர்வு செய்துவிட்டு, பயிற்சி வகுப்பில் என்னுடன் சேர்ந்து பயில்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை ias ips அதிகாரிகளின் வாரிசுகளும் படிப்பதற்கான அனைத்து வசதிகளுடன் தயாராக இருக்கிறார்கள். Upsc - க்கான முயற்சியில், முதல் தலைமுறை பட்டதாரிகள் மூன்று அல்லது நான்கு முயற்சியில் வெளியேறிவிடுகிறார்கள். குடும்ப பொறுப்பு வருகிறதே. ஆனால் முன்னேறிய வகுப்பினர் நின்று விளையாடுகின்றனர்.

இதெல்லாம் எதுவுமே அறியாமல் என் ஊரில் செல்போன், விஜய் அஜித், காதல், ஜாதி பெருமை போன்றவற்றிர்க்கு முக்கியத்துவம் தரும் தலைமுறை வாழ்ந்து வருகிறது.

மேலே இருப்பவர்கள் மேலேயே இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. 10% இட ஒதுக்கீடு என்பது வெளியே தெரிந்த ஒன்று. இன்னும் நிறைய இருக்கின்றது.

இன்னும் 150 வருடங்கள் ஆக வேண்டும்,இயற்கையான சமவாய்ப்பு ஏற்பட.

Ram said...

சற்றே பெரிய எதிர்சப்தம். மன்னிக்கவும்.

ஐயா, நாங்க கேக்குறதெல்லாம் ஒன்னுதான். நீங்க சொல்ற அந்த பெருவாரியான, படிப்பு மேல் அக்கரை வராத கூட்டம் இருக்கும்போது, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் குழந்தைகளுக்கும், பேரன் பேத்திகளுக்கும் இட ஒதுக்கீடு அவசியமா? இவர்கள் சற்றேனும் முன்னேறிவிட்டார்கள் என்று அந்த சமூகங்களின் கடை நிலை மக்களுக்கு வழி விட வேண்டாமா? இட ஒதுக்கீடின் குறிக்கோளான சம நிலை என்ற முன்னேற்றத்தின் குறியீடு என்ற ஒன்றை நிர்ணயம் செய்யாமலே, கால எல்லையற்றதாய் இட ஒதுக்கீடு இருப்பது நியாயமா? அரசு வேலை பெற்றவர்கள், பட்டதாரிகள், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் போன்றோர் குடும்பத்தார் பயன் பெற்ற படியால், அவ்வாறு பயன்பெறாத அவர்களின் சொந்த சமுக மக்களுக்கு வழி விடுவதில் அவர்களுக்கென்ன வலி? மிக அவசியமாக இட ஒதுக்கீடு தேவைப்படும் மக்களுடன் போட்டி போடுபவர்களும், அவர்கள் தமக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு பயன்பெறாமல் போவதற்கும் காரணிகள் OC பிரிவு அல்ல, அவர்களின் சொந்த சமூகத்தின் ஏற்கனவே இட ஒதுக்கீட்டினால் பயன்பெற்ற மக்களே.

இட ஒதுக்கீடு எப்படி வேலை செய்கிறது என்ற உங்கள் புரிதல் தவறு என்று நினைக்கிறேன். OC பிரிவுக்கு 60% cut off என்றும், SC பிரிவுக்கு 40% cut off என்றும் வைத்துக்கொள்வோம். 61% மதிப்பெண் பெற்ற SC மாணவர் பொதுப்பிரிவின் படி தரத்தில் மிகவும் பின் தங்கிய ஒரு கல்லூரியில் civil படிப்பு பெறலாம் (OC நிர்ணயத்தின்படி) அல்லது அதைவிட மிகப்பிரபலமான, தரத்தில் உயர்ந்த கல்லூரியில் computer science பெறலாம் (SC நிர்ணயத்தின்படி). எந்த ஒரு மாணவனும், என் பிரிவில் (SC) இன்னொருவனுக்கு வழி கிடைக்குமே என்று தியாக மனப்பான்மையோடு civil படிப்பை தேர்வு செய்வதில்லை. SC கோட்டாவின் படியே சீட்டைப்பெறுகின்றனர், cut off வரிசையில் மிக மிக சொற்பமாக, 98%, 99% பெற்ற மாணவர்களைத்தவிர (அவர்கக்கு மட்டுமே OC என்றாலும், SC என்றாலும் நினைத்த கல்லூரியும், பாடப்பிரிவும் கிடைக்கும் அதீத நிலை நிலவும். சிறு வித்தியாசம் வர ஆரம்பிக்கும்போதே, மாணவர்கள் தமக்கு எது நல்லதோ அதனைத்தான் தேர்ந்தெடுக்கின்றனர்).

என்னுடைய நிலைப்பாடு: இட ஒதுகீடுக்கு கால வரையறையோ, அல்லது போதிய முன்னேற்றம் அடைந்துவிட்டார்கள் என்பதற்கு சரியானதொரு சரியானதொரு குறியீடோ ஏற்படுத்த வேண்டும். ஒருமுறை பயனடைந்தவர்களும், பயனே அடையாதவர்களுக்கும் நடுவே கோடு கிழிக்கப்படவேண்டும்.

அரசு எவ்வளவு வேண்டுமானாலும் போட்டியில் வெற்றிபெற உதவலாம். உதாரணம், இலவச விடுதி, தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி. ஆனால் போட்டி அனைவருக்கு ஒன்றாய்த்தான் இருக்க வேண்டும். போட்டியின் பலனையே தூக்கிக்கொடுப்பது போங்கு ஆட்டம்.

என் தனிப்பட்ட கருத்து: இட ஒதுக்கீட்டின் அநியாயங்கள் முன்னேறிய வகுப்பினரிடம் மிக நன்றாக வேலை செய்கிறது. படித்தால் அல்ல, மிகச்சிறப்பாக படித்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற வேட்கையை முன்னேறிய சமுகங்களின் ஒவ்வொரு மாணவரிடமும் விதைததுள்ளது. அதற்காக அவர்கள் ஆரம்பம் தொட்டே அதற்கேற்ற அளவில் தயாராகிக்கொள்கிறார்கள். அந்த அளவில் இட ஒதுக்கீட்டு முறைக்கு நன்றிகள்!

சுப இராமநாதன்

Saravana Kumar N said...

Typo *இருபத்தைந்து வயதில்

Thirumalai Kandasami said...

இட ஒதுக்கீடு கண்டிப்பாக தேவை. அதில் எனக்கு எந்த மாற்று கருத்துமில்லை. நான் நேரடியாக பார்த்தது. இடஒதுக்கீட்டால் பலன் பெற்ற குடும்பம் பெரு நகரங்களுக்கு குடிபெயர்கிறது . அதன் பிறகு அவர்கள் தலைமுறையினர் தொடர்ச்சியாக இடஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்கின்றனர். கிராமத்தில் இருப்பவன் அப்படியே இருக்கிறான்.

எனது யோசனை : இடஒதுக்கீட்டின் கீழ், பொருளாதார ஒதுக்கீட்டையும் கொண்டு வர வேண்டும்.
30% வருமான வரி வரம்பிலிருப்போர்(பெற்றோரில் யாரேனும் ஒருவர்) + சொத்து மதிப்பு ஒரு கோடிக்கும் மேலிருப்போர் போன்றவர்களுக்கு அவர்களின் பிரிவின் கீழ் 30% இடத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும் (+ பொது பிரிவு). பொருளாதாரத்தை கண்டறிவதில் முறைகேடு கண்டிப்பாக இருக்கும் . அதை வெளிப்படைத்தன்மையான பட்டியல் வெளியீட்டின் கீழ் வெகுவாகக் குறைக்கலாம். படிப்படியாக குறைகளை களையலாம். எதையும் செய்யாமல் இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

சேக்காளி said...

//மிகச்சிறப்பாக படித்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற வேட்கையை முன்னேறிய சமுகங்களின் ஒவ்வொரு மாணவரிடமும் விதைததுள்ளது. அதற்காக அவர்கள் ஆரம்பம் தொட்டே அதற்கேற்ற அளவில் தயாராகிக்கொள்கிறார்கள்//
எங்களுக்கு இன்னும் முழுமையாக விதைக்கவே இல்லை Ram.
சாதிய வாரியிலான ஒதுக்கீட்டு முறையில் மாற்றம் வேண்டும் என்று சொல்லுங்கள். ஒத்துக்கொள்ளலாம். இட ஒதுக்கீடே கூடாது என்பதை ஏற்க முடியாது.

சேக்காளி said...

Ram said
//. OC பிரிவுக்கு 60% cut off என்றும், SC பிரிவுக்கு 40% cut off என்றும்//
100% எங்களுக்கு ஒதுக்கப் படுவதில்லை. 18% மட்டுமே ஒதுக்கப் படுகிறது.
தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு இருக்கிறது. 18% பள்ளு,பறை, சக்கிலியர்களுக்கு போக மீதம் 51% ஒதுக்கீடும் உள்ளது. ஆனால் உங்கள் பின்னூட்டத்தில் SC பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளீர்கள்.
இது அப்பட்டமாக உங்களுக்கு SC மக்கள் மீது உள்ள வெறுப்பைதான் காட்டுகிறது.

Itsdifferent said...

I think as a general rule, if two generations of a family enjoyed reservation benefits and are in economically better shape, their next generation should not be considered for reservation. Its a general rule, there could be exceptions. The system should be designed in such a way, the rule works in an automated way, and the exceptions are handled individually by the administration

Ram said...

ஒரு கருத்தை விளக்க ஒரு உதாரணம் சொன்னால், அந்த உதாரணத்தை வைத்து கருத்து சொன்னவனின் மீது அபாண்டம் சுமத்துவதுவோரின் மனதில் உள்ளது தான் சாதிய வன்மம். மேலும், அதே பின்னூட்டத்தில் நேரிடையாக ராமதாஸ் குடும்பத்தைப் பற்றியும் கூறியுள்ளேன். அதுவும் ஒரு கருத்தை விளக்க ஒரு உதாரணமே (மருத்துவர் குடும்பத்தையும் கட்சியையும் பற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் சில பாராட்டுகளும், பல திட்டுகளும் உள்ளன, அதுவல்ல அவரை உதாரணமாகக் கூரியதன் காரணம்). அது உருத்தாத ஒருவருக்கு இன்னொரு உதாரணம் உருத்தியிருக்கிறது.

வளர வேண்டும் சிலர்.

Ram said...

//////. OC பிரிவுக்கு 60% cut off என்றும், SC பிரிவுக்கு 40% cut off என்றும்//
////100% எங்களுக்கு ஒதுக்கப் படுவதில்லை. 18% மட்டுமே ஒதுக்கப் படுகிறது. தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு இருக்கிறது. 18% பள்ளு,பறை, சக்கிலியர்களுக்கு போக மீதம் 51% ஒதுக்கீடும் உள்ளது.

Cut off மதிப்பெண்ணுக்கும் இட ஒதுக்கீடு சதவீததிற்கும் வித்தியாசம் புரியாமல் வீச்சரிவாளை வீசுகிறவர்களை என்னவென்று சொல்வது!

சேக்காளி said...

////. OC பிரிவுக்கு 60% cut off என்றும், SC பிரிவுக்கு 40% cut off என்றும்//
////100% எங்களுக்கு ஒதுக்கப் படுவதில்லை. //
bc பற்றி குறிப்பிட ஏன் தோன்றவில்லை என்பதற்காக தான் இந்த மேற்கோளை காட்டினேன்.
கட் ஆப் பற்றிய விளக்கத்திற்காக அல்ல.