Jul 8, 2019

சமூக ஆர்வலர்

பொருளாதார ரீதியிலான இழப்புகளையோ அல்லது மிக மோசமான உடல்நல பாதிப்பையோ கூட ஒரு மனிதனால் ஏற்றுக் கொள்ள முடியும். அதனால் யாரும் அவனைக் குறை சொல்லப்போவதில்லை. ஆனால் ஒருவனது குணநலனைச் சிதைக்கும் போது தடுமாறிப் போகிறான். அவனை மோசமானவன் என்று சமூகம் சொற்களை வீசும் போது அவன் மட்டுமில்லாது அவனைச் சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் சுணங்கிப் போய்விடுகிறார்கள். இப்பொழுதெல்லாம் Character assassination மிகச் சாதாரணமாக நடக்கிறது. அது உண்மையோ, பொய்யோ- மோசமான வசைகளும், வன்மம் தோய்ந்த வசவுகளும் மிகச் சாதாரணமாக விசிறியடிக்கப்படுகின்றன. சம்பந்தேமேயில்லாத ஆட்களையும் கூட ‘ஒருவேளை இப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறதே’ என்று கருத வைத்துவிடுகிறார்கள்.

யாரையும் ஆதரிக்கவில்லை. யார் மீதும் நம்பிக்கையுமில்லை; அவநம்பிக்கையுமில்லை. மனப்பூர்வமாக யாரையும் நம்புகிற சூழலுமில்லை. இவ்வளவு தொழில்நுட்பங்களும், வாய்ப்புகளும் மிகுந்து கிடக்கும் இந்தச் சூழலில் யார் வேண்டுமானாலும் தடுமாறிவிடக் கூடும். ஏதாவதொரு தருணத்தில் பிசகும் போது அதுதான் எதிரிகளுக்கு வாய்ப்பாகிறது. ஒரு மிகச் சிறிய கரும்புள்ளியை பூதாகரமாக்கி ஒருவன் வாழ்நாள் முழுக்கவும் எதற்கெல்லாம் உழைத்தானோ, என்ன கேள்விகளை எழுப்பினானோ அவற்றையெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கி வெறும் புள்ளியை மட்டுமே பிரம்மாண்டப்படுத்துகிற இச்சமூகம்தான் பயமூட்டுவதாக இருக்கிறது.

ஒரு பக்கத்தில் உயர்த்திப்பிடிக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் அதைவிட வலுவோடும் வேகத்தோடும் உருக்குலைக்கிறார்கள். 

மாது, போதை, நிதி மோசடி என்று ஏதோவொரு குற்றச்சாட்டு போதும். அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. ஒற்றைப் புகார் போதும். வரிந்து கட்டி வந்து காலி செய்துவிடுவார்கள். யார் மீதுதான் வன்மம் இல்லை? தோனிக்கு பிறந்தநாள் வந்தாலும் சரி; சச்சினுக்குப் பிறந்தநாள் வந்தாலும் சரி- ஒரு கூட்டம் சேற்றை வாரி வீசிக் கொண்டிருக்கிறது. யோசித்துப் பார்த்தால் சச்சினும், தோனியும் இவர்களுக்கு என்ன துரோகத்தைச் செய்திருக்க முடியும்? அரசியல் ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ கூட பகையாளியாக இருக்க முடியாது. பிறகு ஏன் இவ்வளவு வன்மம்? வெறும் முகத்தின் அடிப்படையிலேயே ஒருவன் மீது வன்மத்தைக் காட்ட முடியுமெனில் தம்முடைய அரசியல் அமைப்புக்கு எதிராகக் குரல் எழுப்புகிறவன், தமது சித்தாந்தங்களுக்குத் தடையாக இருப்பவன் மீது எவ்வளவு வன்மம் இருக்கும்? 

ஒருவனது சமூக அந்தஸ்தைக் காலி செய்வதற்கு பெரிய ஆயுதங்கள் எதுவும் தேவையில்லை. இந்தச் சமூகம் எதையெல்லாம் மிகப்பெரிய பிழை என்று கருதுகிறதோ அதைச் செய்கிறவனாக ஒருத்தனைக் குற்றம் சுமத்தி நிறுத்தும் போது அவன் மட்டுமில்லாமல் அவனது குடும்பமே சிதைந்து போய்விடும்.  கடந்த வாரத்தில் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘பியூஷ் மானுஷ் ஒரு சில்லரை’ என்றார். அதிர்ச்சியாக இருந்தது. எதை வைத்துச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் ‘அதான் நியூஸ் வந்துச்சே’ என்கிறார். அவ்வளவுதான். எங்கேயோ, யாரோ ஒருவர் மீது ஒரு கை சாணத்தை எடுத்து வீசிவிட்டால் போதும். காலம் முழுக்கவும் அந்த மனிதர் அந்தக் கறையோடுதான் திரிய வேண்டும். அப்படித்தான் செய்கிறார்கள். நாளை ஒரு பொதுவான பிரச்சினைக்காக அந்த மனிதர் சாலைக்கு வரும் போது ‘அவனைப் பத்தித் தெரியாதா?’ என்று சொல்லிவிடுவார்கள்.

சமூகம், போராட்டம் என உதிரிகளாகத் திரிகிறவர்களுக்குத்தான் இவையெல்லாம் பெரிய பாதிப்புகளை உண்டாக்குகின்றன. அமைப்பு ரீதியாக வலுவாகிவிட்டவர்கள் அலட்டிக் கொள்ளவே வேண்டியதில்லை. குடும்மாகச் சென்று தமது தந்தை மீதே பாலியல்  குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினாலும் கூட குற்றம் சுமத்தப்பட்டவனுக்கு அரசியல் செல்வாக்கும் பின்புலமும் இருந்தால் அவையெல்லாம் வெறும் வதந்திகளாகவே முடிந்துவிடுகிறது. இன்னொரு பெண்ணுக்கு குழந்தையைக் கொடுத்தவனைக் கூட மீம்ஸ் போட்டு கலாய்ப்பதோடு விட்டுவிடுவார்கள் அவன் அதிகாரமிக்கவனாக இருந்தால். ஆனால் உதிரிகளுக்கு அப்படியில்லை. நாம் மரியாதை வைத்திருக்கும் செய்தித்தாளில் கூட அது முதல்பக்கச் செய்தியாக வந்துவிடுகிறது. அவன் இவன் என்று எழுதுகிறார்கள். எல்லாவற்றையும் அமைதியாகத் தாண்டிப் போய்விடுவதுதான் நமக்கு நல்லது என மனம் நம்புகிறது.

பொதுவெளியில் இயங்குகிறவன் எந்த தைரியத்தில் அதிகார வர்க்கத்தை நோக்கிக் கேள்விகளை எழுப்புவான்? அதற்கான ஊக்கம் எங்கேயிருந்து வரும்? எங்கள் வழியில் வராமல் அமைதியாக இருப்பதாக இருந்தால் நீ என்னவோ செய்துவிட்டுப் போ என்று விட்டுவிடுகிற அரசின் வலுவான கரங்கள் தம்மை ஏதாவதொருவிதத்தில் அவன் சீண்டுகிறான் எனத் தெரிந்தவுடன் நசுக்கித் தூர வீசிவிடுகின்றன. சமூகத்தில் தலை நிமிரவே முடியாத அளவுக்கு அவன் மீது பெரும் அவமானச் சுமையை இறக்கி வைத்துவிடுகிறது. 

சமூக ஆர்வலர் என்ற பெயருக்குப் பின்னாலான ஒட்டு அரசியல் பதாகைகளிலும், செய்திச் சேனல்களின் விவாதங்களிலும் இருக்கும் வரைக்கும் எந்தப் பிரச்சினையுமில்லை. அதுவே ஏரிக்கு குரல் எழுப்புகிறேன், மணலுக்குக் குரல் எழுப்புகிறேன், ஆற்று நீருக்குக் குரல் எழுப்புகிறேன் என்று சொல்லி சமூக ஆர்வலர் என்ற பின்னொட்டு வருமானால் அதை விட பேராபத்து ஒன்றுமில்லை. எந்தவிதத்திலாவது தனிமனித வாழ்வு அம்பலப்படுவதை எதிர்கொள்வதற்குத் தயாராகவே இருக்க வேண்டும். தவறு செய்தாலும் அம்பலமாகும்; தவறு செய்யாவிட்டாலும் அம்பலமாகும். 

ஒன்று மட்டும் உண்மை- தம் குடும்பத்தையும், வாழ்க்கையும் இழந்து தாங்கிப்பிடிக்கும் அளவுக்கு இந்தச் சமூகம் ஒன்றும் உன்னதமானதில்லை. மிக மோசமாக வாரிவிடக் கூடியதாகவும், எழவே முடியாமல் ஒருவனை அடித்து வீழ்த்தி சந்தோஷப்படுவதாகவும்தான் இச்சமூகம் இருக்கிறது. எதற்கென்றே புரியாத வன்மத்தையும் விஷத்தையும் தேக்கி வைத்துக் கொண்டு வாய் நிறையப் புன்னகைக்கிறவர்கள்தான் மிக அதிகம். தன்னைத் தவிர யோக்கியன் எவனுமில்லை என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்தான் சுற்றிலும் மலிந்திருக்கிறார்கள். அத்தகையதொரு சமூகத்துக்காக வாழ்க்கையை ஏன் தொலைத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் ஒன்றிரண்டு பேராவது சமூகத்திற்கென பேசாவிட்டால் நாளை என்னவாகும் என்ற வினாவும் எழாமல் இல்லை.

18 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Sir...Very good article...

Sivanandam said...

Very true.

vijay said...

அண்ணா யாரை செல்கிறீர்கள் என தெரிகிறது. மனது கனக்கிறது.

Asok said...

This article should be discussed in all levels, you always choose the articles with the current issues. Whatsapp/facebook MEMES are important role for this issue, it is just pull the people down without any question and proofs, even the well educated people just forwarding all memes without having any social awareness, how much it would affect ones life, how the society will lose the people who is helping somewhere, the forwarding guy does not even where it is coming from. Whenever I see any kind of character assassination, I strongly oppose them and request them that it should not be forwarded further. Each and everyone should have social awareness, if not, there is no solution for this.

சக்திவேல் விரு said...

இந்த மாதிரியான சமூக அமைப்பை சேர்ந்த கும்பலுக்காக போராடும் மனிதர்களின் மனம் மிக வலியது . பின்னே எல்லாத்தையும் விட்டுவிட்டு எதிரில் இருப்பவனுக்கும் சேர்ந்தே அல்லவா இவர்கள் ஆளும் வர்க்கத்தை பகைத்து கொண்டு போராடுகிறார்கள் .

Anonymous said...

But let's look at humanity with hope as Gandhi did.. Nobody supports Gandhi now but still he's Mahatma.

Anonymous said...

So what is the solution ? Or do we have to live with it ?

Ram said...

யாரையோ மனசுல வச்சுக்கிட்டு சொல்றீங்கன்னு புரியுது. அப்படி அடிபட்டுக் கொண்டிருப்பவர் யார்ன்னு தான் புரியல. சொல்ல முடிஞ்சா தனிச்சிய்தியாகவாவது எனக்குத் தெரியப்படுத்தவும்.

Selvaraj said...

எதிர்பார்த்ததுதான், முகிலன் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம்தான். தூத்துக்குடி போராட்டத்திற்கு முன்னின்ற பேராசிரியை பாத்திமாபாவுவை முடக்குவதற்கும் அவர்மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. சமூக ஆர்வலர்களையும் போராளிகளையும் முடக்கி போட அதிகாரவர்க்கம் எடுக்கும் கடைசி ஆயுதம்தான் பாலியல் குற்றச்சாட்டு. பெரும்பாலான இந்த வழக்குகள் ஜோடிக்கப்பட்டது என்று எல்லோருக்கும் தெரியும் தெரிந்தும் நாம் என்ன செய்ய முடியும்? போராளிகளின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை மக்கள் புறந்தள்ளவேண்டும் அப்போதுதான் மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் என்ற உத்வேகம் போராடுபவர்களுக்கு கிடைக்கும். சமூக ஆர்வலராக இருந்தால் அவன் நூறு சதமானம் உத்தமனாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பதை மக்கள் முதலில் நிறுத்தவேண்டும்.
மக்களின் வேலை ‘போராட்டத்தை ஒருங்கிணைப்பவர்கள் தங்கள் போராட்ட கோரிக்கைகளில் அறம் பிறழாதவர்களாக இருக்கிறார்களா’ என்று பார்க்கவேண்டுமே தவிர படுக்கையறையில் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதல்ல. பியூஸ் மானுஷ் போலீசார் தன்னை ஜெயிலில் வைத்து அடித்தார்கள் என்று அழுதுகொண்டே பேட்டிக்கொடுத்தார் அதன் பின்னர் என்ன நடந்தது? அவ்வளவுதான். 2002-ஆம் ஆண்டு நடந்த குஜராத் வன்முறை வழக்கில் மோடிக்கெதிராக சாட்சி சொன்ன சஞ்சிவ் பட் என்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு முப்பது வருடங்களுக்கு முந்தைய ஒரு வழக்கை அவருக்கெதிராக தூசு தட்டி எடுத்து இப்போது ஆயுள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள். நேர்மையாக இருந்து அதிகாரத்திலிருப்பவர்களை எதிர்த்தால் இதுதான் கதி.

Anonymous said...

@Ram... Mugilan.

@Mani... Now, a law is in place to crush individual activists who are not part of any organization, like Mugilan. Ref: https://m.telegraphindia.com/india/8-bills-introduced-in-1-hour-one-on-lone-wolf-terrorist/cid/1694105?ref=top-stories_home-template Things are getting worse every day.

Ram said...

இன்றைய செய்திகள் படித்த பின் புரிகிறது. பெயரைக்குறிப்பிட்டே நீங்கள் உங்கள் பதிவை எழுதியிருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

சேக்காளி said...

//அவன் அதிகாரமிக்கவனாக இருந்தால். ஆனால் உதிரிகளுக்கு அப்படியில்லை//
அதிகாரமிக்கவனை ஆதரித்து எத்தனை பேர் பேசினார்கள்?
உதிரியின் மீது சொல்லப் படுவது களங்கம் என எத்தனை பேர் பேசுகிறார்கள்?
இது தான் இருவரின் செயலுக்குமான மக்களின் ஆதரவு நிலை.
உதிரி ஒருவேளை உல்லாசம் அனுபவித்திருக்கலாம். ஆனால் அது கதற கதற நடைபெற்றிருக்காது என்பதினால் தான் உதிரியால் பாதிக்கப் பட்டவளின் மேல் பரிதாபம் வரவில்லை.
ஒரு பெண் தனது பேஸ்புக் பதிவில்
"அச்சுருத்தியோ மயக்க நிலையிலோ கட்டுக்காவலிலோ பலவந்தமாக பண்ணினால் தான் ரேப்பு.நம்ம லைட்டா கால விரிச்சா கூட அது உடல் உறவு தான்"
என பதிவிட்டுள்ளார்.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

நீங்கள் யாரையேனும் மனதிலிருத்தி/பொதுவாக எழுதி இருந்தாலும் உள்ளபடியே சமுதாய நலம் கருதி,சுயலாபமில்லாமல் வினையாற்றுவாராயின் இறையருள் தகுந்த முறையில் பாதுகாப்பு கொடுக்கும். கவலைப்பட தேவையில்லை. வாழ்க வளமுடன்

kandhu said...

appadi enral porali enru solli vittu yaar valkaiyilum vilaiyadalam ,oru velai athum athaaram sikki vittalum ithu athikara varkkatthin aanava velippadu enru thappikkavum seyyalam

senthilkumar said...

பாலசுப்ரமணிய ஆதித்தன் அவர்களின் முகநூல் பதிவு..

சென்னி மலை முருகன் கோவில் மலையை அரசியல்வாதிகள் கபளீகரம் செய்து அழித்து வருகின்றனர்...

இது விஷயமாக நந்தகுமார்,முகிலன் போராடினர். இருவர் பெயரிலும் பாலியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டு கேட்க ஆள் இல்லாத சூழ்நிலையில் முருக பெருமான் திருச்செந்தூரில் இருந்து என்னை காண வைத்தார்.
https://m.facebook.com/story.php?story_fbid=1331033403721948&id=100004459025108

எந்த இந்துத்துவாவும் களத்திற்கு வராமல் போராடியவர்களை குற்றம் சுமத்தி கந்தனுக்கு எதிரான இப்பணியை முடக்கி வருகின்றனர்.

என் முருகனுக்கு வேலை செய்ய எவர் வந்தாலும்,வரா விட்டாலும் எனது பணியை சென்னி மலை முருகனுக்காக தொடர்வது என்று முருக பெருமானின் உந்துதலால் தீர்க்கமாக முடிவு எடுத்து விட்டேன்.

அது சட்ட ரீதியாகவும் இருக்கும்.
களப்பணியாகவும் இருக்கும்.

முதல் கட்டமாக இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க சொல்லி உள்ளேன்.

தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்பட சென்னி மலை முருகன் மலை விவகாரம் பலருக்கு தெரியும். அதனால் அங்கு எனது புகாரை அனுப்ப மாட்டேன்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இன்றே எனது புகாரை அனுப்ப இருக்கிறேன்.

ராட்சத வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தவில்லை எனில் நாம் அனைவரும் இணைந்து சென்னி மலை முருக பெருமானுக்காக களத்தில் போராடுவோம்.

நாளை ராட்சத வண்டிகள் ஓடினால் பதிவும் செய்கிறேன்.
திரண்டு இணைவோம்.

சென்னிமாமலை உரும் செங்கல்வராயா, மைந்தன் வேண்டும் வரம் மகிழ்ந்து உதவும் என்று நன்கழமக்கட்பேறு நல்ல வாரிசுகள் உருவாகி வம்சம் தழைக்க சென்னி மலையே முக்கிய வழிபாட்டு தலம் என்பது சஷ்டி கவசத்திலேயே உள்ளது.

இப்படி சென்னி மலையை சுரண்டும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு துணை போகிறவர்கள் வம்சம் தழைக்காது என்று நான் சாபம் விட வேண்டியது இல்லை. மேலே உள்ள கவசமே அதற்கு சாட்சி.

நக்கீரன் பெருமானின் திருமுருகாற்றுப் படையில் குன்று தோறாடலில் முதல் தலமே சென்னி மலைதான்.

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா

முருகனின் அடிமை,
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்

இயற்கையை சூரையாடுபவர்களை காண தவறாமல் பகிருங்கள்.

Anonymous said...

Sorry, but I echo Kandus views. If you give exceptions there will be abuses in the system. We need to segregate ones view vs their personal misconduct. —- Rajan

Anonymous said...

ஐயா, சில குறிப்பிட்ட போராளிகளை பற்றி பாடலாசிரியர் தாமரை சொன்னதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

Anonymous said...

thambi intha charecter assasination enpathu puranathil thodangiyathu... intru netru alla.... ithu oru kurippitta inathinarasiyal. intrum athigarabeedathil ullathu antha iname athu entha arasiyal katchyanalum sarithan. enbathu koornthuparthal theriyum.