Aug 23, 2019

சுழல்

பேருந்து வேகம் எடுப்பது போலவே தெரியவில்லை. மிதமான ஓட்டம். வேல ராமமூர்த்தி கதைகளில் சிலவற்றை வாசித்துவிட்டு புத்தகத்தை பைக்குள் வைத்திருந்தேன். இப்பொழுதெல்லாம் அரசுப் பேருந்துகளில் கூட மனிதர்கள் முகம் பார்ப்பதில்லை. அதிசயமாக அருகில் இருந்த மனிதர் செல்போனை சட்டைப் பைக்குள் போட்டுவிட்டு அமர்ந்திருந்தார். பேசுகிற மனநிலையில் இல்லை என்பதை முகம் காட்டியது. பேசலாமா வேண்டாமா என்று குழப்பமாகவே இருந்தது. மனம் விட்டுப் பேசுகிற மனிதர்களைவிட சிறந்த புத்தகம் எதுவுமில்லை. 

‘மதுரை போறீங்களா?’ என்றேன். அது மதுரை செல்லும் பேருந்துதான். உரையாடலைத் தொடங்க அதுதான் எளிய கேள்வியும் கூட. ஆமாம் என்பது போன்றதொரு தலையசைப்புக்குப் பிறகு மீண்டும் ஜன்னல் வழியாகப் பார்க்கத் தொடங்கினார். அவர் பேச விரும்புவதைப் போலத் தெரியவில்லை. 

செல்போனை வெளியில் எடுக்க எத்தனிக்கும் போது ‘நீங்க?’ என்றார். 

‘கோயமுத்தூருங்க...’ என்று சொல்லிவிட்டு செல்போனைத் திரும்ப எடுக்கவில்லை. மனிதர்கள் பேசுவதாக இருந்தால் அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவ்வப்பொழுது நினைத்துக் கொள்வேன். பல சமயங்களில் அந்த நினைப்பு சாத்தியம் ஆவதில்லை. மதுரையிலிருந்து கோயமுத்தூருக்குப் பேருந்து பிடிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொண்டே ‘மதுரையேவா?’ என்றேன். 

‘அப்பாவுக்கு உடம்பு சரியில்லை’ என்று சம்பந்தமில்லாத ஒன்றைத்தான் பதிலாகச் சொன்னார். அவருக்கு சொல்லிவிட வேண்டும் போல இருந்திருக்கக் கூடும். மனம் கடுமையான அழுத்தத்தில் இருக்கும் போது யாராவது ஒரு சொல்லை வெளியில் கொட்டக் கிடைத்துவிட மாட்டார்களா என்றுதான் பரிதவிக்கும். உணவுக்குழாயில் புற்றுநோய். கடைசிக் கட்டம். அவரது அம்மா அழுதிருக்கிறார். இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்து பார்த்துவிட்டுத் திரும்பச் செல்கிறார். அதுவரை இல்லாத வெறுமையும் அழுத்தமும் எங்கள் இருவருக்குமிடையில் விரவத் தொடங்கியது. 

‘எங்கப்பா ரெண்டு வருஷம் முன்னாடி இறந்துட்டாருங்க’ என்றேன். முகத்தை உற்றுப் பார்த்தார். காரணத்தைச் சொன்னேன். அந்தக் கணத்தில் அப்பாவின் நினைவு வந்து போனது. 

அந்தப் பயணி சவுதியில் ஒரு அரபி வீட்டில் ஓட்டுநராக இருக்கிறார். அடிக்கடி வந்து போக முடியாது. முப்பதுகளைத் தாண்டுகிற வயது. இன்னமும் திருமணம் ஆகியிருக்கவில்லை. வீட்டில் மிகக் கொடிய வறுமை. வேலை கிடைத்தால் போதும் என்றிருந்தவரை பக்கத்து வீட்டுக்காரர் கொண்டு போய் சேர்த்துவிட்டார். ஏழெட்டு மாதங்களுக்கு முன்பாக தந்தையின் நோயைக் கண்டறிந்திருக்கிறார்கள்.‘ஒண்ணும் ஆகாதும்மா’ என்று சொல்லிச் சொல்லியே இவ்வளவு காலத்தையும் ஓட்டிவிட்டார். இப்பொழுதுதான் வந்து பார்க்கிறாராம். பார்த்தவுடன் அப்பா உடைந்து அழுதுவிட்டதாகச் சொன்னார்.

உருக்குலைந்து, அடையாளமற்றுப் போய்விட்ட அப்பா. உணவு உண்ண முடிவதில்லை. மருத்துவங்கள் கைவிட்ட பிறகு வீட்டிலேயே வைத்து அம்மா பார்த்துக் கொள்கிறார் என்றார். அக்காவுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். அவ்வப்பொழுது வந்து போகிறார். ஆனால் அம்மாவுக்குத்தான் அத்தனை சுமையும். 

‘நான் வந்த உடனே அம்மா அழுதுட்டு உள்ள போய்ட்டாங்க...அப்பான்னால பேச முடியல...அப்படியே அழுதுட்டாரு...எங்கப்பா அழுது நான் பார்த்ததே இல்லை’ பேசப் பேச அவரையுமறியாமல் கண்களில் நீர் கசிந்தது. தன்னால் அருகிலிருந்து பார்த்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் அவரது அத்தனை பாரத்துக்கும் காரணமாகத் தெரிந்தது. வேலையை விட்டுவிட்டு வந்துவிட முடியாதா? என்றேன். இத்தகைய கேள்விகள் அபத்தமானவை. ஆனால் ஏதாவதொருவகையில் பேசிக் கொண்டிருப்பவருக்கு ஒரு திறப்பாக அமைந்துவிடக் கூடும் என்ற எண்ணத்தில்தான் கேட்டேன்.

‘அக்கா கல்யாணத்துக்கு, சவுதி போறதுக்கு நிறைய கடன் வாங்கிட்டேன்..இன்னமும் மூன்று லட்சம் பாக்கியிருக்கு...இங்க எப்படிங்க சம்பாதிக்க முடியும்?’ என்றார். மூன்று லட்சம் பலருக்கும் சொற்பமான தொகையாகத் தெரியக்கூடும். அவரைப் போன்றவர்களுக்கு அது பெருந்தொகைதான். கடனை அடைக்காவிட்டால் வட்டி கூடும். சுமை மேல் சுமை.

அவரவருக்கு அவரவர் உயரங்களுக்கு ஏற்ப பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள், குடும்பம் சார்ந்த சுமைகள். எதையும் அப்படியே விட்டுவிட்டு வந்து ஊரில் அமர முடிவதில்லை. எத்தனையோ நண்பர்கள் இப்படி வருந்துகிறார்கள். இந்தச் சமூகமும் அது நமக்கு உருவாக்கும் நெருக்கடியும் அவிழ்க்கவே முடியாத முடிச்சுகளாக நம் கைகளில் விழுந்துவிடுகின்றன. அது நாம் எதிர்பார்க்காத ஓரிடத்தில் கொண்டு போய் அமரச் செய்துவிடுகிறது. நம்முடைய ஊரும் மண்ணும் நமக்குள் வேர்விட்டுப் பரவியிருந்தாலும் அதை அவ்வளவு எளிதில் நெருங்கிவிட முடிவதில்லை. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஒரு கணம் ஆழ்ந்து மூச்சை இழுத்துவிடும் தருணத்தில் திரும்ப நம்மை அழைத்துச் செல்லும் பேருந்து வந்துவிடுகிறது. ஒரு நீண்ட பயணத்தில் சில கணங்கள் மட்டுமே இளைப்பாறும் பறவைகளைப் போல மட்டுமே சொந்த ஊருக்கும் நமக்குமான தருணங்கள் வாய்க்கின்றன.

மருத்துவங்கள் கைவிட்டுவிட்ட இறுதிக்கட்டம். எப்படித் தேற்றுவது எனத் தெரியவில்லை.  ‘தைரியமா இருங்க’ என்று மட்டும் சொன்னேன். உண்மையிலேயே அதற்கு மேலாக பேசிக் கொள்ள எங்கள் இருவருக்குமிடையில் ஒன்றுமில்லை. செல்போனைத் தொடத் தோன்றவில்லை. அவர் ஜன்னலுக்கு வெளியில் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார். வெறுமனே கண்களை மூடி அமர்ந்து கொண்டேன்.

ஏதேதோ நினைவுகள் சுழன்றன.

சமீபத்தில் தந்தையை இழந்த வேறொரு நண்பர் ‘உங்களிடம் பேச வேண்டும்’ என்றார். ஒரு மணி நேரமாவது பேசியிருப்போம். கடந்த சில ஆண்டுகளாகவே நோய்மையில் கிடந்தவர் அவர். வெவ்வேறு மருத்துவர்களைப் பார்த்துவிட்டார்கள். அனைத்தும் தோல்வியடைந்த பிறகு அவர் மறைந்துவிட்டார். தமது தந்தை இறந்த பிறகு ஏதோவொரு குற்றவுணர்ச்சி அரித்துக் கொண்டேயிருப்பதாகச் சொன்னார். வேறு எதையாவது செய்து காப்பாற்றியிருக்கலாமோ என்று பதற்றமாகவே இருப்பதாக உடைந்து போனார். 

நெருங்கிய உறவொன்று மீளவே முடியாத நோய்மையில் துடிக்கும் போதும், நம்மை விட்டு பிரியும் போது அதை அவ்வளவு எளிதில் சொற்களால் தாண்டி விட முடிவதில்லை. அத்தகைய வலியில் இருப்பவர்களைத் கை தூக்கி விடுமளவுக்கான வலு எந்தச் சொற்களுக்கும் இருப்பதில்லை.அவர்களது அழுகைக்கும் கதறலுக்கும் செவிகளையும் தோள்களையும் கொடுப்பது மட்டுமே நம்மால் செய்ய முடியக் கூடிய அதிகபட்ச உதவி.

வலிகளோடு போராடுகிறவர்கள் தாமாகவே வலுவைக் கூட்டி வெளியில் வருவதைத் தவிர வேறு சாத்தியங்களுமில்லை.  தாம் எதிர்கொள்ளும் இச்சோதனைகளை இந்த உலகின் ஒவ்வொரு மனிதனும் ஏதாவதொரு தருணத்தில் தாண்டி வந்திருப்பான் என்பதை மட்டுமே மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். 

எப்பொழுது தூங்கிப் போனேன் என்று தெரியவில்லை. 

இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தது. எழுந்தவர் ‘சாமியைக் கும்பிட்டுக்குங்க சார்’ என்றார். கட்டாயமாக என்றேன். வறண்ட புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு வேகமாக இறங்கிப் போனார். காலம் எந்தவிதமான கருணையுமற்றது எல்லா மனிதர்களையும் ஏதாவதொரு தருணத்தில் அடித்து வீழ்த்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது. 

2 எதிர் சப்தங்கள்:

Chandrakumar said...

Mani, Life is made of very small instances like these, and you have captured the uneasiness between two strangers really well. One of best notes, you have published!

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

mani,
en ninaivu varukirathaa?
ithu pol vishayam enraal en ninaivum kaarththiyin ninaivum varum enkiren.
karthik amma
kalakarthik