மனிதனுக்கு குறைந்தபட்ச ஒழுங்கு அவசியம் என்று முன்பொரு கட்டுரையில் எழுதியிருந்தீர்கள். ஒழுங்கின் வரையறை என்ன? குறைந்தபட்ச ஒழுங்கு என்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? என்று நண்பர் ரவீந்திரன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
எந்தக் கட்டுரையில், என்ன அர்த்தத்தில் எழுதினேன் என்று நினைவில் இல்லை. ஆனால் அந்த எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனக்கு இதைச் சொன்னது எஸ்.வி.ராமகிருஷ்ணன். அவரை ஹைதராபாத்தில் சந்தித்த தொடக்க காலங்களில்- அவருக்கும் எனக்கும் அறுபது வருடங்கள் வயது வித்தியாசம்- ஏதோவொரு பூங்காவில் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அப்பொழுதுதான் பீடி சிகரெட் பழக்க இருக்கா? மது அருந்தும் பழக்கமுண்டா? என்றெல்லாம் வரிசையாகக் கேட்டார். பதில்களைச் சொன்ன பிறகு வேறெதுவும் கேட்டுக் கொள்ளாமல் நடந்தார். அது நமக்கு உறுத்தலாக இருக்குமல்லவா?
ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து ‘எதுக்கு கேட்டீங்க சார்?’ என்றேன். அவர் சொன்ன பதில் நன்றாக நினைவில் இருக்கிறது- ‘திறமை அல்லது அதிர்ஷ்டம் உள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு வெற்றியாவது கிடைத்துவிடும். திறமை, அதிர்ஷ்டம் இரண்டுமே இல்லாதவன் என்று யாருமே இருக்க முடியாது. அப்படி ஒரு முறை கிடைத்த வெற்றியை நிலைப்படுத்திக் கொள்ள குறைந்தபட்ச ஒழுக்கம் அவசியம்’ என்று மட்டும் சொல்லிவிட்டு நிறுத்திவிட்டார். நான் யோசிப்பதற்கென அவர் கொடுத்த இடம் அது.
தொடர்ந்து வாசிப்பதை ஒரு கணம் நிறுத்திவிட்டு எஸ்.வி.ஆரின் இந்த வரையறையை அசை போட்டுப் பார்க்கவும். இந்த இரண்டு வரியில் நாம் எவ்வளவு வேண்டுமானாலும் யோசித்துக் கொள்ள முடியும்.
பிறந்ததிலிருந்தே எல்லாவற்றிலும் தோல்விதான் என்று யாருமே சொல்ல முடியாது. எதாவதொரு கட்டத்தில் ஒற்றை வெற்றியாவது கிடைத்திருக்கும். ஆனால் ஒற்றை வெற்றியை அடைந்தவனை யாரும் பெரிதாக சட்டை செய்ய மாட்டார்கள். ஒரு கணத்துக்கான வெளிச்சத்தை நம் மீது வீசிவிட்டு மறந்துவிடுவார்கள். தொடர்ச்சியாக வென்று கொண்டிருப்பவனை, கீழே விழுந்தாலும் எழுந்து நிற்பவனை, ஒவ்வொரு கட்டத்தை அடைந்த பிறகும் அடுத்தவர்கள் திரும்பிப் பார்க்கும்படி சாதிக்கிறவனை, அவனது மறைவுக்குப் பின்னாலும் அவன் பெயரை நினைவில் வைத்திருக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்குகிறவனைத்தான் சமூகமும், உலகமும் நினைவில் வைத்திருக்கும்.
பெரிய வரலாற்று நாயகனாக இல்லாவிட்டாலும் குறைந்தபட்ச வெற்றியாளனாக இருப்பதற்கு முதலில் கிடைத்த வெற்றியின் உத்வேகத்தில் அடுத்தடுத்த வெற்றியை நோக்கி ஓட வேண்டும். அதற்கு கவனச் சிதறல் இல்லாமல் இருக்க வேண்டும். ‘Will to Win’ என்றொரு வரி மிகப் பிரபலம். முதலில் வெற்றியை அடைய வேண்டும் என்கிற ஆசை வேண்டும். அந்த ஆசையைச் சிதைக்கிற எதுவுமே ஒழுங்கின்மைதான். ‘அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று நினைக்க வைக்கிற எதுவுமே ஒழுங்கின்மைதான். அது குடியாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. மிதமிஞ்சிய சோம்பேறித்தனமாகக் கூட இருக்கலாம்.
அறிவுரையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை- ஆனால் குடி, போதை என யாராவது பேசினால், நம்முடைய சொல்லுக்கு அவரிடம் மரியாதை இருக்குமெனத் தெரிந்தால் இதைச் சொல்ல நான் தயங்குவதேயில்லை.
நூறு சதவீதம் பர்ஃபெக்ட் என்றெல்லாம் எந்த மனிதனும் இருக்க முடியாது. பலங்களும் பலவீனங்களும், ஒழுங்குகளும் ஒழுங்கின்மைகளும் நிறைந்தவர்களாகத்தான் ஒவ்வொருவரும் இருக்க முடியும். பலவீனங்களும், ஒழுங்கின்மைகளும்தான் நம் வாழ்க்கையின் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. சந்தோஷத்தையும் அளிக்கின்றன. எப்பொழுதும் இறுக்கமாகவேவா இருக்க முடியும்? ஆனால் நம்முடைய பலங்களை விட பலவீனங்கள் அதிகமாகும் போதும், ஒழுங்குகளை விடவும் ஒழுங்கீனங்கள் அதிகமாகும் போதும் நம்முடைய செயல்திறன் குறைந்து, லட்சியத்தை அடைவதற்கான வேகம் குறைகிறது.
பலவீனங்களை விட பலம் மிகுந்தவனாகவும், ஒழுங்கீனங்களைவிட ஒழுங்கு மிக்கவனாகவும் இருக்கும் வரைக்கும் நம்முடைய ஓட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். வயது முதிர முதிர இந்த எண்ணம் வலுவேறிக் கொண்டிருக்க வேண்டும். சுவரில் முதல் சுண்ணாம்பு உதிரும் வரைக்கும் எல்லாம் சரியாகவே இருக்கும். ஓரிடத்தில் உதிரத் தொடங்கிய பிறகும் விழித்துக் கொள்ளாவிட்டால் சுவர் பல்லிளித்துவிடும். அவ்வளவுதான்.
எந்தக் கணத்திலும் சிதைவதற்கான இடம் கொடுத்துவிடக் கூடாது என்கிற வைராக்கியம் மட்டுமே நமக்கான உந்து சக்தியாக இருக்கும்.
6 எதிர் சப்தங்கள்:
👍
ஒழுங்கு அவசியம் தான்.
ஆனால் அதற்கான பலன் கண்டிப்பாக வெற்றி என்பதாக தான் இருக்க வேண்டுமா?
//ஒழுக்கத்திற்கான பலன் கண்டிப்பாக வெற்றி என்பதாக தான் இருக்க வேண்டுமா?//
ஒழுக்கத்தின் பலன் வெற்றியாகத்தான் இருக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்வதைவிட, வெற்றியடைய ஒழுங்கு அவசியம் என்று எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
//வெற்றியடைய ஒழுங்கு அவசியம் என்று எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.//
√
//எந்த இடத்திலும் சிதைவதற்கான இடம் கொடுத்து விடக் கூடாது// - வைராக்கியமா இருந்தால் சாத்தியமே...
தொடக்க காலங்களில்- அவருக்கும் எனக்கும் அறுபது வருடங்கள் வயது வித்தியாசம்?
Post a Comment