கொங்கு நாட்டுப்பக்கம் இளவட்டப் பையன்களிடம் சாதி வெறி கடுமையாக ஊட்டப்படுகிறது என்று ஓர் உறவுக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தேன். எப்பொழுதுமே அவரைப் பார்த்தால் கொஞ்சம் விலகிக் கொள்வதுதான் வழக்கம். ஏதேனும் நிகழ்வுகளில் தனியாகச் சிக்கினால் வடச்சட்டியில் போட்டு தாளித்து விடுவார். அவர் சாதி வெறியர். சாதிப் பற்று மதப்பற்றாக மாறி, மதப்பற்று கட்சிப் பற்றாகி இப்பொழுது எல்லாவற்றிலும் உஷ்ணமாக இருக்கிறார். ‘தமிழ்நாடு கெட்டுக் குட்டிச்சுவராகிக் கிடக்குது’ மாதிரியான புகைச்சலிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
‘இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகிட்டு இருந்தீங்கன்னா உடம்பு கெட்டுடும் பார்த்துங்க’ என்று சொல்லிப் பார்த்துவிட்டேன். கேட்பதாக இல்லை. இதற்கு மேல் நாம் என்ன செய்ய முடியும்?
சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கும் வழியைப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். இந்த முறை வாகாகச் சிக்கிக் கொண்டேன். த்ரிஷாவோட அடுத்த படம் என்ன என்பது மாதிரிதான் பேச விரும்பினேன். ஆனால் கொதிக்கும் எரிமலையிடம் கோலி சோடா கேட்பது மாதிரி ஆகிவிட்டது. வளைத்து வளைத்து தனது கண்ணிக்குள் இழுத்து வந்துவிட்டார். பேச்ச்சுவாக்கில்தான் முதல் வரியின் சாராம்சத்தைச் சொன்னேன். இதற்கென்றே காத்திருந்தவர் போல ‘பின்ன? அப்படித்தாங்க இருக்கோணும்...எளக்காரம் கொடுத்துட்டே இருந்தா அவ்வளவுதான்..ஏறி முதுச்சுட்டு போய்ட்டு இருப்பானுக?’ என்றார். இதோடு நிறுத்திக் கொண்டால் பிரச்சினை இருக்காது. பிற சாதி ஆதிக்கங்களைப் புள்ளிவிவரங்களோடு சொல்வார். அவ்வளவு புள்ளிவிவரங்கள் நமக்குத் தெரியாது என்பதால் உடனடியாக பதில் சொல்லவும் முடியாது. வெகு நாட்களுக்கு இவையெல்லாம் உண்மையான புள்ளிவிவரங்களாக இருக்கும் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் இல்லை- வாட்ஸாப் குழுமங்களில் சகட்டுமேனிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இப்பொழுதெல்லாம் நானும் வாய்க்கு வந்தபடி புள்ளிவிவரங்களை அளந்துவிட்டுவிடுவதுண்டு. சேர்க்கைக்குத் தகுந்த மாதிரிதானே நம் செய்கையும் இருக்கும்? அப்படி அளக்காவிட்டால் நம்மை முட்டாளாக்கிவிடுகிறார்கள்.
சமீபமான பத்து வருடங்களில்தான் இப்படி மாறிவிட்டார்.
ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தால் நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களில் எந்த விவரமும் தெரியாதவர்கள் என்று ஐந்து சதவீதம் பேர் இருப்பார்கள். நல்ல புரிதல்கள் கொண்டவர்களாக, தெளிவாக யோசிக்கக் கூடியவர்கள் என்று பத்து சதவீதம் பேர் இருப்பார்கள். மீதமிருக்கும் எண்பத்தைந்து சதவீதம் பேர் இந்தப் பக்கமுமில்லாமல் அந்தப் பக்கமுமில்லாமல் நடுவில் நிற்கும் ஆட்கள்தான். இவர்களிடம் உணர்ச்சியைத் தூண்டினால் எளிதில் மாற்றிவிடலாம். சமூக வலைத்தளங்கள் இப்படியான மனிதர்களைத்தான் தம் வசப்படுத்துகின்றன. மேம்போக்கான கருத்துகளை அள்ளி வீசி, புல்லரிக்கச் செய்து, தவறான புள்ளி விவரங்களைக் கொடுத்து, சூடேற்றி, வலை வீசி ஒரு வழியாக ‘பிரச்சார பீரங்கிகளாக’ சுற்ற விட்டுவிடுகின்றன. இந்த பீரங்கிகளோ கல்யாணம், இழவு வீடுகளில் சிக்குகிறவர்களையெல்லாம் நெட்டுக்குத்தலாகப் பிளக்கின்றன.
கொங்கு நாடு என்றில்லை இப்பொழுதெல்லாம் பரவலாகவே சாதி வெறி மிக அழுத்தமாகத்தான் இருக்கிறது. ‘நம்ம சாதிக்காரனைக் கைதூக்கி விட வேண்டும்’ என்கிற மனநிலை அதிகாரத்தில் இருக்கும் பெரும்பாலானவர்களிடம் உண்டு. அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி; அரசியல்வாதியாக இருந்தாலும் சரி- இதுதான் நிதர்சனம். அடுத்த தலைமுறையில் ‘சாதியைத் துறக்க வேண்டும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தால் பைத்தியகாரனாக்கிவிடுவார்கள்’ என்கிற சூழல்தான் உருவாகிக் கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் உரிமையைக் காக்கத் தொடங்கப்பட்டவை என அறைகூவிக் கொண்ட சாதிக்கட்சிகளும், அமைப்புகளும் சில காலத்தில் அதன் பலன்களை எப்படி அறுவடை செய்யலாம் என்பதிலேயே குறியாக இருக்கின்றன. அமைப்புகள் தளர்ந்து போய்விடாமல் இருக்க வேண்டுமானால் சாதி வெறி கொண்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அதனால்தான் ‘சாதிப் பற்று முக்கியம்’ என்று பேசிக் கொண்டேயிருக்கின்றன. எந்த சாதிய மாநாட்டின் காணொளிகளை வேண்டுமானாலும் கேட்டுப் பார்க்கலாம்- நாற்பது சதவீதப் பேச்சுகள் பிற சாதிகளை எதிரியாக நிறுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருக்கும். முப்பது சதவீதம் பேச்சு வெறியேற்றுவதாக இருக்கும். அந்த வெறியோடு கிளம்பும் கூட்டம் சாதிப் பெயரைப் பின்னால் சேர்த்துக் கொண்டு ஃபேஸ்புக்கிலும் வாட்ஸாப்பிலும் வெறித்தனமாகக் களமாடுகிறார்கள். ஆண்கள் மட்டுமில்லை- பெண்களும் அப்படித்தான்.
முப்பதுகளைத் தாண்டிய பிரச்சார பீரங்கிகள் கூட கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் பதினேழு, பதினெட்டு வயதுப் பையன்கள் இருக்கிறார்களே! வெளியில் சாதுவாகத்தான் தெரிகிறார்கள். ஒருவேளை ‘இவன் கெடக்குறான் சொட்டைத் தலையன்’ என்று தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவதால் வெளிப்பார்வைக்கு அப்படித் தெரிகிறது என நினைக்கிறேன். ஆனால் அவர்கள் திருவிழாக்களில் செய்யும் சாதியக் கூத்துகள் பயமூட்டுகின்றன. மிக இயல்பாக சாதி வெறியோடு பேசுகிறார்கள். இருபதே வருடங்களில் சூழல் வெகுவாக மாறியிருக்கிறது. கிராமங்களில் மட்டும்தான் சாதிய உணர்வுகள் தலை தூக்கியிருக்கின்றன என்றெல்லாம் நினைத்தால் அது அறியாமைதான். 360 டிகியிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
இப்படியான சாதிய உசுப்பேற்றல்களின் விளைவுகளை யாரோ சிலர் அறுவடை செய்து கொள்ளப் போகிறார்கள்; அதற்காக நீங்கள் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்; எதிர்காலத்தின் அமைதியை அடகு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று எப்படிப் புரிய வைப்பது? எவ்வளவுதான் மெனக்கெட்டாலும் நம்மை அமைதிப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
பிரச்சார பீரங்கியும் அதைத்தான் செய்தார்.
‘இவ்வளவு பேசறீங்களே! நீங்க ஏன் வேற சாதிப் புள்ளையைக் கட்டிக்காம சொந்தச் சாதியிலேயே திருமணம் செஞ்சுட்டீங்க’ இப்படிக் கேட்டால் என்ன பதிலைச் சொல்வது?
நானும்தான் எட்டாம் வகுப்பிலிருந்து காதல் முயற்சிகளைச் செய்தேன். மலையாளப் பெண் தொடங்கி, கிறித்துவப் பெண் வரைக்கும் விதவிதமான பெண்கள்தான். ஆனால் கடைசி வரைக்கும் ஒருத்தியும் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இதை எப்படி அப்பட்டமாக ஒத்துக் கொள்வது? வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறேன்! அவ்வளவுதான் என்னால் முடிந்தது.
நாம் என்னதான் பொங்கல் வைத்தாலும் சாதிப்பற்று பிரச்சார பீரங்கிகள் கடைசியில் இப்படி நெஞ்சில் வேல் பாய்த்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். எந்த பதிலும் சொல்லாமல் சோகமாகி அமைதியாகிவிட்டேன்.
7 எதிர் சப்தங்கள்:
நானும்தான் எட்டாம் வகுப்பிலிருந்து காதல் முயற்சிகளைச் செய்தேன். மலையாளப் பெண் தொடங்கி, கிறித்துவப் பெண் வரைக்கும் விதவிதமான பெண்கள்தான். ஆனால் கடைசி வரைக்கும் ஒருத்தியும் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இதை எப்படி அப்பட்டமாக ஒத்துக் கொள்வது? வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறேன்! அவ்வளவுதான் என்னால் முடிந்தது.
-- வேணிக்கு இது தெரியுமா..தெரிந்தும் உங்கள் குறும்புகளைப் பொறுத்து/ரசித்து கொண்டு இருக்கிறார்களா..வாழ்க வளமுடன்
வன்னியர் சங்கம் எப்படி தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்த்து, தனக்கென்று இடஒதுக்கீடு பெற்றதோ, அதிலிருந்து சாதி எழுச்சி தொடங்க ஆரம்பித்துவிட்டது. திராவிட கொள்கைகள் மெல்ல மறைய தொடங்க, சாதிப் பற்று மேலோங்கி நிற்கிறது. கூடவே ளதப்பற்று. தமிழ்நாடு சரியான பாதையில் செல்கிறதா?
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சொந்தக்கரார் மகன் அலைபேசி அட்டையில் (cellphone case) சாதியை வெளிக்காட்டும் விதமாக விடுதலை வீரரின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. எங்கே செல்லும் இந்த பாதை.....
No need to destroy Caste. What's is required is to remove caste discrimination. Since because Western world didn't have caste, not required to destroy it. It's unnatural. Let's find indigenous solutions.
//ஆனால் கடைசி வரைக்கும் ஒருத்தியும் திரும்பிக் கூட பார்க்கவில்லை//
இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல. அமெரிக்கா ல ஏதாவது தேறுதா ன்னு பாருங்க. அங்க சனாதிபதி ஆவும் போது ஒதவியா இருக்கும்.
//சாதியை வெளிக்காட்டும் விதமாக விடுதலை வீரரின் படம் பொறிக்கப்பட்டுள்ளது//
அது ப்ரச்னை இல்ல. ஆனால் அதை வெறியாக மாற்றும் போது தான் ப்ரச்னை
அனானிமஸ் ஐயா (அ) அம்மா சொன்னது எனக்கும் ஏற்புடையதே
What's is required is to remove caste discrimination
நன்று :)
சாதி மாற்றுத்திருமணம் செய்ய யாருக்கேனும் உதவியிருக்கிறீர்களா? உங்களிடம், இந்த விஷயத்தில், உதவி தேடி வருபவர்களிடம் உங்களது அணுகுமுறை என்னவாயிருந்திருக்கிறது?
கலநிலவரம் என்னவாயிருக்கிறது? வெவ்வேறு சாதியாய் இருப்பினும், பெற்றோர் சம்மதத்துடன் நல்ல முறையில் ஊரறிய திருமணம் செய்து கொள்ள இயலுமா?
அப்படி ஒருவன் முயற்சிக்கையில் இந்த சமூகம் அவனுக்குத் துணையாக இருக்குமா? நீங்கள் துணையாக இருப்பீர்களா?
:)
.....
Post a Comment