Jul 4, 2019

உணர்வுகள்

துக்க வீடுகளுக்குச் சென்று பழகும் வரைக்கும் மரணத்தின் வலிகள் அவ்வளவாகப் புரிவதில்லை. முப்பது வயது வரைக்கும் எந்த மரணத்தையும் அருகிலிருந்து பார்த்ததில்லை. மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தாத்தா இறந்து போனார். பள்ளி முடிந்து ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது உறவுக்காரப் பெண்மணி ஒருவர் ஆட்டோவிலிருந்து தமது குழந்தையை இறக்கியபடியே ‘உங்க தாத்தா போய்டுச்சு போ’ என்றார். அந்த வயதில் ‘போய்டுச்சு’ என்ற சொல்லுக்குக் கூட பொருள் தெரியவில்லை. படுக்கையில் கிடந்த தாத்தாதான் எழுந்து ஊருக்குப் போய்விட்டார் போல என நினைத்துக் கொண்டு வந்து இறங்கி பள்ளிக்கூடப் பையை வைத்தால் ‘தாத்தனை வந்து பாரு’ என்று சொல்லி ஆயா அழுதது இன்னமும் நினைவில் இருக்கிறது. வெள்ளைத் துணி போர்த்திப் படுக்க வைத்திருந்த தாத்தாவின் உடலுக்கு அருகில் கூடச் செல்லவில்லை. அது தீபாவளிக்கான நீண்ட விடுமுறை. அடுத்த அரை மணி நேரத்தில் இரண்டு நாட்களுக்கான துணிகளை அடுக்கிப் பையில் வைத்து சித்தி ஊருக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள். திரும்ப வரும் போது தாத்தாவுக்கு கடைசிக்காரியங்களைச் செய்த அப்பா மீசையை மழித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். 

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து ஆயா இறந்த போது ஹைதராபாத்தில் வேலையில் இருந்தேன். தகவல் வந்து கிளம்பி சென்னை வந்து சேர்ந்து அங்கிருந்து பேருந்தில் ஊருக்குப் போன போது விடிந்திருந்தது. முந்தின நாள் எரித்திருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஆயா அணிந்திருந்த கண்ணாடியை மட்டும் கண்ணில்பட்டது. ‘வயசாகிடுச்சுல்ல...எலும்பு கூட எரிஞ்சு போச்சு’ என்றார்கள். அப்பிச்சி இறந்ததெல்லாம் நினைவிலேயே இல்லை. நெருங்கிய உறவுகளின் மரணத்தைக் கூட தள்ளியே நின்று பார்த்ததால் அதன் வலியும் விரீயமும் புரிந்ததேயில்லை.

இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. அப்பாவின் மறைவுக்குப் பிறகு நிறைய மாறிவிட்டது. 

அரை மணி நேரத்துக்கு முன்பு வரை நடமாடிக் கொண்டிருந்தவரை உடற்சூடு அணைவதற்குள் தூக்கி நடுவீட்டில் படுக்க வைப்பதற்காக தூக்கியிருக்கிறேன். ஏதோவொரு வீட்டில் இறந்து போனவருக்கு கால்கட்டு போடுவதற்காக இரண்டு கால்களையும் சேர்த்துப் பிடித்திருக்கிறேன். பிணங்களின் மீதான அசூயை இப்பொழுது சுத்தமாக இல்லை. பிணங்களை நெருங்குகிற தருணமெல்லாம் இழப்பின் வலிதான் நெஞ்சுக்குள் நிறைந்து கிடக்கும். எல்லாவற்றையும் அருகாமையில் இருந்து பார்க்கும் போதுதான் உணர்வாக மாறுகிறது.

எனக்கு மட்டுமில்லை- எனது வயதையொத்த எல்லோருக்குமே இப்படித்தான். வயது கூடக் கூட இதெல்லாம் பயத்தையும் கூடவே உருவாக்குகிறது. நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் இப்படியென்றால் படைப்புகளும் கூட அப்படித்தான். நண்பர் மது சமீபத்தில் ஆங்கிலப்படமொன்றை பரிந்துரைத்திருந்தார். தரவிறக்கம் செய்து ஓடவிட்டால் எடுத்தவுடனேயே புற்றுநோயாளி என்றுதான் ஆரம்பமானது.  அடுத்த ஒன்றிரண்டு நிமிடங்களில் படத்தை நிறுத்திவிட்டேன். பெரும்பாலான எழுத்துகளும், படைப்புகளும் நம்மை உணர்வு ரீதியில் பிணைப்பவைதான். ஆனால் எல்லாவற்றையும் தனிப்பட்ட முறையில் பிணைத்துக் கொள்வது விபரீதம்தான். ஆனால் தவிர்க்கவே முடிவதில்லை.

எல்லாவற்றையும் உணர்ந்து, மனதுக்குள் குதப்பி, ஜீரணித்துப் பழகுவதுதான் நம்மை முழுமையான மனிதனாக்கும். இருபது வயதுகள் வரைக்கும் விளையாட்டுப் பிள்ளை, முப்பதுகளின் மத்திய காலம் வரைக்கும் குடும்பம் பிள்ளைகள் என ஆணாக மாறி, நாற்பதுகளில் வலிகளையும் வேதனைகளையும் புரிந்து பக்குவப்பட்டு வடிவம் பெறக் கூடிய மனிதன் என... வாழ்க்கையே இப்படி படி நிலைகளில் ஆனதுதானே? 


மது சொன்ன படத்தை நிறுத்திவிட்டு இன்னொரு படம்- Changeling என்றொரு  படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். இதுவும் கூட ஒருவகையில் உணர்வுப்பூர்வமாக நம்மை சலனப்படுத்தக் கூடிய படம்தான். ஆஞ்சலினா ஜோலி நடித்தது. 1920களில் நடைபெறும் கதை. 2008 ஆம் ஆண்டில் வெளியான படம். 

கிறிஸ்டினுக்கு ஒரு குழந்தை. ஒன்பது வயது. அவளையும் குழந்தையையும் விட்டுவிட்டு அவளது கணவன் விலகிவிடுவான். இவள் தொலைபேசி இணைப்பகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். ஒருநாள் வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் போது குழந்தை காணாமல் போய்விடுகிறது. அந்த ஊரில் ஒரு மதபோதகர் உள்ளூர் காவலர்களின் தகிடுதத்தங்களை வெளிப்படையாக விமர்சனம் செய்து பிரச்சாரங்களைச் செய்து வருகிறார். அவர் இந்தப் பிரச்சினையைப் பெரிதாக்குகிறார். உள்ளூர் காவலர்கள் சில நாட்களுக்குப் பிறகு கிறிஸ்டினின் மகன் கிடைத்துவிட்டதாகச் சொல்லி அவளைச் சந்தோஷமடையச் செய்வார்கள். ஆனால் வேறொரு குழந்தையைக் கொண்டு வந்து தருவார்கள். 

படத்தின் தலைப்பின் அர்த்தமே அதுதான் - குழந்தை இடம் மாறிவிடுவது. 

அவள் மறுத்தாலும் கூட ‘இவன்தான் உங்க பையன்..இந்த சில மாசங்கள்ல்ல மாறிட்டான்’ என்று வலியுறுத்துவார்கள். தமது துறையின் பெயர் மேலும் மேலும் கெடக் கூடாது என்பது அவர்களின் நோக்கம். ஆனால் கிறிஸ்டின் அந்தச் சிறுவன் தம்முடைய மகன் இல்லை என்று உறுதியாக மறுக்க, அவளுக்கு உதவ மத போதகர் முன் வர, மிகக் கொடூரமான மனநோய் மருத்துவமனையில் ‘இவளுக்கு பைத்தியம்’ என்று காவல்துறையினர் அடைப்பார்கள். அதே சமயம் வேறொரு துப்பறிவாளர் குழந்தைகளைக் கடத்திக் கொல்லும் சைக்கோ ஒருவனின் இடத்தைக் கண்டறிந்து அவன் கடத்திச் சென்ற குழந்தைகளின் பட்டியலில் இருக்கும் குழந்தையின் பெயர்களில் கிறிஸ்டினின் குழந்தை வால்டர் இருப்பதையும் வெளியுலகுக்குக் கொண்டு வருவார். இந்தக் கொலைகள்தான் நமது முதுகெலும்பில் மின்னல் வெட்டும் பகுதி. நமக்கும் குழந்தைகள் இருக்கிறதே எனப் பதறச் செய்யுமிடம். இன்றைக்கும் கூட பெண் குழந்தைகளை வன்புணர்ந்து கொல்லும் ஆண்களைப் பற்றிய செய்திகள் வரும் போதெல்லாம் ‘எப்படி குழந்தையை வளர்க்கப் போகிறோமோ’ என்று பெண் குழந்தைகளைப் பெற்ற பெண்கள் பொதுவெளியில் பதறுவதைக் காண நேரிடுகிறதல்லவா? அப்படி நம்மைச் சலனப்படுத்துகிற இடம். 

குற்றவாளி கண்டறியப்பட்ட பிறகு பிறகு கிறிஸ்டின் என்னவாகிறாள், வால்டர் கொல்லப்பட்டானா, உயிரோடு இருக்கிறானா என்று அலைபாயும் கிறிஸ்டினும்தான் கதையின் இறுதிக்கட்டம். ஆஞ்சலினா ஜோலி அட்டகாசப்படுத்தியிருக்கிறார். நம் காலத்தின் அற்புத நடிகை அவர். படம் முழுக்கவும் நிலவும் வெறுமையும் வலியும் அவர் வழியாகவே பார்வையாளனாக உணர்ந்து கொண்டிருந்தேன். 

அதெல்லாம் சரிதான். படத்தைப் பார்த்துவிட்டு இனி எந்தப் படத்தைப் பார்த்தாலும் சரி, புத்தகத்தை வாசித்தாலும் சரி- நம்முடன் எந்தவிதத்திலும் தொடர்பு படுத்திக் கொள்ளக் கூடாது என கங்கணம் கட்டியிருக்கிறேன். ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான்.

4 எதிர் சப்தங்கள்:

viswa said...

மெய்ஞ்ஞானம் வெளி வரும் தருணங்கள் மறக்க முடியாதவை அவை எங்கே எப்போது வரும் என்று எவருக்கும் தெரியாது.தொடருங்கள்

விஸ்வநாதன்

சேக்காளி said...

அன்புடன் அருண் said...

//எந்தப் படத்தைப் பார்த்தாலும் சரி, புத்தகத்தை வாசித்தாலும் சரி- நம்முடன் எந்தவிதத்திலும் தொடர்பு படுத்திக் கொள்ளக் கூடாது என கங்கணம் கட்டியிருக்கிறேன். ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான்.

இது நிச்சயம் ஒரு முரணான.. சவாலான விஷயம் தான்...

ஏனெனில், இதில் தான் அந்தப் படைப்பின் வெற்றியும் இருக்கிறது...

Dr. K. Kalaiselvi said...

i too have same feeling after my father's death. Thanks for the suggestion given in the end sir.