வரும் கல்வியாண்டியில் பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் அல்லது அவர்களது பெற்றோர்கள் யாரிடமாவது பேசிப் பார்த்தீர்களா? தாறுமாறாகக் குழம்பியிருக்கிறார்கள். சேர்க்கைக்கான வழிமுறைகளைத் தேடிப்படித்தால் மண்டை காய்கிறது. கடந்த இருபது வருடங்களாக ஒற்றைச் சாளர முறை மிகச் சிறப்பாகவே இருந்தது. நம் கண் முன்னால் இருக்கும் திரையில் கல்லூரியும் அங்கே இருக்கும் இடங்களின் எண்ணிக்கையும் தெரியும். சாமியைக் கும்பிட்டபடியே சென்றால் - நாம் விரும்பிய கல்லூரியில் - பாடத்தை நமக்கு முன்னால் சென்றவன் கொத்திச் செல்லாதிருந்தால் நாம் எடுத்துக் கொள்ளலாம் ஒருவேளை அந்த இடம் தீர்ந்துவிட்டால் அதற்கடுத்த கல்லூரி-பாடப்பிரிவில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். இதுதான் நடைமுறை. எந்தக் குழப்பமுமில்லை. நம்மைவிட ஒரு ரேங்க் முன்னால் வாங்கியவனுக்குத்தான் முன்னுரிமை. அவன் எடுத்தது போக மீதமிருக்கும் இடம்தான் நமக்கு. அதே போல நாம் எடுத்துக் கொண்டது போக மீதமிருக்கும் இடம்தான் நமக்குப் பின்னால் வருகிறவனுக்கு.
இப்படித் தெளிவாக இருந்த பொறியியல் சேர்க்கை- ஒற்றைச் சாளர முறையை ஏன் நாய் வாயில் சிக்கிய பழைய துணி மாதிரி கிழித்து கந்தரகோலமாக்கியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வெகுவாகக் குழம்பி கடைசியாக நான் புரிந்து கொண்ட சேர்க்கை முறை இப்படித்தான் - ஒரு நாள் ஒதுக்கித் தருவார்கள். அன்றைய தினம் நமக்குப் பிடித்த கல்லூரி-பாடப்பிரிவை அவர்கள் குறிப்பிட்டிருக்கும் ஓர் இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டுமாம். எவ்வளவு இடங்களை வேண்டுமானாலும் உள்ளீடு செய்யலாம். உதாரணமாக அண்ணா பல்கலை- கணினி அறிவியல், பிஎஸ்ஜி - மின்னியல், குமரகுரு- எந்திரவியல் என்று வரிசைக்கிரமமாக உள்ளீடு செய்து வைத்தால் நம்முடைய மதிப்பெண்ணுக்கு எது கிடைக்குமோ அதை ஒதுக்கித் தருவார்கள்.
எனக்குத் தெரிந்து இதில் சுத்தமாக வெளிப்படைத்தன்மை இல்லை.
ஒரு மாணவனுக்கு அவனுடைய கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு எந்தப் பாடம், எந்தப் பிரிவு கிடைக்கும் என்று எப்படித் தெரியும்? இணையத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக எந்த விவரத்தையும் கண்டறிய முடியவில்லை. கிராமப்புற மாணவன் குத்துமதிப்பாக பத்து அல்லது பதினைந்து கல்லூரிகளையும் பாடங்களையும் உள்ளீடு செய்து வைப்பான். பண்ணாரி அம்மன் கல்லூரியில் மெக்கானிக்கல் என்று உள்ளீடு செய்கிற அவன் பி.எஸ்.ஜி கல்லூரி தனக்குக் கிடைக்காது என்கிற நம்பிக்கையில் அவன் விட்டிருக்கக் கூடும். ஆனால் அவனுடைய மதிப்பெண்ணுக்கு அவனுக்கு பி.எஸ்.ஜி கல்லூரியில் கிடைக்கும் வாய்ப்பிருந்து அதை அவன் தவறவிட்டால் அவனுக்கு நடக்கும் அநியாயம்தானே இது? இது கூடப் பரவாயில்லை. அவனுடைய அறியாமை என்று விட்டுவிடலாம்.
அமைச்சர் அல்லது உயர் அதிகாரியின் மகன் ஒருவன் மிகக் குறைவான கட்-ஆஃப் பெற்றிருந்து அவனுக்கு நல்ல கல்லூரியில் இடம் ஒதுக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? பத்து வருடங்களுக்கு முன்பாக என்றால் அண்ணா பல்கலைக்கழகத்தை எந்தவிதத்திலும் சந்தேகப்பட்டிருக்க மாட்டேன். அதற்கான வாய்ப்புகளும் இல்லை. ஆனால் இன்றைய தேதிக்கு உயர் கல்வித்துறையில் ஊழல் மலிந்து கிடக்கும் புதர்க்காடு என்றால் அது அண்ணா பல்கலைக்கழகம்தான். யாராவது மறுக்க முடியுமா? எவ்வளவு ஊழல் குற்றச்சாட்டுக்கள். எப்படி நம்புவது? சரி பல்கலைக்கழகம் ஏமாற்றினாலும் அரசாங்கத்தை நம்பலாம் என்றுதான் விட முடியுமா?
இப்பொழுதெல்லாம் எதற்கு பதற்றப்பட வேண்டும் எதற்கு பதற்றப்படக் கூடாது என்றே புரிவதில்லை. தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரிய மசோதவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்த விவகாரத்தை இருபத்தோரு மாதங்கள் மறைத்து வைத்துவிட்டு இப்பொழுது ‘நிறுத்தி வைப்பா? நிராகரிப்பா?’ என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது கூடவா மாநில அரசுக்குத் தெரியாது. மசோதாக்களைப் பொறுத்தவரைக்கும் ஏற்றுக்கொள்ளுதல்/நிறுத்தி வைத்தல் என்று இரண்டே இரண்டு முடிவுகள்தானாம். நிறுத்தி வைத்து திருப்பி அனுப்புகிறோம் என்று அனுப்பினால் அரசு அதை ஆறு மாதத்துக்குள் மீண்டும் பரிசீலனைக்கு அனுப்பலாம். ஒன்பதாம் வகுப்பு குடிமையியல் பாடத்தில் படித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. ஆகப்பெரிய சட்ட அமைச்சருக்கும் அவர்தம் சகாக்களுக்கும் இது தெரியாதா? எவ்வளவு பெரிய சதி இது? வெளிப்படையாக என்னவெல்லாமோ நடக்கிறது. பொறியியல் படிப்புக்கான சேர்க்கையை மட்டும் எப்படி நம்புவது? எவற்றில் என்ன அரசியலைச் செய்வார்களோ என்று பயப்படாமல் என்ன செய்வது?
சரி- யார் மீதும் சந்தேகப்படவில்லை என்றே இருக்கட்டும். ஆனால் ஏதோ மிகப்பெரிய புதிராக ஏன் பொறியியல் சேர்க்கையை மாற்றி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பத்தாம் வகுப்பு ஆசிரியர் ஒருவரின் மகள் பனிரெண்டாம் வகுப்பு முடித்திருக்கிறார். அவரிடம் பேசினால் அவருக்கு எந்த விவரமும் தெரியவில்லை. விசாரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார். அவரது வழிகாட்டலைக் கோரி அருகம்பாளையத்தில் நான்கைந்து பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் இருக்கிறார்கள். இப்படித்தானே பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் விழி பிதுங்கிக் கொண்டிருப்பார்கள்?
எங்கேயாவது தெளிவான வழிகாட்டுதல் இருக்கிறதா? விரிவான விளக்கங்கள் அல்லது சலனப்படங்கள் இருக்கின்றனவா? ஒருவேளை அப்படி ஏதேனுமிருப்பின் தெரியப்படுத்துங்கள். என்னுடைய அறியாமைக்கு மன்னிப்புக் கோரிக் கொள்கிறேன். ஆனால் அப்படி எதுவுமில்லையெனில் இது மிகப்பெரிய அநியாயம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ‘நீங்க கலந்தாய்வுக்காக வர வேண்டியதில்லை; வீட்டிலிருந்தே கலந்தாய்வை முடித்துக் கொள்ளலாம்’ என்று சால்ஜாப்பு சொல்வார்கள். பொறியியல் சேர்க்கை என்பது ஒரு மாணவனின் எதிர்காலம். இந்தப் படிப்பை வைத்துதான் அவனது மீதமிருக்கும் வாழ்க்கையே அமையப் போகிறது. ஒரு நாளை ஒதுக்கி கலந்தாய்வுக்கு வர எந்த மாணவனும் சிரமப்படப் போவதில்லை. அது அவனுக்கு மிகப்பெரிய அனுபவமும் கூடத்தான்.
ஒருவேளை மேற்சொன்ன குளறுபடிகள் பொறியியல் சேர்க்கையில் இருப்பது உண்மையெனில் அது குறித்து குரலை உயர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
6 எதிர் சப்தங்கள்:
ஒற்றைச் சாளர முறை சிறப்பானதுதான். ஆனால், ஒரே நேரத்திலை 25 பேருக்கும் அதிகமானவர்கள் வெவ்வேறு கணினிகளின் முன் அமர்ந்து தங்கள் கல்லூரியை முடிவு செய்து கொண்டிருப்பார்கள். ஒரு வரிசையில் வேகமாக முடிவு செய்யப்படுகிறது, இன்னொரு வரிசை சற்று மெதுவாக சென்று கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். (குறிப்பிட்ட மதிப்பெண்\கள் பெற்ற அனைவரையும் - சுமார் 100 பேர் வைரைக்கும், ஒரே அரங்கத்திற்குள் அழைப்பார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். மேலும் வரிசையில் முதலில் செல்வதற்கு இந்த 100 பேருக்குள் தள்ளல் உந்துதல் நடைபெறும் என்றும் கேட்டிருக்கிறேன்) அதிக மதிப்பெண் பெற்றவர் (குறிப்பாக ரேங்க் வரிசையில் முதல் ஐந்தாயிரத்திற்குள் இருப்பவர்கள்) தான் மிகவும் எதிர்பார்த்த கல்லூரி\பாடப்பிரிவை மயிரிழையில் தவற விட நேரிடும். அவர் மன நிலையையும் சற்று புரிந்து கொள்ள முயலுங்கள். இது மிகப்பெரிய குழப்பம். தன்னை விட குறைவான மதிப்பெண் பெற்றவரிடம், தள்ளி, உந்தி நூறுபேரில் முதலாவாதாக செல்பவரிடம் தன் இடத்தை இழப்பது.
தற்போதைய முறை குழப்பமாக உள்ளது என்பது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எவ்வாறு தங்கள் விருப்பக்கல்லூரி\பாடங்களை உள்ளீடு செய்வது என்பதற்கு தமிழிலும் (47 பக்கங்கள்) ஆங்கிலத்திலும் விளக்கங்கள் உள்ளன. Video விளக்கங்களும் உள்ளன. ஒருவேளை இவையும் தேவையான புரிதலை உருவாக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் சுமார் 40 உதவி மையங்கள் உள்ளன. அங்கு சென்று உள்ளீடு செய்து கொள்ளலாம். உதவி மையங்களில் சென்று உள்ளீடு செய்வது, கிட்டத்தட்ட நேரடி கலந்தாய்வில் செல்வதைப் போன்றதே.
என்ன மாற்றங்கள் வந்தாலும் அவற்றை ஒரேயடியாக எதிர்ப்பது என்பது நம் மனநிலையாக மாறி விட்டது. மாற்றங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை நிவரத்தி செய்வது எப்படி என்பதற்கான பரிந்துரைகளை நாம் செய்வது, ஒரேயடியாக மாற்றத்தை எதிர்மறையாக சித்தரிப்பதை விட ஆக்கபூர்வமானதாக இருக்கலாம். தங்கள் வலைப்பக்கத்தைப் போல பரவரலாக வாசிக்கப்படும் ஒன்றில் எழுதப்படும் எதிர்மைறையான சித்திரம் மிக வேகமாக சமூக எதிர் மனநிலையை உருவாக்கும். அதே நேரத்தில் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் ஏற்றக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகளும், சமூகத்தில் ஆக்கப்பூர்வமான விவாதத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகம்.
இங்கு ஆக்கப்பூர்வமான பரிந்துரை என்பதை என் அறிதலுக்குட்பட்ட வகையில் இவற்றைக் கூறலாம்.
1) சென்ற வருட கல்லூரிகளில் சேர்க்கப்பட்ட ரேங்க் பட்டியலை வெளியிட்டிருக்கலாம். இது இவ்வருட ரேங்கின் அடிப்பைடையில் எந்த கல்லூரியை தேர்வு செய்யலாம் என்பதற்கு உதவியிருக்கலாம். கடந்த ஆண்டு சேர்க்கை மதிப்பெண்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால் கடந்த ஆண்டு மதிப்பெண்களுக்கும் இந்த ஆண்டு மதிப்பெண்களுக்கும் பெரிய இடை வெளி உள்ள நிலையில், மதிப்பெண்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டு சேர்க்கை ரேங்க் பட்டியில் மிகவும் உதவியிருக்கலாம்.
2. கல்லூரி சேர்க்கைகளில் ஒரு வேளை தவறு நேரிட்டு, மதிப்பெண் குறைந்தவர்கள் தனக்குக் கிடைக்காத, தான் விரும்பிய பாடப்பிரிவில் சேர்ந்திருந்தால் அதை எவ்வாறு கண்டறிவது. எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, உங்கள் புரதிலுக்கு உட்பட்ட வகையில் உங்கள் பரிந்துரைகளை அளித்திருக்கலாம். இது அண்ணா பல்கலையில் ஊழல் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று ஒரு சமூகத்தில் கூறுவதை விட. அவ்வாறு நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதைப் போன்றது. சமூக உளவியிலில் இவ்விரண்டு வகை கூற்றுகளும் எத்தகைய மாற்றத்தை உருவாக்கும் என்பதை உங்களுக்குக் கூற வேண்டியதில்லை!
@anonymous
I think you slightly misunderstood SWS. Entry of students is not sequential, it is staggered. Only when all the students in a particular batch complete their selection, the next batch will move in. Also, you have to select three colleges of your choice. These will not be allotted straightaway. If a higher ranked student, selects your top ranked college(No. 1 selection), after you, because his line was slow, it will be allotted to him, and you will hopefully get our second choice. This happened to a few friends of mine. The available seats were shown in big screens, so all the students made an informed choice. We also had websites that predicted the colleges you would get based on counselling results everyday.All this was in 2000, when I went for college. If Manikandan's post is an accurate description, this is indeed a backward step.
1. I was Part of counselling team (not in TN - other state-manpower).
2. JEE - this method is followed since several years.
3. Old method Candidate just given few minutes to deicde.
4. In this method - make your dream choices in order. I think upto 300 colleges allowed.
5. say for 1st choice Anna Computer etc...
6. the candidate to sit with some senior write down dream list...take 10 days then fill it up. What will be the harm ?
Thanks AK
Mr / Ms. Anonymous you are wrong. Even in the single window counselling is based on rank. you cannot select the seat before the selection of your previous rank holder.
rank list is clearly on anna university website. pls refer it
Mistake will happen in all place not only in online or offline way. Last year itself this method started. Nowadays All r having net facilities. Student started to learn new things.
Post a Comment