Jul 2, 2019

எட்டிக் குதி..சொர்க்கம் தெரியும்

கல்லூரியில் தொடக்க நிகழ்ச்சி ஒன்றுக்காக அழைத்தார்கள். ‘மோடிவேஷன் ஸ்பீச் கொடுக்க முடியுமா?’ என்று கேட்டார்கள். என்ன மாதிரியான பேச்சை எதிர்பார்க்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள ‘யார் மாதிரிங்க?’ என்று கேட்டதற்குச் சில பெயர்களையும் சொன்னார்கள். ‘அய்யோ...மன்னிச்சுக்குங்க..அவங்களை மாதிரி பேச முடியாது’ என்று சொல்லிவிட்டேன். என்ன சிக்கல் என்றால் இப்பொழுதெல்லாம் அதீதமான பில்ட்-அப்புகளுக்குத்தான் மரியாதை அதிகம். அந்தக் கணத்தில் புல்லரிக்கச் செய்திட வேண்டும். பேச்சு என்றாலும் சரி; சலனப்படம் என்றாலும்; அச்சு வடிவில் வெளியாகும் கட்டுரை என்றாலும் சரி இதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எதிராளி உணர்ச்சி வசப்படும்படியான வகையிலேயே எல்லாமும் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்கிறார்கள். 

Motivational என்பதற்கும் Practically Motivational என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. போலித்தனமான கதைகளைச் சொல்லி அன்றைய தினத்துக்கான பூஸ்ட்டைக் கொடுத்து கைதட்டல் வாங்கி கூட்டத்தை அனுப்பி வைத்துவிட்டு, ஏற்பாட்டாளர்களிடம் பேசிய தொகையை வாங்கி சட்டைப்பைக்குள் வைத்துக் கொள்கிற பேச்சாளர்களின் எண்ணிக்கைதான் தாறுமாறாக இருக்கிறது. யதார்த்தத்தைப் பேசி ‘இவ்வளவுதான் வாழ்க்கை’ என்று பேசினால் ‘என்னய்யா பேசறான் இவன்’ என்று சொல்லிவிடுவார்கள் என நினைக்கிறேன்.

ஒரு பேச்சாள நண்பர் அவர். பெயரைச் வெளிப்படையாகச் சொல்ல வேண்டியதில்லை. நிகழ்வொன்றில் எனக்கு முன்பாகப் பேசினார். சுமாரான எண்ணிக்கையில் பார்வையாளர்கள் இருந்தார்கள்.

மேட்டுப்பாளையத்தில், கோவை நெடுஞ்சாலையில் ஒரு சலூன் கடை வைத்திருக்கும் பையன் என்று ஆரம்பித்து ஒரு கதையைச் சொன்னார். மயிர்க்கால்கள் கூச்செறியும் கதை அது. பையனின் அப்பா முடி திருத்தும் தொழிலாளி. மகனை பொறியியல் படிக்க வைத்துவிட்டார். படிப்பை முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் கிடைத்த நல்ல வேலையை விட்டு சலூன் கடை ஆரம்பித்து பல சொத்துகளைச் சம்பாதித்துவிட்ட பையனின் கதை அது. உணர்வுப்பூர்வமாக பத்து நிமிடங்கள் சொல்லக் கூடிய ஒரு பேச்சாளரின் பேச்சில் கற்பனை செய்து பார்த்தால் புரியும். மொத்தப் பேச்சிலும் அதுதான் ஹைலைட்டாக மனதில் பதிந்திருந்தது. 

கூட்டத்தை நெக்குருகச் செய்துவிட்டு வந்து அருகில் அமர்ந்தவரிடம் ‘அந்தப் பையனைப் பார்க்கலாம்ன்னு இருக்கு’ என்ற போது சிரித்துவிட்டு ‘பையன் இருக்கான்...ஆனா பாதி நானாகச் சொன்ன கதை’ என்றார். மேடையில் அமர்ந்து கொண்டு அதற்கு மேல் பேச முடியவில்லை. நிகழ்ச்சி முடிந்து கீழே இறங்கிய பிறகு பொறுக்க முடியாமல் ‘அந்தப் பையன் கடைப் பேரைச் சொல்லுங்க’ என்று கேட்டதற்குத் தயங்கினார். விடாமல் கேட்டு வாங்கியும் கொண்டேன். ‘இவன் போய் பார்க்கவா போகிறான்?’ என்று அவர் நினைத்திருக்கக் கூடும். சரவணம்பட்டியிலிருந்து முப்பது கிலோமீட்டர்தான் மேட்டுப்பாளையம். 

ஒரு வார இறுதியில் சலூன் கடையைக் கண்டுபிடித்துவிட்டேன். அவர் சொன்னது போலவே பொறியியல் முடித்த பையன்தான். ஆனால் சொகுசான கடை இல்லை. வேலை கிடைக்காமல் அப்பாவின் கடையை இவன் பார்த்துக் கொள்கிறான். கடையைக் கொஞ்சம் அழகு படுத்தியிருக்கிறான். பெரிய வருமானமில்லை. குடும்பச் செலவுக்குச் சரியாக இருக்கிறது. இதுவே நல்ல கதைதான். ஆனால் இதை மட்டும் சொன்னால் என்ன சுவாரசியமிருக்கிறது? அதனால்தான் ஐடி வேலையை விட்டு வந்தான்; பல பேருக்கு வேலை தருகிறான்; கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துவிட்டான் என்று கதையை அளந்து கைதட்டு வாங்கிவிட்டார். அன்றைய தினப் பேச்சிலேயே ‘இந்தக் கதையை நான் முன்பு சொன்ன கூட்டங்களில் கேட்ட ஐடியில் வேலை செய்கிறவர்கள் பலரும் வேலையை விட்டு விவசாயம் பார்க்கவும், சொந்தத் தொழில் செய்யவும் வந்துவிட்டார்கள்’ என்றார். அதுதான் அதிர்ச்சியாகவும் இருந்தது.

இன்றைய காலகட்டத்தில் பலரும் வேலையை உதறுகிறார்கள். விவசாயம் செய்கிறார்கள்; பால் வியாபாரம் பார்க்கிறார்கள்- எதுவும் தவறில்லை. ஆனால் கள நிலவரம் தெரிந்து, இத்தொழிலில் இவ்வளவுதான் வருமானம் எனப் புரிந்து வேலைக்கு வந்தால் சந்தோஷம். மேடையிலும், கட்டுரைகளிலும் தாறுமாறாக உசுப்பேற்றுகிறவர்களை நம்பி வேலையை விட்டுவிடுகிறவர்களைப் பற்றிக் கேள்விப்படும் போது சற்று பதற்றமாக இருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் போலிக் கதைகளைச் சொல்லி நெகிழச் செய்கிறவர்களும், கதறச் செய்கிறவர்களும் பெருகிவிட்டார்கள். இதைத்தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. 

ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் இருக்கின்றனதான். எதற்காகவும் கவலைப்பட வேண்டியதில்லை. கலங்கவும் தேவையில்லை. ஆனால் நம் பேச்சைக் கேட்பவன், எழுத்தை வாசிப்பவன் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிடக் கூடாது என்ற எந்தக் கவலையும் சொறிந்துவிடுகிறவர்களில் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. எந்த ஒரு நேர்மையான வெற்றியும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. எல்லாவற்றிலும் சிரமம் இருக்கிறது. மனசாட்சிப்படி ஆயிரம் ரூபாயைச் சம்பாதிக்க வேண்டுமானாலும் அதற்கான உழைப்பும் வியர்வையும் அவசியம். படிப்படியாகத்தான் முன்னேற்றம் இருக்கும். ஒருவேளை சரிவுகளும் கூட இருக்கலாம். இதையெல்லாம் புரிய வைப்பதுதான் Practical Motivation. எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படிச் சமாளிக்கிறோம், தீர்வுகளை நோக்கி எப்படி நகர்கிறோம் என்று அடுத்த தலைமுறைக்கும் சக மனிதர்களுக்கும் உணர்வுப்பூர்வமாகப் புரிய வைப்பதுதான் உண்மையான தன்னம்பிக்கை. நம்மைச் சார்ந்தவர்கள் இப்படியொரு இடத்தில் இருப்பின் ‘எட்டிக் குதிடா’ என்று சொல்வோமா என்று நினைத்துப் பார்த்துப் பேசுகிறவர்களும் எழுதுகிறவர்களும் மிக அரிது.

இருக்கும் வேலையை விட்டுவிட்டு வந்துவிடு; சொர்க்கம் திறந்துவிடும் என்று நான்கு பேர் வரிசையாக ஒரு மனிதனைத் தாக்கினால் அவன் நம்பிவிட அத்தனை சாத்தியங்களும் உண்டு. உணர்ச்சிவசப்படுவதும், கொந்தளிப்பதும் நம் லெளகீக உலகத்துக்கு வெளியில் இன்பம் அளிக்கக் கூடிய வஸ்துகள். வாழ்கிற உலகம் என்று வந்துவிட்டால் பொங்கல்களை ஒதுக்கி வைத்துவிட்டு அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்லது கெட்டதுகளை எடை போட்டுப் பார்த்துவிட்டு முடிவுக்கு வருவதுதான் சரி. 

10 எதிர் சப்தங்கள்:

Asok said...

Your article is really good.. came at the right time. Start up companies success rate is only 5% to 10%, people never experiences real time issues, just listen to those speeches and videos and get the trouble. As you said, so much motivational speakers and people love to listen them. If not, there is no crowd.

பழனிவேல் said...

மிகவும் அருமை...
எதார்த்தம் என்றும் அழகு

sundararajan c said...

Meedai petchu, visual (tv serial, cinema) ellam time pass than. dont compare practical life

Prakash said...

as usual, Excellent view. Keep going Mani.

Mugilan said...

மிகவும் அவசியமான பதிவு .. ஏற்கனவே குழப்பத்தில் இருப்பவர்களை இருட்டுக்குள் தள்ளும் இத்தகைய கற்பனைக்கதை பேச்சாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

சேக்காளி said...

//‘இவன் போய் பார்க்கவா போகிறான்?’ //
ஆழம் தெரியாம காலை விடக்கூடாது மாதிரி ஆளு தெரியாம வாயை விடக்கூடாதுன்னு புரிஞ்சிருப்பாருல்ல அந்த பேச்சாளரு

சேக்காளி said...

// எந்த ஒரு நேர்மையான வெற்றியும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை. எல்லாவற்றிலும் சிரமம் இருக்கிறது. மனசாட்சிப்படி ஆயிரம் ரூபாயைச் சம்பாதிக்க வேண்டுமானாலும் அதற்கான உழைப்பும் வியர்வையும் அவசியம். படிப்படியாகத்தான் முன்னேற்றம் இருக்கும்//
இது தான் உண்மை.

சேக்காளி said...

//அடுத்த தலைமுறைக்கும் சக மனிதர்களுக்கும் உணர்வுப்பூர்வமாகப் புரிய வைப்பதுதான் உண்மையான தன்னம்பிக்கை//
புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களிடம் இல்லையே.

Jaypon , Canada said...

Very pragmatic view.

Anonymous said...

Add to it the Social media fwds. one of my relative wanted a fancy car for her wedding. Her reasoning being that,"it's her life to live". Instead of directing the wishes to earn, it was misdirected to spend.
As usual, we might be called middle age uncles with nothing useful to do.